களப்படையினர் பேரியக்கம்

கள்ளர் வீட்டு கல்யாணம் கள்ளர் ஜாதியினருக்கான பிரத்யேக திருமண தகவல் மையம். தொடர்புக்கு +91 9259595927, +91 8428595970
திருமணம்

7 கிளைகள்! 14. நாடுகள்! பண்பாடு! திருமணம்!

பாண்டிய மன்னர்களின் சங்கத் தொகுப்பான இரண்டாயிரம வயதுடைய அகநானூறு கவிதைத் தொகுப்பில் தமிழரின் திருமணச் சடங்குகள் பற்றிய இரண்டு கவிதைகள் உள்ளன.

ஒன்று " உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப் பெருஞ்சோற்று அமலை ...!"என்று தொடங்கும் கவிதை. இதைப் படைத்தவர் நல்லாவூர் கிழார்.

இன்னொன்று " மைப்புறப் புழுக்கின் நெய்க்களி வெண்சோறு ...!" என்று தொடங்கும் கவிதை.இதைப் படைத்தவர் விற்றூற்று மூதெயினனார்.

இந்த இரண்டு கவிதைகளிலும், அம்மி மிதித்தல் அருந்ததி எனும் நட்சத்திரம் பார்த்தல், பார்ப்பனர் வேள்வி வளர்த்தல், மணமக்கள் தீவலம் வருதல் தட்சணை கொடுத்தல் போன்ற மேட்டுக்குடிச் சடங்குகள் ஏதுமில்லை.

அதாவது, புரட்சிக் காப்பியமான சிலப்பதிகாரத்தில் சமணரான இளங்கோவடிகள் காட்டுகின்ற கோவலன் --கண்ணகி திருமணச்சடங்குகள் ஏதும் அகநானூற்று கவிதைகளில் இல்லை.

இக் கவிதைகளில் போற்றப்படும் சடங்குகள் போர்க்குடி மற்றும் வேளாண் பெருங்குடி மக்களில் ஒரு பிரிவாகிய ஏழுகிளைக் கள்ளர்களின் கல்யாணங்களில் இன்றளவும் நடக்கின்றன.

" ..

......... உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுச்செய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வரைப் பயந்த திதலைஅவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடி ..."

இக் கவிதையின் பொருள் -- முதுமையும் பக்குவமும் வாய்த்த வாழ்வரசியர் கோபுரமாக நிறைத்த குடங்களையும், புதிய அகல் விளக்குகள் வைத்த சட்டிகளையும் இவையொத்த மங்கலமான ஆராதனைப் பொருட்களையும், மணப்பெண்ணின் முன்னால் நின்று பின்னுக்கும் பின்னால் நின்று முன்னுக்கும் மாறிமாறி கொடுத்து வாங்கினர். புதல்வர்களைப் பெற்றதற்கு அடையாளமாக வரிவரியாகக் காட்சியளிக்கும் வயிற்றையுடைய தாய்மார்கள் நால்வர் கூடி மஞ்சள் நீரையும் மலர்களையும் நெல்லையும் கலந்து மணமகளின் தலையில் தெளித்து, கற்புநெறி வழுவாது கணவனொடு நீடுவாழ்க என வாழ்த்துகிறார்கள்.

இத்தகைய மணவிழாச் சடங்குக் காட்சி இன்றைக்கும் ஏழுகிளைக் கள்ளர் வீட்டு கல்யாணங்களில் சடங்காக நீள்கிறது.

ஏழுகிளைக் கள்ளர் வீடுகளில் கொள்வினை கொடுப்பினைக்கான தேடல் தொடங்கும் போது முன்நிற்கும் முதல் கேள்வி, மணமகன் என்ன கிளை?மணமகள் என்ன கிளை? என்பது தான்.

ஏனெனில் ஒரே கிளைக்குள் மணவுறவு கிடையாது : கூடாது.

தொண்டையன் கிளைச்சி தொண்டையன் கிளையனை மணம்செய்யலாகாது. கூடாது.

சோழயான் கிளைச்சி சோழயான் கிளையனை மணம் செய்யலாகாது. கூடாது.

கிளையின் நோக்கம் பயன்பாடு பற்றி இந் நூலில் தனிக் கட்டுரை உள்ளது.

கிளைகளுக்கு, தந்தையரின் குடிவழிப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கிளைகள் தாய்வழியில் பெருகி வளர்கின்றன.

அரசுயான் என்பது கள்ளர்களின் ஏழுகிளைகளில் ஒன்று. இதை அரசியா கிளை, அரசியான் கிளை, அரசியார் கிளை, அரசணன் கிளை என்றெல்லாம் கூட உச்சரிக்கிறார்கள்.

இந் நூலின் ஆசிரியனான ஆறாவயல் பெரியய்யா என்ற நான் அரசுயான் கினையன். எந்தை தொண்டைமான் கிளையர். என் தாயார் அரசுயான் கிளைச்சி. என் தாயாரின் வயிற்றில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் பிறந்தோம். நாங்கள் ஐவரும் அரசுயான் கிளையர்கள்.

அரசுயான் கிளைக் கள்ளர்களில் ஆண்கள் அனைவரும் எங்களுக்கு அண்ணன் தம்பியர். எங்கள் தாயின் வயதொத்த அரசுயான் கிளைஆண்கள் எங்களுக்கு அம்மான் (மாமன்) முறையினர் ஆவர்.

அரசுயான் கிளைப் பெண்கள் அனைவரும் எங்களுக்கு அக்கா தங்கையர் ஆவர்.

எங்கள் தாயாரின் வயதொத்த அரசுயான் கிளைப் பெண்கள் அனைவரும் எங்களுக்கு சின்னத்தா பெரியத்தா முறையினர் ஆவர் .

தாயார் வழியில் திருமணம் செய்வதை கிளை தடுக்கிறது என்பதை உணர்த்தவே இந்த விளக்கத்தை எழுத வேண்டியதாயிற்று.

தாயார்வழி உறவுகளில் மட்டுமின்றி பங்காளி வீடுகளிலும் ஏழுகினைக் கள்ளர்கள் மணம் செய்யலாகாது. கூடாது.

பங்காளிகள் எனில் தந்தைவழிப் பூர்வீக. அசையாச் சொத்துகளை பங்கு வைத்துக் கொண்டோர் எனப் பொருள். யங்காளிகள் ஒரே ஊரை உடையோராக இருப்பர். அதனால் தான் உள்ளூரில் மணம் செய்யலாகாது. கூடாது என்பது இச் சாதியின் விதி.

ஆக, நெருங்கிய உறவுகளிடையே மன உறவுகள் தடுக்கப்பட்டுள்ளன என்பதை மனதில் கொள்க.

மணமக்கள் கிளை அறிந்து தெளிந்ததும் திருமணத்திற்கான பேச்சு வார்த்தை தொடங்கும். ஜாதகம் பார்க்கும் வழக்கம் ஏழுகிளைக் கள்ளர்களிடையே முழுமையாக உள்ளது. ஜாதகப் பொருத்தம் மனதிற்கு நிறைவூட்டியதும், மணமகன் வீட்டார் முறைப்படி பெண் கேட்கவும் பெண்பார்க்கவும் செல்வர்.

மாப்பிள்ளை கேட்டு பெண்வீட்டார் செல்வது மரபல்ல. ஆனால் வீடு பார்ப்பதற்காக செல்வார்கள் அப்போது பெண்ணை அழைத்துச் செல்ல மாட்டார்கள்.

படிப்பு சம்பாத்தியம் இணையுருவப் பொருத்தம் பார்த்து சம்பந்தம் உறுதி செய்யும் காலமிது. இரண்டு தவைமுறைக்கு முன்பு -

அறுவடை நெல்வயலில் இரண்டு தாளடிகள் (தூர்கள்) ஒரு கைப்பிடி ஆகும். பத்து கைப்பிடிகள் ஒரு அரியாகும். பத்து அரிகள் ஒரு கட்டு என்பார்கள்.

"எனக்கு வாய்க்கும் மருமகள் நிமிராமல் ஒரு கட்டு நெல் அறுப்பாளா? காணிச் செய் கதிரை தனித்து நின்று அறுக்கும் திராணி உள்ளவளா? துணையின்றி ஒருநாளில் காணிச் செய் நடுவாளா? கண்மாயில் இருந்தும் ஊருணியில் இருந்தும் வீட்டுக்கு ஆடுமாடுகளுக்கு வேண்டிய நல்ல தண்ணியும் செலவு தண்ணியும் தூக்கி வருவாளா? "என்று தான் அக் காலக் கள்ளிச்சியர் கனவு காண்பார்கள்

ஆமாம் அது ஒரு காலம்தான். ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் பிறந்த மக்களும் சின்னத்தா மக்கள் பெரியத்தா மக்களும் ஒருவாரம் பத்துநாட்கள் முன்பே வந்தாக வேண்டிய காலம்.

தலைக்கு மேலும் காலுக்கு கீழும் ஏகப்பட்ட வேலைகள் காத்துக் கிடக்கும். புத்துமண் வெட்டிவந்து செம்மறிப் புழுக்கையொடு குழைத்து அடுப்பும் தரையம் மெழுகியாக வேண்டும். நெல் அவிக்க வேண்டும்.புழுங்கல் அரைக்க வேண்டும். புடைக்கவேண்டும். கொலிக்க வேண்டும். விறகு வெட்ட வேண்டும். கல்யாணப் புழக்கத்திற்கு வேண்டிய பாத்திரங்களை பங்காளி வீடுகளில் இருந்து சேகரித்தாக வேண்டும்.வங்காள அண்டாக்களில் நல்ல தண்ணீரும் செலவு தண்ணீரும் சேகரித்தாக வேண்டும். அம்மிக்கும் ஆட்டுக் கல்லுக்கும் திரிகைக்கும் குந்தாணிக்கும் சுளகுக்கும் வேலை இருந்து கொண்டே இருக்கும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வார்களே ....உறவுகளின் நெருக்கத்தை உணர்த்தக் கூடியது அக் காலக் கல்யாண வீடுகள்.

பெண்கேட்கும் பெண்பார்க்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு ' பேசி முடித்தல் '

எனும் நிகழ்ச்சி நடக்கும். இது பெண் வீட்டிலோ கோயிலிலோ நடக்கிறது.

திருமணம்

கட்டுரை 2

சடங்குகள்! (2)

பெண் கேட்டு பார்த்து ஜாதகமும் பொருந்திவிட்டால், திருமணத்தை உறுதி செய்து, திருப்பூட்டுவதற்கான வருடம் மாதம் நாள் நேரத்தை முடிவு செய்து, தாய்மாமன்கள் முன்னிலையில் ஓலை எழுதி அதை தாய்மாமன்கள் கொடுத்து வாங்கிக் கொள்ளும் நிகழ்வைத் தான், முன்னர் முகூர்த்தம் வைத்தல் எனக் குறிப்பிட்டனர

முகூர்த்த ஓலை எழுதிவிட்டால் ஒரு மாதத்திற்குள் திருமணத்தை நடத்தியாக வேண்டும், அந்த ஒரு மாதமும் மணமகனும் மணமகளும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, இருமண வீட்டாரும் அமங்கல நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கட்டப்பாடுகள் இருந்தன. எல்லாவற்றிலும் முக்கியமாக திருமண மண்டபத்திற்கு ஏற்பாடு செய்தாக வேண்டும். திருமணம் எனில் அது மண்டபத்தில் தான் என்பது நிறைவேற்றப்படா விதியாகி விட்டது. மண்டபங்களுக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பணம் கொடுத்து பதிவு செய்யவேண்டிய கட்டாயம். மண்டபம் கிடைத்த நாளில் திருமணத்தை நடத்தியவர்களும் உண்டு.

இத்தகைய காரணங்களால் திருமணநாளை முடிவுசெய்யும் நிகழ்வை மட்டும் முகூர்த்தம் வைத்தலில் இருந்து பிரித்து பேசிமுடித்தல் என்ற பெயரில் சிலபல மாதங்களுக்கு முன்பே நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. முகூர்த்த ஓலை வாசிக்கும் நிகழ்வை திருப்பூட்டுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு திருமண மேடையில் நடத்துகிறார்கள்.

பேசிமுடித்தலைபே ஒரு கல்யாண விழா அளவுக்கு பிரமாண்டப் படுத்துவோரும் உளர்.திருமணம் நடக்கவிருப்பதை ஊரறிய உலகறியச் செய்யும் நிகழ்வாக பேசிமுடித்தல் நிகழ்ச்சி அமைகிறது. அவசியம் பெறுகிறது.

ஆடி புரட்டாசி மார்கழி மாதங்கள் திருமண விழாவுக்கு உகந்தவை இல்லை.

சித்திரை ஆவணி தை மாதங்களில் வளர்பிறை முகூர்த்த நாட்களை ஏழுகிளைக் கள்ளர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

திருமணவிழா அழைப்பிதழை பத்திரிகை என்கிறோம். பத்திரிகை அச்சடித்ததும் நல்லநாள் நல்லநேரத்தில் குலதெய்வத்தின் மாணடிகளில் வைத்து கும்பிடுதல் மரபு.

முதல் பத்திரிகை தாய்மாமனுக்கும் இரண்டாவது அத்தைக்கும் உரியவை.

(தந்தை திருமணத்தில் திருப்பூட்டலில் ஒரு முடிச்சு மட்டுமே தந்தைக்குரியது. இரண்டு முடிச்சுகள் அத்தையருக்கு உரியவை. பிறந்த வீடும் பிறந்த மக்களும் ஆயுளுக்குப் பிறகும் பிரிக்கமுடியாதோர்.)

உள்ளூரில் பங்காளிகளுக்கு பத்திரிகை கொடுப்பது மரபல்ல. மணவீட்டாரிலோ உடன்பங்காளிகளிலோ ஆணும் பெண்ணும் சேர்ந்து பங்காளி வீடுகளுக்குச் சென்று " இன்ன நாளில் இன்ன நேரத்தில் மாமனுக்கு விருந்தும் சடங்கும்...இன்ன நாளில் இன்ன நேரத்தில் திருப்பூட்டுதல், இன்ன இன்ன பொழுதுகளில் பலகாரம் சாப்பாடு குடும்பத்தோடு கட்டாயம் வாருங்கள்! " என்று மரியாதையோடும் உருத்தோடும் அழைக்க வேண்டியது கட்டாயமாகும்.

வெளியூர் உறவினர்கள் சம்பந்தப் புறங்கள் தோழமை வட்டாரத்திற்காகவே பத்திரிகை அடிக்கப்படுகிறது. மிகுந்த நெருக்கமானவர்களுக்கு பத்திரிகை அனுப்பும் போது,முதல் நாள் வாருங்கள் என்று எழுதியனுப்புதல் வேண்டும். பத்திரிகை உரையின் வலதுமூலையில் மஞ்சள் தடவி இது மங்கல நிகழ்விற்கானது என்று அடையாளமிடுதல் அவசியம்.

மணவிழாவிற்கு மூன்று ஐந்து நாட்களுக்கு முன்பு மணவீட்டார் வாசலில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இது கல்யாணக் கொட்டகைக்கான சடங்கு. கொட்டகை என்பது மங்கலச் சொல். பந்தல் என்பது அமங்கலச் சொல்.

முகூர்த்தக்கால் பச்சை மூங்கிலாக இருக்கும். சுமார் பத்தடி உயரமுள்ள கம்பு. கணுத்தோறும் திருநீறு பூசி சநதனம் வைத்து குங்குமம் இடுவர்.உச்சியில் மாவிலை கட்டுவர். வாசலின் ஒருபுறத்தில் ஊன்றுவர். மணவீட்டாரும் தாய்மாமனும் நெருக்கமானவர்களும் முகூர்த்தக் காலுக்கு பாலூற்றி பூத்தூவி பொட்டிட்டு தேங்காய் பழம் உடைத்துவைத்து கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை செய்து முகூர்த்தக் காலை வழிபடுவர்.

மண்டபத்தில் தான் மணவிழா எனினும், வீட்டு வாசலில் சிறிய அளவிலேனும் கல்யாணக் கொட்டகை எழுப்பி குலைவாழைமரங்களை மாவிலை தென்னங் குருத்து தோரணங்களை கட்டி இது மணவிழா வீடென மங்கல அடையாளம் காட்டுதல் அவசியம்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் வரை, ஏழுகிளைக் கள்ளர் வீட்டுத் திருமணங்கள், முன்னிரவு பொழுதில் வீட்டின் சிற்றறைக்குள் லண்டியன் வெளிச்சத்தில், மணமக்களின் பெற்றோர் பார்வைபடாமல் வியர்வை கொட்டக் கொட்ட நடந்தேறின.

மணமகன் வீட்டார் மாட்டு வண்டிகளில் திருப்பூட்டப் புறப்படுவர். முதல் வண்டியில் மேளகாரர்கள் இருப்பர். மணமகளின் ஊர் எல்லையில் வண்டிகளை அவிழ்ப்பர். இறங்கி மேளதாளத்தோடும் பேழைப் பெட்டியோடும் செல்வர்.

பேழைப் பெட்டிக்குள் தாலி கூறைச்சேலை ரவிக்கை மாலைகள் மங்கலப் பொருட்கள் இருக்கும். மேளதாளம் இல்லையேல் சங்கின் முழக்கமும் கரவொலிகளும் திருப்பூட்டும் இசையாகும்.

பாதிவழியில் அவ்வூர் வாலிபர்கள் இளவட்டக் காசு கேட்டு மணமகனை வழிமறிப்பர் .இளவட்டக்காசு என்று கால் ரூபாயை கொடுத்து அவ்வூர இளைஞர்களை தோழமைப் படுத்திக் கொள்வார் மணமகன். இதுவரை இப் பெண்ணையும் பெண்ணின் மாண்பையும் பாதுகாக்கத் துணை நின்றவர்கள் அந்த இளவட்பங்கள் என்பதற்கான அங்கீகாரமே இளவட்டக் காசு.

பாண்டியர்கள் சோழர்கள் ஆட்சிக் காலங்களில் ஏழுகிளைக் கள்ளர் வீட்டுத் திருமணங்கள், மணமகன் இல்லாமலும்கூட நடந்தன என்றும் மணமகனின் குறியீடாக வளரி போள்ற போர்க் கருவியை வைத்துக் கொண்டு மணமகனின் சகோதரிகள் திருப்பூட்டினர் என்ற செவிவழிச் செய்திகளுண்டு.

பேசி முடித்து நாளும் பொழுதும் உறுதி செய்யப்பட்டதும் தாலிசேலை வேட்டிசட்டை வாங்குவதற்காக இருவீட்டாரும் கடைகளுக்குச் செல்வார்கள்.

மணமகனுக்குரிய வேட்டி சட்டையை மணமகள் வீட்டாரும் மணமகளுக்குரிய தாலி சேலை ரவிக்கையை மணமகன் வீட்டாரும் தங்கள் செலவில் வாங்குவர். கல்யாணச் சேலையை கூறைச் சேலை என்பர். வேட்டி சட்டை விலையைப் போல இருமடங்கு விலையில் கூறைச்சேலை வாங்குவது இயல்பென்பர்.

தாலியின் (திருமாங்கல்யம்) வடிவம் உலாவரும் தேரின் வடிவொக்கும். தாலியின் மேல் பகுதியில் இரண்டு மயில்கள் அமர்ந்திருக்கும். நடுப்பகுதியில் அன்னப்பறவை வவீற்றிருக்கும். தாலியின் வலப்புறம் இடப்புறம் உள்ள சக்கரங்களுக்குள் அலைமகள் வீற்றிருப்பாள். மிகச்சிறந்த சிற்பியின் மிகச்சிறந்த சிற்பமென, எழில்மிகு கலைவடிவம் பெற்றிருக்கிறது இத் திருமாங்கல்யம்.

7 கிளைகள்! 14 நாடுகள்!
பண்பாடு! திருமணம்!

கட்டுரை (3)

இவன் மணமானவன் என்று அக் காலத்தில் ஆண்களை அடையாளம் காட்டியது மிஞ்சி என்கிற கால்விரல் அணிகலன் தான். இரண்டு கால்களிலும் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் அணியப்படுவது இது.

திருமண நாளுக்கு முந்தைய நாளில், முன்னிரவில் தாய்மாமன் சடங்கு நிறைவெய்தியதும், மணமகனின் அக்கா தங்கையர் மணமகனுக்கு மிஞ்சி அணிவிப்பர். அந்த விரல்களின் பெயரே மிஞ்சிவிரல் தான்.! இது வெள்ளியால் ஆன அணிகலன். முந்தைய காலத்தில் மணமான கள்ளர்கள் அனைவரும் வாழ்காலம் முழுதும் மிஞ்சி அணிந்திருந்தனர்.இக் காலத்திலும் மிஞ்சி அணிவிக்கப் படுகிறது. ஆனால் இரண்டொரு நாளில் கழற்றி விடுகின்றனர்.

இவள் மணமானவள் என்பதற்கு அடையாளமாக எக் காலத்திலும் கள்ளிச்சிகளிடம் பளிச்சிட்டுக் கொண்டிருப்பவை இரண்டு பொருட்கள்.ஒன்று மங்கல நாண் (தாலிக்கயிறு) . மற்றொன்று மிஞ்சி.தலா மூன்று மிஞ்சிகள்

மணமகளுக்கு எந்தச் சடங்கிலும் எந்த உறவினரும் மிஞ்சி அணிவிப்பதில்லை! மணநாளுக்கு சிலநாள் முன்னர் மணமகளை அழைத்துச் சென்று கடையில் வாங்கிக் கொடுக்கின்றனர். சடங்கில் அணிவிக்கப்படாத இந்த மிஞ்சிகள் தான் மணமானதற்கு அடையாளமாக வாழ்காலம் முழுக்க கால்விரல்களை நிறைக்கின்றன.அனைவரின் பார்வையிலும் கௌரவமூட்டும் அணிகலனாக திகழ்கிறது.

பேசி முடித்தல் நிகழ்ச்சி பெண் வீட்டில் நடக்க வேண்டிய ஒன்று. வீட்டில் கோயிலில் மண்டபத்தில் எங்கு நடந்தாலும் பெண்ணை சபைக்கு அழைத்து வந்து காட்சிப் பொருளாக்கும் செயல் முன்னர் நிகழ்ந்ததில்லை. பேசி முடித்ததும் பூ வைக்கிறோம் பொட்டுவைக்கிறோம் என்று பெண் இருக்குமிடம் சென்று நகை அணிவிக்கும் செயலை மணமகன் வீட்டார் தொடங்கினர். இப்போது சபைக்கே அழைத்து வந்து சங்கிலி அணிவிக்கிறார்கள். பூவைக்க பொட்டுவைக்கச் செல்லும் மணமகன் சகோதரிகள் தங்கள் கரங்களால் மிஞ்சி அணிவிக்கும் சடங்கை தொடங்கி வைக்கலாம். மிஞ்சிக்கு புதிய உரிமை கிடைக்கும்.

" நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை ஆண்களுக்கு உரியது. நாணமும் பயிற்பும் பெண்களை தரைபார்த்து நடக்கத் தூண்டின. எதிர்வரும் பெண்ணின் கழுத்தை ஆண் பார்க்கிறான். எதிர்வரும் ஆணின் கால்விரல்களை பெண் பார்க்கிறாள். கல்யாணம் ஆனவரா இல்லையா என்பதை அறிந்து கொள்கின்றனர். இன்னுமொரு அடையாளமும் உண்டு. பெண் ருதுவான நாள் தொடங்கி திருப்பூட்டிக் கொள்வதற்கு சற்றுமுன்வரை கழுத்தில் கருகமணி அணிந்திருப்பாள். திருப்பூட்டுவதற்கு முன்பு கருகமணியை நாத்தினார்கள் அகற்றுவர் .நூலில் கோர்க்கப்பட்ட பாசிபவளத் தொகுப்பே கருகமணி " இவள் கருகமணிக்காரி (திருமணமாகாதவள்) இவள் கட்டுக்கழுத்துக்காரி (தாலிச்சரடு உள்ளவள்) என்று கூறுவார்கள் ! " இது குன்னங்கோட்டை நாடு தேவபட்டுக் கிராமப் பெரியவர் முத்தழகு மெய்யப்பன் அம்பலம் சொன்னது.

பண்பாடு என்பது சடங்குகளின் தொகுப்பு. பண்பாடு என்பது மரபென இறுகி நீள்கின்ற பழக்க வழக்கங்கள். பண்பாடு என்பது ஒரு சாதியக்குழு தனக்குத்தானே கட்டமைத்துக் கொண்ட வாழ்க்கை விதிகள்.

பாரதம் ஒரே பண்பாடு உடைய நாடல்ல. தமிழர்கள் ஒரே மொழியில் சிந்திக்கும் மக்கள். ஆனால் ஒரே பண்பாடு உடையோர் அல்லர்.

கள்ளர்களில் பல பிரிவுகள் உண்டு. அவைகளில் ஒன்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஏழுகிளைக் கள்ளர் சாதி. மக்கள் தொகை ஒண்ணரை லட்சம் இருக்கலாம்.

ஏழுகிளைக் கள்ளர் அனைவரும் ஒத்த பழக்கவழக்கங்களை, சடங்குகளை பின்பற்றுவோரா?

கிளை பார்த்து மணம் முடித்தல் என்ற ஒரு விதி (மரபு) இச் சாதியினரை ஒற்றைச் சங்கிலியால் இறுகப் பிணைத்திருக்கிறது மற்றபடி பழக்கவழக்கங்களில் சடங்குகளில் சிறுசிறு முரண்பாடுகளும் வேறுபாடுகளும் நிலவத்தான் செய்கின்றன.

உதாரணமாக -- இச் சாதியாருள் பெரும்பாலான. குடும்பங்கள் கருப்பரை ஐயனாரை காளியை குலசாமிபாகக் கொண்டவை. ஆனால் நாட்டு அம்பலகாரர் குடும்பம் உட்பட உஞ்சனை நாட்டில் பலபல குடும்பங்கள் சிவபெருமானை (கண்டதேவி சொர்ணமூர்த்தி) குலதெய்வமாக வழிபடுகிறார்கள். குழந்தைகளுக்கு அக் கோயிலில் தான் முதல்முடி எடுத்து காது குத்தி பெயர் சூட்டுகிறார்கள். இதே போல விசாலயன் கோட்டைப் பகுதியில் பலபல குடும்பங்கள் சிவனான அருள்மிகு சன்னப்பரை (சென்நெல்வன நாதர்)குலதெய்வமாக கும்பிடுகிறார்கள் இதை இச் சாதிக்குள் விளைந்த பெரும் முரண்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

மணநாளுக்கு முந்தைய நாள் சாயுங்காலம், மணமகனுக்கு திட்டி சுற்றவரும் தாய்மாமனையும் அவர் சுற்றத்தாரையும் வரவேற்று ஆரத்தி எடுத்து விருந்தளிக்கிறது மணமகன் குடும்பம்.

இதேபோல, மணமகளுக்கு சடங்கு சுற்றவரும் தாய்மாமனையும் அவர் சுற்றத்தாரையும் வரவேற்று ஆரத்தி எடுத்து விருந்தளிக்கிறது மணமகள் குடும்பம்.

தென்னாலை உஞ்சனை போன்ற நாடுகள் தங்கள் நாட்டுக்கு சடங்கு சுற்றவரும் தாய்மாமனுக்கு ஊர் எல்லையில் பரிவட்டம் மாலை அணிவித்து பன்னீர் தெளித்து திருநீறு சந்தனம் கொடுத்து மேளதாள வாவேடிக்கையோடு மணவீட்டுக்கு அல்லது மணமண்டபத்துக்கு அழைத்துச் செல்கின்றன.இந் நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு சடங்கு சுற்றச் செல்லும் தாய்மாமன்கள், தங்களை பரிவட்ட மாலை மரியாதையோடு அழைத்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் : வலியுறுத்துகிறார்கள்.

ஆனால். செம்பொன்மாரி முத்து போன்ற நாடுகள் தாய்மாமன்களுக்கு மாலை பரிவட்ட மரியாதை செய்யும் வழக்கமற்றவை. பிற நாடுகளுக்கு இந் நாடுகளில் இருந்து மாமுக்குச் செல்கின்ற போது அத்தகைய மரியாதைகளை விரும்புவதில்லை. இத்தகைய முரண்பாடுகள் பல ஊர்களில் மன வருத்தத்தை ஏற்படுத்தியதுண்டு. ஏற்படுத்திக் கொண்டும் உள்ளன.

சடங்கு சுற்ற வரும் தாய்மாமன்களுக்கு மண்டப அல்லது வீட்டு வாயிலில் ஆரத்தி எடுப்பது அக்கா தங்கையர் விரும்பிச் செய்யும் சடங்காகும்.

அக்கா மகனுக்கு அல்லது தங்கச்சி மகனுக்கு, அக்கா மகளுக்கு அல்லது தங்கச்சி மகளுக்கு சடங்கு சுற்றவரும் தாய்மாமன் தன்னைத் தனித்து முன்னிலைப் படுத்திக் கொள்வதில்லை. தன் தம்பியரோடும் சின்னையா பெரியய்யா மகன்களோடும் சின்னத்தா பெரியத்தா மகன்களோடும் இணைந்தே வருவார்.

தாய்மாமனுக்கு ஐந்து அல்லது ஏழுவகை ஆரத்திகள் எடுக்கிறார்கள். முதல் ஆரத்தியையும் நிறைவான ஆரத்தியையும் மணமகனின் அல்லது மணமகளின் தாய் (மாமனின் சகோதரி) எடுக்கிறார்.

7 கிளைகள்! 14 நாடுகள்!
பண்பாடு! திருமணம்!

கட்டுரை (4)

தன் மகளுக்கு மாமுக்கு வந்த தன் அண்ணன் தம்பியரும் உற்ற உறவுகளும் உடன்பெரும் பங்காளிகளும் தன் பிறந்த வீட்டின் சாதிசனச் சேனையென முகூர்த்த வாயிலில் அணிதிரண்டு நிற்கிறார்கள்

.அவர்தம் பின் அணிகளாக பல்வகைப் பழங்களை, பன்மலர்ச் சரங்களை, பல்சுவைப் பண்டங்களை பதினாறு அகன்ற மரவைகளில் நிறக்கச் சிறக்க நிரப்பிக் கொண்டு மாமன்களின் மகளிர் சேனையர்தம் தலைகளில் ஏந்தி நிற்கின்றனர்.

நாளை விடியலில் மணவிழா! இதோ இந்த அந்திப் பொழுதில், இன்னும் கொஞ்ச. நேரத்தில் தன்மகளை மணையில் ஏற்றி திட்டி சுற்றுவதற்காக மலர்ந்த முகங்களோடும் திரண்ட பிரியங்களோடும் வந்து நிற்கும் அண்ணன்தம்பியர்க்கும் அவர்தம் சேனைக்கும் ஆரத்தி எடுக்கிறாள் குடும்பத் தலைவி .

முதல் ஆரத்தி மதுக்குட ஐந்தீப ஆரத்தி.

மங்கல மஞ்சள் நீரால் நிரப்பப்பட்ட மதுக்குடம். அதன் கழுத்தில் வண்ண மலர்களால் பாசிபவளங்களால் கோர்க்கப்பட்ட சரங்கள். அதன் விலாவில் திருநீறு சந்தனம் குங்குமம். மதுக்குடத்தின் வாயிலில் குத்துவிளக்கின் ஐந்திரி முகம்.

திருக்குடத் தீப ஆராதனை. சுடரொளியில் பிறந்த வீட்டின் பெருமையை அருமையை உடன்பிறந்தோரின் உரிமையைத் தரிசிக்கிறாள் பிறந்தமகள்.

அண்ணன் தம்பியரோ உடன்பிறந்தவளின் மஞ்சள் முகத்தில் விரிகின்ற மகிழ்ச்சிப் பெருக்கையும் அவள் விழிகளில் வழிகின்ற நன்றித் துளிர்ப்பையும் கண்களால் உண்டு நிறைகிறார்கள்.

உடன்பிறந்தவளின் ஐந்தீப ஆரத்திக்குப் பினனே வகைவகையான கனிகளும் ஏற்றிய மெழுகுவர்த்திகளும் நிரம்பிய ஐந்து தாம்பாளங்கள் .சகோதரி உறவுடைய ஐவர் ஒவ்வொருவராக வந்து மாமன்களுக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்.

ஏழாவது ஆரத்தி மீண்டும் தலைவியின் ஆரத்தி. வெள்ளிச் சட்டியில் மஞ்சளும் சுண்ண்ணாம்பும் வெற்றிலைக் கிள்ளல்களும் நிரவிய செந்நீர் ஆரத்தி. பிறகு அண்ணன் தம்பியர்க்கும் அவர்தம் சேனைக்கும் தீருநீறு அணிவிக்கிறாள். "வாங்க! வாங்க! எல்லாரும் வாங்க! "அனைவரையும் வரவேற்கிறாள்.

உள்ளே நுழையும் தாய்மாமன் தரப்பை, முகப்பின் இருபுறமும் கூப்பிய கரங்கள் பிரியாமல் நிற்கும் மணவீட்டாரும் பங்காளிகளும் புன்னகை மிளிர. " வாங்க! வாங்க! "என வரவேற்கிறார்கள்.

மாமன் விருந்து மாமிச விருந்து. விருந்து நிறைந்ததும் முற்றத்து திட்டி மனையில் மணமகளை ஏற்றி விடுகிறார் மாமன்.

பூப்படைந்த முப்பதாம் நாள் சுற்றிய அதே ஆரத்தி வரிசை. அத்தாச்சி முறைமைப் பெண்கள் ஆரத்தி எடுக்கிறார்கள்.

1 நிறைநீர் சொம்பு.
2 காமாட்சி விளக்கு (எண்ணையின்றித் திரியுடன்.
3 நிறைநெல்ப் படி (உச்சியில் எழுத்தாணியில் வெற்றிலை) 4.நிறை உப்பு உழக்கு
5 பச்சரிசிக் களித் தட்டு
6 சாப்பாட்டுச் சட்டி
7. திருநீறு ரொட்டி தட்டு

மணையில் நிற்கிறாள் மணமகள். மணமகள் முன்னர் முகம் பார்த்தபடி நிற்கும் அத்தைமகள், ஆரத்திகளை வரிசைப்படி மும்முறை காட்டி மணமகளின் வலது தோன்ப்பட்டை வழியே, மணமகளின் முதுகுபார்த்து நிற்கும் அம்மான் மகளிடம் கொடுக்கிறாள். வரிசை மாறாமல் வாங்கிக் கீழேவைக்கும் அவள், ஏழு ஆரத்திகளும் தன்னிடம் வந்ததும் அவற்றை ஒவ்வொன்றாக மணமகளின் இடது தோள்ப்பட்டை வழியே அத்தை மகளிடம் கொடுக்கிறாள். இப்படி மும்முறை ஆரத்திச் சுற்று முடிந்ததும், ரொட்டிகளை மணமகளின் உச்சந்தலையிலும் தோள்ப்பட்டைகளிலும் வைத்து மேனியை உலுக்கி உதிரவைக்கிறார்கள். பிறகு முடக்கத்தான் கொடிமாலையை மேனியில் படாமல் மும்முறை தலைவழி நுழைத்து பாதம்வழி வெளியே எடுத்து வீட்டுக் கூரை மீதெறிகிறார்கள்.

மணைமேல் நிற்கும் மணமகளிடம் வெற்றிலையைக் கொடுத்து,மணையில் நின்றபடியே நான்கு முனைகளிலும் வெற்றிலையால் நீர்விளாவச் செய்கிறார்கள். நிறைவாக மணமகளுக்கு நீறுபூசி வாழ்த்துகிறார்கள் வாழ்வரசியர். மணையிலிருந்து இறக்கு வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார் தாய்மாமன்.

இதேமுறைச் சடங்குகள் தான், ஆரத்திகள் தான் மணமகனுக்கும் அவரில்லத்தில் அவர் தாய்மாமனாலும் அத்தை மகள்களாலும் அம்மான் மகள்களாலும் வாழ்வரசிகளாலும் நிகழ்த்தப் பெறுகின்றன.

மறுநாள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் மணவிழா. திருப்பூட்டலுக்குச் சற்று முன்னர் முகூர்த்த ஓலை வாசிக்கும் மிகமுக்கிய நிகழ்வு நடக்கிறது.

மணமேடையில் விரிக்கப்பட்ட சமுக்காளத்தில் மணமகன் தாய்மாமன்கள் தரப்பினரும் மணமகள் தாய்மாமன்கள் தரப்பினரும் அமர்கின்றனர். தலைப்பாகை அணிந்த அவர்கள் நடுவே இரண்டு முகூர்த்தத் தாம்பாளங்கள். வெற்றிலை பாக்கு தேங்காய்பழம் கற்கண்டு பேரீச்சை இத்யாதிகள் ....கூடவே சந்தனப் பேழை பன்னீர்சொம்பு .

மணமகனின் தாய்மாமன் தனது தாம்பாளத்தில் இருக்கும் முகூர்த்த ஓலையை எடுத்து அருகிலிருக்கும் பெரியவரிடம் கொடுத்து " எனது முகூர்த்த ஓலையை என்பொருட்டு வாசியுங்கள்! " என்கிறார். பெரியவர் கணீர் குரலில் அவையறிய வாசிக்கிறார்.

7 கிளைகள்! 14 நாடுகள்!
பண்பாடு! திருமணம்!

கட்டுரை (5)

( தற்காலத்தில் வாசிக்கப்படுகின்ற மாமன்களின் முகூர்த்த ஒலைகள் பண்பாடு சார்ந்த மரபு சார்ந்த உரிமை சார்ந்த மடல்களாக இல்லாமல் புரோகிதர்கள் சோதிடர்கள் எழுதித்தரும் திருமண அழைப்பிதழ் மாதிரியாக அமைந்திருக்கின்றன.

இங்கே பண்பாட்டை மரபை மாமன்களின் உரிமையை பாதுகாக்கும் வண்ணம் ''மாமன் ஓலையை ' எழுதியுள்ளேன். ஏற்றுக் கொள்வோர் கொள்க :புறந் தள்ளுவோர் தள்ளுக! }

" உ.சிவமயம்
இரவுசேரி அருள்மிகு பத்திரகாளி அம்மன் துணை!
எங்கும் மங்கலம் பொங்குக!

பாண்டிவளநாடு, ஏழுகிளைச்சீமை, தென்னாலை நாடு, திருமணவயல் சேர்க்கை, மார்க்கண்டன்பட்டி கிராமம், மு.காளிமுத்து அம்பலம் - வேலுநாச்சியார் இணையரின் பேரன், மு.கா.முத்துக்கருப்பன் அம்பலம் - இராமாயி இணையரின் மகன், எனது அக்கா மகன், அரிஆதன் கிளையன், திருநிறைச்செல்வன் மு.வெங்கடேஷ் என்கிற மணமகனுக்கும் -

பாண்டிவளநாடு, ஏழுகிளைச்சீமை, செம்பொன்மாரிநாடு, நடுவட்டம், ஆறாவயல் கிராமம், சொ.சிர. காளிமுத்து அம்பலம் - இராமு இணையரின் பேத்தி, கா.பெரியய்யா அம்பலம் - சாரதா இணையரின் மகள், உங்கள் தங்கை மகள், பிச்சையான் கிளைச்சி, திருநிறைச்செல்வி பெரி. மீனா என்கிற மணமகளுக்கும் -

நம் இருவர் முன்னிலையில் இருவீட்டாரும் உறவினர்களும் பேசிமுடித்தபடி -

திருவள்ளுவர் ஆண்டு 2039 வைகாசி மாதம் 31 ஆம் நாள் (13-06-2008) வெள்ளிக்கிழமை காலை 6 - 7.30 மணிக்குள் திருமணம் செய்விக்க உறுதி செய்து இம் முகூர்த்த ஓலையை எழுதி, சபையில் வாசித்து, முகூர்த்தத் தாம்பாளத்தில் வைத்து இருவரும் பரிமாறிக் கொள்கிறோம்.

ஒருமன தாகும் நம் திருமண மக்கள் பதினாறு பேறுகளையும் பெற்று வளமாக நலமாக வாழ, நாமும் நம் உறவினர்களும் என்றென்றும் துணைநிற்போம்! சுபம்!

இவண், மணமகனின் தாய்மாமன், கரு. வடிவேலு அம்பலம், ஏழுகிளைச்சீமை, ஏழுகோட்டை நாடு சித்தானூர் மாகாணம், அழியாப்பதி கிராமம் 13-06-2008 "

அடுத்து, மணமகளிள் தாய்மாமன் தனது தாம்பாளத் தட்டிலிருக்கும் முகூர்த்த ஓலையை எடுத்து சபை அறிய சப்தமாக வாசிக்கிறார்.

" உ.சிவமயம்!
அமராபதி புதூர் அருள்மிகு ஆற்றாலங் கருப்பர் துணை!
எங்கும் மங்கலம் பொங்குக!

பாண்டிவளநாடு, ஏழுகிளைச்சீமை, செம்பொன்மாரி நாடு, நடுவட்டம், ஆறாவயல் கிராமம், சொ.சிர. காளிமுத்து அம்பலம் -இராமு இணையரின் பேத்தி,கா.பெரியய்யா அம்பலம் - சாரதா இணையரின் மகள், எனது தங்கை மகள், பிச்சையான் கிளைச்சி, திருநிறைச் செல்வி பெரி.மீனா என்கிற மணமகளுக்கும் -

பாண்டிவளநாடு, ஏழுகிளைச்சீமை, தென்னாலை நாடு திருமணவயல் சேர்க்கை, மார்க்கண்டன்பட்டி கிராமம் மு.காளிமுத்து அம்பலம் -வேலுநாச்சியார் இணையரின் பேரன், மு.கா.முத்துக்கருப்பன் அம்பலம் - இராமாயி இணையரின் மகன், உங்கள் அக்கா மகன், அரிஆதன் கிளையன், திருநிறைச் செல்வன் மு.வெங்கடேஷ் என்கிற மணமகனுக்கும் -

நம் இருவர் முன்னிலையில் இருவீட்டாரும் உறவினர்களும் பேசிமுடித்தபடி, -

திருவள்ளுவர் ஆண்டு 2039 வைகாசி மாதம் 31 ஆம் நாள் (13-06-2008)வெள்ளிக்கிழமை காலை 6-7.30 மணிக்குள் திருமணம் செய்விக்க உறுதி செய்து இம் முகூர்த்த ஓலையை எழுதி, சபையறிய வாசித்து, முகூர்த்தத் தாம்பாளத்தில் வைத்து இருவரும் பரிமாறிக் கொள்கிறோம்.

ஒருமன தாகும் நம் திருமண மக்கள் பதினாறு பேறுகளையும் பெற்று, வளமாக நலமாக வாழ, நாமும் நம் உறவினர்களும் என்றென்றும் துணைநிற்போம். சுபம்

இவண் -மணமகளின் தாய்மாமன், நீ.ரெங்கநாதன் அம்பலம், ஏழுகிளைச்சீமை தென்னாலை நாடு, ஈகரைச் சேர்க்கை, கள்ளிக்குடி கிராமம். 13-06-2008."

வாசித்து முடித்ததும் சங்கொலியும் மேளநாயன இன்னிசையும் எழுகிறது.

மணமகனின் தாய்மாமன் எழுந்து முகூர்த்த ஓலையுள்ள தனது தாம்பாளத்தை எடுத்து கவனமாக மணமகளின் தாய்மாமனிடம் கொடுக்கிறார். வாங்கித் தன் மனைவியிடம் தருகிறார் அவர்.

மணமகள் தாய்மாமன் தன் முகூர்த்த ஓலைத் தாம்பாளத்தை மணமகன் தாய்மாமனிடம் கொடுக்கிறார்.அவர் வாங்கித் தன் மனைவியிடம் தருகிறார்.

இரண்டு தரப்பினரும் பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து தங்கள் மகிழ்வையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். பெருகுகிறார்கள்.

திருப்பூட்டும் நிகழ்வு தொடங்குகிறது.

மணமகனைத் தோழன் அழைத்து வருகிறான். மணையை மும்முறை வலம்வந்து, கிழக்கு நோக்கி மணையில் அமர்த்துகிறான்.

மணமகளைத் தோழி அழைத்து வருகிறாள்.மும்முறை வலம்வந் து மணைபில் மணமகனுக்கு வலத்தில் அமர்த்துகிறாள்.

மணமகனின் தோழனாக தாய்மாமன் மகனோ, அத்தை மகனோ வருவார்கள். மணமகளின் தோழியாக தாம்மாமன் மகளோ அத்தை மகளோ வருவார்கள்.

மாமன்களால் பெற்றோர்களால் அவையோரால் வாழ்த்துப் பெற்ற திருமாங்கல்யத்தை வாழ்வரசியர் மேடைக்கு கொண்டுவருகிறார்கள். திருமாங்கல்யத்தை வாங்கி மணமகனிடம் கொடுக்கிறாள் அவன் சகோதரி .

சங்குகளின் முழக்கமும் கெட்டிமேளமும் வாழ்த்தரிசித் தூவலும் நிரம்ப, மணமகளுக்கு மணமகன் திருப்பூட்டுகிறான்.

( ஏழுகிளைக் கள்ளர்களின் திருமணமுறைகளை,சடங்குகளைப் பற்றி நம்மிடம் பகிர்ந்த, உறுதிப் படுத்திய, செம்பொன்மாரி நாடு நடுவட்டம் ஆறாவயல் கிராமம் திருமதி முத்தாத்தாள் பெரி. மு. சீராளன் அம்பலத்திற்கும் கண்டதேவி பெரி.சொர்ணலிங்கம் அம்பலத்திற்கும் நன்றி பாராட்டுகிறேன்)