களப்படையினர் பேரியக்கம்

கள்ளர் வீட்டு கல்யாணம் கள்ளர் ஜாதியினருக்கான பிரத்யேக திருமண தகவல் மையம். தொடர்புக்கு +91 9259595927, +91 8428595970
பூப்படைதல் - சடங்கு

7 கிளைகள்! 14. நாடுகள்! பண்பாடு! பூப்பும் சடங்கும்!

பெண் பூப்படைதலை பெரியமனுஷியானாள், ருதுவானாள், வயதுக்கு வந்தாள், சடங்கானாள், சமைந்தாள், புஷ்பவதியானாள், பருவமடைந்தாள் எனப் பலவாறாகச் சொல்கிறோம்.

பிறந்த மாதத்தை நாளை நேரத்தை வைத்தே ஆண்களுக்கான வாழ்கால ஜாதகம் எழுதப்படுகிறது. ஆனால் பெண்களுக்கான ஜாதகம், அவர்கள் பூத்த மாதத்தை நாளை நேரத்தை வைத்தே எழுதப்படுகிறது. ருதுக்கால பலன், ருதுநிதிப்பலன், ருதுநட்சத்திரப் பலன், ருதுசாந்தி பலன் எனக் கணிக்கிறார்கள். ருதுவான ஜாதகத்தை வைத்தே திருமணப் பொருத்தம் தீர்மானிக்கப் படுகிறது.

பூப்படையாப் பெண்ணை கன்னிமாப் பெண் அல்லது பத்தினிப்பெண் என்கிறோம்.

பூப்படைதலால் ஏற்படும் தீட்டு கன்னித்தீட்டு ஆகும். கன்னித்தீட்டின் கால எல்லை முப்பது நாட்கள். பெண் வீட்டாரும் உடன் பங்காளிகளும் 30 நாட்கள் தீட்டு கடைப்பிடிக்கிறார்கள். பெரும் பங்காளி குடும்பங்களுக்கு 16 நாட்கள் தீட்டு. இத் தீட்டின் தீண்டலுக்கு பள்ளிக்கூடங்கள் விதிவிலக்கு.

ஏழுகிளைக் கள்ளர் வீடுகளில் நடக்கும் அனைத்து சடங்குகளையும் குடிவண்ணாரும் குடிநாவிதரும் முன்னின்றோ பின்னின்றோ உடனின்றோ நடத்தித் கொடுக்கிறார்கள்.

தங்கள் வீடுகளில் நடக்கின்ற எந்தச் சடங்கிற்கும் ஏழுகிளைக் கள்ளர்கள் பிராமணர்களை அழைப்பதில்லை. பிராமணர்களை வேண்டாதவர்களாக கருதுவதில்லை. அந்தணர் என்போர் அறநெறி மிக்கோர் எனப் போற்றத் தவறியமில்லை. ஏராளமான ஐயனார் கருப்பர் காளி கோயில்களில் பிராமணர்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

" பெண் வயதுக்கு வந்ததும் அவள் தாய் மாமனுக்குத் தான் முதலில் தகவல் சொல்ல வேண்டும். வேட்டியின் ஒரு முனையை முடிந்து மஞ்சள் நீரில் நனைத்து அதை வண்ணாரின் தோளில் போட்டு, பெண்ணின் குடும்பத்தில் ஒருவர் தாய்மாமன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்

வண்ணாரின் மஞ்சள் வண்ணக் காட்சி கண்டதும் தங்களுக்கு உரிமையுடைய பெண் பூத்திருப்பதை மாமன் வீட்டார் வீட்டார் புரிந்து கொள்வர்.வண்ணாருக்கு புதிய வேட்டி ஒன்றை வழங்குவதோடு விருந்தும் அளித்து, இன்ன நாளில் நேரத்தில் வருகிறோம் என்ற தகவலையும் சொல்லி அனுப்பிவைப்பர்.

சொன்ன சொல் தவறாமல் மஞ்சள் பூ தேங்காய் பழம் சேலை ரவிக்கையொடும் குடும்பத்தோடும் தாய்மாமன் வருவார். பச்சைப் பனையோலை வெட்டி வந்து குச்சு (குடில்) கட்டுவார். முதல் ஏழுநாட்கள் அக் குச்சுக்குள் தான் பூத்தபெண் வசிப்பாள்.

ஏழாம் நாள் மீண்டும் குடும்பத்தோடு தாய்மாமன் வருவார். மருமகளுக்குக் காய்ச்சி (விருந்து) ஊற்றுவார். விடியுமுன்னர் குடிலைப் பிரிப்பார். பிரித்த குடிலை அள்ளிச் சென்று கண்மாய்க்குள் போட்டு எரிப்பார்.

பூத்த பதினாறாம் நாளில், மாமன் வீட்டார் சேலை ரவிக்கை மஞ்சள் தேங்காய் பழத்தோடு வருவார்கள். பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி (பூப்புனித நீர்) அலங்கரித்து அழைத்து வந்து, வாசல் முற்றத்தில் மாற்றுப் போர்த்திய மணைக் கட்டையை மும்முறை வலம்வந்து அதில் மருமகளை ஏற்றி கிழக்கு திசை நோக்கி நிற்க வைப்பார் தாய்மாமன்.

வண்ணாரும் நாவிதரும் முடக்கத்தான் கொடியை அகன்ற மாலையாக்கி தாய்மாமனோடு வந்த வாழ்வரசியரிடம் கொடுப்பர்.

முடக்கத்தான் கொடி மாலையை பூப்பெண்ணின் தலைவழி நுழைத்து பாதம்வழி வெளிக் கொணர்வர் வாழ்வரசியர். இவ்வாறு மும்முறை செய்வார்கள். பிறகு, பெண்ணின் தலையிலும் தோள்ப்பட்டைகளிலும் பிஸ்கட்டுகளை வைத்து, உடலை உலுக்கி தரையில் விழச் செய்வர். தீபத்தை ஏற்றி ஒரு சட்டிக்குள் வைத்து பெண்ணுக்கு தீப ஆராதனை (ஆரத்தி ஆளத்தி செய்து திருநீறு அணிவித்து வாழ்த்தி அருள்கூறுவர். இவ்வாறு சடங்கான தீட்டுக் கழிக்கப்பட்ட மருமகளை மணைவிட்டு இறக்கி வீட்டுக்குள் அழைத்துச் செல்வார் தாய்மாமன்.

ருதுவான முப்பதாம் நாள்வரை வீடெங்கும் பூப்பெண் நடமாடலாம்.மறு சடங்கிற்கு பிறகு தீட்டு நீங்கிவிடும் இது எங்கள் நாட்டு மரபு! " என்கிறார் குன்னங்கோட்டை நாடு தேவபட்டுக் கிராமப் பிரமுகர், அரசுயான் கிளைக்காரர், 83 வயதாளர் முத்தழகு மெய்யப்பன் அம்பலம்.

"அந்தக் காலத்தில் பதினாறு பதினேழு வயதில் தான் பெரியமனுஷி ஆவார்கள். முதல் தீட்டைக் கண்டு பயந்துவிடாமல் ஏன் எதுக்கு எதனால் எப்படி என்றெல்லாம் சொல்லிச் சொல்லி பெண்ணைப் பக்குவப்படுத்தி இருப்பார்கள். தாயிடம் சொல்வது பேயிடம் சொல்வதற்கு சமம்னு ஒரு உபகதை உண்டு. தனக்கு தீட்டுப் பட்டிருப்பதைக் கண்ட பெண் அதை பெற்ற தாயிடமோ தாய் முறை உள்ளவர்களிடமோ கைம்பெண்களிடமோ குழந்தைப் பேறு இல்லாதவர்களிடமோ சொல்லக்கூடாது. அத்தாச்சி முறைப் பெண்களிடம் தான் சொல்லவேண்டும் அவர்கள் வாயிலாகத் தான் தாய் அறியவேண்டும்.

ஏகாளியை (வண்ணார்) வரவழைத்து, அவரை தாய்மாமனுக்கு சேதி சொல்ல அனுப்புவார்கள் பெண் வீட்டார்.

சில ஊர்களில் தாயாரே தன் பிறந்த வீட்டுக்கு சென்று மகள் மலர்ந்ததை சொல்வதுண்டு.

மூன்றாம் நாளோ ஐந்தாம் நாளோ தாய்மாமன் வந்து திண்ணையிலோ முகப்பிலோ ஒரு பகுதியில் பச்சைப் பனையோலை தட்டி மறைவில் மருமகளை அமர்த்திவிட்டுப் போவார். பதினாறாம் நானில் பத்துப்பனிரெண்டு ஆட்களோடு வருவார். பூசும் மஞ்சள் தேங்காய் பழம் சேலைரவிக்கை கற்கண்டு பேரீச்சம்பழம் மாலை பூ பொட்டென வாங்கிவந்து காய்ச்சி ஊத்தி முடக்கத்தானை போட்டு கழிப்புக் கழித்து பெண்ணை வீட்டுக்குள் கூட்டிச்சென்று விடுவார்.பெரிய சடங்கு தாய்மாமன் வசதிவாய்ப்பு தோதுக்கு ஏற்றாற்போல் நடக்கும் பெரும்பாலும் முப்பதாம் நாள் நடப்பதுண்டு.

பட்டுச் சேலை ரவிக்கை தங்கச் சங்கிலி காப்பு தோடு மூக்குத்தி 16 தேங்காய் ஏழட்டு சீப்பு வாழைப்பழம் மாலை பூ பழவகைகள் என்று ஏழெட்டு மரவைகளில் சீர் கொண்டு வருவார்கள் மாமன் வீட்டார். பங்காளி பகுத்தாளிகளுக்கு சொல்லச் சொல்லி காய்ச்சி ஊற்றுவார்கள்.

ஆளான பெண்ணை மஞ்சள் நீரால் குளிப்பாட்டி அலங்கரித்து மாலை அணிவித்து மணைக்கட்டையில் கிழக்கு திசைபார்த்து நிற்க வைப்பார் தாய்மாமன்.

பெண்ணுக்கு முன்னால் பெண்ணின் முகம் பார்த்தபடி அத்தை மகளும், பெண்ணுக்கு பின்னால் பெண்ணின் முதுகைப் பார்த்தபடி அம்மான் (தாய்மாமன்) மகளும் நிற்பார்கள்.

ஆரத்தி எடுப்பதற்காக (ஆராதனை செய்வதற்காக) ஏழுவகை மங்களப் பொருட்கள் வரிசையாக இருக்கும். அவை -

1 தண்ணீர் நிறைந்த சொம்பு
2 காமாட்சி விளக்கு (எண்ணையின்றி திரியோடு)
3 ஒரு படியில் கோபுரமாக நெல் அதன் உச்சியில் எழுத்தாணியில் வெற்றிலை
4 ஒரு உழக்கில் கோபுரமாக உப்பு
5. ஒரு தட்டில் பச்சரிசிக் களி
6 ஒரு சட்டியில் சாப்பாடு
7 ஒரு தட்டில் திருநீறும் பிஸ்கட்டும்

தீட்டுக் கழித்து புனிதமாக்கப்பட வேண்டிய பூப்பெண்ணின் முகம்பார்த்து நிற்கும் அத்தை மகள், முதலில், நிறை சொம்பு நீர் ஆரத்தியை மும்முறை செய்து, பெண்ணின் வலது தோள்பட்டை வழியே அம்மான் மகளிடம் கொடுக்கிறாள். வாங்கிக் கீழே வைக்கிறாள் அவள்.

அடுத்து காமாட்சி விளக்கு ஆரத்தி.
அடுத்து நிறை நெல் வெற்றிலை ஆரத்தி.
அடுத்து நிறை உப்பு ஆரத்தி
ஐந்தாவதாக பச்சரிசிக் களி ஆரத்தி.
ஆறாவதாக சாப்பாடு ஆரத்தி
ஏழாவதாக திருநீற்று ஆரத்தி.

வாங்கி வாங்கி கீழே வைத்த ஏழு ஆரத்திகளை ஒவ்வொன்றாய் எடுத்துபெண்ணின் இடது தோள்பட்டை வழியே முன்னால் நிற்கும் அத்தை மகளிடம் கொடுக்கிறாள் அம்மான் மகள்.

மீண்டும் ஆரத்தி வரிசைப்படி நடக்கிறது

இப்படியே மூன்றாவது சுற்று ஆரத்தியும் நிறைகிறது தலையிலும் தோள்களிலும் ரொட்டிகளை வைத்து உலுப்பி அவற்றைக் கீழே விழ வைக்கிறார்கள் .நிறைவாக நெற்றியில் நீறு அணிவித்து புனிதப்படுத்தப் படுகிறாள் மலர்மங்கை.

இதே ஆரத்திமுறை (சடங்கு சுற்றுதல்) திருமணத்திற்கு முதல் நாளிலும் இதே மாமனால் இதே மருமகளுக்கு நடத்தப்படுகிறது.! " இத் தகவல்களைச் சொன்னவர், செம்பொன்மாரி நாடு நடுவட்டம் ஆறாவயல் கிராமம் திருமதி கனகம் பெரியய்யா அம்பலம்.வயது 77. தொண்டையான் கிளை!