களப்படையினர் பேரியக்கம்

கள்ளர் வீட்டு கல்யாணம் கள்ளர் ஜாதியினருக்கான பிரத்யேக திருமண தகவல் மையம். தொடர்புக்கு +91 9259595927, +91 8428595970
ஏழு கிளை 14 தன்னரசு நாடுகள்!

ஏழுகிளை 14 தன்னரசு நாடுகள்

===================

ஏழுகிளை பதினான்கு நாடுகள் எனில் ஏழுகிளைக் கள்ளர்கள் மிகுதியாக வாழ்கின்ற நாடுகள் எனப் பொருள் கொள்க.

கள்ளர் பெருப்பெருத்த சீமை என்று இப் பகுதித் தாயர்கள் பெருமையுடன் கூறுவதுண்டு.

பதினான்கு நாடுகளில்
1 .உஞ்சனை
2 .செம்பொன்மாரி
3. இரவுசேரி
4. தென்னாலை
5. வடம்போகி
6.ஏம்பல்
7. ஆற்றங்கரை
8. தேர்போகி
9. முத்து
10 இரும்பா
11. ஏழுகோட்டை
12. சிலாமேகம்
13. கப்பலூர்
14 குன்னங்கோட்டை என ஏழுகிளைக் கள்ளர் நாடுகளின் எண்ணிக்கை பதினான்கு ஆகும்.

வாரக்கால் நாடு எனில்?

வாரம் + கால் :வாரக்கால்.

வாரம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. இங்கே வீட்டின் கூரை என்று பொருள்.

தாழ்வாரம் எனில் தாழ்ந்த கூரை என்க.

" வண்டிமாடுகள் நனைகின்றன. அவிழ்த்து வாரத்தில் கட்டு! " என்பர்

கால் என்ற சொல்லுக்கும் பல பொருளுண்டு. இங்கே நீர் செல்லும் பாதை என்று பொருள்.

ஆற்றிலிருந்து கண்மாய்க்கு நீர் செல்லும் பாதையைக் குளைக்கால் என்பர்

கண்மாய் மடைவாயிலில் இருந்து வயலுக்கு நீர் செல்லும் பாதையை வாய்க்கால் என்பர்.

கண்மாயில் அதிகமான நீரை கீழுள்ள மறுகண்மாய்க்கு கொண்டு செல்லும் பாதையை மறுகால் என்பர்.

வயலில் அளவுக்கு அதிகமாக உள்ள நீரை வரப்பை வெட்டி வடிக்கும் பாதையை வடிகால் என்பர்.

வாரக்கால் எனில், வீட்டின் நான்குபுறமும் வாரத்தின் வழியே இறங்கும் மழைநீர் செல்லும் பாதை என்று பொருள்.

வாரக்கால் நாடுகள் என்றால், இயற்கையாகவே நாட்டின் எல்லையை ஒட்டிய, நாட்டு மக்களின் நெருங்கிய சுற்றமுள்ள, நெருங்கிய தோழமையுள்ள, கொள்வினை கொடுப்பினையுள்ள, சுகதுக்கங்களில் உருத்தான பங்குள்ள நாடுகள் என்று பொருளாகும்.

உஞ்சனை செம்பொன்மாரி இரவுசேரி தென்னாலை ஆகிய பிரதான நான்கு நாடுகளுக்கும் தலா இரண்டரை நாடுகளென மொத்தம் பத்து நாடுகள் வாரக்கால் நாடுகள்.

உஞ்சனை நாடும் அதற்கான வாரக்கால் நாடுகள் இரண்டரையும் ....

( 1 ) உஞ்சனை நாடு
வடம்போகி நாடு
ஏம்பல் நாடு
ஆற்றங்கரை நாட்டில் பாதி

செம்பொன்மாரி நாடும் அதற்கான வாரக்கால் நாடுகள் இரண்டரையும் ....

( 2 ) செம்பொன்மாரி நாடு
ஆற்றங்கரை நாட்டின் பாதி
தேர்போகி நாடு
முத்து நாடு

இரவுசேரி நாடும் அதற்கான வாரக்கால் நாடுகள் இரண்டரையும்

( 3 ) இரவுசேரி நாடு
இரும்பா நாடு
ஏழுகோட்டை நாடு
சிலாமேக நாட்டின் பாதி

தென்னாலை நாடும் அதற்கான வாரக்கால் நாடுகள் இரண்டரையும் .....

( 4 ) தென்னாலை நாடு
சிலாமேக நாட்டின் பாதி
கப்பலூர் நாடு
குன்னங்கோட்டை நாடு

இந்தப் பதினான்கு நாடுகளுக்கும் தலைமை நாடு உஞ்சனை நாடு. இந்தப் பதினான்கு நாட்டு அம்பலகாரர்களுக்கும் தலைமை அம்பலகாரர் உஞ்சனை நாட்டு அம்பலகாரர்.

இந்தப் பதினான்கு நாடுகளும் கூடுமிடம் கண்டதேவியில் உள்ள இலுப்பைத் தோப்பு.

இங்கே நாட்டார்கள் எனில் ஏழுகிளைக் கள்ளர்களும் இவர்களிடம் உரிமை பெற்ற கோனார்களும் ( இடையர்) மட்டுமே!

14 நாடுகள்

உஞ்சனை நாடு

சாதி ரீதியாக தேவர் மற்றும் முக்குலத்தோர் எனில் கள்ளர், மறவர், அகமுடையாரைக் குறிக்கின்றன!

கள்ளர்களில் -ஏழுகிளைக் கள்ளர், தொண்டைமான் கள்ளர் பிரான்மலைக் கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர், கொன்னங்கோட்டைக் கள்ளர், பெரியசூரியக் கள்ளர், அய்யாக் கள்ளர், அப்புக் கள்ளர் மல்லாக்கோட்டைக் கள்ளர், சிறுகுடிக் கள்ளர், அழகுமலைக் கள்ளர், ஈசநாட்டுக் கள்ளர் உட்பட பல பிரிவுகள் உள!

முக்குலத்தையும் ஒருகுலமாக்கப் பலர் முயன்றனர் ஆயினும் இன்று வரை கொள்வினை கொடுப்பினை மனமாற ஏற்பட வில்லை!

ஏழுகிளைக் கள்ளர்கள் மிகுதியாக வாழ்கின்ற பதினான்கு நாடுகளில், தென்னாலை உஞ்சனை செம் பொன்மாரி இரவுசேரி ஆகிய நான்கு நாடுகள் கண்டதேவி சொர்ணமூர்த்தி கோயில் தேரின் வடங்களுக்கான உரிமை பெற்றவை!

இந்த நான்கு நாடுகளில் தென்னாலை, ஒரு நாட்டிற்குரிய சகல தகுதிகளும் நிறைந்தது. பதினோரு சேர்க்கைகளையும் தொண்ணூற்றாறரைக் கிராமங்களையும் கொண்டது! தொன்மையானது.

மற்ற உஞ்சனை, செம்பொன் மாரி, இரவுசேரி ஆகிய மூன்று நாடுகளும் சில நூற்றாண்டுகளுக்கு முன்வரை பெரம்பூர் நாட்டின், தாழையூர் நாட்டின் முத்துநாட்டின் பற்றுகளாக (சேர்க்கைகளாக) இருந்தவை! தலா இருபத்தி இரண்டரை , முப்பத்தி இரண்டரைக் கிராமங்களைக் கொண்டவை!

சான்றுகள் ஏதுமில்லை ஆயினும் ஒரு அனுமானம்.

கிழவன் சேதுபதி ஆட்சியில் சிவத்தெழுந்த பல்லவராயன் என்றொரு தளபதி இருந்தான். இவன் மீது ஒரு உலா இலக்கியம் உண்டு! புகழ் மிக்கவன் கண்டதேவி சொர்ணமூர்த்தி மீது அளப்பரிய பக்தி கொண்டவன்!

ஒரு கட்டத்தில் தஞ்சை மராட்டிய மன்னரோடு சேர்ந்து கொண்டு கிழவன் சேதுபதிக்கு எதிராக சதி செய்ததில் சேதுபதி படையால் கொல்லப் பட்டான்!சிவந்தான் கோட்டை எனும் ஊர் இவன் பெயரிலானதே!

இவனது கண்காணிப்பிற்கு உரியதாக இந்த நான்கு நாடுகளும் இருந்திருக் கின்றன இவனது ஆளுகைக்காகவே உஞ்சனை செம்பொன்மாரி இரவுசேரி ஆகிய மூன்று சேர்க்கைகளும் நாடுகள் ஆக்கப் பட்டிருக்க வேண்டும்!

ஒரு தந்தைக்கு மூன்று ஆண் மக்களும் ஒரு மகளும் இருந்தனர் அவர்களின் வீரதீரச் செயல்களுக்கு பரிசாக, மூத்தவனுக்கு செம்மாரி நாட்டையும், நடுவுலானுக்கு தென்னாலை நாட்டையும் இளையவனுக்கு உஞ்சனை நாட்டையும், தங்கைக்கு இரவுசேரி நாட்டையும் மன்னன் கொடுத்தனன் என்று ஒரு செவிவழிச் செய்தி நீள்கிறது! இது நம்பத் தகுந்ததாக இல்லை! ஒரு மகனுக்கு தொண்ணூற.றாறரை மற்ற மூவருக்கும் எழுபத்தி ஏழரைக் கிராமங்கள் என்பது?

உஞ்சனை நாடு முப்பத்தி இரண்டரைக் கிராமங்களைக் கொண்டது! அவை -

1 உஞ்சனை
2 சித்தாட்டிவயல்
3 புதுவயல்
4 கடியாவயல்
5 மொட்டையன் வயல்
6 பாப்பான் வயல்
7 வாணியன் வயல்
8 வழிச்சான் வயல் 9 மங் கலம்
10 பிரம் புவயல்,
11 நல்லிவயல் (இதில் பாதி செம்மாரி நாட்டிற்குரியது)
12 பிரம்புவயல்
13 ஊரவயல்
14 ஏம்பவயல்
15 பனங்காட் டான்வயல்
16 கோம்புரான் வயல்
17 இளம்புலி வயல்
18 ஊரிவயல்
19 மாத்தூர்
20 இலுப்பைக்குடி
21 கல்லி வயல்
22 வேட்டைக்காரன் பட்டி
23 மீனாவயல்
24 செட்டியா வயல்
25 முடுக்குவயல்
26 உய்யக்கொண்டான் வயல்
27 லாவடி வயல்
28 சுண்டான தர்மம்
29 சிலையன் குடியிருப்பு
30 காத்தான் வயல்
31 கோயிலான் வயல்
32 குயவன் தாழி வயல்
33. ஆங்குடிவயல் (உஞ்சனை திரு மு பெரி சுப்பிரமணியம் தந்த பட்டியல் இது! )

உஞ்சனை வட்டாரக் கல்வெட்டுகளை ஆய்வாளரும் ராமசாமி தமிழ்க் கல்லூரியின் முதல்வருமான முனைவர் சே.கணேசன் வெளியிட்டிருக் கிறார்

உஞ்சனை நாடு (2.)

உஞ்சனையில் தொன்மையான அழகான சிவன் கோயில் இருக்கிறது. இக் கோயிலில் 19 கல்வெட்டுகளைக் கண்டறிந்து படியெடுத்துப் படித்து நூலாக வெளியிட்டிருக்கிறார் முனைவர் வேட்டைக்காரன்பட்டி சே.கணேசன்!

இக் கல்வெட்டுகள் 12, 13, மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை அதாவது இன்றைக்குத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. இந்தச் சிவாலயத்திற்கு சுமார் 500 ஏக்கர் நன்செய் நிலங்களைத் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள், அரசர்களும் அரசப் பிரதிநிதிகளும் வியாபாரிகளும் பொதுமக்களும்! அதற்கான ஆவணங்கள் தான் இக் கல்வெட்டுகள்!

சோழப் பேரரசர்களான ராசராசனிடமும் அவன் மகன் ராசேந்திரளிடமும் தன் முன்னோர் பறிகொடுத்த பாண்டியநாட்டை மீட்டதோடு சேர சோழ அக்கம்பக்க நாடுகனையும் தன்கீழ் கொண்டுவந்தவன் சுந்தரபாண்டியன். அதனால் தனக்கு "திரிபுவனச் சக்கரவர்த்தி "எனப் புகழாரம் சூட்டிக் கொண்டான். இந்தச் சுந்தர பாண்டியனாலும் இவனுக்குப் படைதந்து துணைநின்ற இலங்கை வேந்தனாலும், காளையார்கோயில் கூற்றத்தின் சிற்றரசனாக அமர்த்தப்பட்டு, சக்கரவர்த்தி என்ற பட்டமும் அளிக்கப்பட்டவன் மழவராயன் மாழவன்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றாற்போல உஞ்சனை உடையார் கோயில் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உஞ்சனையில் சிவன் கோயில் இருந்திருக்கிறது,

அந்தக் கோயிலை மழவராயன் என்கிற மாழவச் சக்கரலர்த்தி கற்கோயிலாகக் கட்டியதால் மாழவச் சக்கரவர்த்தி ஈசுவரர் கோயில் என மக்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். மாழவனோ, தனது பேரரசனுக்கு மரியாதை செய்யும்வண்ணம் ""திரிபுவனச் சக்கரவர்த்தி ஈஸ்வரர் கோயில் "எனப் பெயர் சூட்டியிருக்கிறார்!

கல்வெட்டுகளில் "உஞ்சனை உடையார் திரிபுவனச் சக்கரவர்த்தி ஈஸ்வரர் கோயில் "என்றும் "உஞ்சனை உடையார் மாழவச் சக்கரவர்த்தி ஈஸ்வரர் கோயில்! "என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலானர் அதியமான் தலைமையில் நிர்வாகிகள் பட்டாளமம், குலசேகரப் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் ஊழியர்கள் என ஏராளமானோர் இக் கோயிலில் பணியாற்றியதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது! முன்னூறு நானூறு ஆண்டுகள் அளப்பரிய புகழோடும் செல்வச் செழிப்போடும் திகழ்ந்திருந்த உஞ்சனைச் சிவன் கோயிலின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது!

அக் காலத்தில் கேரள சிங்க வளநாட்டின் உட்பிரிவான பெரும்பூர் நாட்டின் உட்பிரிவான ஒரு பற்றின் (சேக்கையின்) தலைக் கிராமமாக இருந்திருக்கிறது உஞ்சனை!

பல வீடுகளைக் கொண்டது ஒரு கிராமம். பல கிராமங்களைக் கொண்டது ஒரு பற்று (சேர்க்கை) பல பற்றுகளைக் கொண்டது ஒரு நாடு. பல நாடுகளைக் கொண்டது ஒரு வளநாடு (கூற்றம்) பல வள நாடுகளைக் கொண்டது ஒரு மண்டலம். பல மண்டலங்களைக் கொண்டது பேரரசு என்று உள்ளாட்சிப் படிக்கட்டை உருவாக்கியவர்கள் ராசராசனும் ராசேந்திர சோழனும்! இவர்கள் தங்கள் புகழாரப் பெயர்களை தங்கள் வளநாடுகளுக்கு சூட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்படியொரு பெயர் தான் கேரளசிங்க வளநாடு!

அக் காலத்தில் ஒரு சேர்க்கையின் தலைக் கிராமமாக இருந்த உஞ்சனை எப்போது ஒரு நாட்டின் தலைக் கிராமமானதோ?

உஞ்சனையில் ஒரு காளி கோயில் உள்ளது உஞ்ச மாகாளி கோயில். ஓட்டு வீட்டில் குடிகொண்டிருக்கிறாள் மாகாளி! இக் காளி தான் உஞ்சனை நாட்டின் காவல் தெய்வம்!

ஆட்சியாளர்களும் மத வாதிகளும் மதம் சார்ந்த கடவுளர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்! ஆனால் வேளாண் மக்கள் கிராமத் தெய்வங்களுக்கே குறிப்பாக காவல் தெய்வத்திற்கே முதலிடம் தருவார்கள்! அந்த வகையில் உஞ்சை மாகாளி கோயிலே உஞ்சனையின் முதல் கோயிலாக இருக்கமுடியும்! மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பே உஞ்சை மாகாளிக்கு கற்கோயில் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் கற் கோயிலுக்கு குடி பெயர மறுத்த மாகாளி இன்னும் பழைய ஓட்டு வீட்டில்தான் நீடிக்கிறாள்! கற்கட்டிடம் காத்துக் கொண்டிருக்கிறது அன்னை உஞ்சை மாகாளிக்காக!

7கிளைகள் :14 நாடுகள்!
உஞ்சனை நாடு!
வெங்களூர் சேர்க்கை (நடுவிநாடு)

கண்டதேவி தேர்த்திருவிழாவில் மூள்றாம்நாள் மண்டகப்படியை நேர்த்தியாக நடத்திக் கொண்டிருப்போர் நடுவிநாடு என்று அழைக்கப்படும் வெங்களூர் சேர்க்கைக்காரர்களே!

அருள்மிகு சிரவிழிநாதன் பூத வாகனத்தில், கண்ணைக் கவரும் மலர் அலங்காரத்தோடு உலாவருவார். மிகுந்த அக்கறையோடு நடத்துவார்கள் நடுவிநாட்டார்!

கண்டதேவி தேரோட்டத்தில், தங்கள் வடத்தில் பங்கேற்கும் உரிமையை நடுவிநாட்டிற்கு வழங்கியிருக்கிறது உஞ்சனை நாடு!

ஆனால் உஞ்சனை நாட்டிற்கு உரிய முப்பத்தி இரண்டரைக் கிராமங்களில் வெங்களூர் சேர்க்கைக் கிராமங்கள் இடம்பெறாது தேரோட்டத்தன்று மட்டும் உஞ்சனை எல்லையில் இருந்து உஞ்சனை நாட்டாரோடு இணைந்து சென்று தேரிழுப்பார்கள் தங்களது மூன்றாம் மண்டகப்படியில் மண்டகப்படி மரியாதையில் உஞ்சனை நாட்டிற்கு பங்களிப்பதில்லை நடுவிநாடு!

நடுவி நாட்டுக் கிராமங்கள் ஒவ்வொன்றும் தனக்கான ஊர் அம்பலத்தைப் பெற்றிருக்கிறது! ஆனால் சேர்க்கைக்கு என்று அம்பலம் (தலைவர்) கிடையாது! தங்கள் மண்டகப்படிக்கான ஒருங்கிணைப்பாளராக நாட்டுக் கணக்கப்பிள்ளை ரங்கசாமி அவர்களை முன்னிருத்துகிறார்கள்!

வெங்களூர் சேர்க்கைக் கிராமங்கள்

1 வெங்களூர்
2 இறக்காட்டி
3 நடுவிக்குடி
4 பூங்குடி
5 கொத்தணிக் கோட்டை
6 கீழக் கடியாவயல்
7 மங்களம் (இக் கிராமத்தில் பாதி மட்டும்)
இந்த ஆறரைக் கிராமங்கள் தான் நடுவிநாடு என்ற வெங்களூர் சேர்க்கை!

இச் சேர்க்கைக்குரிய வேளாண் நிலங்களில் பெரும்பான்மை 150 வருடங்களுக்கு முன்னாள்வரை நாட்டுக்கோட்டை செட்டியார்களிடமே இருந்திருக்கிறது. நகரத்தார் வீடுகளும் விடுதிகளும் இங்கே இருந்திருக்கிறது!

நடுவி நாட்டுக்குரிய 'நடுக்குள ஐயனார் 'கோயில் வெங்களூர் கண்மாய்க்குள் நட்டநடுவே உள்ளது! பல ஆண்டுகளாக வழிபாடற்று சிதைவுற்ற நடுக்குள ஐயனாரை எடுத்துக் கட்டி குடமுழுக்கு நடத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது!

சேர்க்கைக்குரிய கீழக் கடியாவயல் கிராமத்தில் பெரும் பொருட் செலவில், சமீபத்தில் 'சாத்தையா ''(சாத்தன் +ஐயனார்) கோயிலைப் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்கள்! 11 ஏக்கர் நிலப்பரப்பின் நடுவில் அருள் பாலிக்கிறார் சாத்தையா!

" மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பு, இந்த சாத்தையா கோயில் எங்கள் ஊருக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்திருக்கிறது. ஒருநாள் ஐயனாரின் மூல விக்கிரகத்தை கொட்டகுடிக் கிராமத்தார்கள் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். ஐயனாரை மீட்டுக் கொண்டு வருவதற்காக எங்க ஊர் திரண்டு போயிருக்கிறது மீட்க முடியவில்லை! தோல்வியோடு திரும்பிய எம் மூதாதையர் மேலக் கடியாவயல் சிராமத்தின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

" கோயிலின் முதல் மரியாதையை எங்களுக்குத் தர வேண்டும்! "வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு சாத்தையா வின் திருவுருவை மீட்டுக் கொடுத்திருக்கிறது மேலக் கடியாவயல். அந்த மீட்புக்கு உடன் சென்றிருக்கிறார்கள் கொத்தணிக் கோட்டை ஊராரும் தச்சக்குடி ஊராரும். இப்போது இக் கோயில் நாலூருக் கோயிலாகி, முதல் மரியாதையை மேலக் கடியாவயலும், இரண்டாவது மரியாதையை நாங்களும் மூன்றாவது மரியாதையை கொத்தணிக்கோட்டையார்களும், நான்காவது மரியாதையை தச்சக்குடி மக்களும் பெறுகிறோம்! "விளக்கினார் வெங்களூர் ஊராட்சியின் முன்னால் தலைவர் கீழக் கடியாவயல் கரு வெங்கடாசலம்!

வெங்களூரில் தொன்மையான ஒரு சிவன் கோயில் இருக்கிறது. இச் சிவாலயத்தில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.

ஒன்று விசய ரகுநாத சேதுபதி ஆட்சிக் காலத்தில் (1711 --1725) பொறிக்கப்பட்டது. பெரும் புள்ளானின் பேரனும் ஆண்டியப்பனின் மகனுமான சின்னச் சேர்வைக்காரன் செய்த உபயம் பற்றிய கல்வெட்டு. அவர் என்ன உபயம் செய்தார் என்ற வியரம் இல்லை.

மற்றொரு கல்வெட்டு கொஞ்சம் பெரியது. 700 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட முத்தூற்றுக் கூற்றம், தாழையூர் நாடு, செம்பொன்மாரிச் சேர்க்கை, சாத்தமங்கலம் (சாத்தமத்தி) கிராமத்தை சேர்ந்த குப்பை திருவாசுரன் என்பவர், வெங்களூர் கண்மாயின், துஞ்சலூர் மடை, மாளவமாணிக்கம் மடை என்ற இரண்டு மடைப் பாசனத்தால் விளைச்சல் தரும் நான்கு மா நன்செய் நிலத்தையும் அதற்குள் வெட்டப்பட்ட கேணியையும், மனையிடத்தையும், வெங்களூர் சிவன் கோயிலுக்கும், சாத்தமத்தி சிவன் கோயிலுக்கும் தானக் கிரயம் செய்து கொடுத்திருக்கிறார்!

இந்த நிலதானம் பாண்டிய வேந்தனின் காளையார் கோயில் கூற்றத்தின் பிரதிநிதி செம்பொன்மாரி மாளவ மாணிக்கம் என்ற மாளவச் சக்கரவர்த்தி முன்னிலையில் நடந்திருக்கிறது!

வெங்களூர் சிவாலயத்தின் பெயர் ஆதித்த ஈஸ்வரன் கோயில்! சாத்தமத்தி சிவன்கோயிலின் பெயர் மாளவ மாணிக்க ஈஸ்வரன் கோயில்! வெங்களூர் கோயில் ஆதித்த சோழனால் கட்டப்பட்டிருக்கிறது! சாத்தமத்தி கோயில் மாளவச் சக்கரவர்த்திகளில் ஒருவரால் கட்டப்பட்டிருக்கிறது!

வெங்களூர் சிவன் கோயில் கட்டப்பட்ட போது வெங்களூரின் பெயரை "சோழ குலதிலக நல்லூர் " என அன்றைய அரசு மாற்றியிருக்கிறது! இக் கல்வெட்டில் சோழகுலதிலக நல்லூர் என்றே பொறித்திருக்கிறார்கள்!

இந்த நிலதானம் நடைபெற்ற 13 ஆம் நூற்றாண்டில் முத்தூற்றுக் கூற்றம் தாழையூர் நாடு செம்பொன்மாரிப் பற்றுக்குள் (சேர்க்கைக்குள்) இருந்திருக்கின்றன வெங்களூர் மற்றும் சாத்தமத்தி (சாத்தமங்கலம்) கிராமங்கள்.

உஞ்சனை செம்பொன்மாரி சேர்க்கைகள் நாடுகளாக்கப்பட்ட போது இரண்டிலும் இணைய மறுத்து நடுவில் நின்றிருக்க வேண்டும் , வெங்களூர் தலைமையிலான இந்த ஆறரைக் கிராமங்களும்! அதனால் நடுவிநாடென்ற பெயரைப் பெற்றிருக்கலாம் இந்தச் சேர்க்கை!

நடுவிநாட்டுக்குள் ஒரு ஊரின் பெயர் நடுவிக்குடி!

7 கிளை 14 நாடுகள்!
கண்டதேவி சேர்க்கை (2)

கல்வெட்டுகள் : கண்டதேவியில் நான்கு கல்வெட்டுகளைக் கண்டறிந்து படித்துப் பதிவு செய்திருக்கிறார் முனைவர் வேட்டைக்காரன்பட்டி சே.கணேசன்.

1. சொர்ணமூர்த்தி கோயில் வடக்குப் பிரகாரத்தில் தரையில் பதிக்கப் பட்டுள்ளது. " பெரியதெரு வியாபாரிகளுக்கு 4 ஏக்கர் தோட்டம் தானம் கொடுத்தது குறித்தது! 800 ஆண்டுக்கு முந்தையது. ஊர்ப் பெயரோ, கொடுத்தவர் பெயரோ, காரணமோ இல்லை. கல்வெட்டின் சிறிய பகுதியே இது.

2 கோயில் முன் மண்டபத்தில் பள்ளியறை அருகிவ், தரையில் பதிக்கப் பட்டிருக்கிறது. 800 ஆண்டுக்கு முந்தையது. " பாண்டி மண்டலம் தாழையூர் நாட்டு, செம்பொன்மாரிப் பற்றில், ஈஸ்வர மகாதேவர்க்கு, கங்கை கொண்டான் மாளவச் சக்கரவர்த்தியும், அதியமான் மானவச் சக்கரவர்த்தியும், மும்முடிச் சோழச் சக்கரவர்த்தியும், தாழையூர் நாட்டிலுள்ள தங்கள் காணிகளை தானம் செய்த திருநாமக்கல் இது. இதிலும் ஊர்ப் பெயல் இல்லை. கோயில் பெயரும் தெளிவாக இல்லை.

3 கோயில் தெற்குப் பிரகாரத்தில், தரையில் பதிக்கப் பட்டிருக்கிறது. 800 ஆண்டுக்கு முந்தையது. கல்வெட்டின் ஒரு சிறு பகுதியிது, நிலக்கொடையாக, அல்லது வரிவிலக்கு பற்றியதாக இருக்கலாம், அரசு, ஊர், நபர்கள் பெயர்கள் இல்லை .

4. தெற்கு வீதியில் அரசமரத்து பிள்ளையார் கோயில் பின்புறம் ஊன்றப்பட்ட தனிக்கல். 500 ஆண்டுக்கு முந்தையது, அரசர் பெயரோ, ஊர்ப் பெயர்களோ, நபர்கள் பெயர்களோ இல்லை. ஊர்க் காவலுக்கு நியமிக்கப்பட்ட கள்ளர்களும் வன்னியர்களும், அறந்தாங்கியார் மற்றும் பல்வேறு சாதியார்கள் முன்னிலையில் " எங்கள் பணியில் தவறு ஏற்படின் எங்களை அசிங்கப் படுத்துங்கள் அவமானப் படுத்துங்கள்! "என்று சத்தியப் பிரமானம் செய்திருக்கிறார்கள்!,"இது எங்கள் தாய்க்கிராமம்! " என்றொரு வரியும் வருகிறது, ஆக அந்தக் கிராமத்தில் இருந்து வேறு ஊருக்கு புலம் பெயர்ந்த கள்ளர்களும் வன்னியர்களும் தங்கள் தாய்க் கிராமத்திற்கு காவலுக்கு வந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது!

எனது கருத்துப்படி அறந்தாங்கித் தொண்டைமான்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஏதோ ஒரு ஊரிலிருந்து இக் கல்வெட்டைக் கொண்டுவந்து கண்டதேவியில் ஊன்றியிருக்க வேண்டும்?

கண்டதேவியில் கண்டறியப்பட்ட 4. நான்கு கல்வெட்டுகளும் கண்டதேவிக்கோ சொர்ணமூர்த்தி கோயிலுக்கோ உரியவை அல்லவென நினைக்கிறேன்!

கண்டதேவி புராணம் : தமிழ்த் தாத்தா உவேசா வின் ஆசான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால் (1815 - 1878) எழுதப்பட்ட நூல் இது. வெளிமுத்தியில் வாழ்ந்த வைரவ ஐயரின் முயற்சியால் இது எழுதி வாங்கப்பட்டிருக்கிறது!

கண்டதேவிக்கு வராமலேயே சொர்ணமூர்த்தியைப் பற்றி நம்பவே முடியாதபடி 884 விருத்தங்களில் கண்டதேவி புராணத்தை எழுதிக் குவித்திருக்கிறார் மகா வித்துவான், சொர்ண வருட ஈசன் ( தங்க மழை ஈசன்) சொர்ணமாரி பொழிந்தவன், பொன்மாரி பொழிந்த பிரான் சிறையிலி அண்ணல், சிறையிலி நாதர், சிறுமருதூர் மேவும் தேவதேவன், கண்டதேவி வாழும் நாதன், என்ற பெயர்களையெல்லாம் பலமுறை பலமுறை பயன்படுத்தும் ஆசான், மக்கள் அழைக்கின்ற, தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்ற சொர்ணலிங்கம், சொர்ணமூர்த்தி, சிரவிழி, சிரவிழிநாதன், சிரகிலி, சிரகிலிக்குட்டி ஆகிய பெயர்களை மறந்தும்கூடச் சொன்னாரில்லை மீனாட்சி சுந்தரம் பிள்ளை!

காங்கேயனை பாண்டியமன்னன் என்று புகழ்கிறார். அவன் மன்னனல்ல மன்னனின் பிரதிநிதி என்பதை அறிந்தாரில்லை!

144 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர் தான் இந்த வித்துவான். ஆயினும், 4 நாடுகள் பற்றியோ, 14 நாடுகள் பற்றியோ இக் கோயில் திருவிழாக்கள் மண்டகப்படிகள் பற்றியோ குறிப்பிடவேயில்லை!

"மதுநதி (தேனாறு) விரிசன்மாநதி (விரிசிலை ஆறு) முறையே வடக்கிலும் தெற்கிலும், முதுதவ மருதவனமென மொழிவர் கண்டதேவி! " எனப் பாடுகிறார்.

" சிறுமருதூரில் வாழ் மருத தேவே! "என்றும் போற்றுகிறார். கண்டதேவியும் சிறுமருதூரும் ஒன்றெனவே நம்பியிருக்கிறார்! ராமேஸ்வரத்தில் ராமரால் வணங்கப்பட்ட சிவன் 'ராமநாதன் '' ஆனதுபோல், கண்டதேவியில் சிறகை இழந்த சடாயுவால் வணங்கப்பட்ட சிவன் 'சிறயிலி நாதன் ' ஆவார் என்பதை நிறுவ பலநூறு பாக்களை எழுதிக் குவித்திருக்கிறார்!

தொகை கொடுத்துப் புராணம் எழுதிவாங்கியவர்கள் கண்டதேவி குறித்தும், சொர்ண மூர்த்தி குறித்தும் விவரங்களை சரியாகச் சொல்ல வில்லை போலும்! கூலிக்கு மாரடித்திருக்கிறார்!

கண்டதேவி பெயர்க் காரணம் :இராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப் பட்டிருக்கும் இடம் தெரியாமல், தேடிக் கண்டறிந்து வருமாறு, குரங்குகளை நாலா திசைகளிலும் அனுப்பிவிட்டு இந்த இடத்தில் ராமர் வேதனையோடு இருந்ததாகவும், தென்திசை சென்று திரும்பிய அனுமன் ராமனிடம் " கண்டேன் தேவி " யை எனச் சொன்னதாகவும் அந்த இடமே கண்டதேவி எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு தகவல் திடமாக நம்பப்படுகிறது!

இதில் எனக்கு உடன்பாடில்லை!

கம்பரின் இராமாவதாரக் காப்பியத்தின்படி சீதை கடத்தப்பட்ட இடம் கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடி! அந்த இடம் இப்போதைய மராத்திய மாநில நாஜிக் நகரமாகும்!

அங்கிருந்து கூப்பிடு தொலைவில் தான் இராவணனுக்கும் சடாயுவுக்கும் சண்டை நடந்த இடமாகும்.

தன் மனைவி சீதையைத் தேடுவதற்காக அனுமன் மற்றும் சுக்ரீவன் உதவியை ராமர் நாடிய இடம் கிஷ்கிந்தை மலையாகும்,

தேடிச் சென்ற ஒற்றர்களுக்காக ராமர் காத்திருந்த இடம் பம்பை நதிக்கரையில் உள்ள இரலை மலையாகும், அது இன்றைய சபரி மலை!

ராமரிடம் அனுமன் "கண்டேன் தேவியை எனக் கூறவில்லை! .

" கண்டனென் கற்பினுக்கு அணியை, கண்களால், தென்திரை அலைகடல் இலங்கைத் தென்நகரில்..."என்கிறான் அனுமன்!

ஆக, கண்டதேவி எனும் ஊரின் பெயருக்கு, காரணமாக ராமர் சீதை அனுமன் நிகழ்வைக்கூறுதல் சரியெனத் தோன்றவில்லை!

கிணறு தோண்டும் போது குங்குமம் குவியலுக்குள் கண்டெடுக்கப்பட்டு, கோயிலில் நிலைப்படுத்திய தெய்வம் குங்கும காளியே!

தங்களுக்குரிய காவல்தெய்வத்தை சிவகங்கை சமஸ்தானத்திடம் பறிகொடுத்துவிட்டு அன்னியப் பட்டு நிற்கிறது கண்டதேவிச் சேர்க்கை!

சொர்ணமூர்த்தி கோயில் :உஞ்சனை சிவாலயக் கல்வெட்டு ஒன்றில் "காங்கேயன் ஆணைப்படி உஞ்சனை சிவாலயத்திற்கு தாழையூர் நாட்டு மேலைவயல் சேந்தன் காளை மகன் அரசமீண்டான் நிலதானம் "வழங்கிய தகவல் வெட்டப்பட்டிருக்கிறது!

சோழநாட்டை வென்ற சுந்தர பாண்டியன் காலத்தில் (12 ஆம் நூற்றாண்டு) அவனது முக்கிய பிரதிநிதியாக இப் பகுதியில் ஆணையிடும் அதிகாரத்தோடு திகழ்ந்தவன் காங்கேயன்!

கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன் என்று இவர் போற்றப்படுகிறார்! "காங்கேயன் பிள்ளைத் தமிழ் "என்பது இவர் மீது ஆதிச்ச தேவன் எனும் புலவர் பாடிய இலக்கியம்.

காங்கேயனின் ஊர் தேனாற்றங்கரையில் உள்ள நேமம் என்கிறார் முனைவர் சே.கணேசன்.

இதே காலத்தில், தாழையூர் நாட்டு செம்பொன்மாரி சேர்க்கையில் மாளவர் மாணிக்கம் எனும் ஊரில் (இன்றைய வாழ்கிற மாணிக்கம்) திருக்கானப் பேருடையான் மாளவச் சக்கரவர்த்தி என்பார் ..."இது வெங்களூர் கல்வெட்டு.

இந்தக் காங்கேயனும் மாளவனும் காளையார்கோயில் கூற்றத்தில் பல கோயில்களில் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்

அக் காலத்தில் தான் அந்த 12 ஆம் நூற்றாண்டில் தான் இக் காங்கேயனால் கண்டதேவியில் சொர்ணமூர்த்தி கோயில், கற்கோயிலாகக் கட்டப்பட்டிருக்கிறது! அதாவது 900 ஆண்டுகளுக்கு முன்பு!

19ஆம் நூற்றாண்டில் நகரத்தார் பெருமக்களால் ராஜகோபுரமும் சுற்றுப் பிரகாரமும் கட்டப் பட்டிருக்கிறது!

*******************

7 கிளைகள்! 14 நாடுகள்!
உஞ்சனை நாடு (5)

ஏழுகிளை பதினான்கு நாடுகளுக்கும் தலைமை நாடு உஞ்சனை நாடு!

ஏழுகிளை பதினான்கு நாடுகளின் அம்பலகாரர்களுக்கும் தலைமை அம்பலகாரர் உஞ்சனை நாட்டு அம்பலகாரர்!

தஞ்சை பெருவுடையார் கோயிலை, அகிலத்தின் பேரதிசயமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியவன் சோழ வேந்தன் ராசராசன். அவனுடைய பாட்டன் விசயாலயன் தான் சோழப் பேரரசுக்கு வழிசமைத்தவன். அவன் தான் கேரள அரசரை வென்று கேரள சிங்கம் என மெய்க்கீர்த்தி பெற்றவன்.

அந்த விசயாலயன் ஆட்சிக் காலத்தில், அந்த வேந்தனின் புகழ்கூறி, கேரளசிங்க வளநாட்டில், வேந்தனின் பிரதிநிதியாக திகழ்ந்த நேமம் காங்கேயனை சந்தித்து அவனது உத்தரவோடு, பெரும்பூர் நாட்டின் தேனாற்றுப் பாய்ச்சலில், உஞ்சனைப் பற்றில் (சேர்க்கையில்) குடியேறியவர்கள் இன்றைய உஞ்சனை நாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது உஞ்சனை நாட்டாரின் தொன்மையான திருமண உறுதிமொழிப் பாடல்.

நான்கு தலைமுறைக்கு முன்னர் வரை உஞ்சனை நாட்டு அம்பலகாரர் குடும்பத்தில் விசயாலயன் என்ற பெயர் சூட்டும் மரபு இருந்திருக்கிறது!

கண்டதேவி தேர் தேர்வடங்கள் மண்டகப்படிகள் மரியாதைகள் பற்றிய உரிமைப் பிரச்சனைகள் வெடித்து, கண்டதேவியில், தென்னாலை செம்பொன்மாரி இரவுசேரி நாடுகள் உஞ்சனை நாட்டோடு மோதிய கலவரத்தில் உஞ்சனை நாட்டைச் சேர்ந்த எட்டுப்பேர் கொல்லப்பட்டார்கள். அந்த எண்மரில் முக்கியமானவர் உஞ்சனை நாட்டின் அன்றைய அம்பலகாரர் விசயாலயத் தேவன்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆலங்குடி வட்டங்களில் உள்ள தொன்மையான கோயில்களில் விசயாலயன் குறித்த ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

அந்தக் கல்வெட்டுகளில் மிக முக்கியமானதென நான் கருதுவது, ஆலங்குடி வட்டம் மணியம்பலத்தில் உள்ள வினைதீர்த்த ஈஸ்வரன் கோயில் வடபுறச் சுவரில் உள்ள ஒரு சாசனக் கல்வெட்டுத் தான்.

இந்த வினைதீர்த்த ஈஸ்வரன் கோயிலுக்கு கான நாட்டிலுள்ள சேவடிவயல் எனும் கிராமத்தை இறையிலித் தானமாக கொடையளித்திருக்கிறான் விசயாலயத் தேவன்.

இக் கல்வெட்டு 1511 ஆம் ஆண்டுக்கு உரியது. அதாவது 511 ஆண்டுகளுக்கு முந்தையது.

அந்தக் கல்வெட்டில் " வானரசர் போற்றும், மனதுங்கதுங்கன், ஏழு அரசுடைய இயல்பு ஆபரணன், செஞ்சொல் புனைவல்லவன், தென் அமராபுரி உஞ்சை மாநகர் என்னும் ஊருமுடையவன், தக்கார்க்குத் தக்கான், சூரைக்குடி அரசு அடைக்கலம் காத்தான், நாடுமதித்த விசயாலயத் தேவன் ... " என்று மெய்க்கீர்த்திகளால் போற்றப்படுகிறார்.

ஆக, 511 ஆண்டுகட்கு முன்னர் தென் அமராபுரி எனும் அமராபதி மாகாணத்தில் புகழ்மிக்க ஊராக மாநகரமாக திகழ்ந்திருக்கிறது உஞ்சை எனும் உஞ்சனை. அத்துடன் உஞ்சனை மாநகரம் விசயாலயத் தேவனின் உடமையாகவும் இருந்திருக்கிறது.

சூரக்குடி சிற்றரசனாக, அந்த அரசுக்கு அடைக்கலம் அளிப்பவனாக, காப்பவனாக, தகுதிமிக்கோரின் தகுதியாளனாக, வானத்தரசர்களான தேவர்களும் மோற்றக்கூடியவனாக,, குறைவற்ற மாமனிதனாக போற்றப்பட்டிருக்கிறார் உஞ்சனைவிசயாலயத்தேவன்

.இந்த விசயாலயனின் வாரிசுகள்தான் விசயாலயன் கோட்டைக் கரையினரான உஞ்சனை அம்பலமும் பங்காளிகளும்!

உஞ்சனை நாட்டில் நான்கு கரையாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். 1. விசாலயன் (விசயாலயன்) கோட்டை கரை. 2 வாவாசி (வாள்வாசியன்) கோட்டை கரை 3 கோப்பன் (கோப்பணன்) கோட்டைக் கரை 4 அழகனா (அழகணன்) கோட்டைக் கரை இவையே அந்த நான்கு கரைகள்.

கரை என்றால் குடிப் பெயர் எனக் கொள்க. சோழன் குடி, பாண்டியன்குடி, தொண்டைமான்குடி என்றார்போல விசயாலயன் கோட்டைக் கரை, அழகணான் கோட்டைக் கரை எனக் கொள்க!

அன்றைய விசயாலயனின் கோட்டை இருந்த ஊர் தான் இன்றைய சாரங்கோட்டை என்னும் விசாலயன் கோட்டை என நான் நம்புகிறேன். வாள்வாசியான் கோட்டை, கோப்பணன் கோட்டை, அழகணன் கோட்டை எங்கே இருந்தது என்பதை தேடவேண்டும். இது கற்பனை இல்லை சரித்திரம். தேடினால் நிச்சயம் அகப்படும்.

வாள்வாசியான் கோப்பணன் அழகணன் ஆகியோர் சூரைக்குடி அரசின் தளபதிகளாக அல்லது உயர் அதிகாரிகளாக அல்லது கோட்டைகளின் பாதுகாவலர்களாக இருந்திருப்பர். அதனால் தான் அவர்கள் பெயர்களோடு கோட்டைகள் சேர்ந்துள்ளன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்வரை உஞ்சனை நாட்டுக் கோயில்களில் இந்தக் கரைகளின் வரிசைப்படியே தான் திருநீறு காளாஞ்சி மரியாதை கொடுக்கும் மரபு இருந்திருக்கிறது.

உஞ்சனையில் சாதிக் கலவரம் 28-06-1979 அன்றைக்கு நடந்தது உஞ்சைக் கழனிப் பெரிய ஐயனார் கோயிலிலும் புரவியெடுப்பிலும் கூத்திலும் கூத்து மேடையிலும் உஞ்சனை நாட்டின் பள்ளர்கள் (தேவேந்திர குல லேளாளர்கள்)உரிமை பாராட்டியதால் ஏற்பட்டது ஐந்து மனிதர்களின் உயிரைப்பறித்த அந்த கலவரம்!

கலவரம் நடந்து நாற்பது ஆண்டுகளாக கழனிப் பெரிய ஐயனார் கோயிலில் வழிபாடுகள் திருவிழாக்கள் மராமத்து குடமுழுக்கென எதுவும் நடக்கவில்லை. எப்படித் தாங்கும் கோயில் என்ற பெயரோடு நிற்கும் அந்த ஓட்டுக் கொட்டகை? இற்று நொறுங்கி இடிந்து சரியத் தயாராக நடுங்கிக் கொண்டிருக்கிறது.

உஞ்சனையில் உள்ள மற்றுமொரு நாட்டார் பெருங் கோயில் உஞ்சனை மாகாளி கோயில். இதற்கு ஊழியம் செய்வதற்காகவே குயவன்தாழிவயல் என்ற கிராமத்தை வேளார்களுக்கு ஊழிய மானியமாக கொடை அளித்திருக்கிறார் சேதுபதி மன்னர்.உஞ்சனை நாட்டுக் கோயில்களின் பூசாரிகளான வேளார்கள் சுண்டானதர்மம் கிராமத்தில் வசிக்கிறார்கள்.

பூசாரிகளில் ஒருவரான பெரியவர் வை. சின்னையா வேளாரைச் சந்தித்தேன். " எங்கள் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம் வல்ல நாட்டிலுள்ள பொசலாக்குடி என்னும் கிராமம் அங்கிருந்த எங்கள் முன்னோரை உஞ்சை மாகாளிக்கு தொண்டூழியம் செய்வதற்காகவே இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். முதலில் உஞ்சனையில் தான் எங்களுக்கு வீடுவாசல் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.இப்போது நாங்கள் பனிரெண்டு பங்காளிகளாக நிறைந்திருக்கிறோம். காளிக்கு நாள்தவறாமல் பூசை செய்கிறோம். உஞ்சனை நாட்டுக் காவல் தெய்வம் ஆனால் சிவகங்கை சமத்தானத்திள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்.

உஞ்சனை கண்மாய் மடைகளில் ஒன்று வெங்களூருக்கு உரியது அம் மடைநீர் வெங்களூர் கண்மாய்க்குரியது அந்தவெங்களூர் மடைக்கு நேராக கண்மாய்க்குள் நடுக்குள ஐயனார் கோயில் இருந்திருக்கிறது அந்த ஐயனாரை வெங்களூர்காரர்கள் தூக்கிக் கொண்டுபோய் வெங்களூர் கண்மாய்க்குள் நிலைப்படுத்தி விட்டார்கள்.

உஞ்சனைக்கு நாடுகாக்க காளி இருந்தாள் ஆனால் கழனிகளைக் காக்க, கண்மாயைக் காக்க, குலம் காக்க ஐயனார்?

எங்கள் முன்னோர் வல்ல நாடு பொசலாக்குடியில் வாழ்ந்த போது கழனிப் பெரிய ஐயனார், காரணச்செல்ல ஐயனார், சிங்கமுத்து ஐயனார் என்ற மூன்று ஐயனார்களுக்கு பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள். கழளிப் பெரியவர் எங்கள் ஐயனார். உஞ்சனை நாட்டார் கேட்டுக் கொண்டதற்காக பொசலாக்குடியில் இருந்த கழனிப்பெரியவரை கொண்டுவந்து இங்கே நிலைப்படுத்தி தாங்களும் வழிபட்டு நாட்டையும் வழிபட வைத்திருக்கிறார்கள். கழனிப் பெரியவர் உஞ்சனை நாட்டின் பெருந் தெய்வமானார். எங்களவர்களும் உஞ்சனையில் இருந்து சுண்டானதர்மம் வந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் முந்தி சுண்டானதர்மம் சுந்தரர் தர்மமாக, பெரிய அக்கிரகாரமாக இருந்திருக்கிறது.

தேவார மூவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் தவம் செய்த தலமிது .சுந்தரர் இங்கே சிவாலயம் எழுப்பியிருக்கிறார். மிகப் பெரிய தம்மம் (ஊருணி) வெட்டியிருக்கிறார். அந்த சுந்தரர் தம்மம் தான் பிற்காலத்தில் சுண்டானதர்மம் என மாறியதாகச் சொல்கிறார்கள்.

இப்போது அந்த ஊருணி இருக்கிறது கோயில் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை. ஆனால் அற்புதமான பெரிய சிவமூர்த்தியும் சுந்தரர் திருவுருவும் வெகுகாலமாக வெய்யிலில் காய்ந்து மழையில் நனைகின்றன.

உஞ்சனை நாட்டில் உஞ்சனை எல்லையில் கழனிப் பெரியவர் கோயில். ஊரிவயலில் நடுக்குளத்து ஐயனார் கோயில். கள்ளிவயலுக்கும் சின்னமாத்தூருக்கும் உரிய மண்டலமுடை மகா ஐயனார் கோயில். ஊரவயலில் பாலகுரு ஐயனார் கோயில். இலுப்பைக்குடி ஐயனார் கோயில். மாத்தூர் ஐயனார் கோயில். மங்கலத்தில் கருப்பருக்கும் கன்னிமார் எழுவருக்கும் கோயில். சித்தாட்டிவயலில் எண்ணைக்கருப்பர் கோயில்.சித்தர் வழிபட்ட காளி கோயில். மொட்டையன்வயலில் வேட்டை ஐயனார் கோயில் என நிறையவே ஐயனார் கோயில்கள் உள்ளன. இவற்றில் சித்தாட்டிவயல் மொட்டையன் வயல் கோயில்களுக்கு கள்ளர்களே பூசாரிகளாக உள்ளனர். இலுப்பைக்குடி மாத்தூர் கோயில்களில் பிராமணர்கள் பூசாரிகள்.

சாதிக் கலவரத்திற்குப் பிறகு, கழனிப் பெரியவருக்கு பூசை செய்ததால் கடும் தொல்லைகள் வந்தன. கோயிலில் மணிச்சத்தம் கேட்டாலோ சாம்பிராணி ஊதுபத்தி மணத்தாலோ தேவேந்திர குல வேளாளர்கள் புகார் கொடுத்தார்கள். காவல் துறையினர் சுண்டானதர்மத்துக்குள் வந்து பஞ்சமா பாதக குற்றவாளிகளை விசாரிப்பதுபோல நடுங்க வைத்தனர். அதனால் முப்பது முப்பத்தைந்து வருடமாக தீபம் கழனிப்பெரியவரை துறக்க வேண்டியதாகிவிட்டது. இப்ப இரண்டுமூன்று வருடமாகத்தான், வெள்ளி செவ்வாய்களில் யாராவது வந்து கட்டாயப்படுத்தினால்தட்டமுடியாமல் போய் பூசைசெய்து கொடுக்கிறோம். ஆனாலும் பயந்துபயந்து தான் செய்யவேண்டியுள்ளது என்னமோ தெரியவில்லை அவர்கள் புகார் கொடுப்பதில்லை. காவல் நிலையம் போகவேண்டியிருக்கவில்லை.

ஆனாலும் திருவிழா நடக்காமல், கோயிலை எடுத்துக் கட்டாமல் முறைப்படியான பூசைகள் கருப்பாருக்கு காளிக்கு நடக்காமல் இருப்பது நல்லதில்லை. கழனிப்பெரியவர் கடுங்கோபம் கொண்டால் காரணமானவர்கள் பெருந் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்! " கண்கலங்கினார் வை.சின்னையா வேளார்.

ஏழுகிளை பதினான்கு நாடுகளுக்கும் தலைமை நாடு உஞ்சனை நாடு!

ஏழுகிளை பதினான்கு நாடுகளின் அம்பலகாரர்களுக்கும் தலைமை அம்பலகாரர் உஞ்சனை நாட்டின் அம்பலகாரர்!

*******************

7 கிளைகள்! 14 நாடுகள்!

நாட்டார்கள் போட்ட. திருமண
சீர்திருத்த தீர்மானங்கள்!!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 04-01-2018 அன்று "நான்கு நாட்டு திருமண ஒழுங்கு சட்டம்! " எனும் தலைப்பில் ஒரு பதிவை முகநூலில் போட்டிருந்நேன்!

என்னளவில் அந்தப் பதிவு அதிகப் படியானவர்களால் விரும்பப் பட்டிருந்தது. கருத்துக் கூறப்பட்டிருந்து. பகிரப்பட்டிருந்தது.

64 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு நாட்டு நாட்டார்கள் நிறைவேற்றிய் தீர்மானம் அது ..எனக்கு அப்போது 9 வயது. என் தகப்பனார் மற்றும் எங்கள் ஊர் பெரியவர்கள் வாயிலாக நான் அறிந்திருந்த அத் தீர்மானங்களை ஆதாரம் இல்லாமல் 04-01-2018 இல் பதிவிட்டிருந்தேன்.

அந்தப் பதிவை வாசித்த நன்றிக்குரிய, திருமணவயல் அருணகிரிநாதன் ஜெகநாதன் அவர்கள் அந்தத் தீர்மானங்கள் சிறு பிரசுரமாக நூல் வடிவம் பெற்றிருப்பதாகக் கூறியதோடு ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பியிருந்தார். அதில் நான் பதிவு செய்நிருந்ததை விட அதிக விபரங்கள் ரத்தினச் சுருக்கமாக இருந்தது. ஆதாரங்களுடன் கூடிய அந்த வியரங்களை இப்போது புதிய பதிவாக தருகிறேன்.

எனது 7 கிளைகள் 14 நாடுகள் முகநூல் பதிவுகள் நூல் வடிவம் பெறும்போது இந்தப் பதிவே இடம் பெறும்.

நாட்டார்கள் வெளியிட்டிருந்த அந்தச் சிறு பிரசுரத்தின் பின் அட்டையில் " ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு --நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு! "என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் இடம் பெற்றிருக்கின்றன.

முன் அட்டையில், மேலே "உ சிவமயம். ஸ்ரீ சொர்ணமூர்த்தி துணை! " என்ற வாசகமும்வாச அதற்கு கீழே, உலகப் புகழ்பெற்ற தில்லை நடராஜரின் சிற்ப ஓவியமும் அந்த ஓவியத்தின் கீழே நூலின் தலைப்பாக " பதினான்கு நாட்டார்கள் சமூகம், சீர்திருத்த தீர்மானங்கள் *11-10-57 " என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன!

முதலாம் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் பக்கங்களில் உள்ள விபரங்களை கீழே தருகிறேன். ( ஆறாம் ஏழாம் பக்கங்கள் கிடைத்தால் அதிலுள்ள வியரங்களை பிறகு இணைத்துக் கொள்ளலாம்.

ஏவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 5 ஆம் தேதி ( 21-08-57 ) புதன்கிழமை கண்டதேவி இலுப்பத் தோப்பில் நடைபெற்ற நான்கு நாட்டார்களின் (உஞ்சனை செம்பொன்மாரி தென்னாலை இரவுசேரி )கூட்டத்தில் சமூக சீர்திருத்தங்கள் தயாரித்து சமர்ப்பிக்க ஒரு சப் கமிட்டி நியமிக்கப்பட்டது.

சப் -கமிட்டி மேற்படி வருஷம் ஆவணி மாதம் 11 ஆம் தேதி ( 01-09-57. )ஞாயிற்றுக்கிழமை தேவகோட்டை காட்டுத் தண்ணீர்ப்பந்தலில் கூடி மேற்படி விஷயங்களை தயாரித்து மேற்படி வருஷம் புரட்டாசி மாதம் 25 ஆம் தேதி ( 11-10-57) சனிக்கிழமை மாலை 3 மணிக்கு கண்டதேவி இலுப்பத் தோப்பில் நடைபெற்ற 14 நாட்டு நாட்டார்கள் (1 உஞ்சனை 2 செம்பொன்மாரி 3 தென்னாலை 4 இரவுசேரி 5 வடம்போகி 6 ஏம்பல் 7 ஆற்றங்கரை 8 தேர்போகி 9 முத்து 10 ஏழுகோட்டை 11 இரும்பா 12 சிலாமேகம் 13 கப்பலூர் 14 குன்னம்கோட்டை )கூட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டதுடன் மேற்படி வருடம் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை முதல் அமுலுக்கு கொண்டு வந்திருக்கிறது. தீர்மானங்கள் :

* திருமணத்திற்கு முகூர்த்தம் வைக்க ...

1 மாப்பிள்ளை வீட்டில் ஐந்து பேர் தான் போய்வர வேண்டும். 2 உணவுச் செலவுகளை பெண் வீட்டார் செய்ய வேண்டும். 3 முகூர்த்தம் வைக்க தேங்காய் பழம் வகையறா சாயான்களை மாப்பிள்ளை வீட்டார் செலவில் வாங்கிப்போக வேண்டும். 4 முகூர்த்தம் வைத்த தேங்காய் பழம் வகையறா சாமான்களை பெண் வீட்டாருக்கு பாதி பிரித்துக் கொடுக்க வேண்டும். 5 புரோகிதர் கட்டணமாக கொடுக்கும் பணத்தைண் இருவீட்டாரும் பேர்பாதியாகக் கொடுக்க வேண்டும்.

* திருமண வைபவம் : மாப்பிள்ளை வீட்டார்...

1 மாப்பிள்ளை, நூலில் திருமாங்கல்யம் திருப்பூட்ட. வேண்டும்!
2 கூரைச்சேலை ரவிக்கை மாலை வகையறா சாமான்கள் ரூபாய் 60 க்குள் வாங்கவேண்டும்.
3 திருப்பூட்டச் செல்லும் போது மாப்பிள்ளை வீட்டார் ரூபாய் 16 கொண்டு செல்ல வேண்டும்.
4 வழக்கம் போல பேழைப் பெட்டியுடன் செல்ல வேண்டும்.
5 சங்குடன் மேளம் வைத்துப் போகலாம்.
6 ஆளத்திப் பணம் ரூபாய் ஒன்று மட்டும் போட வேண்டும்
7 இளவட்டப் பணம் ரூபாய் 0-4-0 (நான்கணா)
கொடுக்க வேண்டும்.
8 திருப்பூட்ட, மாப்பிள்ளை மாப்பிள்ளை தோழன் உட்பட 11 ஆண்பெண் மட்டும் தான் போய் வருதல் வேண்டும்.

* பெண் வீட்டார் ...

1 பலகாரம் மாப்பிள்ளை மாப்பிள்ளை தோழனுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்.
2 மாப்பிள்ளை வீட்டார் கொண்டுவந்த ரூபாய் 16 உடன் ரூபாய் 5 சேர்த்து ரூபாய் 21 ஆக திருப்பிக் கொடுத்தனுப்ப வேண்டும்
2 மாப்பிள்ளைக்கு வேட்டி துண்டு சவுக்கம் சட்டை உட்பட ரூபாய் 30 க்குள்ளாக எடுக்க வேண்டும்.

* சீர் முறை ...

4 குத்துவிளக்கு ஒன்று, படி ஒன்று, குடம் ஒன்று, செம்பு ஒன்று, தம்ப்ளர் ஒன்று, கும்பா கிண்ணி செட் ஒன்று சாப்பாடு பரிமாறுகிற சட்டியும் கரண்டியும் வெள்ளியன்னியில் கொடுப்பதுடன் பெட்டி படுக்கையும் கொடுக்கலாம்.
5 வாத்தியாருக்கு கருகமணிப் பணம் ரூபாய் ஒன்று கொடுக்க வேண்டும்.
6 வீடு அறிவதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் தான் போய் வருதல் வேண்டும்.
7 இரு தரப்பாளர்களும் பணம் கொண்டு கொடுக்கக் கூடாது.
8 தீபாவளி பொங்கல் ஆடி வேவுக்காக அரிசி கிடாய்க்காக ருபாய் 11 க்குள் கொடுத்தல் வேண்டும்.

*தாய்மாமன் முறை ...

1 சேலை ரவிக்கை ரூபாய் 30 க்குள்ளாகவும் வேட்டி சட்டை ரூபாய் 20 க்குள்ளாகவும் எடுத்துக் கொண்டு போதல் வேண்டும்
2 அரிசி கிடாய் பழம் காய்க்காக ரூபாய் 10 க்குள் கொண்டு போக வேண்டும்.

* மற்ற மாமன்மார்கள் ...

ரூபாய் 10 க்குள் எழுத வேண்டும் .
2 ஆளத்திக்கு ரூபாய் 1 போட வேண்டும்.
3 மாமன் அழைப்பு கூடாது.

* உறவின் முறைகள்...

ரூபாய் 2 க்குள் பணம் ( மொய் ) எழுத வேண்டும்.

*உணவு .

..இரு தரப்பாளர்களும் திருமணத்தன்று சைவ உணவுதான் நடத்த வேண்டும்.

* குழந்தைப் பிறப்பு...

1 முதற் குழந்தை பிரசவத்திற்கு தாய் வீட்டார் மட்டும் போய் கூட்டி வர வேண்டும்.
2 குழந்தை பிறந்த பிறகு தந்தை வீட்டில் இருந்து பார்க்கப் போவதற்கு நெல் அன்னியில் தேங்காய் பழம் வகையறா வழக்கம் போல கொண்டு போக வேண்டும்.

(

ஆறு ஏழு பக்கங்கள் விடுபட்டுள்ளன)

எட்டாம் பக்கக் குறிப்பு : இப் புத்தகத்தில் கண்டிருக்கிற விசேட காலமுறைகள் தவிர அதிக முறைகள் எதுவும் செய்யக் கூடாது.

எந்த விசேஷத்திற்கும் நெல் அரிசி கிடாய் கொண்டு போகக் கூடாது!

இங்ஙனம்
பதினான்கு நாட்டார்கள்.

நமது குறிப்பு --

அருமையான தேவையான சமத்துவமான இத் தீர்மானங்களை நாம் மீறியது அல்லது பின்பற்றாமல் போனது மிகுந்த வேதனைக்குரியதே!

இத் தீர்மானங்களுக்காக நாம் நம் பெரியோர்களை நெஞ்சை நிமிர்த்திப் பாராட்டலாம்

*****

செந்நெல் வனம் (சன்னவனம்)

உஞ்சனை விசயாலயனின் கோட்டை இருந்த ஊர். அவனது கோட்டையாக விளங்கிய ஊர். தற்போது விசாலயன் கோட்டை என எழுதப்படுகிறது :சாரங்கோட்டை என உச்சரிக்கப்படுகிறது. இது குன்னங்கோட்டை நாட்டின் முக்கிய கிராமங்களில் ஒன்று.

கல்லுப்பட்டியில் இருந்து விசாலயன் கோட்டைக்கு செல்லும் வழியில் கூரையாற்றின் தென்கரையில் உள்ளது, சன்னவனம் என்று அழைக்கப்படுகின்ற எழுதப்படுகின்ற செந்நெல் வனம் என்ற அழகிய தமிழ்ப்பெயர் கொண்ட சின்னஞ்சிறிய ஊர்.

இவ்வூரும் கொன்னங்கோட்டை நாட்டுக்கு உரியதே!

ஆதியில் பத்துப் பனிரெண்டு வீடுகள்.ஒரேயொரு முத்தரையர் வீடு. மற்றவை வெள்ளாளர் வீடுகள். இப்போது முத்தரையர் வீடுகள் அதிகரித்துள்ளன. இங்கு தான் உள்ளது செந்நெல் வனநாதர் கோயில். இந்த அழகிய தமிழ்ப் பெயரை வெளியே உள்ள இரும்புக் கதவில் சாலிவரீட்டீஸ்வரர் என்றும், சுவரில் வண்ணத்தில் சாலிவாகன ஈஸ்வரர் என்றும் எழுதியிருக்கிறார்கள்.

சிவகங்கை தேவத்தானத்திற்கு உரிய 84 கோயில்களில் இதுவும் ஒன்று.

தேர்த்திருவிழா நடந்த கோயில் இந்தக் கோயில் தேரைத்தான், விரிசிலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடியபோது எழுபொன்கோட்டைக்கு ஆற்றுவழி இழுத்துக்கொண்டு போனார்கள்என்ற வழிவழிச் செய்தி ஒன்று இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இங்கிருந்த நடராசர் உள்ளிட்ட சில ஐம்பொன் திருவுருக்கள் பாதுகாப்புக் கருதி கோயிலூரில் வைக்கப் பட்டுளதாகச் சொன்னார் விசாலயன் கோட்டை ஊரம்பலகாரர் நா.முத்துராமலிங்கம் அம்பலம்.

மேலும் சொன்னார் அவர் "சாமி கருவறையும் அர்த்தமண்டபமும் பாண்டியர் காலத்தவை. முன்னாலுள்ள கல் மண்டபம் மருது சகோதரர்கள் காலத்தவை இரண்டு தூண்களில் மருதிருவர் சிலைகள் உள்ளன. எட்டுக்கண் விட்டெரிய பேரும்புகழும் விரிந்த சிவனிவன். இந்தக் கோயில் சொத்துகளை பிள்ளைமார்களை வலையர்களைத் தவிர வேறுயாரும் பயன்படுத்தினாலோ விலைக்கு வாங்கினாலோ விளங்கமாட்டார்கள். அவ்வளவு சக்திவாய்ந்த தெய்வம்.

சேதுபதி அரசர்களும் சிவகங்கை அரசர்களும் பிரதானிகளும் அடிக்கடி வந்துட தரிசித்திருக்கிறார்கள்.

எங்கள் குடும்பம் உட்பட பலநூறு குடும்பங்களுக்கு குலசாமியே இந்த சன்னவனநாதர் தான். இங்கு தான் குழந்தைகளுக்கு முதல்முடி எடுத்து காதுகுத்துகிறோம். இந்தப் பகுதியில் பலருக்கு சன்னப்பன் எனப் பெயர் விளங்க இதுவே காரணம்.

சாதாரண நாட்களில் நடமாட்டமே இருக்காது. இந்த வருடம் சிவராத்திரிக்கு கண்கொள்ளாக் கூட்டம். அன்னதானம் வழங்கினோம். இரண்டாயிரம் இலைகள். பிரதோச நாட்களில் சிறப்புப் பூசை நடத்துகிறோம். குடமுழுக்கு நடந்து இரண்டு தலைமுறை ஆகிறது. மருதிருவர் எழுப்பிய முன்மண்டபம் உட்கார்ந்து விட்டது.

பழமை மாறாமல் எடுத்துக் கட்டி குடமுழுக்கு நடத்த வேண்டும் நிதி திரட்டி விடலாம். முன்னின்று நாணயமாக நடத்த ஆளுமைமிக்கவர் வேண்டும் .அந்தச் சன்னவன நாதன் பக்தர்களை வைத்து தன் கோயிலை நிலைப்படுத்திக் கொள்வான். " நம்பிக்கையோடு சொன்னார் நா.முத்துராமலிங்க அம்பலம்.

கோயிலை ஒட்டி வடக்கே வடக்குவாய்ச் செல்வி. செல்லிக்கு மருதமரம் நிழலளிக்கிறது.

செந்நெல் வனநாதரின் கருவறை அர்த்தமண்டப வடக்கு மேற்கு தெற்கு வெளிச் சுவர்களிர் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன அவற்றை கல்வெட்டு அறிஞர்களை அழைத்துவந்து படித்தாகவேண்டும். அது இப் பகுதியின் வரலாறாக இருக்கும்! ஆனால் அதற்காக செலவாகும்? *******-ஆறாவயல் பெரியய்யா

தென்னாலை நாட்டு சேர்க்கைகளில் மிகவும் பெரியது கள்ளன்குடி சேர்க்கையே!

1. கள்ளன்குடி
2. தேவவயல்
3. கள்ளன்குடி புதூர்
4. மாலைகண்டான்வயல்
5. கோனேரிவயல்
6. ஐயனார் வயல்
7. கல்லூருணி
8. கற்படை
9. தீர்த்தான்வயல்
10. கொட்டகுடி
11. ஈச்சன்வயல்
12. சிறுமடை
13. தாழைக்குடி
14. சேண்டைப்பிரியான்
15. நாகாடி
16. வாகைக்குடி
17. புதுக்குடி
18. கடம்பாகுடி
19. விசையாபுரம்
20. பப்பணி (இது அரைக்கிராமம்)
21. பரம்பக்குடி
22. செங்கற்கோயில்
23. இடையன்குளம்.

இந்த இருபத்தியிரண்டரைக் கிராமங்களின் இணைப்பே கள்ளன்குடி சேர்க்கை.

கள்ளன்குடி சேர்க்கை உருவான காலத்தில் உயிர்ப்போடு திகழ்ந்த, ஆசாரிமார்கள் நிரம்பிய ஆச்சான்குடியும் காஞ்சிரவயலும் இடைக்காலத்தில் பேச்சிலாக் கிராமங்கள் ஆயின. அவற்றின் இடத்தை கள்ளன்குடி புதூரும் அய்யனார் வயலும் பிடித்துக் கொண்டன.

சோழ மாமன்னன் விசயாலயன் காலத்தையொட்டி, கள்ளர்கள் பல குழுக்களாக தொண்டைநாடு நடுநாடு சோழநாட்டிலிருந்து, ஏழுகிளை பதினான்கு நாடுகள் என்று இன்றைக்கு அழைக்கப்படுகின்ற இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள். சில குழுக்கள் நேரடியாக வந்திருக்கின்றன. சில குழுக்கள் திண்டுக்கல் நத்தம் மேலூர் பகுதிகளுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இங்கே வந்திருக்கின்றன.

" அப்படி ஒரு குழு திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து சன்னப்பன் சேர்வை என்பவர் தலைமையில் இந்தப் பகுதிக்கு வந்தது. அந்தக் குழுவில்வந்தவர்களில் பாதிப்பேர் பள்ளர்கள்.(தேவேந்திர குல வேளார்கள்)

சன்னப்பன் சேர்வை குழுவினர் இந்தப் பகுதியில் வெட்டிய முதல் கண்மாய் கள்ளன்குடி கண்மாய்தான். காடு திருத்தினார்கள் கண்மாய் நன்செய் புன்செய்களைஉருவாக்கினார்கள்.அந்தக் குழுவின் பணி கள்ளன்குடி கண்மாயுடன் நின்றுவிடவில்லை. தேவவயல் மாலைகண்டான்வயல் கற்படை நாகாடி வாகைக்குடி என இருபத்தி இரண்டரைக் கிராமங்களுக்கும் நீண்டது. செம்புலக் கிராமங்களாகச் செழுமைப் படுத்தினார்கள். இந்த உருவாக்கத்தில் பள்ளர்களின் பங்கெடுப்பும் முக்கியானதாக இருந்திருக்கிறது.. கள்ளன்குடி சேர்க்கையில் அவர்களின் வேளாண் நிலங்களை அளவிட்டால் இதைப் புரிந்துகொள்ள முடியும். இது மட்டுமின்றி, வேளாண்மைக்கும் வேளாண் குடும்பங்களுக்கும் அவசியமான தச்சர் கொல்லர் குயவர் நாவிதர் வண்ணார் என பதினெண் கைவினைஞர்களையும் தங்கள் கிராமங்களில் குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வாதாரங்களை நிலையானதாக உறுதிப்படுத்தி, போர்க்குடிகளான தங்களை உழவர் குடிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கள்ளன்குடி சேர்க்கையின் முதல் காரணரான சன்னப்பன் சேர்வையை என்றென்றும் நினைவில் ஏந்தும்வண்ணம், அவருடைய திருவுருவை எங்கள் செல்லியம்மன் கோயிலுக்குள் நிலைப்படுத்தி வானுறையும் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறோம்!

தங்கள்குழு முதன்முதலில் வெட்டியமைத்த கள்ளன்குடி கண்மாய்க் கரையின் வடக்கிக் கடைக் கொம்பில், கண்மாய் நீரைக் காக்கும் தெய்வமாக காருடைய ஐயனாரை மரத்தடியில் உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். காருடைய ஐயனாருக்கு இன்றளவும் சேர்க்கை மக்களின் வழிபாடு நீளகிறது.

அது மட்டுமல்ல எங்கள் முன்னோர் வந்தபோது உடன்வந்த தெய்வங்களான சிலையுடைய ஐயனார், பெரிய கருப்பர் காளி மற்றும் பரிவாரங்களுக்கு கலைநயத்தோடு கோயில்கட்டி சிறப்பாக புரவியெடுப்பு எருதுகட்டு கூத்தென விழா எடுக்கிறோம்.

இந்த சேர்க்கைக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு. கள்ளன்குடி கண்மாய்க்கு விரிசிலை ஆற்றுநீர் வருகிறது. நிரம்பியதும் மறுகால்வழி அடுத்த கண்மாய் அடுத்தகண்மாய் என இருபத்தியிரண்டரைக் கிராமங்களின் கண்மாய்களுக்கும் பாய்ந்து எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. நீர்மேலாண்மையில் இப்படியொரு சிறப்பான சங்கிலித் தொடரை உண்டாக்கி சேர்க்கைக் கிராமங்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்!

இந்த சேர்க்கையின் எல்லாக் கிராமங்களும் முழுமையான விவசாயக் கிராமங்களாக மாறியதும் ஒவ்வொன்றுக்கும் ஒரு அம்பலத்தை (தலைவர்) தேர்வு செய்திருக்கிறார்கள். அந்தத் தலைவர்கள் எல்லாரும் சேர்ந்து கள்ளன்குடி சேர்க்கைக்கான அம்பலமாக எங்கள் மூதாதை ஒருவரைத் தேர்ந்து கள்ளன்குடிக்கு அனுப்பியுள்ளார்கள்!! " கள்ளன்குடி சேர்க்கையின் பிறப்பை, தமது மூதாதையரின் ஆளுமையை விளக்கினார் கள்ளன்குடி ஊர் அம்பலகாரரும் சேர்க்கை அம்பலகாரருமான சிலை. வி.வன்மீகநாதன்!

கள்ளன்குடி கண்மாய்க்குன் நொறுங்கிக் கிடக்கிறது தொன்மையான ஒரு சிவாலயம். அருள்மிகு உலகமுடைய ஈஸ்வரனார் திருக்கோயில்.

" கவிச் சக்கரவர்த்தி கம்பர் காலத்தில் கற்றளி ஆக்கப்பட்ட கோயில் அப்போது கம்பர் கள்ளன்குடியிலும் நாட்டரசன் கோட்டையிலுமாக வாழ்த்திருக்கிறார் நாட்டரசன் கோட்டையில் கம்பரைக் கவனித்துக் கொண்ட செட்டியார். கள்ளன்குடியில் அவரது நெருங்கிய உறவினர்களும் பிடித்தமான சிவாலயமும். கம்பர் காப்பியத்தின் முதலடி "உலகம் யாவையும் தாமுள தாக்கலும்.. " இந்த அடியின் திரண்ட பொருள்தான். " உலக. முழுதுடைய ஈஸ்வரனார்! " என்று பெயர் எழக் காரணம்.! " அம்பலம் சிலை. வி.வன்மீகநாதன் தான் இதையும் சொன்னார்.

சிதைந்து கிடக்கும் இக் கோயில் கல்வெட்டுகளை இரண்டு மூன்று குழுவினர் வந்து படியெடுத்து சென்றிருக்கிறார்கள்! பலமாதத் தேடலுக்குப் பிறகு முனைவர் வேட்டைக்காரன்பட்டி சே.கணேசனார் உதவியால் இக் கல்வெட்டுத் தகவல்கள் பற்றிய தகலல் கிடைத்தது. தொல்லியல் துறையின் ஆவணம் இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு " கள்ளங்குடி செப்பேடுகள் " என்ற தலைப்புடன் கட்டுரை வந்ததாக கூறியதுடன் ஆவணம் இதழைத் தேடி எடுத்து கட்டுரையை புகைப்படம் எடுத்து செல்பேசி வாயிலாக அனுப்பியும் வைத்தார் முனைவர் சே.கணேசனார்.

மொத்தம் 11 கல்வெட்டுகள். இவற்றை படியெடுத்துப் படித்து ' ஆவணம் ' இதழுக்கு அனுப்பியவர் இராஜபாளையம் சந்திரவாணன் எனும் கல்வெட்டு ஆய்வாளர். இக் கோயிலைப் போலவே கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளும் சிதைந்துள்ளன. முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாத அளவுக்குதான் அவரால் வாசிக்க முடிந்திருக்கிறது!

இக் கல்வெட்டுகள் பதினொன்றும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ( 1216 -1238 )சோணாடு கொண்ட சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆட்சி ஆண்டுகளில் வெட்டப்பட்டவை.

இறைவன் பெயர் :உலக முழுதுடையான். இறைவி பெயர் : உலகாத்தாள்.

இக் கோயிலை முதலில் கட்டியது யார்? கற்கோயிலாக்கியது யார்? எக் காலத்தில்? என்ற விபரங்கள் இல்லை.

கல்வெட்டு 1. தென்னார்கொலி ( தென்னாலை) உலகமுழுதுடை ஈசனுக்கு, இருஞ்சிறை கச்சிராயர் நந்தா விளக்கு ஒன்றை கொடையாக அளித்து, அதை ஏற்றுவதற்கு தினமும் ஒரு ஆழாக்கு நெய் கிடைக்குமாறு 40 சாவா மூவா பேராடுகளையும் வழங்கியிருக்கிறார் .

கல்வெட்டு 2. சுவாமி திருவீதி உலா வரும் திருநாட்களில் சுவாமிக்கு சாத்துவதற்காக தேவைப்படும் செக்கெண்ணையை வழங்குவதாக வாணியர் அளித்த உறுதிமொழி.

கல்வெட்டு 3. மன்னன் வீரபாண்டியனின் அரசாணை! ஆயிரம் பொன்னுக்கு மாற்றான பத்தாயிரம் பணத்தை வரியாக வசூலித்து, இக் கோயிலுக்கு பயன்படுத்தும் உரிமையை, முத்தூற்றுக் கூற்றம் தென்னார் கொலி நாட்டாருக்கும், காளையார்கோயில் கூற்றம் துறுப்பில் திருப்பேர் நாட்டாருக்கும் வழங்கியிருக்கிறார் மன்னர் இது மன்னரின் கொடை. எப்படியெனில், இந்த ஆயிரம் பொன்னும் பட்டோலைக் கணக்கில் கழிக்கப்படும் என்ற குறிப்பும் இக் கல்வெட்டில் உள்ளது.

கல்வெட்டு 4. காளையார்கோயில் கூற்றம் விளங்காட்டுக் கோட்டைப் புத்தூர் என்றான கைக்குடியைச் சேர்ந்த மலயதாரனும் ஆனைக்குடி வழுதி மானங்காத்த தேவனும் காத்தானூரைச் சேர்ந்த ஒருவரும், நல்லான் பிள்ளைபெற்றான் ஊருணிக்கு மேற்கிலுள்ள ஏம்பலை இக் கோயிலுக்கு கொடையளித்திருக்கிறார்கள்.

கல்வெட்டு 5. விளங்காட்டுக் கோட்டை புத்தூர் என்றான கைக்குடியைச் சேர்ந்த ராமனாரின் பேரன்மார் நிலக்கொடை அளித்திருக்கிறார்கள்.

கல்வெட்டு 6. காளையார்கோயில் கூற்றம் சித்தையூர்காரர்கள் இக் கோயிலுக்காக. கல்லன்குளி ( கள்ளன்குடி ) ஊராரிடம் எதையோ கொடையளித்திருக்கிறார்கள்.

கல்வெட்டு 7. நிலக்கொடை! வியரம் பிடிபடவில்லை. கட்டையன், பெரியான் ஆதித்த கந்தராயன், பல்லவநாத தேவன் ஆகிய பெயர்கள் உள்ளன .

கல்வெட்டு 8. நிலக்கொடை! இக் கோயிலுக்கு காளையார்கோயில் கூற்றம் ஆந்தைக்குடி நாட்டானும் ...உடையான் காணியுடை ஊராரரும் ஆகுவான் குண்ட அச்சனும் கண்டியத் தேவனும், நுதல் உள்ள வெள்ளானை விடாத குளத்தையும் வயலையும் கொடையாக அளித்திருக்கிறார்கள்.

கல்வெட்டு 9. நிலக்கொடை! தொண்டைமானார் ஆவுடையான், தேவன் ஆதித்தனார் பெயர்கள் தெரிகின்றன!

கல்வெட்டு 10. காளையார்கோயில் கூற்றம் ஆனைக்குடி வழுதி மானம் காத்ததேவர் மக்களும் பேரன்மாரும், திருக்கம்ப முடையார் மக்களும் பேரன்மாரும், இராமன் கண்டியர் மக்களும் பேரன்மாரும் அளித்த நிலக்கொடை.

கல்வெட்டு 11. மிகப் பெரிய கல்வெட்டு. ஐயனாருக்கு உரிய வயல்கள் உட்பட எந்தெந்த வயல்களுக்கு வரிநீக்கம் செய்யப்பட்டது என்பதை குறிக்கும் கல்வெட்டு.

800 ஆண்டுகளுக்கு முந்தைய இக் கல்வெட்டுகளில் ஊரின் பெயர் கள்ளன்குடி என்று இல்லை 'கல்லன்குளி ' 'கல்லன்குனி 'என்றே படிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் பெயரும் தென்னாலி என்றோ தென்னிலை என்றோ தென்னாலை என்றோ இல்லை. தென்னார்கொலி என்றும் தென்னார்கொலிய் என்றுமே படித்திருக்கிறார்.

1600க்கு பிந்தைய சேதுபதிகளின் செப்பேடுகளில் காளையார்கோயில் கூற்றம் தென்னாலை நாடு என்று மிகத் தெளிவாக உள்ளது.ஆனால் 1200 களில் தென்னாலை நாடு முத்தூற்றுக் கூற்றத்தில் இருந்திருக்கிறது அதன் பிறகே முத்தூற்று கூற்றம் உடைந்து முத்துநாடாக குறுகியிருக்கிறது. தென்னாலை போன்ற நாடுகள் காளையார் கோயில் கூற்றத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது!

கள்ளன்குடி அருள்மிகு உலகமுழுதுடையார் கோயில் கண்ணெதிரில் சிதைந்நு கொண்டிருப்பதை கண்டு வெம்பிக் கொண்டிருப்பவர்களில் கள்ளன்குடி சோணைமுத்து காசியும் ஒருவர்.

" கள்ளர்கள் இங்கே வருமுன் இந்தச் சிவாலயம் இருந்திருக்கிறது. கோயிலைச் சுற்றி கார்காத்த வெள்ளாளர் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் வாழ்ந்திருக்கின்றன. மூன்று நான்கு ஊருணிகள். மாதம் ஒரு திருவிழா. வெள்ளித் தேரோட்டங்கள். தூரதூரங்களில் இருந்தெல்லாம் பக்தர்களும் துறவிகளும் வந்திருக்கிறார்கள். கண்மாய் வெட்டியதும் கண்மாயின் ஒரு துறை பிராமணர்களுக்கு தனித்துறையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த துறையை இன்றுவரை பார்ப்பனர் துறை என்றே அழைக்கிறோம்.பிராமணர்களுக்காக தனி வயல் தனிமடை. தனிக் குடியிருப்பு. சுடுகாடும் தனி. அறுபதுக்கும் அதிகமான குடும்பங்கள் குறைந்து குறைந்து 13 ஆக குறைந்து அவர்களும் நூற்றைம்பது வருடம் முன்பு ஊரை விட்டே போய்விட்டார்கள். இப்போது எழுபொன்கோட்டையில் இருந்து ஐயரை கூட்டிவருகிறோம்.

இந்த கோயில் கள்ளன்குடிக்கு மட்டுமில்லை இந்த தென்னிலை நாட்டுக்கே ஒருகாலத்தில் உரியதாக இருந்திருக்கிறது. அது எங்க காலத்தில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருப்பதை பார்க்கச் சகிக்கவில்லை.

2004 ஆம் ஆண்டு எழுபொன்கோட்டை கணபதி ஸ்தபதியை முளைப்பாரி மண்டபத் தச்சுக்காக கூட்டி வந்தோம். அவர் உலகமுழுதுடையார் கோயிலை விரும்பிச் சென்று பார்த்தார். பழமை குன்றாமல் சிறப்பாகக் கட்டமுடியும் என்றார். அதற்கான யோசனைகளையும் சொன்னார் தென்னிலை நாட்டுக்காரன் என்ற பெருமையும் உருத்தும் அவருக்கும் இருக்கும்தானே!

கணபதி ஸ்தபதியின் தம்பி முத்தையா ஸ்தபதி தமிழக அரசின் ஸ்தபதியாக இருந்தார். இக் கோயிலுக்கான புதிய வரைபடத்தை அவரே வரைந்து தந்தார். அவசியமான அத்தனை சான்றிதழ்களையும் அரும்பாடுபட்டு பெற்றோம் அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனும் எங்களுக்கு உதவிசெய்தார். அரசு தரப்பிலிருந்து 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கிராமத்திலும் சேர்க்கையிலும் வெளியிலும் மூன்று கோடி வரை திரட்டமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நிலையில் தான் ஊரின் ஒற்றுமை உடைந்தது. ஆயிற்று அத்தனைபேரின் முயற்சியும் உழைப்பும் நிரந்தரமாக முடங்கிப்போனது.! "வேதனையை மறைக்க முடியாமல் திணறினார் கள்ளன்குடி சோணைமுத்து காசி.

ஆனாலுமென்ன.? நொறுங்கிக் கொண்டிருக்கும் உலகமுடையாரை தரிசனம் செய்ய எப்போதாது யாரவது வரத்தான் செய்கிறார்கள். கள்ளன்குடி கிராமத்தாரும் திருக் கார்த்திகை முன்னிரவில் சொக்கப்பனை கொளுத்தத்தான் செய்கிறார்கள்!

இருபத்தி இரண்டரைக் கிராம மக்களும் இணைந்து சேர்க்கைத் தெய்வமான சிலையுடைய ஐயனாருக்கு எடுக்கும், கொண்டாடும் புரவியெடுப்பையும், கள்ளன்குடி ஐந்து கிராமத்தார் செல்வியம்மனுக்கு வருடம்தோறும் எடுக்கும் முளைப்பாரித் திருவிழாவையும் சொல்லித்தான் ஆக வேண்டும்!

7 கிளைகள்! 14 நாடுகள்!
தென்னாலை நாடு!
கள்ளன்குடி சேர்க்கை! ( 3 )

தொன்மக் கதைகள் இல்லாத தெய்வங்கள் உண்டுமா?

கள்ளன்குடி சேர்க்கையின் இருபத்தி இரண்டரைக் கிராம மக்களின் சிந்தையிலும் வேர்பிடித்து விளைந்துநிற்கும் கதை இது. இந்த மக்களைப் பொறுத்தமட்டில் இது கதை அல்ல. இவர்கள் வாழ்வுடன் பிணைந்து வரத்தோடு உடன்வந்த வரலாறு!

எங்கள் முன்னோர் இந்தப் பகுதிக்கு வந்து கண்மாய் கரை வீடுவாசல் சேர்வை அம்பலம் என்று நின்று நிலைத்த பிறகு முன்னிருந்த ஊர்களுக்கு போகவுமில்லை போக. நினைக்கவுமில்லை.

நம்ம மக்கள் நம்மளை விட்டுவிட்டு போய்விட்டார்களே என்று எங்கள் தெய்வங்களால் அங்கே வெம்பி நிற்க முடியுமா? உருத்தான பக்தர்கள் இல்லாத நிலத்தில் உரிமையுடைய தெய்வங்களுக்கு என்ன வேலை?

எங்கள் தெய்வங்களான சிலையுடைய ( வேல் உடைய )ஐயனாரும், பெரியகருப்பரும் தங்கை செல்வியம்மனும் பரிவாரங்களும் அவரவர்க்குரிய ஆயுதங்களோடு அவரவர் குதிரைகளில் ஏறிப் புறப்பட்டார்கள். ஐயனாரும் கருப்பரும் பரிவாரங்களும் கள்ளன்குடி சேர்க்கையின் நடுப்பகுதியான கற்படைக்கு வந்துவிட்டார்கள். அந்தப் பொழுதில் கருப்பருக்கு பொறி தட்டியது. தங்கையின் குதிரை என்னாயிற்று?

இறங்கி நின்று கருப்பர் திரும்பிப் பார்த்தார்.ஐயனாரும் பரிவாரங்களும் கூட இறங்கிநின்று திரும்பிப் பார்த்தார்கள். ஒரு கல் தொலைவில் செல்வியம்மன் இவர்களைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாள்.செல்வியம்மனின் குதிரை தன் வலது முன்னங்காலை தூக்கியபடி மூன்றுகால்களில் நின்று கொண்டிருக்கிறது. அதன் காலில் கடுமையான காயம். அதனால் ஒரு அடிகூட எடுத்துவைக்க இயலவில்லை.

கீழைத் திசையில் ஒருமைல் தொலைவில் தன்னைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும் அண்ணன் பெரியகருப்பரை நோக்கிய வண்ணம் கள்ளன்குடியில் கற்சிலையாகி நிற்கிறாள் தங்கை செல்லியம்மன்!

மேலைத் திசையில் ஒருமைல் தொலைவில் தங்களைப் பார்த்தபடி நிற்கும் தங்கை செல்லியம்மனை நோக்கியபடி கற்படையில் கற்சிலையாகி நிற்கிறார்கள்கருப்பரும் ஐயனாரும் பரிவாரங்களும்!

நெடுங்காலமாக நிற்கிறார்கள் வரமளிக்கும் தெய்வங்களாக :உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு உரமளிக்கும் சொந்தங்களாக!

கள்ளன்குடி கண்மாய்க்கரை தெற்கிக் கடைக்கொம்பிற்கு வெளியே அழகிய கோயில் கொண்டிருக்கிறாள் தங்கை செல்வியம்மன்.

கள்ளன்குடி தேவவயல் மாலைகண்டான்வயல் கோனேரிவயல் கள்ளன்குடிபுதூர் ஆகிய ஐந்து ஊர்களும் கொண்டாடும் தெய்வம். உரல் உலக்கையின் ஒலியண்டாத ஆடுகோழியின் ரத்தம் வேண்டாத தூய மரக்கறித் தேவதை. செல்வியம்மனுக்கு ஆவணி இரண்டாம் செவ்வாய் சுற்றுப் பொங்கல் வைத்து ஐந்து கிராமங்களும் கொண்டாடுகின்றன.

பங்குனி மூன்றாம் செவ்வாய் காப்புக்கட்டி நான்காம் செவ்வாய் முளைப்பாரி திருவிழா நடத்துகிறார்கள். மறுநாள் மஞ்சுவிரட்டு. ஐந்து கிராமத் திருவிழா எனினூம் சேர்க்கை மக்கள் கலந்து கொண்டு செல்வியம்மனை வழிபடுகிறார்கள். செல்வியம்மன் கோயிலில் முதல் மரியாதை அம்பலத்திற்கும் இரண்டாவது மரியாதை சேர்வைக்கும் என்றாலும் காளாஞ்சிப் பங்கீடு என்பது வெள்ளாளர் தச்சர் முத்தரையர் பள்ளர் பறையர் என சாதியினருக்கும் உரிமையுடையதாக இருக்கிறது.

சேர்க்கை தெய்வமான சிலையுடைய ஐயனாருக்கு இருபத்தி இரண்டரைக் கிராமங்களும் இணைந்து புரவியெடுப்பு விழா நடத்துகின்றன.

சிலையுடைய ஐயனார் கோயில் பத்துப்பனிரெண்டு தலைமுறைக்கு முன்பு கள்ளன்குடி ஊருக்குள்தான் இருந்திருக்கிறது. எருதுகட்டும் புரவியெடுப்பும் கூத்தும் கள்ளன்குடியில் தான் நடந்நிருக்கிறது. கோயில் பூசாரிகளான வேளார்கள் ஆரம்பத்தில் கள்ளன்குடியிலும் பிறகு கற்படையிலும் பிறகு ஐயனார்வயலிலும் குடியேறியிருக்கிறார்கள்.

ஐயனார் கோயிலும் கூத்தும் குதிரையெடுப்பும் இப்போது கற்படைப் பகுதிக்கு மாறிவிட்டிருக்கிறது. பூசாரி வேளார்கள் கள்ளன்குடியில் இருந்தவரை செல்லியம்மன் கோயிலுக்கும் வேளார்களே பூசாரிகளாக இருந்தனர் அவர்கள் புலம் பெயர்ந்ததும் முத்தரையர்கள் செல்லியம்மனுக்கு பூசாரிகளாகி இருக்கிறார்கள்.

சேர்க்கை கூட்டமும் கள்ளன்குடியில் நடக்காமல் கற்படைக்கு அருகிலுள்ள தீர்த்தான்வயல் கண்மாய்க் கரையில்தான் நடக்கிறது.

தென்னாலை நாட்டுத் தலைமையிடமிருந்து கள்ளன்குடி சேர்க்கைக்கு அனுப்பப்படும் ஓலைகள் ( கடிதம் )சேர்க்கை அம்பலகாரருக்கே அனுப்பப்படுகிறது. ஆனால் சேர்க்கைக் கூட்டங்களை சேர்க்கை அம்பலம் நாகாடிச் சேர்வாரரின் கடிதம் கண்டே கூட்டுகிறார்.

கள்ளன்குடி சேர்க்கை அம்பலகாரருக்கு நிகரான மரியாதையும் தகுதிப்பாடும் நாகாடி முத்து விசைய ரகுநாத கருவணன் சேர்வையால் நாகாடி சேர்லாரருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்?

நாகாடி கருவணன் சேர்வை என்பவர், வீரமங்கை வேலுநாச்சியாரின் தந்தையும் சேதுநாட்டின் அரசருமான செல்லமுத்து விசைய ரகுநாத சேதுபதியின் ஆட்சியில் (1763 -1772 ;1782- 1795 )சேதுநாட்டின் ஒற்றர் படைத் தலைவராகப் பணியாற்றியவர். சிறப்பாகப் பண்யாற்றியதால் அரசர் தன் பெயரை கருவணன் சேர்வைக்கு சூட்டியிருக்கிறார். அரசர் அடிக்கடி, கருவணன் சேர்வையை பார்ப்பதற்காக நாகாடிக்கு வந்து போயிருக்கிறார்.

வேலுநாச்சியாரின் கணவர், சிவகங்கையின் இரண்டாம் அரசர் முத்துவடுகநாதர் முகம்மதியப் படையாலும் கிழக்கிந்தியப் படையாலும் வஞ்சகமாகக் கொல்லப்பட்டதும் வேலுநாச்சியார் தலைமறைவானார் அக் காலக்கட்டத்தில் சேதுபடையில் இருந்து வேலுநாச்சி படைக்கு மாற்றப்பட்டவர் நாகாடி கருவணன் சேர்வை. வளரி வீச்சில் வல்லவரான இவரது வீரத்தால் தான் கண்டதேவி தேர்வடங்கள் நான்கில் ஒன்று தென்னாலை நாட்டிற்கு கிடைத்ததாகவும் கூறுகிறார்கள்.

வீரமரணம் அடைந்த நாகாடி முத்துவிசைய ரகுநாத கருவணன் சேர்வையின் திருவுருவச் சிலை ஐயனார் கோயிலையொட்டி தனிச் சந்நிதியில் அமைக்கப்பட்டிருக்கிறது!

சேர்க்கை தெய்வமான சிலையுடைய ஐயனாருக்கு சிவராத்திரி படையல் விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது! இடையில் ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டது என்றாலும் ஐயனாருக்கு அருமையான கோயிலைக் கட்டி குடமுழுக்கு நடத்தி இரண்டாண்டுக்கு முன்பு புரவியெடுப்பும் நடத்தியிருக்கிறார்கள். இனி மூன்றாண்டுக்கு ஒருமுறை கட்டாயம் புரவியெடுப்பு நடத்த உறுதி பூண்டிருக்கிறார்கள்.

கள்ளன்குடி சேர்க்கையில் சன்னப்பன் கரை, கருவணன் கரை, நாராயணன் கரை, வைரவன் கரை, சிலையப்பன் கரை, பஞ்சாட்சரன் கரை உட்பட பத்துக் கரையாளர்கள் மிக முக்கியமானவர்கள்.

புரவி எடுப்பில் எத்தனை புரவிகள் எடுக்கப்பட்டாலும் கோயில் குதிரை உட்பட பத்துக் கரையாளர்களின் புரவிகளுக்கு மிகுந்த மரியாதை தரப்படுகிறது.

தென்னாலை நாட்டின் 11 சேர்க்கைகளில் ஈகரை மதுவெடுப்பும் கள்ளன்குடி புரவியெடுப்பும் சிறப்பும் புகழும் வாய்ந்தவை.

தென்னாலை நாட்டுத் திருவிழாவான எழுபொன்கோட்டை விசுவநாதர் கோயில் தேரின் நான்கு வடங்களில் ஒன்று கள்ளன்குடி சேர்க்கைக்கு உரியது!

காரை சேர்க்கை!

1 காரை
2 அடசிவயல்
3 கோட்டூர்
4 பாவனக்கோட்டை
5 பூங்குடி
6 நயினார் வயல்
7 சின்னக்காரை
8 சின்னக்கோட்டூர்

இந்த எட்டுக் கிராமங்களின் சேர்க்கையே காரை சேர்க்கை. காரைக்காடு அல்லது காரை வயல் என்று அழைக்கப்பட்டு பிறகு காரை என வந்திருக்கலாம் என்கிறார்கள். காரை -சூரை என்பன புதராக மண்டும் முட்செடிகள்!

புங்குடைய ஐயனார், ஆலடிக் கருப்பர், குருநதுடைய ஐயனார் -சமுத்திரத்துக் காளியம்மன், இவை மூன்றும் காரை சேர்க்கைக்குரிய கோயில்கள்!

புங்குடைய ஐயனார் எனில் அம்பு ஏந்திய ஐயனார் எனப் பொருள் கொள்க. . இக் கோயில் கோட்டூர் கண்மாய்ப் புறகரையில், நயினார் வயலில் இருக்கிறது.

ஆலடிக் (ஆலமரத்தடிக்) கருப்பர் கோயில் கோட்டூரின் கிழக்குப்பகுதியில், பாம்புக் கண்மாய் தெற்குக் கடைக்கொம்பில் இருக்கிறது.

குருந்துடைய ஐயனார் கோயிலும் சமுத்திரத்து காளி கோயிலும் ஒரே வளாகத்திற்குள், பாம்புக் கண்மாய்க்குள் உள்ளன.

குருந்துடைய ஐயனார் என்றால் குருந்த மரத்தடியில் இருந்த ஐயனார் எனக் கொள்க. சமுத்திரம் என்பது இங்கே கண்மாயைக் குறிக்கிறது!

" எங்கள் சேர்க்கைக் கோயில்களுக்கு கடைசியாக 1974 ஆம் ஆண்டு குதிரை எடுப்பும் எருதுகட்டும் நடந்தன. இப்போது குதிரையெடுப்பு என்ற பேச்சே இங்கு இல்லை.

ஆவணி கடைசி வெள்ளியில் சேர்க்கை மக்கள் கருப்பருக்கு பொங்கல் வைத்து அயிஷேக ஆராதனைகளோடு சாமி கும்பிடுகிறோம். புங்குடைய ஐயனாருக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமை பெரிய அளவில் அன்னதானம் நடத்துகிறோம்.

இந்த மூன்று தெய்வங்களும் பலநூறு குடும்பங்களின் குல தெய்வங்கள். கிடாய் பூசைகளுக்கும் கோழிப் பூசைகளுக்கும் பஞ்சமிருக்காது.! " என்று விளக்கமளித்த காரைச் சேர்க்கை அம்பலகாரரான ராஜா (எ)அழ. ராஜேந்திரன் தொடர்ந்து " முன்னூறு வருடங்களுக்கு முன்பு, மதுரை அழகர்கோயில் பக்கமுள்ள நரசிங்கபட்டியில் இருந்து எங்கள் மூதாதையரில் மூன்று குடும்பங்கள் புலம் பெயர்ந்து இங்கே வந்து சின்னக்காரையில் குடிநிலைத்து பெருங்கொண்ட விவசாயிகளாயினர். பிறகு அங்கிருந்து காரைக்கு வந்து நிலைத்திருக்கிறார்கள்! அக் காலத்தில் கொழும்பார் வீடு என்ற ஒரேயொரு குடும்பம் மட்டும்தான் இருந்திருக்கிறது. அப்புறம் தான் பல பகுதிகளில் இருந்தும் பல குடும்பங்கள் காரையில் குடியேறியிருக்கிறார்கள். தொடக்கத்தில் எங்கள் குடும்பம் மட்டுமே அம்பலகாரர் குடும்பம். இப்போது அம்பலகாரர் வகையறா என்று பல குடும்பங்கள் வருடத்திற்கு ஒருவர் என முறைவைத்து அம்பலத்திற்கான பிரசாதம் காளாஞ்சி மரியாதை பெறுகிறோம்! " என்றார் காரை ராஜா அம்பலம்!

சேர்க்கைத் திருவிழா நின்றுபோனதற்கு வேறு சில காரணங்களைச் சொல்கிறார் கோட்டூர் ஊரம்பலமான தனுக்கோடி (எ)சிவராமகிருஷ்ணன்.

" நூறு வருஞம் முன்பு எங்கள் கோட்டூரில் வேளார்களால் வேளார்களால் சிறிய அளவில் தோற்றுவிக்கப்பட்ட மாரியம்மன் கோயில் இப்போது பெரும் கீர்த்தி பெற்றுவிட்டது. சமயபுரம் கொன்னையூர் தாயமங்கலம் போல எட்டுக்கண் விட்டெரியப் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. பங்குனியில் கொட்டும் வருமானத்தை குறிவைத்து மாரி கோயிலை அறநிலையத்துறை கைப்பற்றிக் கொண்டுவிட்டது. அந்தளவுக்கு வருமானம். கோட்டூரை சுற்றியுள்ள கிராமமக்களின் பக்திப் பற்றுதல் சேல்க்கைத் தெய்வங்களைப் பின்னுக்குத் தள்ளி, கோட்டூர் மாரியின் முளைப்பாரித் திருவிழா மீது செல்ல வைத்துவிட்டது.

இதைப் போலவே எங்கள் சேர்க்கையின் தலைக் கிராமமான காரையில் நூறு வருடங்களுக்கு முன்பு உருவான நடுவூர் நாச்சியம்மன் கோயில் திருவிழாவும் புகழ் பெற்றுவிட்டது அந்த ஊர்க்காரர்கள் கவனமும் சேர்க்கை கோயில்களைக் காட்டிலும் நாச்சியார் மீதுதான் குவிந்திருக்கிறது.

அப்புறம், புரவியெடுப்பில் நிறைய சிரமங்கள். ஒவ்வொரு குதிரையையும் வேளார் வீட்டிலிருந்து கூத்துப் பொட்டலுக்குக் கொண்டுவர எட்டுப்பேர் வேண்டும். மறுநாள் அங்கிருந்து கோயிலுக்கு கொண்டு செல்ல எட்டுபேர் வேண்டும் வாட்டசாட்டமான எட்டுபேர் ... இப்படி நிறைய சிரமங்கள் ! "என்கிறார் கோட்டூர் அம்பகாரர் தனுக்கோடி.

ஆரம்பத்தில் மரத்தடியில் கூரைவீட்டில் ஓட்டுவீட்டில் அருள்பாலித்த சேர்க்கைத் தெய்வங்கள் இப்போது கான்கிரீட் கோயில்களில் வரமருளுகின்றன. கான்கிரீட் கோயில்கள் கம்பீரமாக எழக் காரணமாக முன்னின்று முயற்சியெடுத்து கட்டுவித்தவர் அரசியல் பிரமுகரான. காரை நா. மோகன் ஆவார்.

காரையில் பல்வேறு சாதியினர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இவர்களில் செட்டியார்கள் 40 புள்ளிகளும் எழுகிளைக் கள்ளர்கள் நூறு புள்ளிகளும் அடக்கம்.

காரை கள்ளர்களில் அம்பலத்தார் கரை, சூறாவளியார் கரை, பாலாற்றார் கரை, அப்பர் கரை என நான்கு கரையினர் முக்கியமானவர்கள்.

சூறாவளியார் கரையைச் சேர்ந்த பெரி. நாச்சியப்பன் சேர்வையின் மகன் தான் காரை மோகன். இவரிடம் தான் காரை நடுவூர் நாச்சியம்மனின் சரித்திரத்தை தெரிந்துகொண்டோம்.

" சன்னாசி சங்கரன் என்று இரண்டு சாமியார்கள். அவர்கள் தான் ஊரின் நடுவில் கூரை வீட்டில் மூன்று திரிசூலங்களை ஊன்றி, நடுவூர் நாச்சியம்மன் என்று பெயரும் சூட்டி காரை மக்களை கும்பிட வைத்திருக்கிறார்கள்.

என் தகப்பனார் பெரி. நாச்சியப்பன் சேர்வை பர்மாவில் கொண்டுவித்தவர் அவர்தான் நாச்சியம்மனுக்கு குன்றக்குடியின் ஐம்பொன் விக்கிரகம் செய்துகொண்டுவந்து இங்கே பீடத்தில் ஏற்றியவர். வருடாவருடம் நாச்சிக்கு தேரோட்டம் நடக்கிறது. அந்த அழகிய சிறுதேரை செய்தளித்ததும் என் தகப்பனார் தான். அந்த ஐம்பொன் திருவுருவம் தான் மூலவர். உற்சவரும் அதுவே தான்.

அப்புறம்தான் அம்பலகாரராலும் செட்டியார்களாலும் பக்தகளாலும் கோயில் நகைநட்டு என பெருகின ஆவணி இரண்டாம் செவ்வாய் காப்புக்கட்டி மூன்றாம் செவ்வாய் திருவிழா கொண்டாடுகிறோம்

செவ்வாயன்று முதலில் ஊர்க்கிடாயும் பிறகு அம்பலம் கிடாயும் பிறகு பொதுமக்கன் கிடாயும் வெட்டப்படுகிறது அம்பலம் கிடாய் வெட்டுவதில் ஒரு ஒழுங்கு பின்பற்றப் படுகிறது இந்த வருடம் காரை அம்பலத்தின் கிடாய் என்றால் அடுத்த வருடம் அடசிவயல் அம்பலத்தின் கிடாய். அடுத்த வருடம் பாவனக்கோட்டை அம்பலத்தின் கிடாய். அதற்கு அடுத்த வருடம் தென்னம்பூவயல் அம்பலத்தின் கிடாய் என சுழற்சி முறையில் மரியாதை! " மரபுகளை லிளக்கினார் காரை நா. மோகன்.

தென்னாலை நாட்டின் திருவிழாவான எழுபொன்கோட்டை தேரோட்டத்தில், தேரின் நான்கு வடங்களில் ஒன்று காரை சேர்க்கைக்கும் திருமணவயல் சேர்க்கைக்கும் உரியது

****

ஆறாவயல் பெரியய்யா

இரவுசேரி நாடு இருபத்தி இரண்டரைக் கிராமங்களைக் கொண்டது

1 இரவுசேரி
2. தாழையூர்
3. இலக்கணிவயல்
4 சாத்திகோட்டை
5 நல்லான்குடி
6 வெளிமுத்தி
7 தளக்காவயல்
8 பார்ப்பான்கோட்டை
9 வடுகணி
10 கடகம்பட்டி
11 மாவிடுதிக் கோட்டை
12 செய்யானேந்தல்
13 சிவந்தான்கோட்டை
14 கோடிக்கோட்டை
15 தச்சன்வயல் (இது அரைக்கிராமம்)
16 பள்ளன்வயல்
17 மஞ்சணி
18 நாகணி
19 வசந்தணி
20 தாழனேந்தல்
21 பனைஞ்செய் பொற்கோட்டை
22. உதையாச்சி.(
குறிப்பு :கிராமங்களின்பட்டியல் நிறைவு பெறவில்லை ஒரு ஊர் குறைகிறது. பெயர் கிடைத்ததும் பூர்த்தி செய்வேன்)

இரவுசேரி நாட்டுக் குருக்கள் சொர்ணம் சுந்தரேஸ்வரக் குருக்களிடம் (ரவி குருக்கள்) அவர் முன்னோர் உம்பல மானியம் பெற்றதற்கான பத்திரமொன்றில் இரவுசேரி நாட்டுக் கிராமங்களின் பெயர்ப் பட்டியல் இருக்கிறது அதில் " உடையானேந்தல், அகிலாண்டவயல், தட்டான்வயல், சிரவிழிமடை, அணுகன்வயல் " ஆகிய ஊர்ப் பெயர்களைப் பார்த்தேன். என் பட்டியலில் உள்ள சில குருக்கள் பத்திரத்தில் இல்லை. இவை எவ்வூரின் பெயர்களோ?

உஞ்சனை சிவாலயத்தில் 18 கல்வெட்டுகள் உள்ளன. அவை எழுநூறு எண்ணூறு வருடத்திற்கு முந்தியவை! உஞ்சனை தொன்மையான கிராமம். ஆனால் 700 ஆண்டுகளுக்கு முன்பு உஞ்சனை என்றொரு நாடு இருந்திருக்கவில்லை. பெரும்பூர் நாட்டின் சேர்க்கைகளில் ஒன்றாக உஞ்சனை இருந்திருக்கிறது. இந்த விஷயத்தை உஞ்சனை சிவன் கோயில் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது.

வெங்களூர் சிவாலயத்தில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன இவையும் எழுநூறு எண்ணூறு ஆண்டுகட்கு முந்தியவைகளே. செம்பொன்மாரி தொன்மையான கிராமம். ஆனால் 700 ஆண்டுகட்கு முன்பு செம்பொன்மாரி என்றொரு நாடு இருந்திருக்கவில்லை. முத்தூற்றுக் கூற்றம் தாழையூர் நாட்டின் சேர்க்கைகளில் ஒன்றாக செம்பொன்மாரி இருந்திருக்கிறது. இந்த விஷயத்தை வெங்களூர் கல்வெட்டுகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

இப்போது வெங்களூர் சேர்க்கை (நடுவிநாடு) கண்டதேவி சேர்க்கை மற்றும் இரவுசேரி நாட்டின் கிராமங்கள் அப்போது தாழையூர் நாட்டுக் கிராமங்களே!

தென்னாலை நாட்டு கள்ளன்குடி சிவாலயத்தில் 13 கல்வெட்டுகள் உள்ளன. இவையும் எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தியவையே. தென்னாலை தொன்மையான நாடு. ஆனால் அப்போது இது காளையார்கோயில் கூற்றத்திற்குள் அடங்கிய நாடு அல்ல. தாழையூர் போல முத்தூற்றுக் கூற்றத்திற்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றாக தென்னாலை இருந்திருக்கிறது ஆனால் அக் காலத்தில் அதன் தென்னாலையோ தென்னிலையோ தென்னாலியோ அல்ல. " தென்னார் கொளி " என்றே கல்வெட்டில் உள்ளது இந்த விஷயங்களை கள்ளன்குடி கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஆனால், இரவுசேரி ஊர் குறித்தோ நாடு குறித்தோ கல்வெட்டுகளோ செப்புப் பட்டயங்களோ இலக்கியச் சான்றுகளோ இதுநாள்வரை கண்டறியப் படவில்லை! அனுமந்தக்குடி செப்பேட்டில் சிவந்தான்கோட்டையும் செய்யானேந்தலும் நான்குமாலாக காட்டப்பட்டுள்ளது ஆனையேறிவயல் பட்டயத்தில் பனைஞ்செய் பொற்கோட்டை எல்லை காட்டப்பட்டுள்ளது

கள்ளழகர் வையை ஆற்றில் இறங்கும் விழாவிற்கு, அழகர் கோயிலுக்கு வருகின்ற இரவுசேரி நாட்டு வண்டிகளுக்கு மரியாதை உண்டென ஆய்வாளர் தொ. பரமசிவம் குறிப்பிட்டிருக்கிறார்.

கண்டதேவி திருவிழாவில் நான்காம் மண்டகப்படி இரவுசேரி நாட்டாரின் மண்டகப்படி.

கண்டதேவி பெரியதேரின் நான்கு வடங்களில் மேற்கிலிருந்து இரண்டாவது வடம் இரவுசேரி நாட்டுக்கு உரியது.

உஞ்சனை செம்பொன்மாரி தென்னாலை நாடுகள் தங்கள் நாட்டுக் கோனார்களுக்கு நாட்டாருக்கு உரிய உரிமையை வழங்கியுள்ளனர். கண்டதேவி மண்டகப் படிக்காகவும் தேர்வடத்திற்காகவும் அந்த மூன்று நாட்டவரோடும் நாட்டார்களாக கோனார்களும் வருகிறார்கள். இரவுசேரி நாட்டார்களோடு தேர்வடம் பிடித்து இழுப்பதற்காக தொட்டியர்கள் (தெலுங்கு கம்பள நாயக்கர்கள்) தலையில் பட்டுத் தலைப்பாகை அணிந்து இரவுசேரி நாட்டாருடன் நாட்டாராக வருவார்கள்.

இரவுசேரி நாட்டின் ஆளுமையை இந் நாட்டின் நான்கு கரையாளர்களே தீர்மானிக்கிறார்கள்.

1 முதல் கரை (இதை உதிரப்புலி கரை என்றும் அம்பலம் கரை என்றும் கூறுவதுண்டு)
2 தேவர் கரை.
3. வேம்பத்தார் கரை
4 சன்னப்பர் கரை. இவர்களே இரவுசேரியின் நான்கு கரையாளர்கள்.

இரவுசேரியில் 1 நடுவூராள் கோயில் 2 ஆதீனமிளகி ஐயனார் -- காவல் தெய்வம் பத்திரகாளி கோயில் 3 மும்முடிநாதர் (சிவன்) கோயில் 4 தத்தாத்ரேயர் (முனீஸ்வரன் ) கோயில் உள்ளன்

தேவகோட்டையில் விரிசிலை ஆற்றின் வடகரையில், ஒத்தக்கடை அருகே கோட்டையம்மன் கோயில் இருக்கிறது.

நல்லான்குடியில் வேம்புடை ஐயனார் கோயில் உள்ளது

தாழையூரில் உசிலுடை ஐயனார் -கூத்தாடிப் பெரியநாயகி கோயில் உள்ளது இவை இரவுசேரி நாட்டிலுள்ள புகழ்மிக்க அருள்நிறை ஆலயங்கள்.

இவை தவிர கீழாநிலைக் கோட்டை அருகே காடேரி அம்மன் -பெத்த பெருமாள் கோயில் உள்ளது. இது தேவர் கரையினர் கொண்டாடும் குலதெய்வம்!

7 கிளைகள்! 14 நாடுகள்!
இரவுசேரி நாடு (2)

இரவுசேரி நாட்டின் இருபத்தி இரண்டரைக் கிராமங்களுக்கும் உரியது நடூராள் கோயில். நடூராள் கோயில் சுற்றுப் பொங்கலுக்கு அத்தனை கிராமங்களுக்கும் அழைப்பு அனுப்பப் படுகிறது. வரி வசூலிக்கப் படுகிறது.. இன்றுவரை நாட்டாரின் கட்டுப்பாட்டில், நிர்வாகத்தில் உள்ளதும் நடூராள் கோயில்!

நடூராளின் பெயர் நடூர் வன்னிச்சி அம்மன்! வன்னிச்சி எனில் அச்சம் அறியா வீரத்தாய் என்று பொருள் கொள்க!

நடூராள் என ஒருமையில் அழைத்தாலும் கருவரையில் ஒரே பீடத்தில் அக்கா தங்கையர் என மூவர் அருள் பாலிக்கிறார்கள். கீழ்த்திசை நோக்கி நிலை கொண்டுள்ளனர்.

வண்ணார்கள் பூசாரிகளாக உள்ள நாட்டுக்கோயில் இதுவொன்றே! தற்போதைய தலைமைப் பூசாரி ஆறுமுகம் நடூராளின் புராணம் சொன்னார்.

"இந்தா நம்ம நடூரா மின்னாடிக் கெடக்குதே ஊரணி இதுக்குப் பேரு லண்ணான் ஊருணி. இதுக்கு இன்னோரு பேருமிருக்கு. அது நாச்சான் குண்டு. எங்க முப்பாட்டன் ஒருத்தர் பேரு நாச்சான். காலங்காலமா இந்த நாச்சான்குண்டுல. தான் இந்த. ஊரு அழுக்கையெல்லாம் எங்க பாட்டன் பூட்டன் வெளுத்திருக்காக.

ஒரு நாளு நாச்சானும் அவரு அண்ணனும் தம்பியுமா மூணு பேரும் மூசுமூசுனு தொவைச்சுக்கினு இருக்கையில மூத்தவரு தொவைச்ச கல்லு படாருனு ஒடைஞ்ச்சிருக்கு அதில இருந்து ரத்தம் கொட்டோகொட்டுனு கொட்டுதாம். ஊரணியே குருதிக் கொழம்பாப் போச்சாம். ஒடைஞ்ச கல்லைத் தூக்கிட்டுப் பார்த்தா... மூணு திரிசூலம் பூமியத் தொலைச்சுக்கிணு மேல வருது. கூடவே நாச்சானுக்கு அருளும் வந்திருக்கு.

அடேய் நாங்க அக்கா தங்கச்சிய மூணு பேரும் வெகு காலமா இதுக்குள்ள புதைஞ்சு கெடந்தோம். இப்பத் இந்த ஊருக்கும் எங்களுக்கும் காலம் கனிஞ்சிருக்கு. வெளிய வந்திருக்கம். நான்தான் நடுவுளாள்.நடுவூர் வன்னிச்சி. அக்கா நங்கப்பிராட்டி. தங்கச்சி சூலப் பிராட்டி. இந்த நாச்சான்குண்டு மேகரையில எங்களுக்காக ஆழமா ஒரு கேணி வெட்டுங்க அதுக்குள்ள எங்க மூணு பேரையும் ஊண்டுங்க. மூணு ஓட்டை போட்ட வட்டக் கல்லால கேணியை மூடிப்பிடுங்க.

எங்க மூணு பேருக்கும் ஐய்பொன்னால விக்கிரகம் பண்ணி கேணி மேல பிரதிஷ்டை பண்ணி கும்புடுங்க. நீங்க விக்கிரகங்களுக்கு செய்ற அபிஷேகம் கேணிக்குள்ள இருக்கிற எங்களை குளிர வைக்கணும்.

ஒத்தத் தலைவாழை இலையிலதான் எங்க மூணு பேருக்கும் படையல் வைக்கணும். நடுவுல இருக்கிற எந்தங்கச்சி சூலப் பிராட்டிக்கு ரத்தக் கவுச்சி புடிக்கும் தலைவாழையிலை நடுவுல மாமிசப் படையலும் இலையில தெக்கயும் வடக்கையும் எனக்கும் நக்காவுக்கும் மரக்கறிப் படையல். வச்சுக் கும்பிடுங்க.

எந்தெந்த காலத்துக்கும் வண்ணான் நாச்சான் வாரிசுக தான் எனக்குப் பூசை செய்யோணும் " அப்பிடீனு எங்க பாட்டன் நாச்சான் ஒடம்புல அருளா நின்ன நடூரு வன்னிச்சி உத்தரவு கொடுத்திருக்கிறாள்.

ஓலைவீடு ஓட்டுவீடு கல்லுவீடுனு கோயில்வீடு மாறுனாலும் நடூரு நாச்சியாளுக சக்தி மாறலை. இங்க வந்த அழகர் கோயில் பட்டர் நடூரு வன்னிச்சி சக்தி வாய்ந்த தெய்வம்னு சொன்னாருனா சும்மாவா! நடூராளை மனசு நெறைய நெனச்சாலே மேனி சிலிர்க்கும். நம்பிக்கையோட வேண்டுனா நெனைச்சது நடக்கும்! உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார் பூசாரி ஆறுமுகம்.

சிவராத்திரி பகலில் நடுவூர் வன்னிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் காவடி கட்டுகிறார்கள். ஆதீன மிளகி ஐயனார் கோயிலில் காத்திருக்கும் நாட்டாரை அழைத்து வருகிறார்கள். இங்கே வழிபாடு முடிந்ததும் நான்கு கரையாளர்களுக்கும் வரிசைப்படி மரியாதை நடக்கிறது பிறகு காவடிகள் ஐயனார் கோயில் செல்கின்றன.

முதல்கரை தேவர்கரை வேம்பத்தார்கரை சன்னப்பர் கரை இந்த நான்குகரைக் குடும்பங்களும் கீழக்குடியிருப்பு இரவுசேரி சாத்திகோட்டை தளக்காவயல் ஆகிய நான்கு கிராமங்களில் மட்டும் வசிக்கிறார்கள். இதில் கீழக்குடியிருப்பு இரவுசேரியின் ஒரு அங்கம் ஆகையால் அது தனிக் கிராமமல்ல. இரவுசேரி நாட்டின் தெய்வம் நடூராளுக்கும் இரவுசேரி நாட்டின் காவல் தெய்வம் பத்திரகாளிக்கும் நாட்டின் பெருந்தெய்வம் ஆதீனமிளகி ஐயனாருக்கும் ஐம்பது முன்னாள்வரை பங்குனித் திருவிழாவாக புரவியெடுப்பும் முளைப்பாரி சொறிதலும் பலராத்திரிக் கூத்தும் நடந்திருக்கிறது. பெரியகருப்பர் சாமியாடி சாத்திகோட்டை கருப்பையா சேர்வை காலமானதும் அடுத்த சாமியாடியை நாட்டாரால் பாலாவி -பூக்குழி முறைப்படி தேர்வு செய்ய முடியவில்லை. சாமியாடிகள் இல்லாமையால் பங்குனித் திருவிழா நின்று போயிருக்கிறது.

நடுவூராள் கோயிலில் நடந்த சுற்றுப் பொங்கலும் நின்றுவிட்டது. இரண்டு கோயில்களிலும் சிவராத்திரி விழா மட்டும் தொய்வின்றி நடக்கிறது.

ஆதீனமிளகி ஐயனாருக்கும் பத்திரகாளிக்கும் பெரியகருப்பருக்கும் மீண்டும் புரவியெடுப்பு நடக்காதா?

பதினெட்டாம்படிக் கருப்பரின் அருள் பெற்ற சாமியாடி இல்லாமல் பங்குனித் திருவிழா நடக்க்காதே!

இந்தக் கேள்வியையும் பதிலையும் இரவுசேரி நாடு முழுக்க எதிர்கொண்டேன்.

கடைசியாக பெரியகருப்பர் சாமியாடியவர் சாத்திகோட்டை கருப்பையா சேர்வை. அவருக்கும் முன்பு அவருடைய முன்னோரே நான்கைந்து தலைமுறையாக ஆடினர்

கடைசியாக ஊமைச் சாமியாடியவர் பிச்சை சேர்வை. அவருக்கு முன்பு அவரது முன்னோரை நான்கைந்து தலைமுறைகளாக ஊமைச் சாமியாடிகள்.

ஊமைச் சாமியாடிக்கு அக்கினிப் பரிட்சைகள் ஏதும் வைப்பதில்லை.

ஆனால் பெரியசாமி ஆடுவதற்கு பாலாவி மற்றும் பெரும் பூக்குழிப் பரிட்சைகளில் தேறியாக வேண்டும்

7 கிளைகள்! 14 நாடுகள்!
இரவுசேரி நாடு (3 )

இரவுசேரி நாட்டின் பெரிய சாமியாடி சாத்திகோட்டை காளிமுத்து சேர்வை தனது எண்பது வயதிலும் ஒரு சிலம்பாட்டக்காரனைப் போல சுழன்றாடியவர் .அவரது மறைவுக்கு பிறகு அவரது இளைய மகன் கருப்பையா சேர்வை சாமியாடத் தயாரானார்.

சாத்திகோட்டை கருப்பையா சேர்வையின் நிறம் நல்ல நிறம். மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ என மயக்கமூட்டும் பதினெட்டாம் படி கருப்பரின் அழியாநிறம். ஆதீனமிளகி ஐயனார் கோயிலில் முப்பது நாள் விரதமிருந்தார்.அடுத்தநாள் ஐயனார் கோயிலில் இரவுசேரி நாட்டார் பிரமுகர்கள் கூடினர். அழகர்கோயிலில் இருந்து பட்டரும் வந்திருந்தார்.

சாத்திகோட்டையாரிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டார்கள் விழிகளில் உக்கிரம் மிளிரப் பதில் சொன்னார் சாமியாடி. கடைசிக் கேள்வியாக. ஒரு காய்ந்த மிளகாயைக் காட்டி "இதற்குள் எத்தனை விதைகள்? " கேட்டனர். பட்டெனப் பதில் சொன்னார் சாமியாடி " 42 விதைகள்! "எண்ணிப்பார்த்தனர். மிகச் சரியாக இருந்தது. நீராடிவிட்டு வரச் சொன்னார்கள்.

பெரியகருப்பர் சந்நிதிக்கு எதிரில் தான் தெற்கிப் படித்துறை.சித்திரை முழுநிலா ராவின் பால் வெளிச்சமாய் ஊருணி நீர். நீராடினார். படித்துறைக் கரையில் அமர்த்தி இறந்தவருக்கான சடங்குகளை செய்தனர். பூரணமாக ஏற்றுக் கொண்டார்.

கோயிலுக்குள் சென்றார்.கரிய கச்சைகள் கால்சட்டை. சதங்கைகள் இடுப்புவார். சாய்ந்த கொண்டை என பதினெட்டாம் படியானின் திருக்கோலம் பூண்டார் ஓர் கையில் வளரி. மறுகையில் சாட்டை..

பெரிய கருப்பர் சந்நிதியில் நின்றார். சோதி தரிசித்தார் பூசாரி வேளார் சாமியாடி நெற்றியில் நீறணிவித்தார் பட்டர் தான் கொண்டுவந்திருந்த சுருக்குப் பையிலிருந்து திருநீறை அள்ளி சாமியாடி நெற்றியில் அப்பினார்.

சாமியாடியின் திரேகம் நடுங்கியது. பாதாதி கேசம் பதறியது. "ஓம்ம்ம்ம்ம்ம்ம் "திசையெட்டும் நிறையப் பெருங்குரல் எழுப்பினார் இழுவையின் பறையின் இசைமுழக்கம் கிளர்ச்சியூட்டியது.ஓமோசை குறையாமல் சதங்கையொலி நிழலாக கோயிலைவிட்டு வெளியேறி பாலாவி மேடை நோக்கி ஓடினார். நாட்டிசை முன்னோட நாட்டாரும் பின்னேகினர்

ஊருணியின் தென்கிழக்குத் துறையை ஒட்டி பாலாவி மேடையும் பூக்குழியும் தயாராக இருந்தன

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பாலாவி மேடையில் குதித்தேறினார். முட்டி போட்டு அமர்ந்தார் எதிரில் உறுமி மேளகாரர். ""ஒண்ணாம் படியேறி...? "ஊரறியக்கேட்டார். சாமியாடி "ஒன்று நூறு ஆயிரமாம்...! "சாமியாடி ஊரறியச் சொன்னார். அடுத்து "இரண்டாம் படியேறி...? " "இரண்டு நூறு ஆயிரமாம்...! "இப்படியே பதினெட்டுப் படியேறினர் இருவரும்.

பாலாவி மேடைவிட்டிறங்கி பூக்குழியை மூன்று சுற்று சுற்றினார்.

பூக்குழி! ஒன்பதுக்கு ஒன்பது சதுரத்தில் ஐந்தடி ஆழத்தில் வெட்டப்பட்ட குழி. பெரிய வேப்பமரத்தை வெட்டி துண்டுகளாக்கிப் பட்டை நீக்கி குழிநிரப்பி தீமூட்டீ இதோ கனல் கங்குகளாகி சாம்பல்பூபூத்து இதோ பெரியகருப்பருக்காக காத்துக் கிடக்கிறது. திருப்பூக்குழியை சுற்றி ஏழெட்டடி தாண்டி ஆண்கள் பெண்கள் சிறார்களென மக்கள் வெள்ளம் பெரியகருப்பரின் அருள் வேண்டி தவமென நிற்கிறது!

ஊருணி நீருக்குள் பாய்ந்தாற் போல தீக்குழிக்குள் குதித்தார் பெரியகருப்பர். கருப்பரின் கைகளில் போர்க் கருவியான வளரியும் பாவத்தை விரட்டும் சாட்டையும். பூக்குழிக்குள் மூன்று வளையம் வந்தார். கரையேறினார். கரையில் மூன்று வளையம். இப்படி மும்முறை ஏறியிறங்கிச் சுற்றி கரையேறினார்.

சாட்டையை வளரியை இடுப்பில் சொறுகிக் கொண்டார். கரையடுப்பில் நுரைப்பூக்கள் பொங்கி வழிந்து கொண்டிருந்த கொதிக்கும் பால்க்குடத்தை தூக்கினார். ஒரு குழந்தையை போல மார்பில் அணைத்துக் கொண்டார்.

ஆவிப்பாலை வலதுகையால் அள்ளியள்ளி மக்கள் மீது தெளித்தார். அது மார்கழிப் பனித்துளியென பக்தர்கள் மேனியைக் குளிரச் செய்தது.

மக்கள் வெள்ளம் உணர்ச்சிப் பெருக்கில் கோஷமிட்டனர் 'கருப்பா! பதினெட்டாம்படிக் கருப்பா! "

சாமியாடி கிடைத்து விட்டார். இனி ஆயுள் முழுக்க சாத்திகோட்டை கருப்பையாவே பெரியகருப்பர் சாமியாடி! இப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார்கள் பெரிய சாமியாடிகள்!

இப்போது சாமியாட ஆளில்லை என்கிறது நாட்டார்தரப்பு. முறைப்படி சாமியழைத்தால் அருள் வராமலா போய்விடும் என்கிறது சாமியாடிகள் சந்ததியினர்.

இப்போது சாமியாடிகள் இல்லை இப்போது ஆதீனமிளகி ஐயனாருக்கும் கருப்பருக்கும் பத்திரகாளிக்கும் பங்குனித் திருவிழா இல்லை மோதுகிடாய் இழுப்பும் இல்லை!

அதென்ன மோது கிடாய் இழுத்தல்?

முன்னொரு காலத்தில் நாட்டுக் கோயிலாக இருந்த ஐயனார் பத்திர காளி கோயில் பின்னொரு காலத்தில் நான்குகரைக் கோயிலாக மாறிப்போய் விட்டிருக்கிறது!

தொன்மையானது ஆதீனமிளகி ஐயனார் கோயில். இது குறைந்தது 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கிறது என்கிறார் ஒரு ஸ்தபதி. ஐயனாரின் பார்வையும் பிரதான வாயிலும் கிழக்கு நோக்கி உள்ளன.

காவல் தெய்வம் பத்திரஙாளி, கருப்பர் சந்நிதிகள் வடக்கு நோக்கி உள. காளி சந்நிதிக்கு எதிரில் தனிவாசலுக்கு பதிலாக பெரிய கம்பி ஜன்னலை திறந்திருக்கிறார்கள். பெரிய கருப்பருக்கு எதிரில் கதவு.

கிழக்கிலிருந்து பிரதான வாயில்வழி நுழைந்தால் பிரமாண்டமான சேமங் குதிரைகளைத் தரிசிக்கலாம். தனக்கு ஆண் வாரிசு பிறக்க வேண்டும் என்று என்று ஐயனாரிடம் நேர்ந்து கொண்டாராம் தேவகோட்டை ஜமீன்தார் செட்டியார். நேர்ந்தது நிறைந்தது. அதற்காக இந்த சேமங் குதிரைகளை செய்வித்து அளித்தாராம் ஜமீன்தார் செட்டியார்.

ஆதியில் ஐயனார் கோயில் பூசாரிப் பணிகளைச் செய்தவர்கள் பிராமணர்கள் தான் ஐயர் அகத்தீஸ்வரக் குருக்கள் வெள்ளைக் குதிரையில் தினமும் அனுமந்தக்குடியில் பூசை செய்ய வருவாராம்

அனுமந்தக்குடி சிவாலயம் சமணர்கள் ஆதிக்கத்தால் இடிந்து தரைமட்டமாகி இப்போது ஈஸ்வர மேடாகிவிட்டது அக் கோயில் இயங்கியவரை அனுமந்தக்குடியில் தான் அகத்தீஸ்வரக் குருக்களின் முன்னோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

அனுமந்தக்குடியில் இருந்து தினமும் சரியான நேரத்திற்கு குருக்களால் வரமுடியவில்லை.

மோது குதிரை இழுத்தலுக்கான மூல நிகழ்வு பல தலைமுறைகளுக்கு முன்பு நடந்திருக்கிறது.

இரவுசேரி கரையாக்கோட்டையார் வீட்டு கிழவர் ஒருவர் ஐயனார் மீதும் காளி கருப்பர் மீதும் ஈடிலாப் பக்தி கொண்டவர் அக் காலத்தில் ஐயனார் கோயில் கண்காணி அவர்தான் தினமும் காலையில் கோயிலுக்கு வந்து தீபம் பார்த்த பிறகே வயிற்றுக்கு ஈயும் பழக்கம் உடையவர்.இதை நாடும் அறியும் குருக்களும் அறிவார்.

ஆனாலும் குருக்களால் பல நாட்கள் ஐயனார் கோயிலுக்கு வரமுடியாமல் போயிருக்கிறது. அத்தகைய நாட்களில் கரையாக்கோட்டை கிழவர் பட்டினி கிடந்திருக்கிறார்.சொல்லிச்சொல்லி அயர்ந்த கிழவர் ஒருநாள் "இன்னக்கிதான் கடைசி! இனிமேல ஒருநாள் வரலைனாலும் சகிக்க மாட்டேன். அப்பறம் உனக்கு இந்தக் கோயில்ல வேலையில்லை! உனக்கு மட்டுமில்லை உன் சாதியானுக்கே வேலையில்லை. அப்புறம் வேளார் தான் பூசாரி! "எச்சரித்தார்.

குருக்களுக்கும் கோபம் சிரசேரி நின்றது. "இதை சவாலா ஏத்துக்கிறேன். அப்பிடிமட்டும் நடந்த என் உடம்புல உசுரு தங்காது. இந்தா கோயிலுக்கு மின்னாடி நிக்கிதே புளியமரம்.. நாண்டுக்கிணு தொங்குவேன்! "

சபதம் மோதலானது. இதுக்கெல்லாம் பயந்தவன் நான் இல்லைடா. சொன்னது சொன்னதுதான். 'கிழவன் சேர்வை சுட்டுவிரலை உயர்த்தினார்.

"டேய் சேர்வை. உன்னால நான் நாண்டுக்கிணு செத்தன்னா இந்த ஊரும் உலகமும் உன்னை காறித்துப்பும். பிறப்பொழுக்கம் தப்பாத ஒரு பாப்பானை கொன்ன பாபம் உன்னையும் உன் சந்ததிகளையும் ஏழேழு நாப்பத்தொம்போது ஜென்மத்துக்கும் நின்னு தண்டிக்கும்டா! "

கிழவன் சேர்வை சூறாவளியானார் "புளியமரத்தில தொங்கிற உன் பொணத்தை என் பண்ணையாளை வச்சு எறக்குவேன். பொணத்துமேல வைக்கோல்பிறியைச் சுத்தி வச்சுக்கட்டி இரவுசேரி முழுக்க தரதரன்னு இழுத்துக்கினு போயி மேலக் கம்மாய்கரையில போட்டு வச்சு புதைப்பேண்டா! "

இருவர் சொன்ன சொற்களும் அட்சரம் பிசகாமல் அப்படியே நடந்தேறின.

எத்தனையோ தலைமுறை முன்னால் நடந்தது இது அந்த மோதலின் அடையாளமாக ஒவ்வொரு புரவியெடுப்பு இரவிலும் குருக்கனின் அடையாளமாக வெள்ளாட்டுக் கிடாயின் சடலத்தை ஊரைச் சுற்றி இழுத்து மேலக் கண்மாய்க் கரையில் புதைக்கிறார்கள்.

இது தான் மோதுகிடாயின் வரலாறு!

7கிளைகள்! 14 நாடுகள்!
இரவுசேரி நாடு (பத்தி 4)

இரவுசேரி ஊருக்கும் நாட்டிற்கும் வேளார்கள் புதியவர்கள். ஆதீனமிளகி ஐயனார் பத்திரகாளி கருப்பர் கோயிலுக்கு பூசாரிகள் வேளார்கள் தான். நல்லான்குடி வேம்புடைய ஐயனார் கோயிலுக்கு புரவிகள் செய்தளிப்பதும் இந்த வேளார்கள் தான். தாழையூர் உசிலுடை ஐயனார் கோயிலுக்கு புரவிகள் செய்தளிப்பதும் இதே வேளார்கள் தான். இவர்களின் பூர்வீகம் திருப்பத்தூரை ஒட்டியுள்ள கோட்டையிருப்பு என்ற ஊர்!

இரவுசேரி நாட்டிற்கும் (இருபத்தியிரண்டரைக் கிராமங்களுக்கும்) பூசாரிப் பணி செய்தது அகத்தீஸ்வரக் குருக்கள் குடும்பம் தான். குருக்கள் மோதுகிடையாக குறியீடு பெறுவதற்கு ஓரிரண்டு தலைமுறைக்கு முன்புதான், கணவன் மனைவி மூன்று மகன்கள் ஒரு மகள் அடங்கிய ஒரு வேளார் குடும்பம் வயிற்றுப் பாட்டிற்காக கோட்டையிருப்பில் இருந்து இந்தப் பகுதிக்கு வந்தது.

இரவுசேரி ஊரம்பலம் அந்த வேளார் குடும்பத்திற்கு அடைக்கலம் தந்தார். கைக்குடிக் கண்மாய் வடக்கிக் கடைக்கொம்பு புறகரையில் வீடுகட்டிக் கொடுத்தார். சட்டி பானைகள் விதைநெல் குதிர்கள் என தங்கள் குலத் தொழிலைச் செய்து தங்கள் வாழ்வாதாரங்களை உறுதி செய்து கொண்டது வேளார் குடும்பம்.

அகத்தீஸ்வரக் குருக்களுக்குப் பதிலாக இந்த வேளார் குடும்பத்தையே பூசாரிகள் ஆக்கினார் வேம்பத்தார் கரையைச் சேர்ந்த கரையாக்கோட்டை சேர்வைக் கிழவர் ..

"ஒற்றைக் குடும்பம் பலவாகப் பெருகியதும் கைக்குடிக் கரையைவிட்டு இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார்கள் எங்கள் மூதாதையர். அக்காலத்தில் தேவகோட்டை என்ற நகரம் உருவாகியிருக்கவில்லை. இரவுசேரியின் கொல்லைக்காடு. அடர்த்தியான கற்றாலைக் காடாக இருந்ததாம். அதை அழித்தே குயவர் குடியிருப்பை உண்டாக்கினார்களாம் எம் முன்னோர்கள். குடிதண்ணீருக்காக மேற்கே ஒருமைல் தாண்டி சிலம்பணிக்கோ, தெற்கே ஆற்றைத் தாண்டி சாத்திகோட்டைக்கோ தாங்கள் செய்த சுட்ட மண் குடங்களோடு போவார்களாம். தேவகோட்டைக்கு அடித்தளம் போட்டதே வேளார்களாகிய நாம்தான் என்று எங்கள் பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கிறோம் " என்கிறார்கள் ஆதீனமிளகி ஐயனார் கோயில் பூசாரிகளான செந்தில் வேளாரும் தியாகராஜ வேளாரும்.

வேளார்களின் குடியேற்றத்திற்கு பிறகே, இரவுசேரி கோட்டூர் காரை கோட்டவயல் எழுபொன்கோட்டை என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த நாட்டுக் கோட்டை செட்டியார்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ( 1825 க்குப் பிறகே) தேவகோட்டைக்கு புலம் பெயர்ந்தனர். அப்போது இரவுசேரியைப் போல தேவகோட்டையும்அனுமந்தக்குடி தாலுகாவிற்குள் அடங்கிய ஒரு கிராமம் தான்.

வேளார்கள் பூசாரியாவதற்கு முன்னும் பின்னும் கூட ஆதீனமிளகி ஐயனார் கோயிலில் நான்கு கரையினருக்கும் வரிசைப்படி தீர்த்தம் திருநீறு மரியாதைகளை பெயர் சொல்லி அழைத்துக் கொடுக்கும் மரபு இருந்திருக்கிறது.

சிவகங்கை அரசு 1729 இல் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது அதற்கு முன்பு 7 கிளை 14 நாடுகள் சேதுபதிகளின் ஆட்சிக்கு உட்பட்டவையே. சிவகங்கை அரசு தோற்றுவிக்கப்பட்டதும் 7 கிளை 14 நாடுகள் சிவகங்கை அரசிடம் வந்தன.

1800 வரை 7 கிளை 14 நாடுகளில் உள்ள கோயில்கள் அத்தனையிலும் முதல் மரியாதை அரண்மனைக்கு (அரசுக்கு) உரியதாகவே இருந்திருக்கிறது. இன்றளவும் தென்னாலை நாட்டு தெண்ணீர்வயல் காஞ்சிரங்காளி பனந்தன்மடை ஐயனார் கோயிலில் முதல் மரியாதை " அரண்மனை " என அழைத்து அரசு அதிகரிகளிடம் கொடுக்கிறார்கள்.

இரவுசேரி ஆதீனமிளகி ஐயனார் கோயிலில் 1970 களுக்கு முன்னாள்வரை 1 பிராமணர் 2 சைவாள் (வெள்ளாளர்) 3 கோனார் 4 அதிகாரி 5 பிறநாட்டார் 6. முதல்கரை 7 தேவர் கரை 8 வேம்பத்தார் கரை 9 சன்னப்பர் கரை என பெயர் கூறி அழைத்து பிரசாதம் அளித்தபிறகே பொதுமக்களுக்கு பிரசாதம் (தீர்த்தம் திருநீறு) அளித்திருக்கிறார்கள்.

இப்போது எப்படி?

"முதலில் பிராமணர் பிறகு சைவாள் அப்புறம் அதிகாரி பிறகு பிறநாட்டார் எனக் கூப்பிட்டு திருநீறு தீர்த்தம் கொடுக்கிறோம். பிறகு அவற்றை கருப்பர் சன்னதி வாசலில் வைத்துவிட்டு நாட்டார்களுக்காக என்போம் எடுத்துக் கொள்வார்கள். கரை வரிசைப்படி எல்லாம் அழைப்பதில்லை! "என்கிறார்கள் பூசாரிகள் ஆதீனமிளகி ஐயனார் கோயில் தேவகோட்டை செட்டியார் குடும்பம் ஒன்றின் நிர்வாகத்தில் உள்ளது. நான்கு கரையாளர்களின் ஆலோசனைகளையும் பெற்று செம்மையாக பாதுகாத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது செட்டியார் குடும்பம்.இப்போது குடமுழுக்கிற்கான திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இரவுசேரி நாட்டின் இருபத்தியிரண்டரைக் கிராமங்களும் இணைந்து நின்று கொண்டாட வேண்டிய ஐயனார் கோயில் திருவிழா கூத்து குதிரையெடுப்பு நடந்து இரண்டு தலைமுறையாகி விட்டது.

7 கிளைகள்! 14 நாடுகள்!
இரவுசேரி நாடு (5 )

இரவுசேரி மும்முடிநாதர் கோயில் இரவுசேரி நாட்டாருக்கு உரியது என்று நூறு வருடம் முன்பே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

" ஆமாம்! இக் கோயில் இரவுசேரி நாட்டின் இருபத்தியிரண்டரைக் கிராமங்களுக்கும் உரியதே! " என்று நான்கு கரையாரும் பெருமையோடு கூறுகின்றனர்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2019 இல்) நாட்டாருக்கு தெரிவிக்காமலேயே தேலகோட்டை கி.அருணாச்சலம் செட்டியாரின் தத்துமகன் லெட்சுமணன் செட்டியாரை பரம்பரை அறங்காவலர் ஆக்கியிருக்கிறது தமிழக அறநிலையத் துறை.

மும்முடிநாதர் ஈஸ்வரன் கோயில் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் ஆயை வேகத்தில் நடந்து கொண்டிருப்பதால் கோயில் மூடிக்கிடக்கிறது.

இந்தக் மும்முடிநாதர் 132 வருடத்திற்கு முன்பு ஆதீனமிளகி ஐயனார் கோயிலுக்கு எதிரில் சுமார் 100 மீட்டர் தொலைவில், கைக்குடிக் கண்மாய்க்குள் பாழடைந்து சிதைந்த கோயிலில் இருந்திருக்கிறார். அதற்கு முந்தைய காலங்களில் கார்காலத்தில் இடுப்பளவு நீரில் நின்றபடி குருக்கள் அர்ச்சனை செய்வாராம்.

மும்முடிநாதர் கோயிலின் முதல் மரியாதை தனக்கே வழங்க வேண்டுமென நூறு வருடம் முன்பு நாட்டார்கள் மீது வழக்கு தொடுத்திருக்கிறார் தேவகோட்டை ஜமீன்தார் அழ.அரு. இராம. அருணாச்சலம் செட்டியார். அந்த வழக்கின் ஆவணங்களை தேடிப் படித்து தெளிந்திருந்த வழக்கறிஞர் இரவுசேரி சொ.ராஜலிங்கத்தை சந்தித்தோம்.

"கைக்குடிக் கண்மாய் நீரிலும் மழையிலும் பனியிலும் வெயிலிலும் நின்ற மும்முடிநாதரை இரவுசேரி ஊரம்பலமும் முன்சீப்புமான சுப்பையா சேர்வை யும் இன்னும் சிலரும் தூக்கிவந்து ஐந்துவீட்டுப் பங்காளிகளான இலுப்பைக்குடி கோயில் கிளையைச் சேர்ந்த செட்டியார்களுக்குச் சொந்தமான மந்திரமூர்த்தி விநாயகர் கோயிலில் வைத்திருக்கிறார்கள். இது நடந்தது 1890 ஆம் வருடம்.

நாட்டார்களின் கோரிக்கையை ஏற்று, மும்முடிநாதருக்கு அழகிய ராஜகோபுரத்தோடும் உயரமான மதிற்சுவரோடும் கூடிய கோயில் கட்டித்தர முன்வந்திருக்கிறார் மு.ராம. கி.லெ.கிருஷ்ணன் செட்டியார். ஒரு பவுன் தங்கம் நாற்பது ரூபாய் ஐம்பது ரூபாய் விற்ற காலம் அது. இரண்டு லட்ச ரூபாய் செலவிவ் நினைத்தபடி கட்டிமுடித்தார் செட்டியார். இத் தொகையில் ஒண்ணரை லட்ச ரூபாய் கிருஷ்ணன் செட்டியாருடையது. ஐம்பதாயிரம் ரூபாயை நாட்டார்களும் பிற நகரத்தார்களும் கொடுத்திருக்கிறார்கள். ஜமீன்தார் 1500 ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார். இரவுசேரி கிராமத்திற்குரிய நிலத்தில் தான் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

1909 இல் பூமிபூசை போடப்பட்டு 1914 இல் பதட்டமான சூழலில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. ஜமீன்தார் தனக்கு ஆபத்திருக்கிறது என்று புகார் செய்ததால், குடமுழுக்கன்று சார்பு நீதிபதி வந்திருக்கிறார். ஆய்வானர் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனராம்.

குடமுழுக்கன்று தனக்கு மரியாதை தரப்படவில்லை என்று ஜமீன்தார் வழக்குத் தொடுத்தார். ஜமீன்தாருக்கு மரியாதை தரவேண்டியதில்லை என்று 1923 இல் தீர்ப்பு வந்தது.

அந்த வழக்கில் நாட்டாருக்காக சாட்சியமளித்தவர்களில் கிருஷ்ணன் செட்டியாரும் நாட்டுக் குருக்களும் முக்கியமானவர்கள். அந்த வழக்கில் "கோயில் கட்டப்பட்ட நிலம் இரவுசேரிக்குரியது. கோயில் கட்டுமானத்தில் நாட்டாருக்கு பங்குண்டு. நான் ட்ரஸ்டி அல்ல. கோயில் கணக்குவழக்குகளை கவனிக்குமாறு நாட்டார் என்னைக் கேட்டுக் கொண்டனர்! "என்று கோயிலைக் கட்டிய கிருஷ்ணன் செட்டியார் சாட்சியம் அளித்துள்ளார். அவருடைய பேரன் இப்போது அதிரடியாக பரம்பரை அறங்காவலர் ஆனதோடு மும்முடிநாதர் கோயிலையும் தனதாக்கிக் கொள்ள முயல்கிறார்."என்கிறார் வழக்கறிஞர் சொ.ராஜவிங்கம்.

மும்முடிநாதரின் பழைய கோயில் இருந்த இடம் மும்முடி மேடாக இன்னும் இருக்கிறது. இரவுசேரியின் ஆதிகுடிகளான ஆதிதமிழர்கள் இன்னும் அந்தப் பழைய கோயிலை மறக்கவில்லை. வைரம் பாய்ந்த சீமை விஷக்கருவை மரங்களின் அடியில் பதிந்திருக்கும் கற்களை ஈசனாகப் பாவித்து வருடாவருடம் பொங்கல் வைத்து தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

மும்முடிநாதர் கோயில் கட்டுமானத்தில் பெரும்பங்கு வகித்த கிருஷ்ணன் செட்டியாரின் தத்துப்பேரன் மும்முடிநாதர் கோயிலை மட்டுமின்றி பக்கத்தில் உள்ள முனீஸ்வரர் கோயிலையும் சொந்தமாக்கிக் கொள்ள முயன்றதாக வருத்தப்படுகிறார்கள் இரவுசேரி மக்கள்.

" முனீஸ்வரனுக்கு வருடாவருடம் ஆடி மாதம் நாங்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். பதினோரு நாள் மண்டகப்படி நடக்கும். மண்டகப்படிகளை உபயதாரர்கள் செய்வார்கள். வெள்ளியன்று பால்குடம் பூத்தட்டு என களைகட்டும். மறுநாள் சனியன்று கூத்து நடக்கும். இதையெல்லாம் இளைஞர் நற்பணி மன்றப் பெயரில் இரவுசேரி கிராமம் தான் செய்து கொண்டிருக்கிறது இந்தக் கோயில் குடமுழுக்கு நேரத்தில் பேரன் லெட்சுமணன் செட்டியார் பிரச்சனை செய்ப. தவறவில்லை!"என்று வேதனைப் பட்டார் இரவுசேரி இராம. லோகநாதன் சேர்வை.

அடுத்த பதிவு, இரவுசேரி சுடலைமாடன் கோயில்.

7 கிளைகள்! 14 நாடுகள்!

இரவுசேரி நாடு ( 6ஆம் பத்தி)

இரவுசேரியில் நடுவூராள் கோயில் பின்புறத்தில் அமைந்துள்ளது சுடலைமாடன் -மஞ்சனி பேச்சியம்மன் கோயில்.

இக் கோயில் பிள்ளைமார்களின் (வெள்ளாளர்) கோயில் அவர்களால் கட்டப்பட்ட கோயில்.

644 வருடங்களுக்கு முன்பு, நெல்லைச் சீமையின் அருவி நகரான குற்றாலத்தில் இருந்து சிதம்பரவேல் பிள்ளை என்கிற வெள்ளாளர் தனது மனைவி முத்துவேலாயி மற்றும் மக்களோடும் தனது பாதுகாவலரான சுடலைமுத்து தேவர் குடும்பத்தோடும் புலம்பெயர் வாழ்வு தேடி இரவுசேரிக்கு வந்தார். அவர்களுக்கு இரவுசேரி அடைக்கலம் கொடுத்தது.

வெள்ளாளர் வாழ்க்கை இரவுசேரியில் நிலைகொண்டது. குடும்பம் பெருகியது. தனது குலதெய்வமான சுடலைமாடனையும் மஞ்சனைப் பேச்சியம்மனையும் இரவுசேரிக்கு அழைத்துவந்து நிலைப்படுத்த முடிவு செய்தார் சிதம்பரவேல் பிள்ளை. தன் குலசாமிகளுக்கு கோயில் கட்ட இடம் வேண்டுமென இரவுசேரியின் நான்கு கரைத் தலைவர்களிடம் கேட்டார் அவர்.

வாட்டசாட்டமான அந்த நான்கு தலைவர்களும் தங்கள் நாட்டின் குலதெய்வமான ஆதீனமிளகி ஐயனார் சந்நிதியில் நின்றுவணங்கி அருள் கேட்டனர் .நடூராள் கோயில் வளாகத்தின் பின்புறத்தில் கட்டிக் கொள்ளட்டும் என்று உத்தரவு கொடுத்தார் ஐயனார்.

அக் காலத்தில் மதுரையை (பாண்டியநாட்டை) முகம்மதிய மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். அந்த மன்னனின் பிரதிநிதி, இரவுசேரியில் கோயில் கட்டுவதற்கு தடை விதித்திருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் மன்னனின் பிரதிநிதியான அனுமந்தக்குடி முத்து ராவுத்தர் கோரி (துலுக்கர் குலம்தனில் உதித்த உருமாலெவை )என்பவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். அவரை யார் கொலை செய்தது என்ற விபரமில்லை. அவர் கொல்லப்பட்ட சிலநாளில் சுடலைமாடன் கோயில் கட்ட அனுமதி கிடைத்திருக்கிறது

தன் குலதெய்வமான சுடலைமாடனுக்கும் பேச்சியம்மனுக்கும் பரிவாரங்களுக்கும் கோயில்கட்டிய சிதம்பரவேல் பிள்ளை. அதே கோயில் வளாகத்திற்குள், பேச்சியம்மன் சந்நிதிக்கு நேர் எதிரில் 100அடி தொலைவில் அனுமந்தக்குடி முத்து ராவுத்தருக்கு இருபுறமும் குதிரைச் சிலைகள் கொண்ட. நினைவுச்சின்னம் (கோரி) அமைக்கப்பட்டது. . ரம்ஜான் பக்ரீத் போன்ற இஸ்லாம் திருநாட்களில் சுடலைமாடன் கோயிலுக்குள் உள்ள முத்து ராவுத்தர் கோரிக்கு வழிபாடுகளை முஸ்லிம் மக்கள் வந்து நடத்துகின்றனர்.

சுடலைமாடன் கோயிலுக்கு வடக்கே செம்பியக் கண்மாய்க் கரையை ஒட்டி சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இக் கோயிலுக்கான சடலை (மயானம்) உள்ளது அதில் கொடைவிழாவிற்கான பலிபீடமும் கரக மேடையும் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது. கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து பூசாரிகள் கோயில் அருகில்தான் வசிக்கிறார்கள்!

சிதம்பரவேல் பிள்ளையின் வாரிசுகள் இப்போது தேவகோட்டையிலும் வெளியூர்களிலுமாக 400 குடிகள் (30. தலைக்கட்டுகள்) உள்ளனர்.

இரவுசேரி சுடலைமாடன் மஞ்சனை பேச்சியம்மன் கோயில் வெள்ளாளர்களுக்கே சொந்தமானதாயினும், நாகணி பகையணி, மஞ்சணி, கொல்லடான்வயல், பாராணூர், பெருவண்டல், மாவூர் கிராமங்களில் வாழ்கின்ற ஏராளமான மறவர் குடும்பங்களுக்கும் ஆசாரிமார் குடும்பங்களுக்கும் இரவுசேரி சுடலை மாடனே குலதெய்வம். அவர்களும் குலதெய்வத்திற்கான குடிவரியை கோயிலுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இரவுசேரியில் சித்திரை மாதத்தில் கொடைவிழா மிகச் சிறப்பாகவே நடந்துகொண்டிருக்கிறது.

பலநூறு ஆண்டுகளாக இரவுசேரியில் பிள்ளைமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு அடையாளம் சுடலை மாடன் கோயில்! பலநூறு ஆண்டுகளாக இரவுசேரியில் ஐந்து வீட்டார் உள்ளிட்ட நகரத்தார்கள் வாழ்ந்திருக்கிறார்கள் அதற்காக அடையாளம் தான் மந்திரமூர்த்தி விநாயகர் கோயிலும் அழகிய ஊருணியும்! பலநூறு ஆண்டுகளாக இரவுசேரியில் தொட்டியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கான ஆதாரம் தான் இரவுசேரி நாட்டாருடன் தொட்டியர் இணைந்து கண்டதேவித் தேர்வடம் பற்றி இழுக்கும் உரிமை! இரவுசேரியில் பல நூறு ஆண்டுகளாக முதலியார்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கான அடையாளம் தான் இரவுசேரியில் உள்ள குருநாதன் காளி கோயில்.

வெளியூர்களில் வாழ்கின்ற பல நூறு குடும்பங்களின் குலதெய்வமான குருநாதன் காளி கோயிலில் வழிபாட்டுத் திருவுரு ஒன்றைக்கண்டு வழிபட்டேன். ஆமாம் கொடிய கொலைக்கருவியான கழுமரம் குருநாதன் காளி கோயிலில் தெய்வமாக வழிபடப் படுகிறது!

7 கிளைகள்! 14 நாடுகள்!!

இரவுசேரி நாடு (7ஆம் பத்தி)

இரவுசேரி நாட்டில் இரவுசேரி கரையினர் உரிமை பாராட்டிப் பங்கேற்கும் மூன்று முக்கிய கோயில்கள் உள.

ஒன்று கீழாநிலைக் கோட்டைக்கு அருகில் நல்லாம்பாள் சமுத்திரம் எனும் ஊரிலுள்ள காடேரி அம்மன், பெத்தபெருமாள் கோயில். மற்றொன்று நல்லாங்குடி வேம்புடை ஐயனார் கோயில். பிறிதொன்று தாழையூரில் உள்ள உசுலுடை ஐயனார் கோயில்.

காடேரி அம்மனையும் (இது காளி) பெத்த பெருமாளையும் (இது ராமர் ) இரவுசேரி தேவர் கரையினர் போற்றிப் பரவுகின்றனர். குலதெய்வமாகக் கொண்டாடுகின்றனர்.

" காடேரி அம்மன், பெத்தபெருமாள் கோயிலில் தேவர் கரையினரான எங்களுக்கே! தேவர் கரையினர் இரவுசேரியில் இரண்டு குடும்பங்களும் தளக்காவயலில் எட்டுக் குடும்பங்களும் மஞ்சணிக் கிராமத்தில் எட்டுக் குடும்பங்களும் உள்ளோம். மஞ்சணியில் வாழும் நாற்பது குடிகளும் மறவர்கள். தளக்காவயலில் இரவுசேரியில் வாழும் பத்துக் குடிகளும் ஏழுகிளைக் கள்ளர்கள். ஆதியில் கொள்வினை கொடுப்பினையால் ஏற்பட்ட கரைப்பந்தம்.

மஞ்சணிக் கிராமத்தில் பாதி நிலங்களை பெத்தபெருமாள் கோயிலுக்கு இறையிலித் தானமாக வழங்கியிருக்கிறார் சேதுபதி அரசர். தேவர் கரைக்கே முதல் மரியாதை தர வேண்டும் என்பதும் சேதுபதி மன்னரின் ஆணையே! இதற்கான பட்டயமும் பூசாரியிடம் உள்ளது.

ஒவ்வொரு சித்திரையிலும் செவ்வாய் புதன் வியாழக்கிழமைகளில் காடேரி கோயில் பூசை நடக்கிறது. நாற்பது கிடாய்கள் வெட்டப் படுகின்றன. வியாழனன்று காடேரிக்கு சூலாடு பலி கொடுக்கப்படுகிறது. காடேரி கடும் கோபமும் பெரும் கருணையும் கொண்ட தெய்வம்! " என்கிறார் தளக்காவயல் பிர்லா கணேசன்.

" நல்லான்குடி வேம்புடை ஐயனார் கோயிலும் தொள்மையானதே. ஐயனின் திருவுரு எட்டங்குலம் உயரம் மட்டுமே. குறள் வடிவம். மூர்த்தி சிறிது :கீர்த்தி பெரிது. ஆதியில் வேம்படியில் இருந்ததால் வேம்புடை ஐயனார் எனும் பெயர் விளங்குகிறது. மற்ற கோயில்களில் ஐயனார் இரண்டு மனைவியருடன் காட்சி அளிக்கிறார். இங்கே பூரணை எனும் ஒரு மனைவி மட்டுமே!! : இந்த வியரங்களை மட்டுமே, இக் கோயிலின் பூசாரியும் நாட்டுக் குருக்களுமான ரவி குருக்களிடமிருந்து பெற முடிந்தது.

நல்லான்குடி ஐயனாருக்கு வருடாவருடம் புரவியெடுப்பு நடக்கிறது. 250 வருடங்களாக இடைவிடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நல்லான்குடி மதியார் கரையினரும் இரவுசேரி வேம்பத்தார் கரையினரும். புரவியெடுப்பு திருவிழாவை ஒரு வருடம் மதியார் கரையினரும் மறுவருடம் வேம்பத்தார் கரையினருமாக மாறிமாறி தொய்வின்றி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வோராண்டும் முப்பது நாற்பது புரவிகள் ஐயனாருக்கு அர்ப்பணமாகின்றன. சிக்கலான சிரமமான வருடங்களில் கோயில் குதிரை வேம்பத்தார் குதிரை மதியார் குதிரையென மூன்று குதிரைகளையாவது கொண்டு செலுத்தி விடுகிறார்கள்.

ஆதியில் நல்லான் என்கிற பெயருடைய நாவிதரின் கிராமமாக நல்லான்குடி இருந்திருக்கிறது. இன்றளவும் இந்தக் கோயில் காளியை அம்பட்டையன் காளி என்றே அக்கம்பக்க ஊர்காரர்கள் அழைக்கிறார்கள். திருவிழா நானில் கருப்பருக்கு வெட்டப்படும் முதல் கிடாய் வீரக் கோனார் வகையறாவின் காரணர் கிடாய் தான்! பங்குனி மாதம் மூன்றாம் செவ்வாய் நல்லாங்குடி செவ்வாய் (திருவிழா) .

ஐயனார் சைவத் தெய்வம் உயிர்ப்பலி ஏற்காத் தெய்வம்.பலிகள் காளிக்கும் கருப்பருக்கும் தான். ஆகையால் கருப்பர் காளிக்கான பூசைப் பொருட்களை ஐயளாருக்கு பயன் படுத்துவதில்லை.

நல்லான்குடி வேம்புடை ஐயனார் கோயில் குடமுழுக்கு மாசி 28 ஆம் நாள் நடக்கிறது. அதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் மங்கல நிகழ்வு 14-02-22 அன்று நடந்தது!

தாழையூர் உசுலுடை ஐயனார் கோயில் சிவராத்திரி விழா சிறப்பு மிக்கது. புரவியெடுப்பு அன்றைக்கு தேவகோட்டை வேளார்கள் குடியிருப்பில் இருந்து புறப்பட்டு இரவுசேரி சென்று அங்கிருந்து தாழையூர் கொண்டுவரப் படுகின்றன புரவிகள். உசில் உசுல் என்பன ஒருவகை மரத்தின் பெயர்.

இரவுசேரி சன்னப்பர் கரையினர் தாழையூர் உசுலுடை ஐயனாருக்கு பெருந்தொண்டு ஆற்றுகின்றனர் கொண்டாடுகின்றனர்!

இந்த உசுலுடை ஐயனார் கோயிலில் தான் புகழ்மிகு கூத்தாடிப் பெரியநாயகி சந்நிதி இருக்கிறது. கூத்தாடிப் பெரியநாயகியின் திருவுரு காஞ்சிர மரத்தாலானது கூத்துக் கொட்டகைக்கு பின்புறத்தில் எந்தக் காஞ்சிர மரத்தில் கூத்தாடிப் பெரியநாயகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாளோ அந்த மரத்தை வெட்டிச் செதுக்கப்பட்ட விக்கிரகம். விக்கிரம் மரத்தாலானது ஆதலால் கூத்தாடிப் பெரியநாயகிக்கு நீராட்டல் (அபிடேகம்) செய்வதில்லை! கூத்தாடிப் பெரியவளின் தற்கொலைக்கு இக்காலத்தில் வேறோர் காரணத்தை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.இது போலிக்கதை. உண்மையான காரணத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கவிதையாக்கி விட்டேன் அக் கவிதை எனது " தாராவிச் சித்திரம்! தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. அக் கவிதை இதோ ...

.

கூத்தாடிப் பெரியவள்!

==============================

உப்போடும் பட்டோடும்
ஒளியொழுகும் குதிரையேறி கள்ளழகர் வந்திறங்கும்
கடல்காணா நதியோரம்
பரத்தையர் வீதியில் பெரியநாயகி!

மூடித் திறக்கும்
இமைகளின் துடிப்பிலும்
ஊடிக் கிறக்கும் சுந்தரகாண்டம்

நாப்பழக்கத் தமிழோடும்
நாட்டிய நாடக
பூப்பழக்கத் தெளிவோடும்
பாக்கும் வாங்குவாள்
வாங்கிய பாக்கோடு
வந்தாள் தாழையூர்
வந்தவள்தான் வந்தவள்தான்
வரம்கொடுக்கும் தெய்வமானாள்

ஆத்தா ஆத்தோவ்!
அவசரமாய் ஏன்முடித்தாய் ?
எப்பிடிச் செத்தாக?
அதையும் சொல்லுத்தா!

என்னத்தை சொல்ல
எட்டிநட மகனே!
வள்ளி வேடம் தரித்து
வனக்கிளியை விரட்டிவிட்டு
ஒண்ணுக்குப் போனாளாம் கொட்டகைக்கு பின்னாடி

குயிவின்னும் கேளாமல்
மயிவின்னும் பாராமல்
குடிகார வெறிநாய்கள்
குதறியது தாளாமல்
குண்டித் துணிமுறுக்கி
மரத்திலொரு கிளையாக
நாண்டுகொண்டு நின்னவதான்!

கும்பிட்டுக்க மகனே
படிப்பு
குறையாம வரணுமினு!

நாரத வாத்தியார்
படிச்சுச் சொன்ன
இன்னொரு
கல்விச் சாமியிடம்
வீணையும் இருக்கிறது!

செம்பொன்மாரி நாடு!
சேந்தணி வேளார்கள்!

செம்பொன்மாரி நாட்டின் பரம்பரை உரிமையும் கடமையும் நிரந்தரமும் பெற்ற பூசாரிகள் சேந்தணி வேளார்கள் மட்டுமே! செம்பொன்மாரி நாட்டுக் காவல் தெய்வமான ஆறாவயல் அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோயில் நீங்கலாக, செம்பொன்மாரி நாட்டின் மற்ற அனைத்து ஐயனார் கருப்பர் காளி கோயில்களுக்கும் சேந்தணி வேளார்கள் மட்டுமே உரிமையுடைய பூசாரிகள்!

பூர்வீக இடத்தில் இருந்து புலம்பெயர்த்துக் கொண்டுவரப்பட்ட வீரமாகாளிக்கு, நாட்டாரின் வேண்டுகோளை ஏற்று, சிவன்கோயில் நந்தவனத்திற்காக தான் வாங்கிய இடத்தில் கோயில் கட்டியவர் வள்ளல் தேனா பேனா ஆவார். தொடக்கத்தில் இருந்து தேனாபேனா நிர்வாகத்திலும் பிறகு அவர் மகன் தேனா பேனா நாவன்னா நிர்வாகத்திலும் இருந்த வீரமாகாளி கோயில், பிறகு ஆறாவயல் சண்முகநாதபுரம் நகரத்தார்களின் தர்ம பரிபாலன சபையாரால் சிறப்பாக நிர்வகிக்கப் படுகிறது!

நகரத்தார்கள் நிர்வாகத்தில் இருந்ததால் நகரச் சிவன்கோயில் குருக்கள்களையே (ஐயர்களையே) பூசாரிகள் ஆக்கினர். ஆனால் வீரமாகாளி அம்மனின் பூர்வீகமான காட்டுக்காளி கோயிலில் இன்றளவும் சேந்தணி வேளார்களே பரம்பரைப் பூசாரிகள்

சேந்தணி வேளார்கள் தங்களை நான்கு கரையினராக வகுத்துக் கொண்டுள்ளனர். அவை
1. மேலக்கரை (மேற்கு)
2. கீழக்கரை (கிழக்கு)
3. புலிகுத்திக் கரை
4. செம்மாரிக்கரை என்பனவாகும்.

வருடத்திற்கு ஒரு கரையினர் என்று முறைவைத்து நாட்டிலுள்ள 12 கோயில்களிலும் பூசாரிப் பணி செய்கிறார்கள். கோயில்கள் உள்ள எல்லா ஊர்களிலும் இவர்களுக்கு மானியக் காணியாட்சி இருக்கிறது!

ஐயா சேந்தணி சுப. செல்லையா வேளாரைச் சந்தித்தேன். " செம்பொன்மாரி நாட்டில் பனிரெண்டு ஐயனார் கோயில்கள் உள்ளன.
1. செம்பொன்மாரி செல்லையா ஐயனார் கோயில்
2. செம்பொன்மாரி (கிழக்கு) நிறைந்தமடை ஐயனார் கோயில்
3. பேராட்டுக்கோட்டை பொட்டுடை ஐயனார் கோயில்
4. பரியன்வயல் அலகுடை (ஆயுதமுடைய) ஐயனார் கோயில்
5. வெங்களூர் நடுக்குளம் காத்த ஐயனார் கோயில்
6. சோணார்கோட்டை இடக்கண் (ஒளிமிகு இடதுகண் )ஆண்டி ஐயனார் கோயில்
7. கடியாவயல் மகா சாத்தையா ஐயனார் கோயில் (இக் கோயில் உஞ்சனை நாட்டிற்கும் நடுவி நாடெனும் வெங்களூர் சேர்க்கைக்கும் செம்பொன்மாரி நாட்டிற்கும் உரியது)
8. கலிப்புலி மாயாண்டி (மாயன் +ஆண்டி) ஐயனார் கோயில்
9. செம்பொன்மாரி பனந்தன்மடை ஐயனார் கோயில்
10. புலிகுத்தி அடைக்குளம் (வாய்க்கால் இல்லாக் குளம்) காத்த ஐயனார் கோயில் 11. சிறுவெளி கொட்டுடை (மண்வெட்டியை ஆயூதமாகக் கொண்ட) ஐயனார் கோயில் 12. (பெயர் பிறகு) இப் பனிரெண்டு கோயில்களில் பனந்தன் மடை ஐயனார் கோயில், கலிப்புலி மாயாண்டி ஐயனார் கோயில்பூசாரிப் பணிகளை வேலைப்பளு காரணமாக, வெளியூர்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த வலையர் பெருமக்களிடம் எம் முன்னோர்கள் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனாலும் அக் கோயில்களிலும் சில முக்கிய கடமைகள் எங்கள் வசமே உள்ளன.கண்டதேவி தேர்த்திருவிழா காப்புக் கட்டுவதற்கு முன்னர், அதற்கான முதல் திருமுகம் (ஓலை)நாட்டார்களிடமிருந்து எங்களுக்கு தான் வரும் முனைப்பாரியும் கும்பக் கலசமும் செய்யும் கடமை எங்களுடையது

செம்பொன்மாரி செல்ல ஐயனாரும் கோயிலில் உள்ள ஐயனார் ஆஞ்சநேயர் சின்னக் கருப்பர் முத்துக் கருப்பர் தொட்டிச்சியம்மன் பேச்சியம்மன் ராக்காச்சியம்மன் உள்ளிட்ட அத்தனை தெய்வத் திருமேனிகளையும் குப்பான் செட்டியார் என்ற அருள்நெறியாளர் ஒருவர் திருநெல்வேலி சீமையில் இருந்து செதுக்கச்செய்து இங்கே கொண்டுவந்தாராம் இங்குள்ள காளிக்கு திருநெல்வேலி காளி எனப் பெயர் விளங்குவதற்கு இதுவே காரணம்

செல்லையா கோயிலுக்கு இரண்டு வருடம் முன்பு பெரும் பொருட் செலவில் கோமிலை எடுத்துக் கட்டி நாட்டார்கள் குடமுழுக்கு நடத்தினார்கள்! செல்லையா ஐயனாரை குலதெய்வமாகக் கும்பிடும் பல நூறு குடுப்பங்கள் வெளியூர்களில் வசிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உஞ்சனையைப் போல, எழுபொன்கோட்டையைப்போலமாநகரமாகத் திகழ்ந்தது செம்பொன்மாரி. அத்தனை சாதியாரும் இங்கே வாழ்ந்திருகிறார்கள். இப்போது ஐயனாரைக் கும்பிட மாத்தூர் இலுப்பக்குடி ஏம்பல் சித்திரப்போரூர் கானாப்பூர் கானாடுகாத்தான் நேமத்தான்பட்டி திருமயத்தில் இருந்தெல்லாம் வருகிறார்களே வலையர்கள்.. அவர்களுக்கெல்லாம் பூர்வீகம் இந்தச் செம்பொன்மாரி தான்

செம்பொன்மாரி ஆஞ்சநேயரை வணங்குவதற்காகவும் ஏராளமான பிரார்த்தனைகவோடும் வருகிறார்கள் பக்தர்கள். இராமச்சந்திர மூர்த்தியின் துயரையே போக்கிய அனுமன் ஏழையர் வேண்டுதல்களை தீர்க்காமலா போய்விடுவார்? ஆஞ்சநேயரின் அருள்மழை செம்பொன்மாரி நாட்டிற்கு கூடுதற் சிறப்பு! பரவசப் பட்டார் ஐயா செல்லையா வேளார்!

****-***

ஆறாவயல் பெரியய்யா

28-02 2022

உஞ்சனை செம்பொன்மாரி இரவுசேரி தென்னாலை ஆகிய இந்த நான்கு நாடுகளுக்கும் பத்து நாடுகள் வாரக்கால் நாடுகள்!

வாரக்கால் நாடுகள் எனில் ஒட்டிய, மிக நெருக்கமான, உறவுகள் அடர்ந்த, கொள்வினை கொடுப்பினை நிறைந்த தோழமை நாடுகள் எனக் கொள்க.

இந்தப் பதினான்கு நாடுகளிலும் ஏழுகிளைக் கள்ளர்கள் மிகுதியாக உள்ளனர். அதனால் தான் ஏழுகிளை பதினான்கு நாடுகள் என்று உரிமையோடு பிரகடனப் படுத்திக் கொள்கிறார்கள்.

நான்கு நாடுகளுக்கும் தலா இரண்டரை நாடுகள் வாரக்கால் நாடுகள்.

தென்னாலை நாட்டிற்கு குன்னங்கோட்டை நாடு, கப்பலூர் நாடு, சிலாமேக நாட்டில் பாதியென இரண்டரை நாடுகள் வாரக்கால் நாடுகள்.

தென்னாலை நாட்டின் வாரக்கால் நாடுகளில் ஒன்றான குன்னங்கோட்டை நாடு குறித்து இப்போது பார்ப்போம்.

தங்கள் நாட்டை, நாட்டின் தலைமையை, நாட்டின் தெய்வத்தை, நாட்டின் தேரை, நாட்டின் ஒற்றுமையை மதிப்பதில் நேசிப்பதில் போற்றுவதில் முன்னணியில் நிற்பவர்கள் குன்னங்கோட்டை நாட்டு மக்கள்!.

குன்னங்கோட்டை நாட்டுத் தேர் சிற்பக் கலையின் சீரிளமை மிக்க பெருந்தேர். அத் தேரின் இரும்புச் சக்கரங்களைப் போன்ற உறுதியான நாட்டுப் பற்று மிக்க பெரியோர் பல்லோரை இந் நாட்டில் நான் சந்தித்தேன்.

குன்னங்கோட்டை நாடு இருபத்தி இரண்டரைக் கிராமங்களைக் கொண்டது

1 மேலப்பூங்குடி (தலைக் கிராமம்) 2 கல்லல் ( தலைமைச் செயல் கிராமம்) 3 தேவபட்டு 4 குருந்தம்பட்டு 5 வேப்பங்குளம் 6 அரண்மனை சிறுவயல் 7மேட்டுப்பட்டி(காளையார்கோயிலில் ஒரு பகுதி) 8 திராணி 9 கோயிலாம்பட்டி 10 வீரை (தென்னாலை நாட்டின் லீரை சேர்க்கைக்கும் இந்த ஊர் தான் தலைக் கிராமம்) 11 வெற்றியாலங்குளம் 12 வெற்றியூர் 13 கீழப் பூங்குடி 14 ஆலம்பட்டு 15 விசயாலயன் கோட்டை 16 சேது ரகுநாத பட்டணம்( இவ்வூரின் மேற்குப்பகுதியான பாதிக் கிராமம் இந் நாட்டிற்குரியது) 17 கூத்தலூர் 18 ஆண்டிச்சி ஊருணி 19 பிளார் 20 ஆலங்குடி 21 மாலை கொண்டான் 22 ஆவரங்குடி 23 கருங்குளம்

ஆகிய இந்த இருபத்தி இரண்டரைக் கிராமங்களே குன்னங்கோட்டை நாட்டின் ஆணிவேர்க் கிராமங்கள்.

1 பொய்யலூர் 2 ஏழுமாப்பட்டி 3 சாத்தன்பத்தி 4 பேர்வலசை 5 புளியங்குடிப்பட்டி 6 கொடுங்குளம் 7 திருவிலங்கை 8 வில்வார்பட்டி 9 காளக்கண்மாய் 10 சாத்தரசன்பட்டி 11 சிலையான் ஊருணி 13 மாற்றுக் கண்மாய் 14 நெடுங்குளம் 15 காட்டுக்குளம் 16 செவல் புன்செய் 17 ஊற்றுப்பட்டி 18 முடுக்கூருணி 19 சன்னவனம் (செந்நெல்வனம்) 20 தண்ணீர்ப் பந்தல் 21 நூற்றான் கண்மாய் 22 மருதக் கண்மாய் 23 பட்டணம் கண்மாய் 24 கல்வேலி 25 கைக்குடி

இந்த இருபத்தைந்து கிராமங்களையும் குன்னங்கோட்டை நாட்டின் பக்கவேர்க் கிராமங்கள் எனலாம். (உட்கிடைகள் மற்றும் இடைக்காலத்தில் இணைக்கப்பட்டவை)

இவற்றுடன் சேர்த்து குன்னங்கோட்டை நாட்டின் மொத்த. கிராமங்களின் இன்றைய எண்ணிக்கை நாற்பத்தி ஏழரை ஆகும்.

இவைகளில், திராணி கோயிலாம்பட்டி நெடுங்குளம் கைக்குடி சண்முகநாத பட்டினம் முடுக்கூருணி(இது அரைக்கிராமம்) மற்றும் புக்குடி கடம்பக்குடி ஆகிய ஏழரைக் கிராமங்களை திராணி ஏழரையூர்ப் பற்று (திராணி ஏழரைக் கிராமங்களின் சேர்க்கை) என அழைக்கிறார்கள்.

திராணிச் சேர்க்கை ஏழரைக் கிராம. மக்கள் ஆதியில் பத்துநாள் மண்டகப் படிகளிலும் படித்தலப்பணி (சாமிதூக்குதல்) செய்திருக்கிறார்கள். ஆனால் இடைக்காலத்தில் கடமைகள் மாறியிருக்கிறது. இப்போது திராணி சேர்க்கையினர் பட்டத்தய்யாவின் மண்டகப்படியான தேரோட்டத்தன்று மட்டும் சாமி தூக்குகிறார்கள்.

மற்ற ஒன்பது நாள் மண்டகப் படிகளிலும் கல்லல் தேவபட்டு குருந்தம்பட்டு கிராமத்தார்களே சாமி தூக்குகிறார்கள். பத்துநாள் மண்டகப் படிகளுக்கும் பொறுப்பாளர்கள் ஆகவும் இந்த மூன்று கிராம மக்களே செயலாற்றுகிறார்கள். ஒன்பது நாள் மண்டகப் படிகளிலும் கோயில் மரியாதைகளையும் இம் மூன்று கிராம மக்களே பெறுகின்றனர்.

திராணி சேர்க்கை பத்துநாள் மண்டகப் படிகளுக்கும் வரிக் கொடுப்பதில்லை.

"ஆமாம்! நாங்கள் வரிக் கொடுப்பதில்லை. இது ராசாக்கள் காலத்தில் எங்களுக்கு கிடைத்த வரிவிலக்கு. சிவகங்கை அரசரின் படையில் திராணிச் சேர்க்கையை சேர்ந்த பல முத்தரையர்கள் பணிபுரிந்தார்கள். ஒரு யுத்தத்தில் எங்கள் கைக்குடியைச் சேர்ந்த முத்தரைய இளைஞர் ஒருவரின் வீரதீரம் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறது. எங்கள் இளைஞரின் வீரதீரத்தை பாராட்டியே அரசர் எங்கள் திராணி ஏழூர் பற்றுக்கு காலகாலத்திற்கும் வரிவிலக்கு அளித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இப்போதும் நாங்கள் எங்கள் நாட்டுத் திருவிழாவிற்கு வரிக் கொடுப்பதில்லை. ஆனால்தேரோட்டத்தன்று மட்டும் நாங்கள் படித்தலப் பணியை (சாமி தூக்குதல்) விருப்பமுடன் செய்கிறோம் சாமிக்கு உரிய நகைகளை பாதுகாக்கப்படும் இடத்திலிருந்து எடுத்து வருவதும் திரும்பக் கொண்டு செல்வதும் எங்கள் கடமை தான்! " என்கிறார் திராணிப் பெரியவர் ஆண்டியப்பன் அம்பலம்.

குன்னங்கோட்டை கோட்டை நாடு என்றும் குன்னம் மாகாளி என்றும் இப்போது நிரந்தரமாகி விட்டது. ஆயினும் இரண்டுமூன்று தலைமுறைக்கு முன்னர் குண்டையன் கோட்டை நாடு என்றும் குண்டையன் மாகாளி என்றும் முன்னோர் கொண்டாடி உள்ளனர்.

கொண்டையன் கோட்டை நாடு, கொண்டையன் கோட்டை கிளை என்பன மறவர் நாடுகளில் மறவர் கிளைகளில் உள்ளது என்பதையும் நினைவில் கொள்வோம். குண்டையன் கோட்டை அல்லது குன்னங்கோட்டை என்ற பெயரில் கோட்டையோ ஊரோ இந் நாட்டின் எல்லைக்குள் இல்லை.

திருமயம் தாலுகா காரையூர் சுந்தரராசப் பெருமாள் கோயில் தென்புறச் சுவரில் 1383 ஆம் ஆண்டுக்குரிய கல்வெட்டு ஒன்றில்....

சோழ வளநாட்டு தென்கோனாட்டு காரையூர் கிரராமத்தை பாதுகாக்கும் பொறுப்பை, காரையூர் பெரியோர், குன்றன்கோட்டை நாட்டு கோட்டைகுடி சேமா உள்ளிட்டோர்க்கும் கொடிக்கு மீண்டான் உள்ளிட்டோர்க்கும் வழங்கி, அதற்கான ஊதிய ஊதிய உறுதிமொழியும் செய்து கொடுத்திருக்கிறார்கள்!

அந்த உறுதிமொழிப்படி முன்தொகையாக முன்னூறு பணம் கொடுத்திருக்கிறார்கள். அத்துடன் விளைச்சலில் ஒவ்வொரு செய்க்கும் ஒரு நெல்கட்டும் ஆடி மாதத்தில் தலா ஒரு பணமும் கார்த்திகை மாதத்தில் தலா ஒரு பணமும் கொடுப்போமென்றும் உறுதி அளித்திருக்கிறார்கள்.

இக் கல்வெட்டில் உள்ள குன்றன்கோட்டை நாட்டுப் பெயரும் கொடிக்கு மீண்டான் என்ற தலைவன் பெயரும் எனக்கு குன்னங்கோட்டையையும் பட்டத்தையாக்கன் பெற்றிருக்கும் சிங்கக்கொடி அனுமக்கொடி கருடக்கொடி புலிக்கொடி இடபக்கொடி மீன்கொடி அன்னக்கொடி மற்றும் காண்டீப விருதுகளை நினைவூட்டுகின்றன.

கொடிகள் மட்டுமின்றி இரட்டைத் தீவட்டி, இரட்டைச் சாமரை, தண்டிகை சுருட்டி, மயில்பீலிக் குஞ்சம் காவிக்குடை , காவிக்கொடி காண்டீபம் ஆகிய விருதாவளிகளையும் தங்களுக்கு இணையாக வெண்கொற்றக் குடையையும் ஆதி பட்டத்தய்யாக்களுக்கு சோழர் பாண்டியர் தொண்டையர் நாயக்கர் சேதுபதி சிவகங்கை அரசர்கள் வழங்கியுள்ளனர்.

இந்த விருதாவளிகள் எல்லாம் குறுநிலத் தலைவர்கள் அல்லது மாவீரர்களுக்கு அவர்களது வீரதீரத்தை கண்டு கேட்டு பாராட்டி மன்னர்கள் அளிப்பவை. இத்தகையோரே அரசரின் பிரதிநிதி ஆகிறார்கள் :நாட்டம்பலம் ஆகிறார்கள்.

குன்னங்கோட்டை நாட்டம்பலமான பட்டத்தய்யாவுக்கு நாட்டின் இருபத்தி இரண்டரைக் கிராமங்களிலும் வேளாண் நிலங்கள் இருந்துள்ளன அவை அந்தந்தக் கிராம மக்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாடிகாவல் மானியமாக இருக்கலாம். இவையன்றி தனிக் கண்மாயும் அதன் பாய்ச்சல் முழுமையும் கொண்ட வயல்வெளியும் இருந்திருக்கிறது. இது நாடு இணைந்து கொடுத்த காவல் மானியமாக இருக்கலாம். அந்தக் கண்மாயில் தான்பட்டத்தய்யா வாரிசுகள் நீர்மாவை எடுக்கிறார்கள் . பட்டத்தய்யா வாரிசுகளுக்காக தனிச் சுடுகாடு. இவர்களுக்காக தனி ஐயனார் கோயில். களத்து ஐயனார் கோயில்! ஒப்படிக் களம் காப்பவராக அல்லது போர்க்களம் கப்பவராக இருக்கலாம் இந்த களத்து ஐயனார் கோயிலில் தான் பட்டத்தய்யா சந்ததிகள் முதல்முடி இறக்கி காது குத்தி பெயர் சூட்டுடுகிறார்கள். இக் கோயில் அரண்மனை சிறுவயல் எல்லையில் உள்ளது.

குன்னங்கோட்டை நாட்டுக்கு காளையார்கோயில் தேரில், அரண்மனைசிறுவயல் தேரில், குன்றக்குடி தேரில் ஒரு வடமுண்டு. தன் முன்னோர் பெற்ற வெண்கொற்றக் குடை மற்றும் விருதாவளிகளோடு சென்றுதான் பட்டத்தய்யாவும் நாட்டாரும் அக் கோயில்களில் மரியாதை பெற்று வடம் பிடிக்கிறார்கள்.

மற்ற நாடுகளில் நாட்டம்பலத்தின் மறைவுக்கு அல்லது ஓய்வுக்கு பிறகு மூத்தமகன் இயல்பாக நாட்டம்பலம் ஆகிவிடுகிறார். அதற்காக பதவியேற்பு விழாவோ முடிசூட்டு விழா விழாவோ நடப்பதில்லை. ஆனால் குன்னங்கோட்டை நாட்டில் உரிமையுடைய மூத்த மகனேயானாலும் நாட்டம்பலகாரருக்கான பதவி ஏற்பு விழா ழுடிசூட்டு விழாவாக நடத்தப்படுகிறது.

ஒரு முகூர்த்தநாளில், நாட்டின் காவல் தெய்வமான மாகாளி அம்மன் சந்நிதியில், நாட்டு மக்கள் முன்னிலையில். சகல சடங்குகளோடு, மாகாளியின் பூசாரி, பட்டத்தய்யாவுக்கு தலைப்பாகை எனும் பட்டம் (திருமுடி) சூட்டுகிறார். இப்படி பட்டம் சூட்டுவதால் தான் நாட்டம்பலம் எனக் கூறாமல் பட்டத்தய்யா எனச் சிறப்புடன் அழைக்கிறார்கள் நாட்டுமக்கள்.

கல்லல் சோமசுந்தர ஈஸ்வரர் கோயில், நகரத்தார் நாட்டாரின் திருப்பணிகளாலும் நிர்வாகத்தாலும் பக்திப் பெருக்காலும் இயங்கும் கோயில். இக் கோயிலின் கலையழகும் கம்பீரமும் கெழுமிய திருப்பெரும் தேர் குன்னங்கோட்டை நாட்டார் பெருமக்களுக்கு மட்டுமே உரிய தேர்.

வருடம்தோறும் மாசி மாதத்தில் குன்னங்கோட்டை தேர்த்திருவிழா நடக்கிறது

தேரோட்டத்தன்று பட்டத்தய்யாவை அவரது ஊரான மேலப்பூங்குடியில் இருந்து வெண்கொற்றக்குடை விருதாவளிகள் இசைமுழக்கத்தோடு கல்லல் சிவாலயத்திற்கு நாட்டுமக்கள் அழைத்து வருகிறார்கள். சாமி தரிசனம் செய்கிறார்.தேர்ச் சக்கரத்தில் சிதறு தேங்காய் போடுகிறார். தேர்வடங்களில் ஏறி நின்று வெள்ளைத் துண்டு வீசி, வடமிழுக்குமாறு ஆணையிடுகிறார்.

சாதி வேறுபாடின்றி நாட்டின் நாற்பத்தி ஏழரைக் கிராம மக்களும் வடம் பற்றுகிறார்கள் பொங்கும் அருள்நெறி ஆரவாரத்தோடு குன்னங்கோட்டை நாட்டுத் தேர் சிவனென ஆடிக் குலுங்கி புறப்படுகிறது.

பட்டத்தய்யா பங்காளிகளை அய்யாவரம் (அய்யா கரை) என அழைக்கிறார்கள். கல்லல் சிவாலயம் குன்னம் மாகாளியம்மன் கோயில் உட்பட நாட்டில் உள்ள அத்தனை கோயில்களிலும் சிறப்புப் பூசைகளில் பூசாரிகள் "பெரியம்பலம் (பட்டத்தய்யா) முனுசம்பலம் கருத்தக் கள்ளன் சின்னம்பலம்! " என்று விளித்து காளாஞ்சியை தட்டில் வைத்துக் கொடுத்து நான்கு கரையாளர்களையும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். நாட்டில் இப்போதும் பல ஊர்களில் சவுக்கைகள் (ஊரார் கூடும் ஒட்டு மண்டபங்கள்) உள்ளன. முன்பு அத்தனை ஊர்களிலும் சவுக்கை இருந்திருக்கிறது. அதுவே ஊர்மன்றம்.அதுவே ஊர் நீதிமன்றம். அங்கே தீர்க்க இயலா வழக்குகள் மேலப் பூங்குடியில் பட்டத்தய்யா சவுக்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. 1920 க்கு பிறகு நாட்டுக் கூட்டங்களும் பஞ்சாயத்துகளும் கல்லலில் உள்ள நாட்டார் மடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இந் நாட்டின் முக்கிய ஊர்கள் அனைத்திலும் கோயில்கள் உள்ளன.

அரண்மனை சிறுவயலில் பட்டத்தய்யா குடும்பத்திற்கு உரிய களத்து ஈஸ்வர ஐயனார் கோயில். இதை சுருக்கமாக களத்தய்யனார் என்கிறார்கள்.

அதே அரண்மனை சிறுவயலில் கருங்கமுடை ஐயனார் கோயிலும் வடக்குவாய்ச் செல்லியான புலிகுத்தி அம்மன் கோயிலும் மிகவும் தொன்மையான நிறைய கல்வெட்டுகள் உள்ள மும்முடிநாதர் (சிவன்) கோயிலும் உள்ளன.

கல்லலில் சோயசுந்தரர் கோயிலும் காவல் தெய்வம் குன்னம் மாகாளி கோயிலும் நற்கனி அம்மன் கோயிலும் உள்ளன. தேரோட்டத்திற்கு மறுநாள் இந்த நற்கனி அம்மனுக்கு தான் மஞ்சு விரட்டு நடத்துகிறது குன்னங்கோட்டை நாடு.

தேவபட்டுவில் ஆற்றில் ஊற்றுத் தோண்டி நீரெடுத்து ஆண்கள் பொங்கல் வைக்கும் அந்தர நாச்சியார் கோயிலும் ரத்தினமுடை ஐயனார் கோயிலும் சங்கிலிக் கருப்பர் கோயிலும் உள்ளன.

குருந்தம்பட்டுவில் சேந்தணி ஐயனார் கோயில் சேவுகப் பெருமாள் ஐயனார் கோயில் மாகாளி அம்மன் கோயில் உள்ளன.

வேப்பங்குளத்தில் வீரமுடை ஐயனார் கோயில் வாணியன்தம்மம் காளியம்மன் கோயில் உள.

வெற்றியூரில் மருதுடை ஐயனார் கோயில் அன்னபூரணி அம்மன் கோயில் அழகிய சிவாலயம்

சிவனிருந்த காளைபுரமென்று பழம்பெயர் பூண்டிருந்த கீழப்பூங்குடியில் சிவபுராணச் சிறப்புப் பெற்ற மார்க்கண்ட ஈசனார் திருக்கோயில் என குன்னங்கோட்டை நாடெங்கும் அருள்நெறி ஊட்டும் ஆலயங்கள் ஏராளம் ஏராளம்!

7 கிளைகள்! 14 நாடுகள்!
குன்னங்கோட்டை நாடு (3 )

குன்னங்கோட்டை நாட்டின் ஆணிவேர் கிராமங்கள் பக்கவேர்க் கிராமங்கள் என இணைந்த நாற்பத்தி ஏழரைக் கிராமங்களையும் கரம் கோர்த்து வடம்பிடிக்க வைத்த ஒரேவிழா கல்லலில் நடக்கும் கொன்னங்கோட்டை தேர்த் திருவிழா ஆகும்.

சிவகங்கை சீமையின் பெருந்தேர் குன்னங்கோட்டை நாட்டின் சீர்மிகு கலைமிளிரும் இத் தேர்!

மாசி மகத்திற்கு மகத்துவம் நல்கும் இத் தேரோட்டத்தை கல்லல் தேரோட்டம் என்றே சொல்கிறார்கள். அதனாலென்ன? சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது குன்னங்கோட்டை நாட்டின் தேர்தான் :தேரோட்டம் தான்! புலவர் பெருமகனார் வேப்பங்குளம் மெய்யாண்டவர் " நூற்றாண்டு காணும் குன்னங்கோட்டை நாட்டாரின் பெருந் தேர் " எனும் தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார்.

1920 ஆம் ஆண்டில் தான் இப் பெருந்தேரின் வெள்ளோட்டமும் முதல் தேரோட்டமும் நடந்திருக்கிறது.ஆயிற்று 2020 இல் குன்னங்கோட்டை நாட்டின் நாட்டாரின் பெருந்தேர் நூறு வயதைக் கடந்தது. 1920 க்கு முன்னர் கல்லலில் தேரோட்டம் எதுவும் நடந்திருக்கவில்லை. ஆனால் குன்னங்கோட்டை நாட்டார் தேர் இழுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். அரண்மனை சிறுவயல் மும்முடிநாதர் கோயிலுக்கு!

அப்போது அரண்மனை சிறுவயல் பகுதியில் ஜமீன்தாராக இருந்தவர் சிவகங்கை அரச பரம்பரையை சேர்ந்தவராம். அந்த ஜமீன்தார் தன்னிலும் அதிக மரியாதையும் முக்கியத்துவமும் பெறுகின்ற பட்டத்தய்யா மீது அழுக்காறு கொண்டுவிட்டார் பட்டத்தய்யாவை சிறுமைப் படுத்தும் சிறிய செயல்களைச் செய்திருக்கிறார். அதோடு நாட்டார் வடம் பிடிக்கும் தேர் என் வீடிருக்கும் வீதியில் வரக்கூடாது என்றும் கட்டளையிட்டாராம். மனம் புண்பட்ட அன்றைய பட்டத்தய்யா சுப. சுப்பையா சேர்வை நாட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

ஜமீன்தாரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அரண்மனை சிறுவயல் தேரை இனிமேல் இழுப்பதில்லை. நம் நாட்டிற்கான புதிய தேரை இனி நம் நாடே உருவாக்கும். நமது தேரில் கல்லல் சோமசுந்தரர் பவனி வருவார். எனத் தீர்மானித்தது குன்னங்கோட்டை நாடு. புதிய தேர் செய்ய லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் கணக்கிட்ட நாட்டார்கள் குடிக்கு ஐந்து ரூபாய் என வரிப் போட்டிருக்கிறார்கள். அதோடு நாட்டில் வசதி படைத்தோரிடமும் பர்மா மலேயா போன்ற வெளிநாடுகளில் கொண்டுவிக்கும் செல்வந்தர்களிடமும் நன்கொடை திரட்டவும் முடிவு செய்தார்கள். கடிதங்களை எழுதிக் கேட்டார்கள். பர்மியத் தலைநகரான ரங்கூனில் பெரும் செல்வந்தராக விளங்கிய வேப்பங்குளம் சோணை. ஆண்டவன் அம்பலம் என்ற வள்ளல் புதிய தேருக்காக 33 ஆயிரம் ரூபாயை வழங்கி நன்கொடை நிதியளிப்பை தொடங்கி வைத்திருக்கிறார். நிதி சேர்ந்தது.தேர்ப்பணியை நாட்டார் பெருமக்களின் ஆதரவோடு அவரே கண்காணித்திருக்கிறார்.

ஆண்டவன் அம்பலம் அடுத்த சில ஆண்டுகளில் இல்லறம் நீங்கி துறவறம் பூண்டு குக மணிவாசக சரணாலய சுவாமிகளானார். இவர் 26 ஆன்மிக பதிக நூல்களை யாத்திருக்கிறார்.

தேர் செய்யும் பொறுப்பை குன்னங்கோட்டை நாடு மாலைகொண்டான் கிராமத்தை சேர்ந்த பெருந்தச்சர் சோமசுந்தத்திடம் ஒப்படைத்தார்கள். இவர் காளையார்கோயில் பெருந்தேரை செய்த குப்பமுத்து ஆசாரியின் வழிவந்தவர்.

ஆயிற்று குன்னங்கோட்டை நாட்டுத் தேர் நூறாண்டுகள் கடந்து புகழோடு உலா நடத்திக் கொண்டிருக்கிறது.

கடந்ந சில ஆண்டுகட்கு முன்னர் குன்னங்கோட்டை நாட்டின் இளைஞர் பட்டாளம் நிதிதிரட்டி தேரைச் சீர்படுத்தி வலிமையூட்டியதோடு, பழைய மரச் சக்கரங்களை மாற்றிவிட்டு வலுளான இரும்பொன் சங்கரங்களை பொருத்தி இன்னும் நூறாண்டு நற்கவிதையென நடக்க வழிசமைத்திருக்கிறது.

பட்டத்தய்யாவை போன்றே குன்னங்கோட்டை தேரும் விருதாவளிகளுக்கும் வெண்கொற்றக் குடைக்கும் உரிமை உடையதே!

(குன்னங்கோட்டை நாடு குறித்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்ட கல்லல் உ.முத்தழகு அம்பலம், தேவபட்டு கரு. இராசேந்திரன் அம்பலம், தேவபட்டு மு.மெய்யப்பன் அம்பலம் ஆலங்குடி சி.ராசசேகரன் அம்பலம் ஆகியோர் நன்றி பாராட்டுக்கு உரியோர்)

****

###ஆறாவயல் பெரியய்யா

17-03-2022

கப்பலூர் நாடு தென்னாலை நாட்டின் வாரக்கால் நாடுகளில் ஒன்று.இதன் தலைக்கிராமம் கப்பலூர்.

1 செம்பியன் கப்பல்
2 வடகோட்டை
3 பருத்திக்குடி
4 குயவர் கோட்டை
5 வயல்கோட்டை
6 தத்தமங்கலம்
இந்த ஆறு உட்கடைகளின் இணைப்பே கப்பலூர் கிராமம்.

கப்பலூர் நாடு பதினைந்து கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. அவை
1 கப்பலூர்
2 கண்ணங்குடி
3 சடையமங்கலம்
4 நாடான்குடி
5 விளங்குடி
6 வலையன்வயல்
7 புதுவயல்
8 காட்டுக்குடிப் புதூர்
9 கண்டியூர்
10 தேவரேந்தல்
11 இலுப்பக்குடி
12 உருத்திரன்பட்டி
13 கட்டவளாகம்
14 கள்ளர் வழியேந்தல்
15 கீழ்க்குடி ஆகியன.

கப்பலூர் நாட்டு தெய்வமான பொன்னா வளர்ந்த அம்மன் கோயில் திருவிழாவிற்கும் எருது கட்டுவிற்கும் இப் பதினைந்து கிராமங்களிடம் மட்டுமே வரி வாங்கப்படுகிறது

கரூர் மாகாணக் கிராமங்கள் மற்றும் கடம்பூர் நீர்க்குன்றம் ஆண்டாவூருணி மங்களக்குடி வரையிலான கிராமங்களையும் கணக்கிட்டால் நாற்பத்தி இரண்டரைக் கிராமங்கள் வருமே என்பாருமுளர். பொன்னாக வளர்ந்த அம்மன் கோயிலுக்கு எருதுகட்டு நடந்தால் " வாருங்கள்! வந்து கலந்துகொண்டு சிறப்புச் செய்யுங்கள் " என்று அக் கிராமங்களுக்கு அழைப்பு மட்டுமே அனுப்புகிறது கப்பலூர் நாடு. கடந்த பல வருடங்களாக எருது கட்டு நடக்கவில்லை அழைப்பும் அனுப்பவில்லை. ஆக அவைகளை கப்பலூர் நாட்டின் விருந்தினர் கிராமங்கள் என்றே கொள்க!

முதலாம் குலசேகர பாண்டியன் காலத்தில் (பொது ஆண்டு 1300) முத்தூற்று கூற்றத்து கப்பலூரான உலகளந்த சோழநல்லூர் முனைவதரையனான சீராமன் உய்யவந்தான் என்பவன் அழகர்கோயில் குலசேகர மடத்தில் ஆடி ஐப்பசி மார்கழி மாத திருநாட்களில் பிராமணர்களுக்கு உணவளிப்பதற்காக 'சுந்தரத்தோன் விளாகம் 'எனும் சிற்றூரை மாளவராயர் வேண்டுகோளின்படி கொடையளித்திருக்கிறான். இச் செய்தி அழகர் கோயில் கல்வெட்டு ஓன்றில் இருப்பதாக முனைவர் தொ.பரமசிவன் எழுதியுள்ளார்.

இதன்படி பார்த்தால் 700 ஆண்டுகட்கு முன்னர் கப்பலூர் ஒரு நாடல்ல ஊர் மட்டுமே. சோழமன்னர்கள் கப்பலூருக்கு உலகளந்த சோழநல்லூர் என்று புதுப்பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஒரு ஊரை விலைக்கு வாங்கி கொடையளிக்கும் போது இப்படி அரசர் பெயரைச் சூட்டுவதுண்டு உலகளந்தான் என்பது ராஜராஜன் சிறப்புப் பெயர். ஆனாலும் கப்பலூர் எனும் பெயரே நிலைத்திருக்கிறது.

முனைவதரையன் என்பது கள்ளர்களின் குடிப்பெயராக நிலைத்த உயர்பதவிக்கான பெயர். சீராமன் கருமாணிக்கம் கரிய மாணிக்கம் என்பன திருமாலின் பெயர்களே. அந்த கப்பலூரான் சீராமன் உய்யவந்தான் தனக்குரிய ஒரு கிராமத்தை அழகர்கோயிலுக்கு கொடையளித்திருக்கிறார்.கூற்றத்தின் ஆளுநரான மாளவராயரின் வேண்டுகோளின்படி கொடை கொடுத்திருக்கிறார். முனைவதரையன் என்பது கையொப்பமிடும் அதிகாரம் பெற்ற பதவியாக இருக்கலாம்.

கப்பலூரை ஒரு நாட்டின் தலையூராக்கவும், தன்னை நாடாள்வான் (நாட்டம்பலம்) ஆக்கிக் கொள்ளவும் சீராமனுக்கு உயர் பதவி காரணமாக இருந்திருக்கலாம் இவை ஆய்வாளர்கள் கவனத்திற்கு உரியவை. கப்பலூர் என்ற ஊர் தொன்மையானது என்பதில் ஐயமில்லை. கப்பலூர் நாடு என்பது தொன்மையானது இல்லை.

ஏழுகிளை பதினான்கு நாட்டு அம்பலகாரர்களில் உலகத் தமிழர்கள் நன்கறிந்த அம்பலகாரர் வானுறையும் தெய்வமான கப்பலூர் இராம. கரிய மாணிக்கம் அம்பலம். (29-10-1919. ---02-02-1997)

இவர் தனது முப்பத்தி இரண்டாம் வயதிலேயே, ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகக் கட்சிப்பணி யாற்றியவர். விடுதலைப் போராட்ட வேங்கை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பேரன்பைப் பெற்றவர் ஏழுகிளை பதினான்கு நாடுகளில் உள்ள பல கோயில்களுக்குள் தாழ்த்தப் பட்டிருந்தோர் சென்று வழிபடுவதற்கு முன்நின்றவர். ராஜாஜி சத்தியமூர்த்தி மபொசி காமராஜர் அண்ணா கலைஞர் போன்றோரின் மரியாதையை அன்பைப் பெற்றவர் .

நீறகலா நெற்றியும் நிறையகலாக் குங்குமமும் ஆறகலாச் சால்பும் அறமகலாப் பண்பும் கனியகலாப் பேச்சும் பதினான்கு நாடகலாப் பேரன்பும் பெற்ற பெருந்தகையாளர் கப்பலூர் நாட்டம்பலகாரராகத் திகழ்ந்த இராம. கரியமாணிக்கம் அம்பலம்.

இவர் தனது 32 ஆவது வயதில் சாதித்துக் காட்டிய நமக்கு நாமே திட்டம் இவரைப் பெரும் சாதனையாளர் ஆக்கியது. அச்செயலை விளக்கினார் கப்பலூர் நாட்டுக் கணக்கரான கண. துரைராஜ்.

அந்தக் காலத்தில் கண்ணங்குடியில் இருந்தோ கப்பலூரில் இருந்தோ தேவகோட்டைக்கு சரியான மாட்டு வண்டிப்பாதை கூட இல்லை. வயல்வரப்புகளில் ஏறியிறங்கி ஒற்றையடிப் பாதைகளில் நடந்தால் போய்த்திரும்ப ஒருநாள் ஒடிவிடும். தேவகோட்டையிலிருந்து அனுமந்தக்குடிக்கு சரளைச் சாலை இருந்தது 1952 இல் பெரிய ஐயா அவர்கள், காங்கிரஸ் தலைவராக இருந்தார். கலக்டரைச் சந்தித்து அனுமந்தக் குடியில் இருந்து கண்ணங்குடி வரை சாலை அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு கலெக்டர், அதற்கு முதலில் நிலம் கையகப் படுத்த வேண்டும் பிறகு மணல் மண் சரளை என நிறைய நிதி வேண்டும் ஏழெட்டு ஐந்தாறு மைல் தொலைவுக்கு சுமார் முப்பதடி அகலத்திற்கு நிலம் கையகப் படுத்தி மண் சாலை அமையுங்கள் அரசு செலவில் அதை தார்ச்சாலை ஆக்கித் தருகிறேன் என்றாராம் கலெக்டர்.

இதைச் சவாலாக ஏற்றுக் கொண்டார்கள் ஐயா. அனுமந்தக் குடியிலிருந்து கண்ணங்குடி வரையிலான விவசாயிகளைத் திரட்டினார். சாலை அவசியத்தையும் தனக்கான சவாலையும் விளக்கினார்

அவருடைய கம்பீரமும் நேர்மையும் ஆளுமையும் அவரை மக்கள் தலைவனாக்கியது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் வேளாண் நிலங்களை கொடுத்தார்கள் மக்கள் அதோடு வீட்டுக்கு ஒருவர் இருவரென உழைப்பையும் ஈந்தனர். அத்தனை பேருக்கும் சாப்பாடு ஐயா வீட்டிலிருந்து வந்தது. நான்கே மாதத்தில் கண்ணங்குடியிலிருந்து அனுமந்தக்குடிக்கு மூன்றடி உயர மண்சாலை தயாராகி விட்டது. அடுந்த ஆண்டில் கண்ணங்குடிக்கு தேவகோட்டையிலிருந்து கொடைக்கானல் டிரான்ஸ்போர்ட் பஸ் வந்துவிட்டது. இந்த நமக்கு நாமே திட்டத்தின் உழைப்பின் மகத்துவம் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. அன்றைய அச் செயல் ஐயாவுக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது! "பெருமையோடு விவரித்தார் நாட்டுக் கணக்கப்பிள்ளை.

கப்பலூர் நாட்டம்பலம் இராம. கரியமாணிக்கம் அம்பலம் 1957, 1962, 1967, 1984 ஆகிய நான்கு தேர்தல்களில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார்

அவருடைய மகன் இராம. கரி. இராமசாமி அம்பலம் 1989, 1991, 1996., 2001, 2006, 2016 என ஆறு தேர்தல்களில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.

இவருடைய மகன் கரி. இராம. கருமாணிக்கம் 2021 தேர்தலில் வென்று இப்போது சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார்.

7கிளைகள் 14 நாடுகள்!
கப்பலூர் நாடு! (பத்தி 2)

நினைவு மண்டபங்கள் நினைவுநாளில் ஏழெட்டுப்பேர் கூடிக் களையும் காட்சி மண்டபங்களாக, மக்களுக்கு பயன்படா கட்டடங்களாகத் தான் பெரும்பாலும் இருக்கின்றன.

ஆனால், கப்பலூரில், தந்தை இராம. கரியமாணிக்கம் அம்பலத்திற்கு மகன் இராம. கரி. இராமசாமி அம்பலம் எழுப்பியிருக்கும் நினைவு மண்டபம், கப்பலூர் நாட்டுக்குரிய 15 ஊர் மக்களுக்கும், மங்கள நிகழ்ச்சிகளை நிறைவேற்றும் பயன் மண்டபங்களாக, திருமண மண்டபங்களாக திகழ்கிறது.

நன்கொடை போல ஐயாயிரம் கொடுக்கிறோம். கரண்டுக்கும் கழுவித் துடைக்கிற செலவுக்கும் ஆகுமல்லவா! " கப்பலூர் நாட்டு மக்கள் நன்றிப் பெருக்கோடு பாராட்டுகிறார்கள்.

கிறித்தவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு அழகிய தேவாலயத்தையும், இஸ்லாமியர்களின் வேண்டுகோளை ஏற்று ஒரு அழகிய பள்ளிவாசவையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் இராம.கரி. இராமசாமி அம்பலம். கண்ணங்குடியிலும் கரூரிலும் தெய்வத்திரு இராம. கரிய மாணிக்கம் அம்பலத்திற்கு திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை தந்தைக்கு தனயன் நிறுவியது இல்லை. நாட்டம்பலத்திற்கு நாட்டார்கள் நிறுவியவை.

கப்பலூர் நாட்டில் மூன்று கோயில்கள் முக்கியமானவை. பொன்னா வளர்ந்த அம்மன் கோயில், படிக்காசு பசுபதி ஈசனார் கோயில், திரௌபதி அம்மன் கோயில்.

கப்பலூர் நாட்டின் காவல்தெய்வம் பொன்னா வளர்ந்த அம்மன். இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் பொன்னம்மன் என்றும் பொன்னாத்தாள் என்றும் போற்றப்பட்ட தெய்வம், எப்போது எதனால் என்று தெரியவில்லை, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான கோயிலாக்கப்பட்டிருக்கிறது. பொன்னம்மனை தேவஸ்தானம் சொர்ணாம்பிகை ஆக்கியுள்ளது.

பொன்னா வளர்ந்த அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆனியில் முளைப்பாரி விழா எடுக்கிறது கப்பலூர் நாடு. நாடு கூடி நாளைத் தேர்வு செய்து காப்புக் கட்டுகிறார்கள். காப்புக் கட்டிய ஒன்பதாம் நாள் அமாவாசை .அன்று கிடாய் வெட்டுத் திருவிழா. மறுநாள் முளைப்பாரி சொரிதல். நாட்டின் 15 ஊர்களும் நோன்பிருந்து தினமும் ஐந்து வேளை நீரூட்டி, ஈறுபேன் பார்த்து முளைத்துச் செழித்த அம்மனை --மாரியை தலையிலேற்றி வந்து ஊருணியில் சொரிவார்கள்.

அடுத்த நாள் எருதுகட்டு. அரசு தடை செய்திருந்ததால் பல வருடங்களாக எருதுகட்டு நடைபெறவில்லை! இனி நடக்கும். நம்புவோம்.

அடுத்துவரும் முழுநிலா ராவில் நாடு ஒருங்கிணைந்து கூத்து நடத்துகிறது. வருடாவருடம் வற்றாது நடத்துகிறது பொன்னா வளர்ந்த அம்மனுக்கு முளைப்பாரித் திருவிழா.

பொன்னா வளர்ந்த அம்மன், தென்னாலை நாட்டிலிருந்து கப்பலூர் நாட்டிற்கு சிறையெடுத்து கொண்டுவரப்பட்ட சீதனக் காவல் தெய்வம்.

கப்பலூர் நாட்டையும் நாட்டு அம்பலகாரர் குடும்பத்தையும் குருதி உறவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது பதினோரு சேர்க்கைகளையும் தொன்னூற்றாறரைக் கிராமங்களையும் கொண்ட தென்னாலை நாடு. இந்தக் குருதி உறவுக்கு கப்பலூர் நாட்டைக் கண்ணெனக் காத்துநிற்கும் பொன்னா வளர்ந்த அம்மனே காரணம்.

பத்துத் தலைமுறைக்கு முந்தைய ஒரு தொன்மக் கதை. இல்லையில்லை ரத்தமும் சதையுமான உண்மை வரலாறு.

அந்தத் தலைமுறையில் கப்பலூர் நாட்டு அம்பலகாரருக்கு ஆண் வாரிசில்லை. அம்பலத்தின் இல்லாள் தென்னாலை நாடு ஈகரைச் சேர்க்கையின் அம்பகாரர் வீட்டில் பிறந்தவர். மாமனார் வீட்டில் இருந்து ஒரு இளைஞனை தனக்கு வாரிசாகத் தத்தெடுத்துக் கொண்டார் கப்பலூர் அம்பலம்.

அதற்கு முன்னாள்வரை கப்பலூர் நாட்டிற்கு காவல் தெய்வமில்லை. முளைப்பாரியுமில்லை. எருதுகட்டுமில்லை.

தத்தாக வந்த மகன் நாட்டு அம்பலமானார். ஆனாதும் காவல் தெய்வத்திற்கு கோயில் கட்ட விரும்பினார். முளைப்பாரித் திருவிழாவும் எருதுகட்டும் கூத்தும் நடத்த விரும்பினார்.

கோயிலைக் கட்டி விடலாம்! காவல் தெய்வத்திற்கு?

தான் பிறந்த ஈகரைச் சேர்க்கையின் தெய்வமான, விரிசிலை ஆற்றங்கரை நாச்சியை சிறையெடுத்து வருவதெனச் சிந்தை கொண்டார்.

பல்லக்கோடும் வண்ணார் மாற்றோடும் பூசாரிகளோடும் தீவட்டிகளோடும் ஆயிரம் வெள்ளாட்டுக் கிடாய்களோடும் வாட்டசாட்டமான வாலிபர்கள் அடங்கிய படையோடும் நள்ளிரவில் ஈகரையை அடைந்தார்.

விரிசிலை ஆற்றின் வடகரையில் ஓட்டு வீட்டில் அருளாட்சி நடத்திக் கொண்டிருந்த நாச்சியாரை பல்லக்கில் ஏற்றினார்கள்.

ஈகரை மக்களின் எதிர்ப்பை எளிதாக வென்றுவிட்டார் அம்பலகாரர்.ஆனால், ஆற்றங்கரை நாச்சியாரின் ஆவேசத்தை?

ஈகரை தொடங்கி கண்ணங்குடி வரை, பல்லக்குத் தூக்கிகளின் பாதம் தரையில் படாது மாத்து விரித்தார்கள். தோளில் இருக்கும் அம்மன் பல்லக்கை மாற்றில் இறக்கி ஏற்றும் ஒவ்வொரு இடத்திலும் ஐந்தாறு வெள்ளாட்டங் கிடாய்களை பில்லி கொடுக்க வேண்டியிருந்தது.அம்மன் பல்லக்கு கண்ணங்குடியை அடைவதற்குள் ஆயிரம் கிடாய்கள் அறு பட்டனவாம்.

ஈகரையில் ஆற்றங்கரை நாச்சியாரென பெயர் விளங்கிய அம்மன், கப்பலூர் நாட்டின் காவல் தெய்வமாகி பொன்னாத்தாள் எனப் புதுப் பெயர் பூண்டார். இன்று பொன்னா வளர்ந்த அம்மனாகி அருளாட்சி பொழிகிறார்.

ஏழெட்டுத் தலைமுறைகள் இறந்துபோயின. ஆயினும் தென்னாலை கப்பலூர் இரண்டு நாட்டு மக்களும் இன்றளவும் இந்த வரலாற்றை உச்சரித்துக் கொண்டுதான் உள்ளனர்!

7 கிளைகள்! 14 நாடுகள்!
கப்பலூர் நாடு!(பத்தி 3 )

கப்பலூர் நாடு கண்ணங்குடியில் உள்ள படிக்காசு பசுபதி ஈசுவரர் கோயில் சேதுபதிகள் சமஸ்தான தேவஸ்தான 84 கோயில்களில் ஒன்று. இருந்தாலும் மராமத்து செய்து புதியன புகுத்தி குடமுழுக்கு நடத்துவதும் திருவிழாக்கள் நடத்துவதும் கப்பலூர் நாட்டு அம்பலகாரரும் நாட்டார் பெருமக்களும் தான்.

சமஸ்தான தேவஸ்தானம் வெளியிட்டுள்ள இக் கோயில் குறித்த தலபுராணத்தில் பசுபதி நாதர் கோயில் இப்போது இருக்குமிடம் ஏழாம் நூற்றாண்டில் பெருங்காடாக இருந்ததாகவும் காட்டில் இருந்த ஒரு பாறைக்கு தினமும் ஒரு பசுமாடு வந்ததாகவும், கன்றுக்கும் ஊட்டாது கலத்தினும் கறக்காது பாறைநடு பிளவில் பாலைச் சொரிந்துவிட்டு போனதாகவும் அவ்வழியே ராமேஸ்வரத்திற்கு யாத்திரை சென்ற சோழமன்னன் இந்த அரிய தகவலை கேள்வியுற்று பாறையை உடைத்துப் பார்த்ததாகவும் அங்கே சுயம்புவாக சிவமூர்த்தி காட்சி தந்ததாகவும், கோயிலைக் கட்டிய சோழன் ஒரு அந்தணரை ஓதுவாராக நியமித்துச் சென்றதாகவும் சொல்கிறது தலபுராணம்.

படிக்காசு என்றபெயர் முன்னொட்டாக வருவதற்குக் காரணம் சொன்னார் இளம் ஓதுவாரான முத்துக்குமார். "சிறிய கோயிலைக் கட்டிவிட்டு போன சோழன் வழிபாட்டிற்கும் பராமரிப்பிற்கும் வழிசெய்தான் இல்லை. சோழன் நியமித்த ஓதுவார் நமசிவாய நல்வழி காட்டாயோ எனக் கதறினார். சொப்பனத்தில் வந்த பசுபதிநாதர் "கவலைப்படாதே சேவகா! இனி தினமும் கோயிலைத் திறக்கும் போது என் தாளடிப் படியில் ஒரு பொற்காசு இருக்கும் அதை வைத்து ஆவன செய்துகொள்! " எனக் கூறி மறைந்தார். அவ்வாறே நடந்தது. அன்று தொடங்கி படிக்காசு பசுபதி நாதர் என அழைக்கப்படுகிறார்! "என்றார் முத்துகுமார் .

கோயிலில் பல இடங்களில் கல்வெட்டு எழுத்துகள் மீது வண்ணமும் சிமெண்டும் பூசப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

இக் கோயில் கல்வெட்டுகள் ஏற்கனவே படிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. புலவர் ஈரோடு செ.இராசு தன் கட்டுரை ஒன்றில் " சோழ மன்னன் இரண்டாம் இராசேந்திரன் (1051 -1061) காலத்து கல்வெட்டு ஒன்றில் திருமந்திர ஓலை தொண்டையானார் எழுத்து " என்ற வரிகள் பசுபதிநாதர் கோயில் கல்வெட்டில் உளதாக எழுதியுள்ளார். ஆக இக் கோயில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்பது உறுதியாகிறது.

மொழி ஆளுமைமிகு புலவர் ஒருவரால் படைக்கப்பட்ட கப்பல் கோவை எனும் நூல் பதிப்பிக்கப் பட்டுள்ளது. கப்பலூர் எனும் ஊருக்கு நகருக்கு உரிய கருமாணிக்கத் தொண்டைமான் துவரங்குறிச்சி குன்றிலிருந்து நாடு காத்ததாகவும் இவன் பாண்டிய மன்னனின் அமைச்சனாக தனபதியாக பணியாற்றியதாகவும் குறிப்பிடுகிறது

கருமாணிக்கன் கப்பல் எனும் ஊர். தொண்டைமான் கப்பல். காங்கேயன் புகழும் கப்பல். தொண்டைமான் வழிவந்தோன். கருமாணிக்கன் காங்கேயர் கோன் என்பன அந் நூலின் பரவி வருவன.

அம்மன் பெயர் பார்வதி அம்பாள் என்று அம்மன் கருவறை முகப்பில் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது அதற்கு சற்றே உயரத்தில் கல்வெட்டெழுத்து 'பாகம் பிரியாள் 'என்று பறைசாற்றுகிறது.

கோயிலின் தென்புற வாயிலில் இக் கோயிலுக்கு மருது சகோதரர்கள் திருப்பணி செய்ததற்கான குறிப்புக்கள் உளவாம். கோயிலைப் போலவே பெரிய குருக்களின் முகத்திலும் ஏழமை தாண்டவமாடுகிறது.

பசுபதி நாதருக்கான தேரோட்டம் நின்று மூன்று தலைமுறைகள் கடந்தனவாம். தேரோட்டம் இல்லை எனினூம் வருடம் தவறாது பத்து நாள் மண்டகப்படிகள் நடக்கின்றன. கப்பலூர் நாட்டுக் கிராமங்கள் பதினைந்தில் ஒன்பது மண்டகப்படிகளை நடத்துகின்றன. பெரும்பாலும் சாதியரீதியாக மண்டகப் படிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஒன்பது கிராமத்தாரே படித்தலப் பணிகளையும் செய்கின்றனர்.

பசுபதி நாதர் கோயிலில் முதல் மரியாதை அரண்மனைக்கு. இரண்டாம் மரியாதை நாட்டுக் கணக்கப்பிள்ளைக்கு. மூன்றாம் மரியாதை கோயில் கணக்கப் பிள்ளைக்கு. அடுத்து நாட்டு அம்பலகாரருக்கு. தொடர்ந்து கிராம வாரியாக மரியாதையும் காளாஞ்சியும் அளிக்கப் படுகின்றன. இதே மரியாதை அடுக்குத் தான் பொன்னா வளர்ந்த அம்மன் கோயிலிலும்!

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 18 நாள் திருவிழா! மகாபாரதத்தில் நூற்றுவர்க்கும் பஞ்சவர்க்கும் நடந்த 18 நாள் யுத்தத்தை நினைவூட்டும் வண்ணமாக 18 நாள் திருவிழா! வடமாவட்டங்களில் திரௌபதி கோயில்களும் திரௌபதி விழாக்களும் திரௌபதி கூத்துகளும் அதிகம். ஆனால் ஏழுகிளை பதினான்கு நாடுகளில்? கப்பலூர் நாடு தவிர வேறெங்கும் இவை உளதா?

விழா தொடங்கிய ஐந்தாம்நாள் தொடங்கி திரௌபதியும் பீமனும் கௌரவர்களில் பலரும் (வேடமணிந்து தான்) கப்பலூர் நாட்டிலுள்ள அத்தனை ஊர்களுக்கும் வீடுவீடாகச் செல்கிறார்கள். பக்திப் பெருக்கோடு வரவேற்று மரியாதை செய்கிறார்கள் நாட்டு மக்கள்.

மண்டகப் படிகள் 12 ஆம் நாள் தொடங்கி நடக்கின்றன.

12 ஆம் நாள் அரக்குமாளிகை நிகழ்வு. இது கோயில் கணக்கப் பிள்ளை மண்டகப்படி.

13 ஆம் நச்சுப் பொய்கை நிகழ்வு. இது நாட்டுக் கணக்கப் பிள்ளை மண்டகப்படி.

14 ஆம் நாள். பூக் கொய்தல் நிகழ்வு. இது இது புதூர் செட்டியார் மண்டகப்படி.

15 ஆம் நாள். திருக்கல்யாண நிகழ்வு. இது வயல்கோட்டை கிராம மண்டகப்படி.

16 ஆம் நாள். படுகளம் நிகழ்வு. இது தத்த மங்கலம் கிராம மண்டகப்படி.

17 ஆம் நாள். தவநிலை நிகழ்வு. இது நாட்டு அம்பலகாரர் மண்டகப்படி.

18 ஆம் நாள். பூமிதித் திருவிழா! இது கப்பலூர் நாட்டார்கள் மண்டகப்படி.

திரௌபதி கோயில் திருவிழா நிறைவுநாள் பூமிதி நாள். பூ என்பது இங்கே வளர்ந்து சாம்பல்பூ பூத்து நிற்கும் நெருப்பைக் குறிக்கிறது. மற்ற பகுதிகளில் பூவில் பூக்குழியில் இறங்குவதாகச் சொல்கிறார்கள். பூ மிதிப்பதாகக் கூறுகிறார்கள். நாட்டு கருவேல மரங்களை வெட்டி வந்து கணுக்களை நீக்கி துண்டுதுண்டாக்கி கோயிலுக்கு இடதுபுறமுள்ள மைதானத்தில் அகலமாக முதல்நாளே வளர்க்கிறார்கள்.

நிறைவுநாளில் இரண்டாயிரத்து ஐநூறு பக்தர்கள் வரை பூ மிதிக்கிறார்கள். பூமிதியை காண இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் கண்ணங்குடியில் திரள்கின்றனர்.

திரௌபதி அம்மனின் மூல விக்கிரகம் கல்லாலானதே! ஆனால் உற்சவ மூர்த்திகள் மரத்தாலானவை.

கப்பலூர் நாடு, மகாபாரதக் கதை மாந்தர்களை தெய்வங்களாக்கிக் கொண்டாடும் இவ் விழாவிற்கான மூல விதை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்!

நாற்பத்தி இரண்டரைக் கிராமங்களை கொண்டது முத்துநாடு. இது செம்பொன்மாரி நாட்டின் வாரக்கால் நாடுகளில் ஒன்று!

முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த முத்துநாடு பல நாடுகனை உறுப்புகளாகக் கொண்ட முத்தூற்றுக் கூற்றமாகத் திகழ்ந்தது. இதற்கு ஏராளமான செப்புப் பட்டயங்கள் கல்வெட்டுகள் வரலாற்று இலக்கியங்கள் ஆதாரங்களாக உள்ளன.

நாட்டுக்கும் கூற்றத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் முன்பே அறிவோம். ஆயினும் மீண்டும் நினைவூட்டுகிறேன்.

சிலபல உறுப்பினர்களைக் கொண்டது ஒரு வீடு. பல வீடுகளைக் கொண்டது ஒரு கிராமம் (ஊர்) .பல கிராமங்கள் சேர்ந்தது ஒரு சேர்க்கை(பற்று) .பல சேர்க்கைகள் இணைந்தது ஒரு நாடு. பல நாடுகளைக் கொண்டது ஒரு கூற்றம். பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு அல்லது மண்டலம். பல வளநாடுகள் சேர்ந்தது ஒரு பேரரசு.

இது 1947 வரை இயங்கிய மன்னர்கால உள்ளாட்சி அடுக்கு. இதில் நாடு என்பதை வட்டம்(தாலுகா)என்றும் கூற்றம் என்பதை மாவட்டம் என்றும் வளநாடு என்பதை மாநிலம் என்றும் பொருள் கொள்க.

முத்துநாடு முன்பு முத்தூற்று கூற்றமாக பரந்து வினங்கியது அதற்கென்று அரசர் இருந்தார். இப்போது நாற்பத்தி இரண்டரைக் கிராமங்களைக் கொண்ட குறுகிய நாடாக மாற்றப் பட்டிருக்கிறது.

இற்றைக் கால முத்துநாட்டின் நாற்பத்தி இரண்டரைக் கிராமங்களின் பெயர்கள் வருமாறு -

1.நாகமங்கலம்
2. காச்சாகுடி
3. மணிகரம்பை
4 சாத்தினம்குடி
5. மாடக்கோட்டை
6.வைரவன்வயல்
7. சிறுவாச்சி
8.அட்டப்பள்ளம்
9. மாங்குடி (பேச்சற்றது)
10. கண்டியன் வயல்
11. கோடகுடி
12. ஆனையடி
13. நெப்பிவயல்
14 கூந்தணி
15. கங்கணி
16. நாஞ்சிவயல்
17. உலக்குடி
18. செட்டியார் கோட்டை
19 கிழவன்குடி (கார்லாங்கோட்டை)
20.தங்கம்குடி
21 கணக்கன்வயல்
22.களபம்குடி
23. புத்தூருணி
24 இரும்பாலை
25 கன்னிகுடி
26. பனங்காட்டான்வயல்
27. கல்லூருணி
28. போர்குடி
29. மீனாப்பூர்
30. சாத்தனக்கோட்டை
31. குணகரை
33.குமாரமங்கலம் (இது அரைக் கிராமம். இப்போது பேச்சற்றது) .
34.கீழப் புதுக்குடி
35. மேலப் புதுக்குடி
36 காடன்போர்குடி
37 பூதங்குடி
38. மொன்னணி
39. மித்திராவயல்
40 மேட்டுவயல்
41. தத்தணி
42. பழம்பதி வயல் (பேச்சற்றது)
43. பள்ளாகுளம். இவையே முத்துநாட்டின் கிராமங்கள்.

முத்துநாட்டின் கிராமப் பெயர்களை மட்டுமின்றி கரைகள் மரியாதைகள் உள்ளிட்ட தகவல்கள் பலவற்றை தந்த, முத்துநாட்டின் காவல் தெய்வம் முத்துநாயகி கோயிலில் முதல் மரியாதைக்குரியவர், கீழவட்டத்தின் அம்பலம், தமிழ்நாடு கிராமநல அலுவலர்கள் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் (ஓய்வு) ஆனையடி முத்துராமன் அம்பலத்திற்கும், களப்பணிகளில் துணைநின்ற இளைஞர் சிறுவாச்சி இடு. சரவணனுக்கும் நன்றி பாராட்டுகிறேன்.

ஒரு முழுமையான நாடு என்பது தொண்ணூற்று ஆறரைக் கொண்டிருக்க வேண்டும்.

தென்னாலை நாடு, ராசராச நாடு.,உருவாட்டி நாடு, சிலாமேக நாடு, ஏழுகோட்டை நாடு மற்றும் மறவர்கள் நாடுகள் பலவும் தொண்ணூற்று ஆறரைக் கிராம நாடுகளே.

ஆனால் உஞ்சனை செம்பொன்மாரி இரவுசேரி முத்துநாடு வடம்போகி தேர்போகி ஏம்பல் ஆற்றங்கரை இரும்பாழி கப்பலூர் குன்னம்கோட்டை ஆகிய நாடுகள் குறைவான ஊர்களைக் கொண்டவைகளாக உள்ளன. காரணம் இவையெல்லாம் தாழையூர் பெரம்பூர் போன்ற தொண்ணூற்று ஆறரைக் கிராம நாடுகளை உடைத்து உருவாக்கப் பட்டிருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. யார் எதற்காக எப்போது என்பதை அறிய ஆதாரச் சான்றுகள் கிட்டவில்லை.

இன்று இரவுசேரி நாட்டின் ஒரு ஊராக உள்ள தாழையூர் எழுநூறு ஆண்டுக்கு முன்னர், முத்தூற்றுக் கூற்றத்தில் அடங்கிய தொண்ணூற்று ஆறரைக் கிராம நாடாக திகழ்ந்திருக்கிறது.இதற்கான ஆதாரம் தாழையூருக்கு அருகிலுள்ள வெங்களூர் சிவாலயக் கல்வெட்டில் உள்ளது.

திருவேகம்பத்து வில் உள்ள தொன்மையான சிவாலயத்திற்கு, முத்தூற்றுக் கூற்றம் தாழையூர் நாட்டின் ஈகரைக் கீழணை என்னும் ஊரைத் தானமளித்திருக்கிறார்கள், ஆதாரம் அக் கோயில் கல்வெட்டில் உள்ளது. தென்னாலை (தென்னிலை, தென்னாலி, தென்னார்கொளி) நாடும் 700. வருடத்திற்கு முன்பு முத்தூற்றுக் கூற்றத்திற்குள் அடங்கிய ஒரு நாடு தான். இதற்கான ஆதாரம் தென்னாலை நாடு கள்ளன்குடி கண்மாய்க்குள் சிதைந்து கொண்டிருக்கும் சிவாலயக் கல்வெட்டுகளில் உள.

திருமயம் தாலுகா நெருஞ்சிக்குடி கண்மாய்க்கரையில் ஊன்றப்பட்டிருக்கும் குத்துக்கல் கல்வெட்டில் "நெருஞ்சிக்குடி குளத்திற்கு பாண்டிய நாட்டு முத்தூற்றுக் கூற்றத்து மாவலூர் கல்லம்பலவன் கொடுத்தது பதின் பொற்காசுகள் ...!"இது மடைக்கான கொடையாக இருக்கலாம்.

தேர்போகி நாட்டின் கள்ளிக்குடி கிராமத்தில், பாழடைந்து கொண்டிருக்கும் திருவேலிடம் கொண்ட நாயனார் கோயிலில், சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில் "முத்தூற்றுக் கூற்றம் தாழையூர் நாட்டு மாளவச் சக்கரவர்த்தியும் கள்ளிக்குடி கிராமத்தாரும் "அழிவு அஞ்சாத நல்லூர் "எனும் ஊரை அக் கோயிலுக்கு கொடையாக அளித்திருக்கிறார்கள். இக் கல்வெட்டின் வாயிலாக தேர்போகி கள்ளிக்குடி ஆகிய ஊர்கள் தாழையூர் நாட்டுக் கிராமங்கள் என்பதை அறிய முடிகிறது.

"முத்தூற்றுக் கூற்றத்து கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர் முனையதரையனான சீராமன் உய்யவந்தான் என்பவர் மாளவச் சக்கரவர்த்தி ஆணைப்படி சுந்தரத் தோள்வளாகம் எனும் ஊரை அழகர்கோயில் பார்ப்பனர்கள் உணவுக்காக கொடுத்திருக்கிறார். " இது அழகர் கோயில் கல்வெட்டு. இது கப்பலூர் நாடு முத்தூற்றுக் கூற்றத்தின் ஓரங்கம் என்பதை உறுதி செய்கிறது.

முத்தூற்றுக் கூற்றத்துக்கு உட்பட்ட ஒரு ஊராக திருப்புனவாசலை ஆவுடையார் கோயிலில் உள்ள 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு காட்டுகிறது.

மேலே காட்டப்பட்டவை எல்லாம் 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுக்கு உரியவை.

ஐந்தாம் நூற்றாண்டுக்கான கல்வெட்டு ஒன்று பூலாங்குறிச்சியில் உள்ளது. அதில் "முத்தூற்றுக் கூற்றம் விளமா எனும் ஊர் குறிப்பிட படுகிறது.

முத்துநாட்டின் காவல் தெய்வமான காளி முத்து நாச்சியார் கோயிலின் கருவறை வெளிப்புற கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டில் "மாளவச் சக்கரவர்த்தியால் முத்தூற்றுக் கூற்றத்து காளிமுத்து நாச்சிக்கு ...."என்ற வரிகள் உள்ளதாகவும் படியெடுத்தவர் தன்னிடம் கூறியதாகவும் முத்துநாட்டு முத்துசாமி குருக்கள் கூறினார்.

இக் கல்வெட்டின் முழு வியரம் தெரிந்தால், முத்துநாயகிக்கு மாளவமாணிக்கர் கற்கோயில் கட்டினாரா அல்லது நிலக்கொடை அளித்தாரா என்பதை அறியலாம்.

முத்தூற்றுக் கூற்றத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இலக்கியச் சான்றும் உள்ளது.

7 கிளைகள்! 14 நாடுகள்! முத்துநாடு! ( 2 )

சங்க இலக்கியமான புறநானூறு கவிதைத் தொகுப்பில் 24 ஆவது கவிதை, தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனாரால் செய்யப்பட்டது.

முத்தூற்றுக் கூற்றம் மிழலைக் கூற்றம் பற்றிப் பேசும் 36 அடிகளைக் கொண்ட சிறந்த கவிதை இது.

இன்றைக்கு 2250 ஆண்டுகட்கு முன்னர் தமிழ்ச் சங்கம் எனும் மகத்தான நிறுவனத்தை பாண்டிய வேந்தர்கள் மதுரையில் உருவாக்கினார்கள். அக் காலத்தில் புத்த மதமும் சமண மதமும் தமிழகத்தில் வேர்பிடித்து வளரத் தொடங்கி இருந்தன. புத்த சமண மதப் பிரச்சார இலக்கியங்கள் பெருகின. மதமாற்றங்கள் தீவிரமாயின.

அவர்களிடம் இருந்து தமிழர் மதங்களான சிவமதத்தையும் திருமால் மதத்தையும் தமிழர் பண்பாட்டையும் தமிழரசியல் கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்காகவே தமிழ்ச்சங்கத்தை உருவாக்கினர் பாண்டியர். தொடர்ந்தும் இடைவெளி விட்டும் சுமார் 500 ஆண்டுகள் (கிமு 250 -கிபி 250) முதல் இடை கடையென மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கியுள்ளன.

அந்த 500 ஆண்டுகளில் இறையனார் நக்கீரனார் மாங்குடி மருதனார் (மாங்குடி கிழார்) உள்ளிட்ட நூற்றுக் கணக்கான சான்றோர்கள் தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் புலவர்களாகச் செயல்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கான செம்மொழிப் புலவர்கள் படைத்துள்ளனர் :தொகுத்துள்ளனர்.

தமிழ்ச் சங்கத்தாரால் படைக்கப்பட்ட தொகுக்கப்பட்டவைகளில் கால வெள்ளத்தால் அழிந்தவை போக தமிழ்த் தொண்டர்களால் மீட்கப்பட்டவை பதினெட்டு நூல்களே!

அவை :-1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறு நூறு 4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6 கலித்தொகை 7 அகநானூறு 8 புறநானூறு . இவை எட்டுத்தொகை என பெயரிடப் பட்டுள்ளன.

1 திருமுருகாற்றுப்படை
2 பொருநராற்றுப்படை
3 பெரும்பாணாற்றுப்படை
4 சிறுபாணாற்றுப்படை
5 முல்லைப்பாட்டு
6 மதுரைக்காஞ்சி
7 நெடுநல்வாடை
8 குறிஞ்சிப்பாட்டு
9 பட்டினப்பாலை
10 மலைபடுகடாம். இவை பத்துப் பாட்டென பெயரிடப் பட்டுள்ளன.

இப் பதினெட்டுப் படையல்களும் தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் அரசியலை, தமிழர் ஆன்மீகத்தை பாதுகாப்பவை. வளர்ப்பவை. வளப்படுத்துபவை.

திருக்குறள் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி ஆகிய நூல்கள் புத்தமத சமணமதப் புலவர்களால் படைக்கப்பட்ட பிரச்சார நூல்கள். இவை தமிழ்ச்சங்க நூல்கள் இல்லை. ஆனால் தமிழ்ச் சங்கங்கள் இயங்கிய காலத்தில் வெளியே படைக்கப் பட்டவை.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னம் மாங்குடி மருதனாரால் படைக்கப்பட்ட புறநானூற்றின் 24 ஆவது கவிதை, மிழலைக் கூற்றம் மற்றும் முத்தூற்றுக் கூற்றத்தின் வளமை பற்றியும், இவற்றை ஆண்ட மாவேள் எவ்வி என்ற வேளிர் அரசனின் ஆளுமை பற்றியும், இந்த இரண்டு கூற்றங்களையும் இவனுக்குத் தந்த ஆலங்கானத்துச் செறு வென்ற பாண்டிய வேந்தன் நெடுஞ்செழியனின் போர்த்திறன் மற்றும் புகழொளி பற்றியும் அழகோடும் யாப்போடும் விவரிக்கிறது.

கவிதையை முழுமையாக எழுதாமல், விரிவஞ்சி முத்தூற்றுக் கூற்றம் குறித்த முக்கிய அடிகளை மட்டும் எடுத்தாளுகிறேன்.

"கழனிக்
கயலார் நாரை போர்வில் சேர்க்கும்
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு ..."

கருநடுகை வயலில் நீந்தும் அயிரை மீன்களை கொத்தியுண்ட நாரைகள்(கொக்குகள்) வைக்கோல் படப்புகளின் நிழலில் ஓயய்வெடுக்கின்றன.

யானைகளுக்கு தங்க அணிகலன்களை சூட்டி வளர்க்கும் தொல்குடியினரான வேளிர்கள், உழுது நட்டு ஒப்படி செய்து தலையடி நெல்லை கோட்டைகோட்டையாக குவித்து வைத்திருக்கும் முத்தூற்றுக் கூற்றம் ..."என்பதே இந்த அடிகளின் பொருள்.

அதாவது முப்போகம் நெல்விளைவித்து, அத்துடன் போர்படை யானைகளையும் பராமரித்துக் கொண்டிருக்கும் வேளிர்கள் நிறைந்த முத்தூற்றுக் கூற்றம் என்பதே இதன் திரண்ட கருத்து.

அன்றைய முத்தூற்றுக் கூற்றம் என்பது இன்றைய திருமயம் அறந்தாங்கி திருவாடானை தேவகோட்டை கண்ணங்குடி வட்டங்களுக்குள் அமைந்திருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

முத்தூறு முத்தூற்று என்ற பெயர்களில் இங்கே ஊரேதும் இல்லை. பிறகெப்படி முத்தூற்றுக் கூற்றம் என்ற பெயர் ஏற்பட்டது?

முத்து நாட்டில் பல தலைமுறைக் காதுகளைக் கடந்துவந்த கதையொன்றை காரணமாகச் சொன்னார் கோட்டை அம்பலகாரர் சுப. முத்துராமன் அம்பலம்.

" பாண்டிய வேந்தர்கள் காலத்தில் முத்துநாட்டை ஒரு காராள வெள்ளாளன் ஆண்டு கொண்டிருந்தான். கிழவன் கோட்டையென இப்போது மாறியிருக்கிறதே கார்ளான்கோட்டை அது இவனுக்கு உரியதே.

அதே காலக் கட்டத்தில் வடக்கில் உள்ள தேர்போகி நாட்டை மற்றுமொரு காராள வெள்ளாளன் ஆண்டு கொண்டிருந்தான்.

இரண்டு நாடுகளுக்கிடையில் எல்லைப் பிரச்சனை. இரண்டு சிற்றரசர்களும் நியாயம் வேண்டி பாண்டிய வேந்தனின் அவைநாடி மதுரைக்கு புறப்பட்டனர்.

அன்றைய பாண்டியனின் நீதிமன்றத்தில் திருவுடையார் பக்கமே தீர்ப்புத் திரும்புமாம்.

முத்துநாட்டுக் காராளன் மக்களுக்காக மக்களோடு நின்றவன். அன்பறம் கொண்டவன். தெள்ளியன். ஆனால் திருவற்றவன்.

தேர்போகிக் காராளன் திருவுடையான் பொன்னும் மணியும் குப்பையெனக் கொண்டவன். குப்பைகளில் கொஞ்சத்தை சிறுசிறு மூட்டைகளில் கட்டிக் கொண்டு கிளம்பினான்.

முத்துநாட்டுக் காராளன் என் செய்வான்? தன் நாட்டுக் காளியிடம் மண்டியிட்டு கையேந்தினன். அன்றிரவு கனவில் வந்த காளி கவலை நீக்கு காவல! எருதுகட்டுத் திடலோரம் கரும்பு வயலின் ஈசானி மூலையில் விளைந்துநிற்கும் கோணல் கரும்பை வெட்டிச் சென்று வேந்தன் மன்றில் ஓங்கித் தரையில் அடி. தீர்ப்பு உனைத் தேடிவரும்! வரமளித்து வாழ்த்தினாள் காளி.

பாண்டியனின் நீதிமன்றத்தில் செல்வ மூட்டைகளை அவிழ்த்துக் குவித்தான் தேர்போகிக் காராளன் அவற்றை பார்த்த வேந்தனது விழிகள் எம் மன்னன் பக்கம் திரும்பின.

இவன் கோணல் கரும்பை தரையில் ஓங்கி அடித்தான் கரும்பு பிளந்தது. கொட்டின கொட்டின கொற்கை முத்தினும் தரம்மிகு முத்துகன். குவிந்த முத்துகள் கண்டு மகிழ்ந்தனன் மயங்கினன் வேந்தன். தீர்ப்பு எம்மவனை தேடிவந்தது!

அன்று தொடங்கி எம் நாடு முத்துநாடு ஆனது. அன்று தொடங்கி எங்கள் கண்மாய் முத்துக் கண்மாய் ஆனது. அன்று தொடங்கி எம் காவல் தெய்வம் முத்துநாச்சி ஆனது. அன்று தொடங்கி எங்கள் எருதுகட்டு திடல் முத்துத்திடல் ஆனது! " காரணத்திற்கான கதையை நிறைத்தார் அம்பலம்.

அம்பலம் சொன்ன கதையை நம்புவோர் நம்புக!

ஆய்வாளர்களோ முத்தூற்றுக் கூற்றம் முத்துநாடு முத்துநாயகி முத்துத்திடல் என்ற பெயர்கள் எல்லாமே முத்துமுத்தாய் நீர் ஊற்றுகளை ஜீவ ஊற்றுகளாக பிறப்பித்த முத்தூற்றுக் கண்மாய் தான் காரணமாக இருக்கமுடியும் என்கிறார்கள்.

முத்துக் கண்மாய் நீர்ப்பிடிப்பின் பரப்பளவு 847 ஏக்கர். முத்துக் கண்மாயின் நீர் எந்த வயலுக்கும் நேரடியாகப் பாய்வதில்லை. கண்மாய்களுக்கே பாய்கிறது. ஒரு கண்மாயிலிருந்து இன்னொரு கண்மாயென நான்கு மடைகளில் இருந்தும் நாற்பத்தி ஐந்து கண்மாய்களுக்கும் பாய்கிறது. அவற்றிலிருந்தே 1100 ஏக்கர் நன்செய் வயல்கள் முப்போகம் கண்டன.

முத்துக் கண்மாயின் தெற்கெல்லை தேர்போகி. வடக்கெல்லை தேரளைப்பூர். மேற்கெல்லை காடத்தி. கிழக்கெல்லையான முத்துக் கண்மாய் கரையில் நின்று கண்மாயைப் பார்த்தேன் (03-05-2022) .வறண்ட கண்மாய்க்குள் வெப்பக்குடை விரித்து சீமை விஷக்கருவை பேயாட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

முத்முத்தான ஊற்றுக் கண்கள் அடைபட்டு போயின.ஒரு போக வேளாண்மைக்கே காட்டாறான தேனாற்று வெள்ளத்தையும் கால மழையையும் வேண்டித் தவமிருக்கிறார்கள்.

கூற்றத்திற்கே பெயர் சூட்டக் காரணமாக விளங்கிய. முத்துக் கண்மாயின் மடைகள் பழுதடைந்துள்ளன.

முத்துக் கண்மாய்க் கரைமேல் பெரிய ஐயனார் பெருந்துயரில் வீற்றிருக்கிறார்!

7 கிளைகள்! 14 நாடுகள்! முத்து நாடு (பத்தி 3 )

முத்துநாட்டுக்கு உரிய கோயில்கள் மூன்று. முத்துநாட்டின் காவல் தெய்வம் முத்துநாயகி என்கிற காளி முத்துநாச்சியார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் காவல்தெய்வம் உண்டு. நாட்டின் காவல்தெய்வம் பெண்தெய்வமாக இருக்கும். காவல் தெய்வத்தின் பார்வையும் கோயிலின் பார்வையும் வடக்கு நோக்கியே இருக்கும்.

முத்துநாயகி அம்மன் ஆதியில் மருதாந்தைக் கோட்டைப் பிடாரியாக விளங்கி பிறகு காளிமுத்து நாச்சியாக அருள்பாலித்து பின்னாளில் முத்துநாயகியென அழைக்கப் படுவதாகக் கூறுகிறார்கள்.

நாட்டின் இரண்டாவது தெய்வம் முத்துக் கண்மாயின் காவல்தெய்வம் ஆன கரைமேல் பெரிய ஐயனார் ஆவார். ஏழுகிளை பதினான்கு நாடுகளில் உள்ள தொன்மையான ஒவ்வொரு கண்மாய்க்கும் காவல்தெய்வம் உண்டு. அது ஐயனாராகவோ கருப்பராகவோ முனியனாகவோ இருக்கும். கண்மாயை காக்கும் தெய்வம் ஆண்தெய்வமாக இருக்கிறது.

முத்துநாட்டிற்கே உரிய மூன்றாவது தெய்வம் சிவந்த பாதமுடைய சிவனார். கிழவன் குடியிலுள்ள இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கற்றளி ஆக்கப்பட்ட கோயில். கிழவன்குடியின் முந்தைய பெயர் கார்ளாங் கோட்டையாகும். இப் பெயர் காராளன் கோட்டை என்பதன் திரியாக இருக்கலாம்.

இக் கோயில் இராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான கோயிலாக்கப்பட்டு இப்போது அறநிலையத் துறையும் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த மூன்று கோயில்களுக்கும் முத்துக் குருக்கள் பரம்பரையே பூசாரிகள். பூசாரி வைராவி மேளகாரர் நாயனக்காரர் தேவரடியார் என கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் ஊழிய மானியமாக நிலங்களும் சில சாதியாருக்கு மானியக் கிராமங்களும் இருந்திருக்கிறது. இந்த நிலங்களை மட்டுமின்றி கோயிலுக்குரிய கொடை நிலங்களையும் விற்றுவிட்டு போனதாக கூறுகிறார்கள்.

மற்ற நாடுகளில் கருப்பரின் தங்கையாக இருக்கும் காளி இங்கே சிவனாரின் தங்கையாக்கப் பட்டிருக்கிறார்.

முத்துநாயகிக்கு ஆடியில் மதுவெடுப்புத் திருவிழா. செவ்வாய்க் கிழமை காப்புக் கட்டுகிறார்கள். எட்டுநாள் திருவிழா. எட்டாம்நாள் பலிபீடத்தில் மதுச் சொரிகிறார்கள். ஏழாம் எட்டாம் நாளிரவுகளிய் கூத்து!

முத்துநாயகியின் ஐய்பொன் திருவுரு பாதுகாக்கப்படும் சிவாலயத்தில் இருந்து ஏழாம் நாள் கொண்டுவரப்பட்டு, அன்ன வாகனத்தில் உற்சவ மூர்த்தியாக அண்ணனின் திருக்கோயில் சென்று எட்டாம்நாள் திரும்பும் வழியில் மதுக்குடக் காளிக்கு கிடாய்ப்பலி கொடுத்துவிட்டு தன் ஆலயம் திரும்புவார். ஒன்பதாம் நாள் புதனன்று காப்புக் களைந்து எருதுகட்டு நடக்கும்.

முத்துக் கண்மாய்க் கரைமேல் இருக்கும் கரைமேல் பெரிய ஐயனாருக்கு, மழைவேண்டி, சித்திரை மாதத்தில் சித்திரையில் கிடாய்ப்பலி கொடுத்து சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது.

தங்களுக்கு விபரம் தெரிந்து ஐயனாருக்கு குதிரையெடுப்பு எருதுகட்டு மஞ்சுவிரட்டு நடந்ததில்லை என்கிறார்கள் அம்பலங்கள்.

முத்துநாட்டின் மூன்றுகோயில் திருவிழாக்களிலும் முதல் திருநீறு பிராமணருக்கே.

மூன்று கோயில்களிலும் மரியாதைக்குரியவர்கள் முத்துநாட்டின் ஆறுகரை அம்பலங்களும் மூன்று கிராமங்களின் கணக்கர்களும் காடம்போர்குடிக் கிராமத்தினரும் தான்.ஒரு முக்கிய மாறுதல் என்னவெனில் மூன்று கோயில்களிலும் முதல் மரியாதை மாறுகிறது.

முத்துநாயகி கோயிலில் முதல் மரியாதை பெறுபவர் ஆனையடி கோட்டை அம்பலம். இரண்டாவது நாகமங்கலம் சேர்வை. மூன்றாவது கிழவன்குடி சந்திரக்கண்ணன் அம்பலம். நான்காவது மரியாதை புத்தூருணி வெங்கலன் அம்பலம். ஐந்தாவது இரும்பாலை பூவட்டை அம்பலம். ஆறாவது பூதங்குடி -தத்தணி கருவேலன் அம்பலம். ஏழாவது செட்டியார் கோட்டைக் கணக்கர். எட்டாவது மேலப்புதுக்குடி கணக்கர். ஒன்பதாவது அட்டப்பள்ளம் கணக்கர். பத்தாவது காடன்போர்குடி கிராமத்தார் மரியாதைக்கு உரியவர்கள்.

கரைமேல் பெரிய ஐயனார் கோயிலில் முதல் மரியாதை கிழவன்குடி-சாத்தனங்குடி சத்திரக்கண்ணன் அம்பலத்திற்கு.இரண்டாவது நாகமங்கலம் சேர்வைக்காரருக்கு.மூன்றாவது மரியாதை ஆனையடி கோட்டை அம்பலத்திற்கு. நான்காவதில் இருந்து முத்துநாயகி கோயில் மரியாதைப்படி பட்டியல் தொடர்கிறது.

சிவந்தபாதமுடைய சிவனார் கோயிலில் முதல் மரியாதை கிழவன்குடி சத்திரக்கண்ணன் அம்பலம் பெறுகிறார். நாகமங்கலம் சேர்வை இரண்டாவது மரியாதையையும் ஆனையடி கோட்டையம்பலம் மூன்றாவது மரியாதையையும் பெறுகிறார்கள் நான்காவாது மரியாதையிலிருந்து முத்துநாயகி மரியாதைப் பட்டியல்படி தொடர்கிறது.

முத்துத் திடலில் நடக்கும் எருதுகட்டுவில் வடம் பிடிப்பதற்காக மட்டும் நாட்டார்களும் தேவேந்திர குல வேளாளர்களும் நான்கு வட்டங்களாக அணி சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்.

நாகமங்கலம் சேர்வை தலைமையில் வடக்கு வட்டம். கிழவன்குடி சத்திரக்கண்ணன் அம்பலம் தலைமையில் நடுவட்டம். புத்தூருணி வெங்கலன் அம்பலம் தலைமையில் தெற்கு வட்டம். ஆனையடி கோட்டை அம்பலம் தலைமையில் கிழக்கு வட்டமென அணிவகுப்பு ஏற்படுத்தப்பட்டது.

முத்துநாட்டில் பன்னெடுங் காலமாக நடந்து கொண்டிருந்த இந்த மூன்று கோயில் திருவிழாக்களும் மரியாதைகளும் 1992 ஆம் வருடத்தோடு நின்றுபோயின.

அந்த ஆண்டு ஆடியில், திருவிழா திட்டமிடலுக்காக நடந்த சகல சாதிக் கூட்டத்தில் "மாவிளக்கு வைப்பதில் இருந்து சகல நிகழ்வுகளிலும் தங்களுக்கும் சம உரிமை வேண்டும்! "என்ற கோரிக்கையை எழுப்பியது தேவேந்திரகுல வேளாளர் தரப்பு.

"அது பிரச்சனைகளுக்கும் சச்சரவுகளும் வழிவகுக்கும். ஆகவே முதற் செவ்வாய் நாங்கள் காப்புக் கட்டுகிறோம். மதுவெடுப்பை நடத்துகிறோம். மறு செவ்வாய் நீங்கள் காப்புக் கட்டுங்கள் மதுவெடுப்பை நடத்திக் கொள்ளுங்கள்! " ளன்றது நாட்டார்களாகிய கள்ளர் தரப்பு. மாவட்ட ஆட்சியரிடம் சென்றது பள்ளர் தரப்பு. இருதரப்புக் கூட்டத்தை நடத்திய அன்றைய மாவட்ட ஆட்சியர் " இனிமேல் வருடாவருடம் முதலில் பள்ளர்கள் திருவிழா நடத்துவார்கள் மறு செவ்வாய் கள்ளர்களாகிய நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள்! " உத்தரவிட்டார் ஆட்சியர்

அந்த வருடம் ஆட்சியர் தலைமையில் அப்படியே திருவிழா நடந்தது. அடுத்த வருடத்திலிருந்து இன்று வரை முப்பது வருடமாக முத்துநாட்டுக்குரிய மூன்று கோயில்களிலும் திருவிழா ஏதும் நடக்கவில்லை.

எந்த நேரத்தில் இடிந்து எவர் தலையில் விழுமோ என்று அச்சத்தை விதைத்தபடி கலகலத்தபடி காட்சியளிக்கிறது முத்துநாட்டின் காவல்தெய்வமான முத்துநாயகியின் திருக்கோவில்!

தேர்போகி நாடு -- செம்பொன்மாரி நாட்டின் வாரக்கால் நாடுகளில் ஒன்று.

தேர்போகி நாடு -- மதுரை மன்னர் திருமலை நாயக்கர், சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதி, சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் ஆகியோரின் போற்றுதலையும் கவனத்தையும் பெற்ற நாடு.

தேர்போகி நாடு -- பிற சாதியாரை அரவணைப்பதில், கணக்கு வழக்குகளில், கோயில் குடமுழுக்குககளையும் விழாக்களையும் தடையின்றி நடத்துவதில், நாட்டுக் கூட்டங்களை பொறுப்போடு கூட்டுலதில் இன்றளவும் உயிர்ப்போடு செயல்படும் நாடு.

சேதுபதி மன்னர் திருமலை காத்த தேவர், சிதம்பரம் ஈஸ்வரர் கோயிலில் தினமும் தடையின்றி மகேஸ்வர பூசை நடைபெற வேண்டி, முத்துநாட்டுச் சேர்க்கையில் கட்டியேரி மற்றும் கங்கணிக் கிராமங்களையும், தேர்போகி நாடு தேர்போகிச் சேர்க்கையில் நாஞ்சிவயலையும் அறுகாதன்குடிச் சேர்க்கையில் நாணாக்குடியையும், 04-02-1661 ஆம் ஆண்டு, திருவாவடுதுறை அம்பலவாணப் பண்டாரத்திடம் கொடையாக அளித்திருக்கிறார். இது சேதுபதிகளின் 14 ஆவது செப்பேடு.

360 ஆண்டுகளுக்கு முன்னர் முத்துநாட்டிலும் தேர்போகி நாட்டிலும் சேர்க்கைகள் இருந்துள்ளன என்பதை இக் கொடைச்சாசனம் வாயிலாக அறிய முடிகிறது.

இன்னொரு செப்பேடு. இது சேதுபதிகளின் 27 ஆவது செப்பேடு.

சேதுபதி மன்னர் திருமலை காத்த தேவர், திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) ஆளுடைய பரமசாமி கோயிலுக்கு தேர்போகி நாட்டு திருக்கானூர் மற்றும் புதுக்குடி கிராமங்களையும் இவற்றின் உட்கிடைகளான புதுக்குளம் ஏந்தல், ஏயணிசிங்கன் ஏந்தல், கள்ளிக்குடி ஏந்தல் ஆகியவற்றையும் கொடையளித்திருக்கிறார்.

புதுக்குடிக்கு நான்கெல்லை : கிழக்கெல்லை திருக்கானூர் கண்மாய். தெற்கெல்லை பாம்பாறு. மேற்கெல்லை திருத்தங்கல் கீழவயலும் பகையணி வயலும். வடக்கெல்லை எச்சிக்கோட்டைக் கண்மாய் தென்கால்.

திருக்கானூருக்கு நான்கெல்லை : கிழக்கே கோடிக்குளம். தெற்கே பாம்பாறு. மேற்கே புதுகுடியும் பீமாஊருணியும். வடக்கே கோடிக்குளமும் எச்சில் கோட்டையும்.

மற்றுமொரு செப்பேடு தேர்போகி களத்தூர் செப்பேடு. இது சேதுபதிகளின் 46 ஆவது செப்பேடு.

பெரும்புகழோன் கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியர். இரண்டாவது மனைவி பெயர் காதலி ஆயி நாச்சியார். இவர் புதுக்கோட்டையின் முதல் மன்னரான ரகுநாத ராயத் தொண்டையானின் தங்கையாவார். காதலி ஆயி நாச்சியாரை காதலித்து மணந்து கொண்டார் கிழவன் சேதுபதி.

தன் காதல் மனையாளின் அன்பு வேண்டுகோளை ஏற்று, தேர்போகி களத்தூருக்கு "ரகுநாத காதலி ஆயிபுரம் " என்று மறுபெயர் சூட்டி அதை 55 பாகங்களாக்கி 55 பிராமணர்களுக்கு கொடையாக அளித்திருக்கிறார் கிழவன் சேதுபதி.

கொடையளித்த நாள் 20-11-1709..கவத்தூருக்கு காட்டப்பட்டுள்ள நான்கெல்லை : கள்ளிக்குடி கண்மாய்க்கு மேற்கு. தேர்போகி தேனாற்றுக்கு வடக்கு. கொட்டகுடி வயலுக்கு கிழக்கு. திருத்தங்கூர் பாம்பாற்றுக்கு தெற்கு.

இப்போது களத்தூரில் பிராமணர்கள் இல்லை. இருந்ததற்கான சான்றுகளும் வெளியரங்கமாக இல்லை.

" நிறையப் பிராமணர் குடும்பங்கள் இருந்திருக்கின்றன. எங்கள் களத்தூரில் போர்க்குடிகளான ஏழுகிளைக் கள்ளர்கள் மட்டுமின்றி நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பெரிய அக்கிரகாரமும் இருந்திருக்கிறது.

பிராமணக் குடும்பத்தினர் பெரும்பாலோர் வெளியூர் திருவிழாவிற்கு சென்றிருந்த நேரம் அத்தனை பிராமணர் வீடுகளும் தீக்கிரையாகி விட்டனவாம். தெய்வக் குற்றயின்றி வேறென்ன?

தஞ்சாவூரிலும் சென்னை மயிலாப்பூரிலும் ' களத்தூரார் வீதி ' உள்ளன அங்கே வாழும் அய்யர் குடும்பங்கள் எல்லாம் இங்கிருந்து சென்றவையே. அங்கிருந்து வருடம்தோறும் இங்கே வருகிறார்கள். எங்கள் கொட்டுடைய ஐயனார் கோயிலுள் உள்ள காளியம்னும் கருப்பரும் தான் அவர்களது குலதெய்வம். காளியம்மனை வழிபடவே இங்கே வருகிறார்கள்.

எங்கள் களத்தூரில் வாழ்ந்த பிராமணர்களை நினைவாகத்தான் வருடந்தோறும் நாங்கள் பிராமண போஜனம் எனும் பெயரில் விருந்துவிழா நடத்துகிறோம்.! " என்று நம்மையும் பிராமண போஜனத்திற்கு அழைத்தார் களத்தூர் சேது.வீரபாண்டியன் அம்பலம்.

தேர்போகி நாட்டுக் கிராமங்களான பாணன்வயலையும் தாதன் வயலையும் சிவகங்கை அரசின் இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதர்,திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு 1750 ஆண்டு கொடையளித்திருப்பதாக 'சீர்மிகு சிவகங்கை " எனும் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் முனைவர் எஸ். எம். கமால்.

தேர்போகி நாடு ஆதியில் தொண்ணூற்று ஆறரைக் கிராமங்களை கொண்டே திகழ்ந்திருக்கிறது. இடைக்காலத்தில் "எங்கள் நாட்டுக் கோயிலுக்கு எண்பது கிராமங்கள் வரி கொடுத்ததற்கான ஓலைச் சுவடிகள் இருந்தன. " என்கிறார்கள் ஊரம்பலங்கள்.

இப்போது தேர்போகி நாட்டின் காவல் தெய்வமான அழகிய நாச்சியார் கோயிலில் இருபத்தைந்து தலைக்கிராமங்களின் இருபத்தாறு அம்பலகாரர்கள் மரியாதை பெறுகிறார்கள்.

இவற்றோடு பேச்சுள்ள பேச்சற்ற 34 உட்கிடைக் கிராமங்களும் உள.

தலைக் கிராமங்கள் 25.

1. அண்டக்குடி 2 திருத்தங்கூர் 3 கள்ளிக்குடி 4 களத்தூர் 5 நெல்மேனி 6 கொட்டகுடி 7 தச்சன்குடி 8 சோணார்கோட்டை 9 தேர்போகி 10 கிளாமலை 11 சாத்தமங்கலம் 12 குடிக்காடு 13 பெருங்கானூர் 14 பூதகுடி 15 பகையணிவயல் 16 செங்கத்தான்குடி 17 காரக்கொண்டான் 18 செம்பலா வயல் 19 பாணன்காடு 20. ஈஞ்சவயல் 21 ஆல மங்கலம் 22 திருநாற்றுக் கோட்டை 23 மூர்த்தினி வயல் 24 வேதியர்குடி 25 மித்திராவயல் .

உட்கிடைக் கிராமங்கள் 34

1 கீழ முகவூருணி 2 அபிஷேகபுரம் 3 கீழத் திருவேனேந்தல் 4 பார்ப்பான் குடி 5 வெட்டிவயல் 6 திருப்பணி ஏந்தல் 7 கொம்புக்காரன் ஏந்தல் 8 சாணான்காடு 9 கிருஷ்ண சமுத்திரம் 10 கோஞ்சணி கொல்லன்குடி 11 அழகிய நாச்சி ஏந்தல் 12 கண்டன்கரிவயல் 13 ராஜாளி 14 மாணிக்கன் ஏந்தல் 15 சின்னக் கொட்டகுடி 16 செட்டிகண்மாய் 17 நம்பூருணி 18 தாதன் வயல் 19 பொன்னன் ஏந்தல் 20 கரம்பவயல் 21. செப்பாவயல் 22 உமையாண்டவயல் 23. திருப்பனங்குடி 24 மும்முடிச்சான்வயல் 25. நந்தியேந்தல் 26. கீழணிமூர்த்தி 27 வண்ணான்வயல் 28 மேலவயல் 29 நக்கீரன் வயல் 30. கொல்லன்குடி 31 புலவர்வயல் 32. சிந்தாமணிவயல் 33 நீரவிவயல் 34 புறவயல் ஆக மொத்தம், தேர்போகி நாட்டுக் கிராமங்களின் எண்ணிக்கை 59 ஆகும்.

7 கிளைகள்! 14 நாடுகள்! தேர்போகி நாடு ( 2 )

உஞ்சனை செம்பொன்மாரி இரவுசேரி கப்பலூர் ஆகிய நாடுகளுக்கு அவற்றின் தலைமைக் கிராமத்தின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. ஆனால் தேர்போகி நாட்டிற்கு?

தேர்போகி என்கிற அழகிய இலக்கியத் தன்மையான பெயர்கொண்ட கிராமம் இந் நாட்டிற்குள் இருக்கிறது. ஆனால் இப்போது அது இந் நாட்டின் தலைமைக் கிராமம் இல்லை.

திருத்தங்கூர் எனும் தொன்மையான ஊர் இருக்கிறது. இவ் ஊரில்தான் நாட்டுக் கூட்டங்கள் நடக்கின்றன. நாட்டின் காவல்தெய்வமான அழகிய நாச்சியார் கோயிலும் இங்கு தான் இருக்கிறது. இந்த திருந்தங்கூரும் தலைமைக் கிராமம் இல்லை. தேர்போகி நாட்டின் தலைமைக் கிராமம் அண்டக்குடி.

" முடியாட்சிக் காலத்தில் அரசின் ஆளுமைமிக்க ஆற்றல் வாய்ந்த பெருந்தலைகள் அண்டக்குடியில் வாழ்ந்திருக்கிறார்கள் அதனால்தான் அண்டக்குடியை தலைமைக் கிராமமாக ஏற்றிருக்கிறார்கள்! " என்கிறார்கள் ஊரம்பலங்கள்.

உஞ்சனை சிவன் கோயிலில் இருபது கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் மூன்று கல்வெட்டுகளில் அண்டக்குடியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

எட்டாவது கல்வெட்டு 1315 ஆம் ஆண்டிற்குரியது. மாமன்னர் சுந்தர பாண்டியனின் 12 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது.

கேரள சிங்க வளநாடு பெரும்பூர் நாடு உஞ்சனை சேர்க்கையின் நாட்டார் பெருமக்கள், சிதம்பரம் மேலமடத்திற்கு அதன் நிர்வாகியான முதலியார் பெயரில் திருநாராயணமங்கலம் என்கிற திருத்தோணிபுர நல்லூரை கொடை அளித்திருக்கிறார்கள். இக் கல்வெட்டுக்கான ஆவணத்தில் அண்டக்குடி ஆதிநாதர் கண்ட தேவரும் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

உஞ்சனை சிவாலயத்தின் ஏழாவது கல்வெட்டு மாமன்னர் சுந்தரபாண்டியரின் 13 ஆம் ஆட்சியாண்டில், 1316 ஆண்டு வெட்டப்பட்டது. இதில் உஞ்சனை சிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளாக விளங்கிய காங்கேயப் பிச்சரிடமும் திருமேனி அழகியரிடமும் தேவதானமாக இருந்த தேர்போகி நாட்டின் குடிக்காடு எனும் கிராமத்தை துவாராபுரி வேளாருக்கு பிடிபாடு (மாற்றி) செய்திருக்கிறார்கள். இதிலும் அண்டக்குடி ஆதிநாதத் தேவர் கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

உஞ்சனை சிவன் கோயிலின் ஒன்பதாவது கல்வெட்டு மாறவர்மன் வீரபாண்டியனின் 27 ஆவது ஆட்சி ஆண்டிற்குரியது. இதில்...

உஞ்சனை சிவாலய நிர்வாகிகள் உஞ்சனைக் கண்மாய்ப் பாசனத்தில் பல ஏக்கர் நன்செய் வயல்களை மிழலைக் கூற்றம் வடபாம்பாற்று பொய்யாமொழி நல்லூரில் உள்ள சிறுகரும்பூர் சோலைமலைப் பெருமானுக்கு கொடை கொடுத்திருக்கிறார்கள். இதில் அண்டக்குடி ஆதி ஆண்டவர் என்பவர் கையெழுத்துப் போட்டிருக்கிறார். இவர் நிச்சயமாக அண்டக்குடி ஆதிநாதரின் மகனாகத்தான் இருக்க வேண்டும்.

இத்தகைய அரசு ஆவணங்களில் சாட்சிக் கையெழுத்துப் போடும் தகுதி அரசின் முக்கிய ஆளுமைகளுக்கே உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே அண்டக்குடியில் அதிகாரமிக்க ஆளுமைகள் இருந்திருக்கிறார்கள் என்பதற்காகவே இவற்றை சுட்டினேன்.

அண்டக்குடியில் இன்றைக்கும் ஆளுமைமிக்க தலைமைக் குடிகள் உள. ஒன்று அண்டக்குடி கீழவீட்டுச் சேர்வை. இவரே தேர்போகி நாட்டுக்கு அம்பலகாரர். மற்றொருவர் அண்டக்குடி மேலவீட்டுச் சேர்வை. இவரே தேர்போகி நாட்டின் இரண்டாவது மரியாதைக்குரியவர் .

"தமிழகத்தில் உள்ள 18 சாதியாரும் வலங்கை அணி என்றும் இடங்கை அணி என்றும் பிரிந்து நின்றனர் என்பது இடைக்கால வரலாறு. இடது கையின்மேல் வலதுகையை விரித்து வைத்து திருநீறு வாங்கினால் வலங்கை அணியினர். வலது கையின்மேல் இடதுகையை விரித்து வைத்து திருநீறு வாங்குவோர் இடங்கை அணியினர்

அண்டக்குடி மேலவீட்டார் இடங்கை அணியினர். அண்டக்குடி கீழவீட்டார் வலங்கை அணியினர். இவர்களுக்கு அரசர்கள் கொடுத்த மெய்க்கீர்த்தியும் உண்டு.

அறம்தங்கிய வலங்கை அம்மன் திரும்பிய அரசன்குடி அம்பலகாரர் என்பது அண்டக்குடி கீழவீட்டாருக்குரிய மெய்க்கீர்த்தி.

அறந்தங்கிய இடங்கை அம்மன் திரும்பிய கலங்காப்புலி அம்பலகாரர் என்பது அண்டக்குடி மேலவீட்டாருக்கு உரிய மெய்க்கீர்த்தி.

இவர்களுடைய முன்னோர் பாண்டியர் படையில் சேதுபதிகள் படையில் சிவகங்கை மன்னர் படையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளனர். வளரி வீச்சில் வல்லவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தேர்போகி நாட்டின் அம்பலகாரர் பொறுப்பையும் நாட்டுக்குரிய கோயில்களில் முதல் மரியாதைக்கான உரிமையையும் பெற்றிருக்கிறார்கள்.

கோயில் மரியாதை என்றால் தீர்த்தம் திருநீறு பட்டுபரிவட்டம் காளாஞ்சி பெறுவதாகும். நடப்புக் காலத்தில் தேர்போகி நாட்டுக்குரிய காவல்தெய்வமான அழகிய நாச்சியாருக்கு வருடம்தோறும் வைகாசியில் பதினோரு நாள் திருவிழா. திங்கட்கிழமை காப்புக் கட்டுகிறார்கள் விளக்குப்பூசை லட்சார்ச்சனை எனத் தொடர்ந்து ஒன்பதாம் நாளில் மதுவெடுப்பு, பத்தாம்நாள் கூத்து பதினோராம் நாளில் அம்பலகாரருக்கு பரிவட்டம் என அழகிய நாச்சியாரைக் கொண்டாடுகிறது தேர்போகி நாடு.

காப்புக்கட்டும் நாளில் சிவாலயத்தில் இருந்து நாச்சியார் உற்சவரை அழகிய நாச்சி கோயிலுக்கு கொண்டு வருவர் ..அப்போது நாச்சி கோயில் வாயிலில் நாட்டார்கிடாய் பலி கொடுப்பர் கிடாய்க்கறி பூசாரிக்கு உரியது எனினும் கிடாயின் ஒரு கால் (குறங்கு) நாட்டு அம்பலகாரருக்கு உரியது. 11 நாள் விழா நிறைந்து நாச்சியின் உற்சவரை சிவாலயத்திற்கு கொண்டு செல்லும் போதும் கோயில் வாயிலில் நாட்டார் கிடாய் பலி கொடுப்பர். கிடாய்க்கறி பூசாரிக்கு உரியது ஆனால் ஒரு கால் (குறங்கு) திருத்தங்கூர் அம்பலகாரருக்கு உரியது.

அழகிய நாச்சியார் கோயில் திருவிழாவில் கீழ வீட்டு சேர்வையான அறம்தங்கிய வலங்கை அம்மன் திரும்பிய கு.சண்முகசுந்தரம் அம்பலம் முதல் மரியாதையைப் பெறுகிறார்.

மேலவீட்டுச் சேர்வையான அறம்தங்கிய இடங்கை அம்மன் திரும்பிய கல.பெரியசாமி அம்பலம் இரண்டாம் மரியாதையைப் பெறுகிறார்.

தேர்போகி நாட்டின் 25 தலைக் கிராமங்களில் தலைமைக் கிராமமான அண்டக்குடிக்கு மட்டும் இரண்டு மரியாதைகள்.மற்ற 24 ஊர் அம்பலங்களும் உடன்பாட்டு பட்டியல் வரிசைப்படி மரியாதை பெறுகிறார்கள்.

இன்னுமொரு முக்கிய தகவல் அம்பலகாரர்கள் மரியாதை பெறுமுன் அழகிய நாச்சியார் சந்நிதியில் பாரம்பர்ய மரபுநெறிப்படி பலர் மரியாதை பெறுகிறார்கள்.

முதலாவதாக பிற நாட்டு வெள்ளாளர். அடுத்து பிறநாட்டார்அப்புறம் நாட்டுக் கணக்கர் ,அடுத்து தேர்போகி நாட்டு வெள்ளாளர். பூசாரிகளான பட்டர்களால் அழைக்கப்பட்டு மரியாதை பெறுகிறார்கள். அதன்பிறகே நாட்டம்பலம் ஊரம்பலங்கள் பெறுகிறார்கள் அதிலும் பாணன்காட்டில் கள்ளர் இல்லை. ஊரம்பலத்திற்கான மரியாதையை செட்டியார் பெறுகிறார். வேதியர்குடியிலும் கள்ளர் இல்லை முன்பு ஐயரும் கோனாரும் பெற்றார்கள். இப்போது அவ்வூரில் ஐயர் இல்லாததால் கோனார் மட்டும் பெறுகிறார் ! " தேர்போகி நாட்டு அம்பலங்களின் பெருமையை, அழகிய நாச்சியார் கோயில் மரியாதை மரபுகளை விளக்கினார் திருத்தங்கூர் அம்பலங்களில் ஒருவரான பார்ப்பான்குடி சி.ராமராஜன் அம்பலம்.

7 கிளைகள்! 14 நாடுகள்! தேர்போகி நாடு (3 ஆம் பத்தி)

அண்டக்குடி -- தேர்போகி நாட்டின் தலைக்கிராமம் மட்டுமல்ல, சேர்க்கையின் தலையூராகவும் இருக்கிறது. 1 அண்டக்குடி 2. மித்திராவயல் 3 வேதியர்குடி 4. ஆலமங்கலம் 5. மூர்த்தினிவயல் ஆகிய ஐந்தும் அண்டக்குடி சேர்க்கைக் கிராமங்கள் ஆகும்.

அண்டக்குடி சேர்க்கைக்கென்று ஒரு காவல் தெய்வம் உண்டு. வடதிசை நோக்கிய தெய்வம். வடதிசை நோக்கிய கோயில். பெயர் நல்லாண்டம்மன்.

தேர்போகி நாட்டின் இன்னுமொரு சேர்க்கை திருத்தங்கூர் சேர்க்கையாகும்

1 திருத்தங்கூர் 2 செங்கத்தான்குடி 3 ஆலமங்கலம் 4 குடிக்காடு 5 பொன்னம்மன் ஏந்தல் (எ)பாணன்காடு ஆகிய ஐந்து கிராமங்களும் இணைந்ததே திருத்தங்கூர் சேர்க்கை.

இச் சேர்க்கைக் கிராமங்கள் கொண்டாடும் சிவாலயம் நாகநாதர் --சொர்ணவல்லி கோயில் பனிரெண்டாம் நூற்றாண்டில் தேர்போகி நாட்டில் ஐந்து சிவன் கோயில்கள் கற்கோயிகள் ஆக்கப்பட்டனவாம்.

நட்டநடுவில் திருத்தங்கூரில் ஒரு சிவன்கோயில். இதற்கு தென்திசையில் கள்ளிக்குடியில் ஒரு சிவன்கோயில். வடதிசையில் அண்டக்குடியில் எதிரும்புதிருமாக இரண்டு கருவறைகள் கொண்ட ஒரு சிவன்கோயில். மேற்கே நெல்மேனியில் ஒரு சிவன்கோயில்.கிழக்குத் திசையில் பூதகுடியில் ஒரு சிவன்கோயில். இவற்றில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பது திருத்தங்கூர் சிவன்கோயில் மட்டுமே. மற்றவை காலவெள்ளத்தில் கல் அடுக்கும் சிதைந்து போயின.

கடந்த 22 ஆண்டுகளாகத்தான் திருத்தங்கூரில் தேர்த் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் அம்பலகாரர் பாப்பாகுடி ராமராஜன் அம்பலத்தின் ஊக்கமான முயற்சியால் இத்திருவினை வசமானது.

ஒன்பதாம் நாள் தேரோட்டத்தை ஐந்து கிராமங்களும் இணைந்து நடத்துகின்றன. மற்ற பத்து நாள் மண்டகப் படிகளை, காப்புக் கட்டுவதற்கு முன்னர், சீட்டு எழுதிப் போட்டு வரிசைப்படி இரண்டிரண்டு மண்டகப் படிகளாக நடத்துகின்றனர்.

இங்கே முதல் மரியாதை இரண்டாம் மரியாதை என்று யாருக்குமில்லை. பூசாரி ஐந்து காவாஞ்சிகளை ஒரு தட்டில் வைத்து கொடுக்கிறார் ஐந்து கிராம அம்பலங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.

செங்கத்தான்குடியில் கள்ளர்கள் எவருமில்லை. முத்தரையர் அம்பலகாரர். பாணன்காட்டில் கள்ளர்கள் இல்லை செட்டியார் அம்பலகாரர். தேர் நிலைக்குத்தியதும் 26 காளாஞ்சிகள் 25 கிராமங்களுக்கு!

தேர்போகி நாட்டின் மற்றுமொரு சேர்க்கை கொட்டகுடி சேர்க்கை .

1. நெல்மேனி 2. கொட்டகுடி 3 தச்சக்குடி 4 சின்ன கொட்டகுடி 5 சோணார்கோட்டை 6 கண்டன்கரிவயல் 7அழகிய நாச்சியேந்தல் 8 செட்டிவயல் (அரைக்கிராமம் பேச்சற்றது) .இந்த ஏழரைக் கிராமங்களே கொட்டகுடிச் சேர்க்கை. கொட்டுடைய ஐயனார் குடி என்பதே கொட்டகுடி ஆயிற்று.

கொட்டகுடி சேர்க்கையின் காவல் தெய்வம் அழகியநாச்சியார். அழகிய நாச்சிக்கு வைகாசியில் ஏழுநாள் திருவிழா. பொங்கல் கிடாய்வெட்டு கூத்தென கொண்டாடுகிறார்கள்.

கொட்டகுடியை ஒட்டிய நம்பூருணிக் கண்மாய்க்குள் சுமார் ஆயிரம் சதுர அடியில் பெரிய திட்டு (மேடு ) இப்போது இந்த திட்டில் சீமை விஷக் கருவை மரங்கள் வைரம் பாய்ந்து நிற்கின்றன .அவற்றின் நடுவில் நான்கடி உயரத் திருமால் விக்கிரகம் சாய்ந்து கிடக்கிறது. "இங்கே படியளந்த பெருமாள் கோயில் என்றழைக்க.பட்ட திருமால் கோயில் ஒன்று விளங்கி இருக்கிறது. அதற்கான அடையாளம் தான் இந்த நெய்வத் திருமேனியும் மேடும். திரும்ப எடுத்துக்கட்டிக் கும்பிட வசதியற்றுப் போனோமே! " கண்களில் நீர்மல்க படியளந்த பெருமாளின் அருகமர்ந்து நிழல்படம் எடுத்துக் கொண்டார் கொட்டகுடிச் சேர்க்கையின் அம்பலகாரர் கரு. தேவன் சுப்புராமு அம்பலம்.

பெரிய கொட்டகுடிப் பெரிய கண்மாய்க் கரையில் குருநாதர் (வாத்தியார்) பதினெட்டாம்படிக் கருப்பர் காளி உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களோடும் அழகிய சேமங் குதிரைகளோடும் அருள் பாலிக்கிறார் கொட்டுடைய ஐயனார்.

எல்லா ஊர்களிலும் ஐயனாருக்கு அடுத்து கருப்பருக்கு காளிக்கு ஆராதனைகள் நடப்பது மரபு. ஆனால் கொட்டகுடியில் வாத்தியாருக்கே முதல் ஆராதனை.

இது பெரிய கொட்டகுடிக்கும் சாத்தமத்திக்கும் உரிமையுடைய கோயில். சித்திரையில் கூத்து குதிரையெடுப்பு நடக்கிறது. அன்றைய நாளில் மட்டும் சாத்தமத்தி சேர்வைக்கு முதல்மரியாதை. மற்ற நாள் பூசைகளில் கொட்டகுடி அம்பலத்திற்கே முதல் மரியாதை.

இக் கோயிலில் உள்ள ராக்காத்தாள் திருமேனி சாத்தமத்தி சேர்வாரருக்கு உரியதாம் அதனால் இந்த சிறப்பு மரியாதை சாத்தமத்தி சேர்வைக்கு.

25 ஆண்டுக்கு முன்வரை இங்கே மஞ்சு விரட்டும் சிறப்பாக நடந்திருக்கிறது.

கொட்டு எனும் சொல் மண்வெட்டியைக் குறிக்கும் சொல். ஐயனாருக்கு இங்கே மண்வெட்டி (கொட்டு) ஆயுதம் .அதனால் கொட்டுடைய ஐயனார் என்பதே சரி. ஆனால் இப் பகுதி மக்கள் கைகளை ஒன்றின்மேல் ஒன்றாய் வைத்து விரல்களை மடக்கி தலையில் கொட்டிக் கொண்டு ஐயனாரை கும்பிடுகிறார்கள். " இப்படிக் கொட்டிக் கொண்டு கும்பிடுவதால் கொட்டுடைய ஐயனார்! " என்று பெயர்க் காரணம் சொல்கிறார்கள்.

கொட்டகுடிச் சேர்க்கை மக்களால் மூத்தவர் வீட்டார் என அன்போடு அழைக்கப்படும் குடும்பம் கொட்டகுடி அம்பலகாரர் குடும்பம். கொட்டகுடி அம்பலகாரர் தான் கொட்டகுடி கொட்டுடை ஐயனார் கோயில் சாமியாடி.

பல தலைமுறைகளுக்கு முன்னர் சேதுபதி மன்னரால் அளிக்கப்பட்ட, சாமியாடிக்கான சதங்கைகளும் பிரம்புகளும் மூவிலை வேலும் வெட்டருவாளும் வளரியும் ஆடை அணிகளும் பூசைக்கான பித்தளைப் பொருட்களும் அம்பலகாரர் வீட்டிற்கு பெருமையையும் புனிதத்தையும் அளிக்கின்றன.

" இந்தப் பொருட்கள் கொட்டுடைய ஐயனாரின் சீதனங்கள்! " எனப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார் கொட்டகுடி அம்பலகாரர் கரு. தேவன் சுப்புராமு அம்பலம்.

தேர்போகி நாட்டின் மற்றுமொரு முக்கியமான ஊர் களத்தூர். களத்தூர் பட்டயம் குறித்து எமுதியிருக்கிறேன். எனினும் களத்தூர் ஐயனார் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

"எங்கள் ஐயனார் பற்றிக் கேட்கிறீர்களா! சேதுபதி மன்னர் தன் படைபரிவாரங்களோடு இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வந்தாராம். அக்கினி நட்சத்திரம் தலையைப் பிளக்கும் கோடைகாலம். மன்னருக்கும் படைபரிவாரங்களுக்கும் தாகம். தங்கள் தாகத்தையும் இப்பகுதி மக்களின் தாக்கத்தையும் தீர்க்க கண்மாய்க்குள் கிணறு வெட்டுவித்தார் சேதுபதி. அந்தக் கிணற்றில் கிளம்பின தெய்வீகப் புதையல். ஆமாம் தங்கத் தேரும் தங்கக் காளைகளும் வெட்டுக் காயம் பட்ட ஐயனார் விக்கிரமும் கிடைத்திருக்கிறது. ஐயனார் சிலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் வெட்டுடைய ஐயனார் எனப் பெயர் விளங்கி அதுவே கொட்டுடைய ஐயனாராக மறுவி விட்டது.எங்கள் ஐயனாருக்கு மானிய நிலங்கள் உள்ளன. வேளார்கள் தினபூசை செய்கிறார்கள் வைகாசி விசாகத்தில் புரவியெடுப்பும் கூத்தும் சிறப்பாக நடத்துகிறோம் இதைப் போல தேர்போகியிலும் ஐயனார் கோயில் உள்ளது அது பச்சைக் காருடைய ஐயனார்! "பீடுடனும் பெருமையுடனும் விளக்கினார் களத்தூர் சேது. வீரபாண்டியன் அம்பலம்.

புதையலாய்க் கிடைத்த தங்கத்தேர் நாடு முழுதும் போய்வந்ததால் தேர்போகி எனும்பெயர் நாட்டிற்கு ஏற்பட்டது என்ற நம்பிக்கையும் இங்கே உலவுகிறது!

7 கிளைகள்! 14 நாடுகள்! தேர்போகி நாடு (4ஆம் பத்தி )

சாக்கோட்டை வீரசேகரர் இணை உமையம்பிகை கோயில் திருத்தேர் ஆறு நாடுகளுக்குரியது!

மறவர்கள் மிகுந்த சாக்கை நாடு, கள்ளர்கள் மிகுந்த தேர்போகி வடம்போகி முத்தூற்று ஜெயங்கொண்டான் நாடுகள், முத்தரையர் மிகுந்த பெரியகோட்டை நாடு ஆகிய இந்த ஆறு நாடுகளுக்கும் உரியதே சாக்கோட்டை தேரும் தேர்வடங்களும் தேர்த்திருவிழாவும்!

மண்டகப் படிகளை சீர்பாதம் தாங்குதலை ( சாமி தூக்குதல்) சாக்கை நாடும் வடம்போகி நாடும் பகிர்ந்து கொள்கின்றன.

தெற்கு நோக்கிய தேரில் அமர்ந்திருக்கிறார் இறைவன் வீரசேகரன் .இறைவன் பார்வையில் மேற்கிலிருந்தது முதல் வடம் சாக்கை நாட்டுக்கும் வடம்போகி நாட்டுக்கும் உரியது. இரண்டாம் வடம் பெரியகோட்டை நாட்டுக்கு உரியது. மூன்றாவது வடம் ஜெயங்கொண்டான் நாட்டுக்கு உரியது ஆகக் கிழக்கே உள்ள நான்காம் வடம் தேர்போகி நாட்டுக்கும் முத்தூற்று நாட்டுக்கும் உரியது.

அம்மன் தேர் (சின்னத்தேர்)வல்லம்பர் மிகுந்த பாலைய நாட்டுக்கு உரிய தனித்தேர்.

தேரோட்ட நாளில் தனித்தனியே நாடுகள் கூடியிருக்கும். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அலுவலர்கள் நாட்டார் பெருமக்களை வடம்பிடித்துத் தேர் இழுக்க அழைப்பார்கள். முதலில், மேலை வடமான முதல்வடத்தைப் பற்றுவதற்கு சாக்கை வடம்போகி நாட்டார்களை அழைப்பர். இரண்டாவதாக கீழை வடமான நான்காவது வடத்தைப் பற்றுதற்கு தேர்போகி முத்தூற்று நாடுகளை அழைப்பர். மூன்றாவதாக ஜெயங்கொண்டான் நாட்டாரையும், நான்காவதாக மேற்கிலிருந்து மூன்றாவது வடத்தைப் பற்றுவதற்கு பெரியகோட்டை நாட்டாரையும் அழைப்பர். இது நெடுங்கால மரபாக நடந்த அழைப்பு.

இந்த மரபை உடைக்க. நினைத்தது பெரியகோட்டை நாடு. மேலை முதல் வடத்திற்கு உரியவர்களை முதலில் அழைப்பவர்கள், இரண்டாவதாக. மேலை இரண்டாவது வடத்திற்குரிய எங்களைத் தானே அழைக்க வேண்டும்? எதற்காக கீழை வடமான நான்காவது வடத்திற்கான தேர்போகி நாட்டாரையும் முத்தூற்று நாட்டாரையும் அழைக்க வேண்டும்? எனச் சிந்தித்தது பெரியகோட்டை நாடு. தங்களுக்கு நீதி வேண்டுமென தேவகோட்டை முன்சிப் கோர்ட்டை நாடியது பெரியகோட்டை. அந்த நீதி மன்றம் பெரியகோட்டைக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.

இத் தீர்ப்பை தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியெனக் கொதித்தது தேர்போகி." எந்தத் தேருக்கும் மேலைவடமும் கீழைவடமும் தான் மிகமிக முக்கியமானவை .நடுவில் உள்ள இரண்டு வடங்களும் ஆதரவு (Support) வடங்கள் தான் நடுவடங்கள் இல்லாமலும் தேர் இழுக்கமுடியும்! ஆக முதலில் ஆழைக்கப்பட வேண்டியவை மேலைகீழை வடங்களுக்குரிய நாடுகளே! " வலுவான வாதத்தோடு தேவகோட்டை -சப் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது தேர்போகி.

"ஆமாம்! இரண்டாவதாக அழைக்கப் பட வேண்டியவை கீழை வடத்திற்குரிய தேர்போகி முத்தூற்று நாடுகளையே! " தீர்ப்பை மாற்றித் தெளிவான வெற்றியை தேர்போகிக்கு கொடுத்தது நீதிமன்றம்.

இதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தை நாடியது பெரியகோட்டை நாடு. அங்கும் தீர்ப்பு தேர்போகிக்கே உறுதியானது. இவையெல்லாம் 1969க்கு முன்பு நடந்தவை.

அதன்பிறகு பெரிய கோட்டை நாட்டார் பெருமக்கள் வீரசேகரத் தேரில் வடம்பற்ற வரவில்லை. வருடாவருடம் வந்து வாய்வார்த்தைகள் மட்டும் வளர்த்தன பகைமைகளை! பெரியகோட்டை நாட்டார் இழுக்க வேண்டிய இரண்டாவது வடத்தை மடக்கிச் சுருட்டி தேரில் கட்டிவிட்டு மூன்று வடங்களில் தேரோட்டத்தை நடத்தின மற்ற நாடுகள்.

1998-1999ஆண்டு தேரோட்டக் களம் வன்முறைக் களமானது. அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் பெரியகோட்டை நாட்டைச் சேர்ந்த இருவர் உயிர் இழந்தனர்.

2000 ஆவது ஆண்டில் சாக்கோட்டை தேர் ஓடவில்லை. 2001ஆம் ஆண்டில் முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் மெய்யப்ப செட்டியாரின் சீரிய நல்லெண்ண முயற்சியால் ஏழு நாடுகளின் சமாதானக் கூட்டம் நடந்தது.

சாக்கை நாடு தனியே ஓரிடத்தில் கூடவேண்டும். மற்ற ஆறு நாடுகளும் அக்கினிப் பிள்ளையார் கோயில் அருகே ஒரிடத்தில் கூடவேண்டும்! தேவஸ்தான அலுவலர்கள் முதலில் சாக்கை நாட்டாரை அழைக்க வேண்டும். இரண்டாவதாக பொது அழைப்பாக ஆறு நாட்டார்களையும் அழைக்க வேண்டும் என்றும் முடிவானது. முடிவை எல்லா நாடுகளும் ஒருமனதாக ஏற்றன.

அன்று தொடங்கி சாக்கோட்டைத் தேர் சிறப்பாக ஓடக் கொண்டிருக்கிறது.

சாக்கை நாட்டுத் தேர், தேர்வடங்கள், பிரச்சனைகள், வழக்குகள், சமாதானத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட பாப்பாகுடி அம்பலகாரர் சி.ராமராஜன் அம்பலத்திற்கு நன்றியும் பாராட்டும்!

உஞ்சனை நாட்டுக்கும் செம்பொன்மாரி நாட்டுக்கும் உரிய வாரக்கால் நாடு ஆற்றங்கரை நாடு.

ஆற்றங்கரை நாட்டின் மேற்குப்பகுதி (மேலை வட்டம்) உஞ்சனை நாட்டுக்குரிய வாரக்கால் அரை நாடு.

ஆற்றங்கரை நாட்டின் கிழக்குப் பகுதி (கீழை வட்டம்)செம்பொன்மாரி நாட்டுக்குரிய வாரக்கால் அரைநாடு.

ஆற்றங்கரை நாட்டின் மேலைவட்டம் பத்தரைக் கிராமங்களை கொண்டது. அவற்றின் பெயர்களை கோயில் மரியாதைக்குரிய வரிசைப்படி இங்கே குறிப்பிடுகிறேன்.

1 சிறுகானூர்
2 கொடிக்குளம்
3. சாணான்வயல்
4. கொடுவூர்
5. அடைஞ்சான்வயல்
6 கேசணி
7. களபம்
8 வடகீழ்க்குடி
9 ஆரக்கோட்டை
10 எச்சிக்கோட்டை
11 சாத்தமங்கலம் (அரைக்கிராமம். இது ஆற்றங்கரை நாட்டுக்கும் மீதி அரைக்கிராமம் தேர்போகி நாட்டுக்கும் உரியது) .

ஆற்றங்கரை நாட்டின் கீழைவட்டம் 8. கிராமங்களைக்கொண்டது.அவற்றின் பெயர்கள் வருமாறு --

1 அண்டக்குடி (அண்டக்குடியென பல ஊர்கள் இருப்பதால் இதைக் குறுந்தூர் அண்டக்குடி என்கிறார்கள். )
2. குறுந்தூர்
3 வெளிகொண்டான்
4 கண்ணரி ஏந்தல்
5. க.(ண்ணரி) சிறுவனூர்
6 நாரண மங்கலம்
7. ஏந்தல்வயல் (எ)உடையணண் சமுத்திரம்
8. கடம்பாகுடி.

மேலை வட்டத்திற்கு என்று பொதுக் கோயில் இருக்கிறது. கூத்தப் பெருமாள் ஐயனார் கோயில். கூத்தர் என்பது கூத்தாடுவோரை குறிப்பாக நடனமாடுவோரைக் குறிக்கும் சொல். கூத்தர்களின் தலைவர் கூத்தாடும் பெருமானான தில்லை நடராஜர்.

கருப்பரை திருமாலின் பாதுகாவலராகவும் ஐயனாரை சிவனாரின் பாதுகாவலராகவும் ஏற்பது நமது மரபு.

ஆற்றங்கரை நாட்டுக்கு உரிய பத்தரைக் கிராமங்களும் ஒற்றுமையோடு இணைந்து கூத்தப் பெருமாள் ஐயனாருக்கு சித்திரா பவுர்ணமியில் விழாக் கொண்டாடுகின்றன.

அரைக் கிராமமான சாத்தமங்கலத்திற்கும் ஒரு மண்டகப்படி என பத்தரைக் கிராமங்களுக்கும் 11 மண்டகப்படிகள்

மண்டகப்படிகள் 11 எனினும் திருவிழா 15 நாட்கள் நீள்கின்றன. 11 நாள் 11 மண்டகப்படிகள். ஒவ்வொருநாள் மண்டகப் படியிலும் சிறுகனூர் கொடிக்குளம் சாணான்வயல் என்ற வரிசைப்படி 11 கிராமங்களுக்கும் தீர்த்தம் திருநீறு காளாஞ்சி மரியாதை வழங்கப் படுகிறது.

12 நாட்கள் சைவத் திருவிழா. 13 ஆம் நாள் புரவியெடுப்பும் கூத்தும் 14 ஆம் நாள் இரண்டாம் இரவுக் கூத்து 15 ஆம் நாள் காப்புக் களைதல் அன்றைக்கு நாட்டுக் கணக்கப் பிள்ளைக்கும் பிற நாட்டார்க்கும் மரியாதை செய்தபின் ஆற்றங்கரை நாட்டு அம்பலகாரரான கொடுவூர் அம்பலகாரருக்கு பட்டுபரிவட்ட. மரியாதையும் இரண்டாவது மரியாதை கொடிக்குளம் ஊர் அம்பலகாரருக்கும் வழங்கப்படுகிறது.

மேலைவட்டம் கீழைவட்டம் என உஞ்சனை நாட்டுக்காகவும் செம்பொன்மாரி நாட்டுக்காகவும் ஆற்றங்கரை நாட்டின் கிராமங்கள் பிரிக்கப் பட்டிருந்தாலும், சிலபல வருடங்களுக்கு முன்னாள்வரை கொடுவூர் அம்பலகாரரை நாட்டு அம்பலகாரராக ஒருமனதாக ஏற்றுக் கொண்டிருந்தது ஆற்றங்கரை நாடு. ஆனால் இப்போது?

கீழை வட்டத்திற்கு என்று பொதுக்கோயில் ஏதுமில்லை. கீழைவட்டத்தில் உள்ள எந்தக் கோயில் மரியாதைக்காகவும் நாட்டு அம்பலகாரர் அழைக்கப்படுவதில்லை. அவராகச் செல்வதுமில்லை.

அண்டக்குடியில் அருள்மிகு கண்ணாயிரமுடைய ஐயனார் கோயில் இருக்கிறது. இதற்காக வைகாசி விசாக எட்டுநாள் திருவிழாவை தனது உட்கடைக் கிராமமான வெளிகண்டானுடன் இணைந்து அண்டக்குடி கிராமம் கொண்டாடுகிறது.

க.சிறுவனூரில் காவல்தெய்வம் அருள்மிகு குடிவாழவந்த அம்மன் கோயில் உள்ளது. இதற்கு க.சிறுவனூர் கடம்பாகுடி கண்ணரி ஏந்தல் ஆகிய மூன்று ஊர்களும் இணைந்து ஆனி மாதத்தில் மதுவெடுப்பு நடத்துகின்றன.

நாரண மங்கலம் கிராமம் தனக்குரிய தணீஸ்வரமுடைய ஐயனாருக்கு ஆனியில் திருவிழா நடத்துகிறது.

உடையணன் சமுத்திரம் கிராமம் ஆடி மாதத்தில் தனது செண்பகமுடைய ஐயனாருக்கு விழா எடுக்கிறது.

ஆற்றங்கரை நாட்டுத் தகவல்களை தந்த கண்ணங்குடி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சாணாவயல் முத்துராமன் அம்பலத்திற்கும், கீழவட்டக் கோயில் பெயர்களைத் சொன்ன அண்டக்குடி சுப. பழனிச்சாமிக்கும் நன்றி பாராட்டுகிறோம்.

பாம்பாற்றங் கரையில் நீண்டு நிலைத்த ஆற்றங்கரை நாடு பற்றிய கல்வெட்டு செப்புப்பட்டயம் மற்றும் இன்றிமையாத் தகவல்கள் கிடைத்தால் இக் கட்டுரையுடன் இணைத்துக் கொள்வேன்

ஏழுகோட்டை நாடு இரும்பா நாடு சிலாமேகம் நாட்டின் பாதி, ஆகிய இந்த இரண்டரை நாடுகளும் இரவுசேரி நாட்டின் வாரக்கால் நாடுகள்.

கண்டதேவி சொர்ணமூர்த்தி கோயில் தேர்த் திருவிழாவில் ஏழாம் மண்டகப்படி ஏழுகோட்டை நாட்டாருக்கு உரியது.

இதேபோல, திருவாடானை ஆதி ரத்தின ஈஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவில் எட்டாம் மண்டகப்படி ஏழுகோட்டை நாட்டாருக்கு உரியதே.

ஏழுகோட்டை நாட்டுக்கு வெளியில் உள்ள இந்த இரண்டு கோயில்களின் மண்டகப் படிகளுக்காக மட்டுமே ஏழுகோட்டை நாட்டுப் பெருமக்கள் நாட்டளவில் ஒருங்கிணைகிறார்கள்.

தொல்லியல் அறிஞர் ஈரோடு செ.இராசு அவர்களால் தொகுக்கப்பட்ட "சேதுபதி செப்பேடுகள் " என்கிற அரிய நூலைத் தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் 1994 இல் வெளியிட்டுள்ளது.

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் தொண்டு செய்வோருக்கும் அளித்த கொடைகளுக்கான ஆவணங்கள் தான் இந்தச் செப்பேடுகள்.

சேதுபதிகளின் 107 செப்பேடுகள் பற்றிய விபரங்கள் இத் தொகுப்பில் உள்ளன. அவற்றில் நான்கு செப்பேடுகள் ஏழுகோட்டை நாட்டுக் கிராமங்கள் பற்றியவை.

மன்னர் ரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி 13-01-1692 அன்று முருகப்பன் மடத்திற்காகவும் மடத்தைக் கவனித்துக் கொண்ட அக்கிரகாரத்திற்காகவும் திருப்பொற்கோட்டை பகையணி பிராந்தணி ஆகிய கிராமங்களை தானமாகக் கொடுத்திருக்கிறார்.

திருப்பொற்கோட்டைக்கு வலையன் சோழியன் கண்மாய், ஏரணிக்கோட்டைக் கண்மாய் சிறுகைக் கண்மாய், அம்பட்டன் கோட்டை, செட்டியேந்தல் துக்காகுடி ஆறு ஆகியலை நான்கெல்லையாக காட்டப் பட்டுள்ளன.

பககையணிக்கும் பிராந்தணிக்கும், பார்ப்பான் கோட்டை திடக்கோட்டை வடவயல், சாணான் ஏந்தல், கொள்ளுடையார் தர்மத்து நெய்மேனி அரையணித் தென்வடல் நவதேவன் ஊருணி ஆகியன நான்கு எல்லைகளாக காட்டப்பட்டுள்ளன.

ஆனால் இந்தக் கொடை திரும்பப் பெறப்பட்டு 10-11-1733 அன்று திருப்பொற்கோட்டையை மட்டும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொடையளித்திருக்கிறார் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜம ரகுநாத சேதுபதி. இதன் விபரம் வருமாறு -:

குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி (எ)கட்டயத்தேவர் 10-11-1733. அன்று, ஏழுகோட்டை நாட்டில், ஓரூர் வட்டகையில் விரிசிலை ஆற்றுப் பாய்ச்சலில் உள்ள திருப்பொற்கோட்டை எனும் கிராமத்தை திருவாவடுதுறை மடத்தின் மகேஸ்வர பூசைக்காக கொடை அளித்திருக்கிறார்.

திருப்பொற்கோட்டையை தங்கள் மடத்திற்கு தானமளித்த மன்னரைப் போற்றி திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு வேண்பா பாடியுள்ளார்.

* நதியாம் விரிசிலை நன்னகர்பொற் கோட்டை
பதியாம் துறைசைப் பதிக்கு -- விதியாகத்
தானமிட்டான் சேதுபதி தாரணிதான் உள்ளவரை
ஊனமில்லை எந்தநா ளும்.

289 வருடத்திற்கு முன்னர் மாகாணங்களாகப் பிரிக்கப்படவில்லை என்பதையும், வட்டகைகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதையும் அதிலொரு வட்டகையின் பெயர் ஓரூர் என்பதையும் அந்த ஓரூர் வட்டகைக்குள் திருப்பொற்கோட்டை இருந்ததையும் இச் செப்பேடு தெளிவு படுத்துகிறது.

மன்னர் செல்லத் தேவர் என்கிற செல்லமுத்து விசய ரகுநாத சேதுபதி 31-11-1752 அன்று ஏழுகோட்டை நாட்டில் ஓரூர் வட்டகையில் உள்ள நாட்டுச்சேரி என்னும் கிராமத்தை திருவாவடுதுறை மடத்திற்கு கொடை அளித்திருக்கிறார்.

நாட்டுச்சேரிக்கு நான்கெல்லை :கிழக்கெல்லை :ஆயாங்கோட்டை கண்மாய் நீர்ப்பிடிப்பு. தெற்கெல்லை :தணிச்சக் கண்மாய்வடகால் மற்றும் நெட்டையேந்தல் குளைக்கால். மேற்கெல்லை :அதங்குடி கீழ்புறம். வடக்கெல்லை :மேற்குத் திருப்பொற்கோட்டை நன்செய்மால்.

மற்றுமொரு பட்டயம். இது ஓலைப் பட்டயம்.

மன்னர் முத்துராமலிங்க சேதுபதி 07-01-1783 அன்று அனுமந்தக்குடியில் உள்ள அருகபரமேசுவர மாளுவ நாதர் -மரகதவள்ளி எனும் சமணக் கோயிலுக்கு வடக்கு செய்யானேந்தல் எனும் கிராமத்தை கொடை அளித்திருக்கிறார்.

இந்தச் சமணக் கோயிலுக்கு முத்துவிசய ரகுநாத சேதுபதி அனுமந்தக்குடியை தானம் அளித்திருக்கிறார். அதை திரும்பப் பெற்றுக் கொண்டுதான் இந்த வடக்குச் செய்யானேந்தலை கொடுத்திருக்கிறார் முத்துராமலிங்க சேதுபதி.

கி.பி 1533 ஆண்டுக்குரிய கல்வெட்டு ஒன்றில் அனுமந்தக்குடியின் பழைய பெயரான 'முத்தூற்றுக் கூற்றம் ஜீனேந்திர மங்கலமான குறவடிமிதி என்கிற பெயர் பொறிக்கப் பட்டுள்ளதாம்.

ஆக 500 ஆண்டுகளுக்கு முன்பு அனுந்தக்குடியின் பெயர் குறவடிமிதி. ஏழுகோட்டை நாடும் முத்தூற்றுக் கூற்றத்திற்கு உட்பட்ட ஒரு நாடாகவே இருந்துள்ளது.

ஏழுகோட்டை நாடு இப்போது ஏழுகோட்டை மாகாணம், அனுமந்தக்குடி மாகாணம், திருப்பொற்கோட்டை மாகாணம், இலுப்பைக்குடி மாகாணம் என நான்கு மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

ஏழுகோட்டை நாடு ஏழுகோட்டை மாகாணத்திற்கு உரிய கிராமங்கள் 14. அவற்றின் பெயர்கள்.

1. சித்தானூர் 2. கரையாக்கோட்டை 3. இராஜாக் கோட்டை 4. சின்னக் கொட்டகுடி 5. பெரிய கொட்டகுடி 6. வக்கனக்கோட்டை 7. தேரளப்பூர் 8. தே.சிறுவனூர் 9. இலக்கமாரி 10 சுண்டமங்கலம் 11 புளிகுளம் 12. அழியாப்பதி 13. தெற்கு நெய்மேனி 14. வடக்கு நெய்மேனி

ஏழுகோட்டை நாடு, அனுந்தக்குடி மாகாணத்திற்கு உரிய கிராமங்கள் 16. அவற்றின் பெயர்கள் - :

1. அனுமந்தக்குடி 2. துடுப்பூர் 3. ஆலங்குடி 4. மனைவிக்கோட்டை 5. செட்டியேந்தல் 6. நாணாக்குடி 7. மணக்குடி 8. கீரணி 9. சூரியன்குடி 10. பண்ணையேந்தல் 11. வடக்கு செய்யானேந்தல் 12. தெற்கு செய்யானேந்தல் 13 கிடுகட்டி 14. புதுக்குடி 15. கவணையேந்தல் (பேச்சற்றது) 16. கும்மங்குடி.

ஏழுகோட்டை நாடு திருப்பொற்கோட்டை மாகாணத்திற்குரிய கிராமங்கள் 25. அவற்றின் பெயர்கள் -- :

1. திருப்பொற்கோட்டை 2. நாட்டுச்சேரி 3. ஏரணிக்கோட்டை 4. பஞ்சமாரி 5. கீழ்ப்புளி 6. தூணுகுடி 7. மேலணை 8. பழங்குளம் 9. குருந்தன்குடி 10. கம்பக் கோட்டை 11. செகுடியேந்தல் 12. குணங்குடி 13. கவலை வென்றான் 14. கீழக்கோட்டை 15. மேலக்கோட்டை 16 சம்பானெட்டி 17. களியணி 18. மருதாந்நை 19. ஊருணிக்கோட்டை 20 வலையன்வயல் 21. மாணிக்கக் கோட்டை 22. பறையனேந்தல் (பேச்சற்றது) 23. சிறுக்காரை 24. சின்னக் கம்பக்கோட்டை (பேச்சற்றது) 25. பிடாரனேந்தல்.

ஏழுகோட்டை நாடு இலுப்பக்குடி மாகாணக் கிராமங்கள் 14. அவற்றின் பெயர்கள் - :

1 இலுப்பக்குடி 2. நெய்வயல் 3. அதங்குடி 4. நாச்சியேந்தல் 6 அரையணி 7. பிராந்தணி 8. இளங்குன்றம் 9. புல்லாவயல் 10 சிறுகை 11. நெட்டையேந்தல் 12 அணுக்கி 13 அல்லிக்கோட்டை 14 மணல்புன்செய்.

ஏழுகோட்டை நாட்டின் மொத்த கிராமங்களின் எண்ணிக்கை (69) அறுபத்தி ஒன்பதாகும்.

7 கிளைகள்! 14. நாடுகள்!
ஏழுகோட்டை நாடு (பத்தி 2 )

இடைக் காலத்தில் ஏழுகோட்டை நாட்டின் கட்டமைப்பு சிதைந்து போயிருந்தது. நாட்டு அம்பலகாரர் என்ற பதவி பரம்பரைத் தன்மையுடையது. ஏழுகோட்டை நாட்டின் பரம்பரை அம்பலகாரராக75 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் பஞ்சமாரி ஆரோக்கியசாமி உடையார்.

ஓரிரண்டு தலைமுறைக்கு முன்பு தான்ஏழுகோ நாட்டு அம்பலகாரக் குடும்பம் கிறித்தவ மதத்திற்கு மாறியிருந்தது. கட்டமைப்பு சீர்குலைவுக்கு இம் மதமாற்றமும் ஓரு காரணமாக இருந்திருக்கலாம்

நாட்டம்பலம் மதம் மாறியதால் வேறுசில. பேதங்களும் ஏற்பட்டன. கண்டதேவி, திருவாடானை மற்றும் உள்நாட்டுக் கோயில்களில் திருநீறு தீர்த்தம் பரிவட்டம் காளாஞ்சி மரியாதைகள் பெறுவதில் பிரச்சனைகளும் மனக் குமுறல்களும் ஏற்பட்டன. விளைவு?

அப்போது ஏழுகோட்டை நாட்டில் வலிமைவாய்ந்தவராகத் திகழ்ந்த நெய்வயல் ஆறுமுகம் (அகமுடையார்) சேர்வையிடம் பொறுப்பை ஒப்படைத்தார் ஆரோக்கியசாமி உடையார்.

நாட்டம்பலம் பதவி அரசர்களால் வழங்கப்பட்டது. தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்வது. நாட்டம்பலத்திற்கு வாரிசின்றிப் போனால் ஏழுகிளைக் கள்ளர்களில் ஒருவரை அவர்தன் பிள்ளையாகத் தத்தெடுக்கலாம். வாரிசுமின்றி தத்தும் எடுக்காமல் நாட்டம்பலம் இறந்துபோனால் அவருடைய தம்பியோ தம்பிமகனோ அம்பலமாகமுடியும் அவர்களும் இல்லையெனில் பங்காளிகளில் ஒருவரை அந் நாட்டார்கள் முன்னிலையில் தேர்வு செய்யலாம். சிக்கல் ஏற்பட்டால் 14 நாடுகளின் தலைமை அம்பலகாரர் உதவியை நாடலாம் அதனிலும் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பால் நாட்டம்பலம் ஆனவரும் இருக்கிறார்.

இவற்றையெல்லாம் சிந்தித்த நெய்வயல் ஆறுமுகம் சேர்வை, தன்னை நாட்டு அம்பலமாக ஏற்கமறுத்து நாட்டுத் தலைவராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

சிதைந்திருந்த ஏழுகோட்டை நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சி செய்தார்.படைபலம் உள்ளவராக ஆளுமைமிக்கவராக திகழ்ந்த நெய்வயலாரிடம் பணபலமில்லை. அந்த விஷயத்தில் அதங்குடி பிச்சைக்குட்டி உடையார், சேர்வைக்கு கை கொடுத்திருக்கிறார்.நெய்வயல் ஆறுமுகம் சேர்வை தனது முதுமையில் துடுப்பூர் இராமநாதன் அம்பலத்தை ஏழுகோட்டை நாட்டின் தலைவராக்கினார்.

துடுப்பூர் இராமநாதன் அம்பலம் ஏழுகோட்டை நாட்டுமக்களின் செல்வாக்குப் பெற்ற ஆளுமையாகத் திகழ்ந்தவர். கண்ணங்குடி ஒன்றியப் பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஏழுகிளை நாடுகளின் அம்பலகாரர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார். கௌரவமாகச் செயல்பட்டவர்.

நாட்டின்மீது பற்றுறுதியும், தொண்டுணர்வும் கொண்ட 24 பேரை ஏழுகோட்டை நாட்டின் செயற்குழு உறுப்பினர்கள் ஆக்கினார் துடுப்பூரார். அந்தக் குழுவில் அவரும் ஒருவர். செயர்குழுவால் அவர் தலைவராக்கப் பட்டார். செயலாளரும் பொருளாளரும் கூட தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். செயற்குழு நாட்டிற்குரிய தலைவரை தேர்வு செய்யும் தகுதி பெற்றிருக்கிறது. தலைவரை பதவிநீக்கம் செய்யும் உரிமை செயற்குழுவுக்கு இல்லை.

தலைவர் தான் செயல்பட இயலாத நிலையில் புதிய தலைவரை செயற்குழுவில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை செயல்படுத்தினார் துடுப்பூர் இராமநாதன் அம்பலம்.

ஏழுகோட்டை நாட்டின் ஒற்றுமையை ஆன்மிகப் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய துடுப்பூர் இராமநாதன் அம்பலம், தான் மிகுந்த ஆரோக்கியமாக செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே, 1987 இல் நாட்டின் புதிய தலைவராக துடுப்பூர் பழனிநாதன் அம்பலத்தை நியமித்தார். புதிய தலைவருக்கு பக்க பலமாக பல ஆண்டுகள் செயல்பட்டார்.

ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஏழுகோட்டை நாட்டின் தலைவராகப் பணியாற்றிய துடுப்பூர் பழனிநாதன் அம்பலம் சமீபத்தில் காலமானார். தான் உயிரோடு இருக்கும் போதே அடுத்த தலைவரை அவர் தேர்வு செய்யவில்லை!

துடுப்பூர் பழனிநாதன் அம்பலம் மறைவுக்குப் பிறகு, திருப்பொற்கோட்டை ஊர் அம்பலகாரர் சேது.ஜோதிநாதன் அம்பலத்தை ஏழுகோட்டை நாட்டிற்கு தலைவராகத் தேர்வு செய்தது 24 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு.

துடுப்பூர் பழனிநாதன் அம்பலம் தலைவராக இருந்தபோது, செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் தலைவருடன் இணைந்து பணியாற்றியவர் தான் சேது.ஜோதிநாதன் அம்பலம்.

திருப்பொற்கோட்டை 2020 குடிகளைக் கொண்ட பெரிய ஊர். இந்தப் பேரூரின் அம்பலகாரர் தான் சேது.ஜோதிநாதன் அம்பலம். ஏழுகோட்டை நாட்டின் புதிய தலைவரான அவரை, திருப்பொற்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

"ஏழுகிளை 14 நாடுகளில் எங்கள் ஏழுகோட்டை மட்டுமே நிர்வாக ரீதியாக வேறுபட்டிருக்கிறது. ஜனநாயக பண்போடு செயல்படக்கூடிய வாய்ப்பென்று இதை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

பக்தி வாயிலாக பண்பாட்டு வாயிலாக மட்டுமின்றி விவசாயம் கல்வி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகவும் எங்கள் ஒற்றுமையை நாங்கள் பயன்படுத்துவோம். செயற்குழுவை நூறு உறுப்பினர்கள் கொண்டதாக மாற்றவேண்டும். பொதுக்குழுவை உருவாக்க வேண்டும் மாகாணத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யவேண்டும்!"விருப்பத்தை வெளிப்படுத்தினார் சேது.ஜோதிநாதன் அம்பலமம்.

ஒருவாரம் முன்புதான் திருப்பொற்கோட்டை ஐயனார் கோயில் குடமுழுக்கு நடந்திருக்கிறது.விழாவை பெரும் பொருட்செலவில் சிறப்பாக நடத்திய பெருமிதம் அவர் முகத்திலும் குரலிலும் பிரதிபளித்தது.

ஏழுகோட்டை நாட்டுக்குரிய கிராமப் பெயர்களை மூன்று தகவலாளர்களிடம் பெற்றிருந்தேன். சரிபார்ப்பதற்காக ஏழுகோட்டை நாட்டின் பண்டாரம் சுப. அழகு. வேலுப் பண்டாரத்தை, துடுப்பூரில் உள்ள அவருடைய சிறிய வணிக வளாகத்தில் சந்தித்தேன்.

"என் தகப்பனார் காலத்தில் திருவாடானையில் இருந்தும் இரவுசேரி நாட்டில் இருந்தும் தேர்த்திருவிழா அழைப்பு ஓலை வரும் இரவுசேரி நாடு எங்கள் அன்னை நாடு. இந்த இரண்டு தேரோட்டங்களிலும்! விநாயகர் வடம் எங்கள் ஏழுகோட்டை நாட்டுக்கு உரியன.

நூறு இருநூறு வருடத்திற்கு முன்பு தேரோடும் ராஜவீதிகள் மண்வீதிகளாக அல்லது சரளை வீதிகளாகத்தான் இருந்தன. மழை காரணமாகவோ அல்லது முட்டுக்கட்டை போடுபவரின் கவனக் குறைவாலோ தேர்ச் சக்கரங்கள் சகதியில் சிக்கிக் கொண்டுவிடும் தேர் இரண்டுமூன்று நாட்கள் கூட வீதியில் நிற்கும் சாமியை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு நாடுகள் உறங்க முடியுமா?

சொர்ணமூர்த்தி தேர் வடமேற்கு மூலையில் சகதியில் மூன்று நாட்களாக நின்று கொண்டிருக்கிறது. நாளை காலை 9 மணிக்கு வீட்டுக்கொருவர் தேர் இழுக்க வரவேண்டும் வராத வீடுகளுக்கு நாடு தண்டம் விதிக்கும்! "என்று நான்கு நாடுகளிலும் தண்டோரா போடுவதுண்டு. கடமையும் அபராதமும் கள்ளர் குடிகளுக்கு மட்டும் தான்

அப்படியும் தேரை இழுத்து நிலைத்தலத்திற்கு கொண்டுவர இயலாத ஒருவருடம் கண்டதேவித் தேருக்கும் தேர்வடங்களுக்கும் உரிய நான்கு நாட்டாரின் அன்பு அழைப்பு ஏழுகோட்டை நாட்டாருக்கு வந்தது

"ஏழுகோட்டை நாடு வடத்தில் பங்கெடுத்து தேரை நிலைக்குத்த வைத்தால், ஏழுகோட்டை நாட்டுக்கு கிடைக்கப் போகும் மரியாதை என்ன? "எங்கள் நாட்டார் கேட்டிருக்கிறார்கள்!

" வாருங்கள்! சேர்ந்திழுங்கள்! தேர் நிலைக்குத்தியதும் உங்களுக்கான உரிமை நிச்சயம் கிடைக்கும்! "உறுதியளித்தார்களாம் நான்கு நாட்டார். வலுவோடு திரண்டு சென்றது எங்கள் ஏழுகோட்டை நாடு. நான்கு வடங்களின் நுனியிலும் விநாயகர் வடங்கள் முடியப்பட்டன.நான்கு நாட்டார்களோடு இணைந்து ஏழுகோட்டையும் இழுத்தது. அரைச் சக்கர ஆழத்திற்கு சகதிக்குள் புதைந்திருந்த தேரை நிலைக்குத்த வைத்தோம்.அந்த வருடத்தில் இருந்து தேரோட்டத்தில் விநாயகர் வடம் பிடிக்கும் உரிமையையும் ஏழாம் வேற்றுமை மண்டகப்படியை ஏற்று நடத்தும் உரிமையையும் ஏழுகோட்டை நாடு பெற்றது. இதே போலத்தான் திருவாடானையிலும் உரிமை பெற்றோம்

இக் காலத்தில் விநாயகர் வட உரியை விடுபட்டுப் போனது. ஏழாம் மண்டகப்படி உரிமை மட்டும் நிலைத்தது.

இந்த வரலாறெல்லாம் என் தகப்பனாரும் எங்க நாட்டுப் பெரியவுகளும் சொன்னதுதான் நான் உங்களுக்குச் சொல்கிறேன்! " சொன்னார் ஏழுகோட்டை நாட்டுப் பண்டாரம் சுப. அழகு. வேலுப் பண்டாரம்.

7 கிளைகள்! 14. நாடுகள்!
ஏழுகோட்டை நாடு! (3 )
சித்தானூரில் மகாத்மா!

தீண்டாமையை எதிர்த்த முதல் அறிஞன் திருவள்ளுவர். " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ....!" அழுத்தமாக பதிவு செய்தார். ஆக தீண்டாமைக்கு எதிரான போராட்டக்குரல் 2050 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

தீண்டாமைக்கு எதிராக வான்புகழார் தொடங்கிய அகிம்ஸைப் போரை 2050 ஆண்டுக்குப் பிறகு முடிவுக்கு கொண்டுவந்தார் அண்ணல் காந்தியடிகள்.

வெள்ளையர் கொற்றமும் தீண்டாமைக் கொடுமையும் பாரதத்தில் இருந்து துரத்தப்பட வேண்டியவை என்று சபதமேற்றார். அதற்காக நான்காயிரம் கிலோமீட்டர் தொலைவு பாதயாத்திரை மேற்கொண்டார். மனிதநேய பிரச்சாரம் செய்தார்.

மற்ற மதத்தோர் தீண்டாமையை மதமாற்றக் கருவியாக்கிக் கொண்டனர். மாகாத்மாவோ தீண்டாமையை பரிகாரமற்ற பாவமாக்கினார். மனிதமற்ற செயலாக்கினார். தண்டனைக்குரிய குற்றமாக்கினார்.

இந்த மண்ணின் பூர்வ குடிகளில் ஒரு பகுதியினர் மீது தீண்டாமை திணிக்கப் பட்டிருந்தது. அவர்கள் அனுபவித்த வெங்கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல! .

கல்வி கற்கக் கூடாது. பெருங்கோயில்களுக்குள் நுழையக்கூடாது. இடுப்புக்கு மேல் ஆடையணியக் கூடாது. மரத்தாலான தாலியே அணிய வேண்டும். குனிந்து நுழையும் குடிசையில்தான் வசிக்க வேண்டும். செருப்பணியக் கூடாது. குடைபிடிக்கக் கூடாது. இவையெல்லாம் தீண்டாமைக் கொடுமைகளில் சிலவே!

இருபது முறை தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார் மகாத்மா. 184 நாட்கள் தமிழ்நாட்டில் பயணித்திருக்கிறார் .

1934 லிலும் வந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் சில பகுதிகளில் சட்டைக் கிளர்ச்சிகள் நடந்தன.

சித்தானூரில் வக்கனக்கோட்டை பூச்சி என்ற பள்ளர் சாதிப் பெரியவர் மேல்சட்டை அணிந்தார் என்பதற்காக நாட்டார் தரப்பினரால் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தகவல் மகாத்மாவுக்குத் தெரிவிக்கப் பட்டது.

அடுத்துவரும் எனது தமிழகப் பயணத்தில் கட்டாயம் சித்தானூர் போவேன். பூச்சிக்கு அஞ்சலி செலுத்துவேன். நாட்டார் பிரதிநிதிகளுடன் பேசுவேன் என்று தனது அரிஜன் இதழில் எழுதினார்.

எழுதியபடி 27-01-1934 அன்று காலையில் மதுரையில் இருந்து புறப்பட்டார் .அமராபதி புதூரை தாண்டிய போது அவசரத் தகவல் வந்தது.

" மகாத்மாவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக, நாட்டார் தரப்பினர் முள்ளுக்குண்டுவில் இருந்து தேவகோட்டை வரை காத்துநிற்கின்றனர். அவர்களில் சிலர் உலக்கைகளில் கறுப்புகொடி கட்டியுள்ளனர்! "

காங்கிரஸ் தலைவர்கள் மகாத்மாவை கட்டாயப்படுத்தி ஆறாவயல் செம்பொன்மாரி கண்டதேவி வழியாக கருதாவூருணிப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

மறுநாள்(28-01-1934) காலை சித்தானூருக்கு மகாத்மா வந்தார்.

1933 ஆம் ஆண்டு, ஏழுகோட்டை நாட்டின் தலைக் கிராமமான சித்தானூரில் நடந்த கலவரம் குறித்தும் அண்ணல் காந்தியின் வருகை குறித்தும் அறிந்துகொள்வதற்காக 18-07-2022 அன்று சித்தானூருக்குச் சென்றேன்.

சித்தானூர் பெரிய கண்மாய்க் கரையில் பெரியவர் பூச்சியின் கல்லறை இருந்ததாக சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். கண்மாய் கரை நெடுகிலும் நடந்தேன்.சமாதிக்கான தடயம் கூட காணக் கிடைக்கவில்லை.

அந்தப் பகுதியில் நூறுநாள் வேலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட மகளிர் "எங்களுக்குத் தெரியாமல் பூச்சியய்யாவுக்குச் சமாதியா? இல்லவே இல்லை! பூச்சியய்யா கொல்லப்பட்ட வயலில், வயலின் சொந்தக்காரர் தீபமேற்றிக் கும்பிடுவார்கள். அதோடு சரி! "என்றவர்கள் மேலும் தகவலறிய " வடக்கிக் குடியிருப்பில் பள்ளிக்கூடத்தான் கருப்பையா தாத்தாவைப் போய் பாருங்கள்! " அனுப்பிவைத்தார்கள்.

தோட்டத்துக் கொட்டகையில் கட்டிலில் பெரியவர் பள்ளிக்கூடத்தார் கருப்பையா ஐம்புல ஆரோக்கியத்துடன் அமர்ந்திருந்தார். வயது 96.

எனது ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் அவர் மிகத் தெளிவாகச் சொன்ன பதிலுரை இதோ -

" அந்தக் காலத்தில் மேல்சட்டை கலவரங்கள் நடந்தது உண்மை தான். ஆனால் அவை இரவுசேரி நாட்டிலோ ஏழுகோட்டை நாட்டிலோ நடக்கவில்லை. இங்கே நடந்தது பொய்சொல்லா மெய் ஐயனார் கோயில் புரவியெடுப்புக் கலவரம்.

எங்க சாதிசனமும் புரவிகள் செய்து தயாராக வைத்திருந்தோம். விடிந்தால் புரவியெடுப்பு. புரவிகளை காளைகளை மதலைகளை தூக்கிச்சென்று ஐயனாருக்கு அர்பணிக்கும் நாள்.

நமக்குச் சரிசமானமாக இவனுகளும் புரவி தூக்குவதா? என்று எங்கள் புரவிகளை அடித்து நொறுக்குவதற்காக சித்தானூரிலும் சுண்டமத்தியிலும் இருந்து நாட்டார் தரப்பில் நாற்பதைம்பது பேர் கம்புகளோடு வந்தார்கள். எங்க ஜனங்களும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்திருக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் ஏழெட்டுப் பேருக்குப் படுகாயங்கள்.

கலவரம் முடிந்து நாட்டார் தரப்பு கூப்பிடு தூரத்திற்கு திரும்பிச் சென்றபோது வக்கனக்கோட்டையில் இருந்து சிலம்பக் கம்போடு ஓடிவந்திருக்கிறார் பூச்சித் தாத்தா.

பூச்சியும் அவர் அண்ணன் பழனியும் சிலம்பம் சுழற்றுவதில் கெட்டிக்காரர்கள். நாலாதிசைகளில் இருந்தும் பறந்துவரும் கற்களைத் திருப்பிவிடுவதில் வல்லவர்கள். கால்கை முடங்கிக் கிடந்த அண்ணன் பழனி " போடா பூச்சி! சிலம்பக் கம்பை எடுத்துக் கொண்டு ஓடு! " என்று அனுப்பினாராம்.

சற்று முன்தான் ஆளுய வைக்கோல் கட்டை மனைவி தலையில் தூக்கிவிட்டு, தேலகோட்டை சந்தையில் விற்க அனுப்பியிருக்கிறார் பூச்சி. தூக்கிவிடும் போது வைக்கோல் கட்டு கனமாக இருந்திருக்கிறது. "இதைக் கொண்டுபோய்ச் சேக்கிறதுக்குள்ள உன் தாலி அறுந்து விழுகப்போகுது! " என்று எதார்த்தமாகத் தான் சொன்னாராம் பூச்சி. இயல்பாகச் சொன்ன அந்த வார்த்தைகளே மீளாத சாபமாகி விட்டன.

7 கிளைகள்! 14 நாடுகள்!
ஏழுகோட்டை நாடு! சித்தானூரில் மகாத்மா!

ஓடிவந்த பூச்சி, கூப்பிடு தூரத்தை கடந்துகொண்டிருந்த எதிர்க்கூட்டத்தை சவால்விட்டு கூப்பிட்டிருக்கிறார்.

கூட்டம் ஆரவாரத்தோடு திரும்பியது. முன்னேறமுடியாமல் தன்னந்தனியே சிக்கிக்கொண்ட அவர் சிலம்பத்தை சுழற்றியபடி பின்வாங்கினார் ..வயலுக்குள் படர்ந்திருந்த ஏதோ கொடி பின்னிவிட மல்லாக்க விழுந்துவிட்டார் .விழுந்து கிடந்தரை விட்டுவிட்டா போவார்கள்? பூச்சியின் உயிர் போய்விட்டது என்று தான் கூட்டம் போயிருக்கிறது ..

எங்க ஆட்கள் போய்ப் பார்க்கும்போது அதோ அந்த வயலுக்குள் இழுத்துக்கொண்டு கிடந்திருக்கிறார். தூக்கிவந்து எங்க வீட்டுக்குள் போட்டுவிட்டு வைத்தியரைத் தேடி ஓடியிருக்கிறார்கள். வருமுன்னே உயிர் போய்விட்டது.

சித்தானூர் பெரியகண்மாய் புறகரையில் சுடுகாட்டில் பூச்சித் தாத்தாவை புதைத்திருக்கிறார்கள். சமாதி ஏதும் கட்டவில்லை.

பூச்சித் தாத்தா பூச்சித் தாத்தா என்று உருத்தோடு சொல்கிறேனே ஏன் தெரியுமா? அவர் என் அப்பத்தாவின் கூடப் பிறந்த தம்பி!

ஐந்தாறு மாதம் கழித்து மகாத்மா காந்தி எங்க சித்தானூருக்கு வந்தாக. அப்ப எனக்குப் பத்துப் பதினோரு வயது. பெரியகண்மாய் வடக்கிக் கடக்கொம்பு பக்கத்தில் காந்தி வந்த மோட்டார்கார் மணலில் சிக்கிக் கொண்டுவிட்டது. அங்கேயிருந்து மஞ்சுவிரட்டுப் பொட்டலுக்கு எல்லாரும் நடந்து வந்தாங்க.

மகாத்மா காந்தி இங்கிலீஸ்ல சொல்றதை எங்களுக்கு தமிழ்ல சொல்றதுக்கு தேவகோட்டையில இருந்து ஒரு பாதிரியாரையும் கூட்டிவந்தாங்க.

நாங்க எல்லாரும் காங்கிரஸ் கொடியை புடிச்சிக்கினு " மகாத்மா காந்திக்கு ஜே! வந்தேமாதரம்! "னு சொன்னோம்.

" இனிமே இப்பிடிச் சாவு எங்கேயும் நடக்கக் கூடாது. நீங்க எல்லாரும் எல்லாருக்கும் சமமா வாழணும் ஆனால் யாரோடயும் சண்டை போடக்கூடாது. மது அருந்தக் கூடாது. கள் குடிக்கக் கூடாது. நண்டுநத்தை ஊமச்சி சாப்பிடக்கூடாது. மது அருந்த மாட்டோம் கள் குடிக்க மாட்டோம் சத்தியம் பண்றவங்க " மட்டும் கையை தூக்குங்க! மகாத்மா சொன்னார் .வயிரன் ஒருத்தன் மட்டும் கையை தூக்கலை.

" நீ ஏன் கையை தூக்கவில்லை? "கேட்டார் மகாத்மா.

" எனக்கு வயிற்று வலி. குடிக்காமல் இருக்கமுடியாது! "வயிரன் சொன்னான்.

"சாப்பிட்டால் ஆயுள் முழுக்க வயிற்றுவலி உன்னை விட்டுப் போகாது! "

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இந்த சித்தானூருக்கு கூட்டிவந்தது பூச்சித்தாத்தா தான். அவருக்கு கல்லறைக் கோயில் கட்டத் தவறிவிட்டோம் வருத்தக்குரலில் சொன்னார் சித்தானூர் பள்ளிக்கூடத்தார் கருப்பையா.

அன்று (28-01-34.)மாலை தேவகோட்டை முனியன் கோயில் திடலில் பொதுக்கூட்டம். தீண்டாமைக் கொடுமைகள் பற்றியும் நாட்டார் -- அரிஜனங்கள் ஒற்றுமையை வலீயுறுத்தியும் நீண்டநேரம் பேசினார் அண்ணல். அதன்பிறகு ஒரு வீட்டில் நாட்டார் பிரதிநிதிகள் 150 பேருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்." நாட்டார் பிரதிநிதிகளே! அரிஜனங்களைக் காட்டிலும் பிறப்பால் நீங்கள் உயர்ந்தோர் எனக் கருதினால் அது தவறாகும். அரிஜனங்கள் எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கக் கூடாது அவர்களுக்கு உங்கள் வயல்களில் வேலைகொடுக்க நீங்கள் மறுக்கக்கூடாது. நல்ல காரியங்களை நாம் ஒன்றாக ஒற்றுமையாகச் செய்யவேண்டும் ...! "அண்ணலின் பேச்சுவார்த்தைக்கு நாட்டார் பிரதிநிதிகள் உடன்படவில்லை.

நாட்டார் பிரதிநிதிகளுடன் பேசுவதற்காகவே அதிகமாக ஒருநாள் தேவகோட்டையில் தங்கினார் மகாத்மா. மறுநாளும் உடன்பாடு ஏற்படாததால், தனது சார்பாக ஒரு குழுவை ஏற்படுத்திவிட்டு சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் குழுவில் பெரும்பாண்மையோர் கள்ளர்களே! அந்தக் குழுவுக்கும் பழைமைவாத பிரதிநிதிகளுக்கும் நடந்த பலமுனைப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.

சமாதானக் கூட்டங்களை சலிப்பின்றி நடத்தியதில் தீவிரம் காட்டி அண்ணல் காந்திக்கு வெற்றி தேடித் தந்தவர்கள் தேவகோட்டை முகுந்த் ராஜ் ஐயங்காரும் அரிஜன் ரெங்கண்ணா என அன்போடு அழைக்கப்பட்ட ரங்கசாமி ஐயங்காரும் ஆவர் என வரலாறு பதிவு செய்திருக்கும்.

7 கிளைகள்! 14 நாடுகள்
ஏழுகோட்டை நாடு!
உடையார்களும் சேர்வைகளும்!

ஏழுகோட்டை நாடு தொன்னூற்று ஆறரைக் கிராமங்களை கொண்டது என்று அந் நாட்டுப் பெரியவர்கள் இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறார் .

ஏதோ ஒரு காரணத்தால் புறக்கணிக்கப்பட்ட சேந்தணிக் கிராமத்தை கணக்கில் கொண்டாலும் எழுபது கிராமங்களே வருகின்றன.

இரவுசேரி நாட்டின் வாரக்கால் நாடென்பதை இந் நாட்டின் முதியோர்கள் ஏற்க தயாராக இல்லை. எங்கள் நாட்டின் சேர்க்கை தான் இரவுசேரி நாடு என்கின்றனர் பலர். இரவுசேரி நாட்டின் உட்கடை எங்கள் நாடு என்கின்றனர் பலர்.

தாழையூர் நாட்டில் இருந்தல்ல, ஏழுகோட்டை நாட்டிலிருந்தே இரவுசேரி நாடு பிரிக்கப் பட்டிருக்க வேண்டும் என நம்ப வேண்டியுள்ளது. இது நிரூபிக்க ஆதாரமற்ற என் கருத்து. இரண்டு நாடுகளையும் இணைத்தால் தொன்னூற்றாறரைக் கிராமங்களை கொண்டுவரலாம்.

ஏழுகோட்டை நாட்டில் இப்போது 69 கிராமங்கள் உள்ளன.

பேச்சற்றவை நான்கு. கள்ளர்களும் மற்ற சாதியினரும் வாழ்வன 27. எஞ்சிய முப்பத்தெட்டுக் கிராமங்களிர் கள்ளர்கள் இல்லை :மறவர் அகமுடையார் உடையார் மற்றும் பல சாதியினர் வாழ்கிறார்கள்.

ஆக, ஏழுகோட்டை நாட்டில் கள்ளர் வாழும் கிராமங்கள் பாதிக்கும் குறைவானவையே!

கள்ளர்கள் வாழும் ஊர் அம்பலங்களில் ஒருவர் கூட நாட்டம்பலத்திற்கான உரிமையைக் கோரவுமில்லை :உரிமை பாராட்டியதுமில்லை.

நாட்டம்பலம் நாட்டு அம்பலகாரர் நாட்டாண்மை நாடாள்வார் தலசி என்பன நாட்டின் தலைவரைக் குறிக்கும் சொற்களே.

"ஏழுகோட்டை நாட்டின் அம்பலகாரர் யார்? " கள்ளர் பிரமுகர்கள் ஐய்பதுக்கும் மேற்பட்ட பெரியோர்களிடம் கேட்டேன்.

"நாட்டு அம்பலகாரர் என்று யாருமில்லை. பஞ்சமாரி சவுரிமுத்து உடையார் என்ற அண்ணாசாமி உடையாருக்கு தலசி பட்டம் வழங்கப் பட்டிருக்கிறது. கண்டதேவி திருவாடானை கோயில்களில் மட்டுமின்றி சித்தானூர் அழியாப்பதி சுண்டமங்கலம் துடுப்பூர் லெக்கமாரி தேரளைப்பூர் கீரணி திருப்பாக்கோட்டை உள்ளிட்ட ஏழுகோட்டை நாட்டு ஐயனார் கோயில்களிலும் சவுரிமுத்து உடையார் சந்ததிகளுக்கு மரியாதையுண்டு. தனது தனிப்பட்ட செல்வாக்கால் மக்களைத் திரட்டிச்சென்று தேர்களை இழுத்து நிலைக்குத்த வைத்த சாதனைக்காக சவரிமுத்து உடையாருக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் தான் தலசி பட்டம்.! " பெரும்பாலோர் சொன்னதை உறுதிப் படுத்தினார் மருதாந்தை ஊர் அம்பலகாரரான அழகு. மாணிக்கத் தேவர்.

ஆக பஞ்சமாரி சவுரிமுத்து உடையாருக்கு கிடைத்த தலசி பட்டம் ஒரு சிறப்புப் பட்டம் தான். நாட்டு அம்பலத்திற்கான உரிமை இல்லை.

பஞ்சமாரி சவுரிமுத்து உடையார் மக்களைத் திரட்டி எப்போது தேரிழுத்தார்? யாரிடமும் பதிலில்லை.

1860 வரை உஞ்சனை செம்பொன்மாரி தென்னாலை இரவுசேரி ஆகிய நான்கு நாடுகளும் ஒற்றுமையாக கண்டதேவி வடம் பிடித்திருக்கிறார்கள். நான்கு நாடுகளும் இணைந்திமுக்கும் போது இன்னொரு நாட்டின் உதவி நிச்சயம் தேவையில்லை.

மற்ற மூன்று நாடுகளையும் பகைத்துக் கொண்டு புறக்கணித்துவிட்டு 1860 முதல் 1875 வரை உஞ்சனை நாடுமட்டும் தனித்து நின்று தேர்த் திருவிழாவை நடத்தியிருக்கிறது. இந்த 15 ஆண்டு காலத்தில் உஞ்சனை நாடு ஏழுகோட்டையின் உதலியை நாடியிருக்குமோ? இல்லை! நாடியிருக்காது!

உஞ்சனை நாட்டிற்கு உதவி தேவையெனில் அது தனது வாரக்கால் நாடுகளான வடம்போகி ஏம்பல் ஆற்றங்கரை நாடுகளையோ, தனது தந்தை நாடான பரம்பூர் நாட்டையோ தான் அழைத்திருக்கும்.

1875 இல் கண்டதேவி தேரோட்டத்தில் பெருங் கலவரம். எட்டு மனிதர்களை பலிகொண்ட கலவரம். உஞ்சனை நாட்டிடமிருந்து கண்டதேவி தேர்த் திருவிழாவை மற்ற. மூன்று நாடுகளும் தம்வயப் படுத்தின.

இந் நாடுகளும் ஐந்தாறு ஆண்டுகள் மட்டுமே தேர்த்திருவிழாவை நடத்தியுள்ளன. பிறகு தேர்த் திருவிழாவும் கண்டதேவி கோயிலும் தேரும் வடங்களும் மரியாதைகளும் தேவகோட்டை சின்ன நாராயணன் செட்டியாருக்கு உரியதாகி விடுகிறது. 1894 வரை செட்டியார் தான் நடத்தியிருக்கிறார்.

1895 ஆம் ஆண்டு உஞ்சனை நாட்டு மேலக் கடியாவயல் சேர்வையின் எழுச்சியாலும் முயற்சியாலும், நான்கு நாடுகளும் இணைகின்றன.சின்னநாராயணன் செட்டியாரிடமிருந்து தேர்த் திருவிழாவை மீட்கின்றன.

ஆக, 1885- 1895 வரையிலான பத்தாண்டுகள் செட்டியார் நடத்தியுள்ளார். இக் காலத்தில் தான் ஏழுகோட்டை மனிதவளத்தை பஞ்சமாரி சவுரிமுத்து உடையார் திரட்டிவந்து தலசி பட்டத்தையும் கோயில் களின் மரியாதையையும் பெற்றிருக்க வேண்டும்.

சவுரிமுத்து உடையார் ஆரோக்கியசாமி உடையார் மிக்கேல் உடையார் ஆரோக்கியசாமி உடையார் ...இப்போது தனராஜ் உடையார் ....இவர் இப்போது செயற்குழு உறுப்பினர்.

நெய்வயல் ஆறுமுகம் சேர்வையிடம் ஆரோக்கியசாமி தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் என்று கடந்த பதிவுகளில் எழுதியிருந்தேன். அதில் மாற்றமிருக்கிறது என்று புதிய தகவலொன்றைச் சொன்னார் ஏழுகோட்டை நாட்டின் தலைவர் சேது. ஜோதிநாதன் அம்பலம்.

அத் தகவல் - "பஞ்சமாரி லட்சுமணன் சேர்வை ( அகமுடையார் ) வீட்டில் இருந்து ஒரு நாட்குறிப்பு கையெழுத்துப் பிரதி கிடைத்திருக்கிறது. 1911 ஆம் ஆண்டு பஞ்சமாரி லட்சுமணன் சேர்வை தலைவராக்கப் பட்டிருக்கிறார். இருபது ஆண்டுகள் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார் புதிய தலைவரை தேர்வு செய்யாமலே காலமாகி விட்டார் இந்த தாட்குறிப்புத் தொகுப்பு அவர் சொல்லச் சொல்ல அவருடைய கணக்கப்பிள்ளை எழுதியது. பல இடங்களில் நாட்டுத் தலைவர் என்றும் பல இடங்களில் நாட்டு அம்பலம் என்றும் எழுதப் பட்டிருக்கிறது.

கப்பலூர் நாட்டம்பலத்தோடும் இரவுசேரி நாட்டம்பலத்தோடும் இணைந்து பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார் லட்சுமணன் சேர்வை. அவர் இறக்கும்போது துணைத் தலைவராக அவருடைய மகள் வழிப்பேரன் பஞ்சமாரி ஆறுமுகம் சேர்வை இருந்திருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு இந்த ஆறுமுகம் சேர்வை தான் துடுப்பூர் இராமநாதன் அம்பலத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்.

ஏழுகோட்டை நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்த முதல் கள்ளர் துடுப்பூர் இராமநாதன் அம்பலம்.

ஐயனார் கோயில் மரியாதைகள்!
அனுமந்தக்குடி தர்கா!

தகவல் திரட்டுவதற்காக சித்தானூருக்கு சென்றிருந்த போது தகவல்களோடு, முனைவர் எஸ்.எம். கமால் எழுதிய '' விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் '' என் புத்தகத்தையும் தந்தார் ந.கோட்டைசாமி அம்பலம்.

சேதுநாட்டின் கடைசி மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வரலாற்று நூல் இது. 1860இல் பிறந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அடிவருட மறுத்ததால் 22 வருடங்கள் திருச்சி, சென்னை கோட்டைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். 1809 இல் சென்னை கோட்டைச் சிறையில் இந்த வேங்கையின் மரணம் நிகழ்ந்தது.

இந் நூலில் ஏழுகோட்டை நாடு குறித்த ஓரிரண்டு செய்திகள் உள்ளன.

நான்கு வேதங்களிலும் நற்புலமை பெற்றிருந்த வெங்கிட்ட ராம ஐயங்காருக்கு நெட்டையேந்தல், மேலக்கோட்டை கிராமங்களை கொடையளித்திருக்கிறார் இம் மன்னர்.

முத்தையா புலவருக்கு ஊருணிக்கோட்டையிலும் மாசிலாமணிப் புலவருக்கு அனுந்தகுடியிலும் நஞ்சை நிலங்கள் தானம் அளித்திருக்கிறார்.

இன்னுமொரு துணைச் செய்தி. முத்துநாட்டு கிராமமான மாடக்கோட்டையை திருவாரூர் சிதம்பர மடத்திற்கு தானம் அளித்திருக்கிறார்.

இவைகளுக்கான பட்டய விபரங்கள் ஏதுமில்லை.

ஏழுகோட்டை நாடு முழுக்க உள்ள ஐயனார் கோயில்களில் கடைபிடிக்கப் படும் மரியாதை வரிசையை பட்டியலிட்டார் நாட்டுப் பண்டாரமான வேலுப் பண்டாரம்.

முதல் மரியாதை :பிராமணர்
இரண்டு :சைவர்
மூன்று :அரண்மனை
நான்கு : பிறநாட்டார்
ஐந்து): நாட்டுக்கணக்கர்
ஆறு : வழியாச்சி முக்கந்தர் (வெள்ளாளர்)
ஏழு :ஆறுமுக முக்கந்தர் (வெள்ளாளர் )
எட்டு : கறுப்பு முக்கந்தர் (வெள்ளாளர்)
ஒன்பது :பெரியமீரா முக்கந்தர் (முஸ்லிம்)
பத்து : வீரபதிக் கோனார்
பதினொன்று : சுவுரிமுத்து உடையார்
பனிரெண்டு : வணங்காமுடி அம்பலம்(கள்ளர்)
பதிமூன்று :: திருவுடையார் அம்பலம் (கள்ளர்)
பதினான்கு :உடையார் அம்பலம் (கள்ளர்)
இம் மரியாதைப் பட்டியலில் நாட்டம்பலம் பெயரோ குறிப்போ கிடையாது.

செயற்குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட துடுப்பூர் சொ.இராமநாதன் அம்பலமும் அவருக்குப் பிறகு 35. ஆண்டுகள் தலைவராக பொறுப்பு வகித்த துடுப்பூர் பழனிநாதன் அம்பலமும் நாட்டுக்காக நிறையவே மெனக்கெடிருக்கிறார்கள்.

நகரத்தாரிடம் சிறைபப்பட்டிருந்த மண்டகப்படிகளை மீட்பதற்காகவும், மீட்டபிறகு சிறப்பாகத் தொய்வின்றி நடத்துவதற்காகவும் துடுப்பூரார்கள் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"இரண்டு மண்டகப்படிகளையும் ஏழுகோட்டை நாட்டின் கௌரவப் பிரச்சனையாகக் கருதினார்கள் துடுப்பூர் இராமநாதத் தாத்தாவும் என் தந்நை பழனிநாதனும். ஏன் சிரமப் படுகிறீர்கள்? திரும்ப எங்களிடமே திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்று நகரத்தார் கேட்டபோது இது ஏழுகோட்டை நாட்டின் கடமையும் பெருமையும் என்று கூறி மறுத்துவிட்டார்கள். 1982 இல் எங்கள் தகப்பனார் ( துடுப்பூர் பழனிநாதன் அம்பலம் )மலேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது மண்டகப் படிகளுக்காக பெருநிதி திரட்டி வந்து இராமநாதத் தாத்தாவிடம் கொடுத்தார். தாத்தா அதை பொறுப்போடு பயன்படுத்தி மண்டகப்படிகளை நான்கு நாடுகளும் பாராட்டும்படி நடத்தினார்கள். அப்பா தலைவர் பொறுப்புக்கு வந்ததும் செயற்குழுவை இன்னும் வலிமைப்படுத்தினார். குடும்பத்திற்கு நிகராக நாட்டின் கௌரவத்திற்கும் முக்கியத்துவம் தந்தார்கள். இப்போதுள்ள தலைவர் திருப்பாக்கோட்டையார் முன்னோர் பாதையில் நாட்டின் ஒற்றுமைக்கும் வலிமைக்கும் ஊக்கமூட்டிக் கொண்டிருக்கிறார்! "பெருமை பொங்கச் சொன்னார் துடுப்பூர் பழனிநாதனின் மகனும் செயற்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன்.

ஏழுகோட்டையின் பெருமையை சாதி மதம் கடந்த ஒற்றுமையை பறை சாற்றும் மற்றுமொரு விழா அனுமந்தக்குடி சந்தனக்கூடு விழா.

சுமார் 250 வருடங்களுக்கு முன்னம் அனுமந்தக்குடியில் சையது முகம்மது எனும் சித்தர் வாழ்ந்திருக்கிறார்.சித்த வைத்தியத்திலும் சித்து வேலைகளிலும் வல்லவரான அவரை ஆண்டவர் சாமி என்று மக்கள் போற்றிபிருக்கிறார்கள். அவருக்கு ஒரு சீடன். மாடு மேய்க்கும் வெள்ளாள வாலிபன். அவரை கறுப்பு முக்கந்தர் என்று மக்கள் அழைத்திருக்கிறார்கள்.

சித்தர் இறந்ததும் அவரைப் புதைத்த மேட்டின் தலைமாட்டில் சிட்டியில் எண்ணை விளக்கேற்றி வணங்கும் மரபை உருவாக்கினார் சீடர். எண்ணை வாங்க இயலாத நாட்களில் எதிரிலுள்ள சிறு குட்டை மண்டிநீரை பயன்படுத்தி விளக்கெரிப்பாராம். அதோடு, பயந்தோருக்கும் நலமற்றோருக்கும் ஆண்டவர் சாமியை பிரார்த்தித்து தண்ணீர் மந்திரித்து கொடுப்பாராம் சீடர் கறுப்பு முக்கந்தர்.

சேதுபதி மன்னர் இப் பகுதிக்கு வந்தால் ராஜாக்கோட்டையிலோ துடுப்பூர் கோட்டையிலோ தங்குவாராம். மகாராணிக்கு பல மாதங்ககளாக வயிற்று வலி. துடுப்பூர் கோட்டையில் தங்கியிருந்த போது, ஆண்டவர் சாமி சீடரின் மந்திரித்த தண்ணீரின் மகிமை குறித்து தெரிந்துகொண்ட மகாராணி வாங்கிவந்து பயன்படுத்தியிருக்கிறார். நோய் குணமாகிவிட்டது.

மகாராணியின் நோய் தீர்த்த சீடரை அழைத்து வந்து என்ன வேண்டும் கேள் என மன்னர் கேட்க "ஆண்டவர் சாமிக்கு கோயில் கட்டித் தரவேண்டும்! "வரமாகக் கேட்டார் கறுப்பு முக்கந்தர்.

தர்காவை நேர்த்தியாக கட்டிக்கொடுத்து அதன் நிர்வாக, திருவிழாச் செலவுகளுக்காக அழியாப்பதி, குணங்குடி கிராமங்களை கொடையாக அளித்திருக்கிறார் மன்னர்.

இதற்கான கல்வெட்டோ செப்புப் பட்டயமோ ஓலைச் சுவடிகளோ கண்டறியப் படவில்லை. கண்டிருந்தால் மன்னன் பெயரை வருடத்தை உறுதிப்படுத்தி இருக்கலாம்.

ஆயினும் இன்று வரையிலும் தர்கா நிர்வாகச் செலவுகளை அழியாப்பதியும் குணங்குடியும் தான் செய்கின்றன. இந்தக் கிராமங்களின் கையை மீறும் போது நாடு கை கொடுக்கிறது .

அனுமந்தக்குடி தர்காவில் முதல் மரியாதை நாட்டாருக்கே! தீர்த்தமும் திருநீறும் பெறுகிறது நாடு

தகவல்களைத் தந்த செயற்குழு உறுப்பினர் அழியாப்பதி இராமநாதனுக்கும் பெரியவர் அழியாப்பதி கருப்பையாவுக்கும் நன்றி பாராட்டுகிறோம்.

சேதுபதி மன்னரால் கட்டப்பட்டு காலவோட்டத்தில் பழுதுபட்டு சீரிழந்த தர்காவை துடுப்பூர் இராமநாதன் அமபலம் காலத்தில் நேர்த்தியாக கட்டிக் கொடுத்திருக்கிறது ஏழுகோட்டை நாடு.

ஏம்பல் நாடு -- உஞ்சனை நாட்டின் வாரக்கால் நாடுகளில் ஒன்று.

ஏம்பல் நாடு - ஏழுகிளை பதினான்கு நாடுகளில், எண்ணிக்கையாலும் பரப்பளவாலும் மிகவும் சிறிப நாடு!

முந்தைய நாட்டுக் கணக்குப்படி ஐநதேகால் கிராமங்களின் இணைப்பே ஏம்பல் நாடு.

சங்க காலத்தில் இருந்து மிழலைக் கூற்றத்திற்கு உட்பட்டிருந்த கிராமங்கள்.பாண்டியர்களும் சோழர்களும் மாறிமாறி ஆட்சி செய்த பகுதி.

அறந்தாங்கி தொண்டைமான்களுக்குப் பிறகு, சேதுபதிகளுக்குப் பிறகு, புதுக்கோட்டை தொண்டைமான்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தவைகளே தேர்போகி வடம்போகி ஏம்பல் இரும்பா நாட்டுக் கிராமங்கள்.

1. ஏம்பல்
2. இச்சிக் கோட்டை
3. ஏனங்கம்
4. வயலான்குடி
5. விசூர்
இவை ஐந்தும் முழுக் கிராமங்கள். தென்குடி கூத்தன்குடி வயிரணி இவை மூன்றும் உட்கடை மற்றும் கால் கிராமம். ஆக இந் ஐந்தேகால் கிராமங்களே ஏம்பல் நாடு என்பது பழைய கணக்கு.

ஏம்பல் நாட்டுக்குரிய முத்தையா சுவாமி ( முத்து ஐயனார் )கோயில் திருவிழாக்களுக்கு தற்போது பதினான்கு கி.கிராமங்கள் கடமையளிக்கின்றன.

1 ஏம்பல்
2 தேனத்திவயல்
3. விருதன்வயல்
4. விசூர்
5. பறையன்காடு
6. அண்டக்குடி
7. சந்திரட்டான்வயயல்
8. ஏனங்கம்
9 ஆண்டாகோட்டை
10. இச்சிக்கோட்டை
11. வயிரணி
12. தென்குடி
13. கூத்தன்குடி
14. திருப்பனங்குடி
இந்தப் பதினான்கு கிராமங்களே இன்றைய ஏம்பல் நாடு.

ஏம்பல் நாட்டுக் கிராமங்களை ஏம்பல் நாட்டாரை முத்தையா சுவாமி (முத்து ஐயனார் )கோயில் திருவிழாக்களே ஒருங்கிணைக்கின்றன.

முத்து ஐயனாருக்கான முதல் திருவிழா தமிழ்ப் புத்தாண்டான சித்திரப் பிறப்பு விழா! இதைப் படித்தலப் பணியாற்றும்( சீர்பாதம் தாங்கிகள் )முத்தரையர் 24 பேர் இணைந்து நடத்துகிறார்கள்.

மகர நோன்பு விழா - ஏம்பல் நாட்டார்கள் நடத்தும் விழா.

புரட்டாசியில் நாட்டார்கள் நடத்தும் பண்பாட்டுவிழா. மூன்று நாள் விழா. பால்பொங்கல் மதுவெடுப்பு புரவியெடுப்பு. முத்தையனாரின் சாமியாடி ஒன்பதாண்டுக்கு முன்பு காலமாகிவிட்டார். அடுத்த சாமியாடியைத் தேர்வு செய்ப முடியவில்லை. வாரிசுகளுக்கு அருள் கூடிவரவில்லை. சாமியாடி இல்லாததால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக புரவியெடுப்பு நடக்கவில்லை.

அடுத்தது, மாசிமகத் திருவிழா. தேர்த் திருவிழா!

ஏழுகிளை பதினான்கு நாடுகளில் ஐயனாருக்கு தேர்த் திருவிழா நடத்துகின்ற ஒரே நாடு ஏம்ப நாடே! பதினோரு நாள் மண்டகப் படிகள்.

முதல் நாள் மண்டகப்படி மயில்வாகனம். இந்த மண்டகப்படியை இரண்டு வருடங்கள் ஏம்பல் கிராமமும் ஒரு வருடம் வயலான்குடி கிராமமும் நடத்துகின்றன.

இரண்டாம் மண்டகப்படியும் மயில் தான் வாகனம். இந்த மண்டகப் படியை இரண்டு வருடம் இச்சிக் கோட்டையும் அடுத்து ஒருவருடம் விசூர் கிராமமும் நடத்துகின்றன.

மூன்றாம் மண்டகப்படி நாளிலும் வாகனம் மயிலே. இம் மண்டகப்படியை ஏம்பல் நாட்டின் தலைக்கிராமமான ஏனங்கம் நடத்துகிறது.

நான்காம் மண்டகப்படி யானை வாகனம். ஐயனாருக்கே உரிய வாகனம். இதை ஆறாவயல் மு.சேவுகன் செட்டியார் சந்ததிகள் நடத்துகின்றனர். ஓரு காலத்தில் வைர வியாபாரத்திலும் மர வியாபாரத்திலும் கொடிகட்டிப் பயணித்த குடும்பம். புதுக்கோட்டை மேலை ராஜவீதி முழுதும் ஆறாவயல் மு.சேவுகன் செட்டியாருக்கு சொந்தமானதாக இருந்திருக்கிறது. அந்த வீதியை இவர்களுடைய 'முத்தையா சுவாமி ' மரக்கடை வியாபித்திருந்ததாம். அக் காலத்தில் நான்காம் மண்டகப்படி அரண்மனை மண்டகப்படியாக இருந்திருக்கிறது. அதை விரும்பி நடத்தினாராம் மு.சேவுகன் செட்டியார். செட்டியாரின் வாரிசுகள் இப்போது ஏம்பலை வாசிகளாகி விட்டனர்.

ஐந்தாம் மண்டகப்படி காளைவாகனம். இது வயலான்குடி மகாஜனங்களின்(அந்தணர்களின் )மண்டகப்படி. இவர்கள் அக் காலத்தில் நகரத்தார்களிடம் சொர்ண ஆதாய வரி வாங்கி மண்டகப்படியை நடத்தியிருக்கிறார்கள். இப்போது முத்து ஐயனின் கிருபையால் நிறைவான வசதிகளுடன் பெருநகரங்களில் வசிக்கிறார்கள். ஐயனாரின் மண்டகப்படியை ஆர்வத்தோடு வந்து நடத்திச் சிறப்பிக்கிறார்கள்.

ஆறாம் நாள் நாட்டுக் கணக்கப் பிள்ளையின் மண்டகப்படி. நாட்டுக் கணக்கர்கள் அம்பலங்களுக்கு இணையாக 14 நாடுகளிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய பங்கெடுப்புகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஏழாம் நாள் முத்துப் பல்லககில் முத்து ஐயனார். இம் மண்டகப்படி ஏம்பல் அண்டக்குடி நகரத்தார்கள் மண்டகப்படி. சிவன் கோயில் விழாக்களில் ஐக்கியமாவது போல ஏம்பல் ஐயனார் கோயில் விழாக்களில் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் அருட்சேவை புரிகிறார்கள்.

எட்டாம்நாள் மயில் வாகனம். இது ஏனங்கம் பழனியான் சேர்வை மண்டகப்படி. ஏம்பல் நாட்டின் இன்றைய அம்பலகாரர் பெரியதம்பி சேர்வையின் பாட்டனார் தான் பழனியான் சேர்வை. ஏனங்கம் பழனியான் சேர்வை மண்டகப்படி எஎனக் கூறினாலும், பழனியான் சேர்வை, மற்றும் அவருடைய உடன் பங்காளிகளான துரைசாமி சேர்வை, நாராயணன் சேர்வை, சோமசுந்தரம் சேர்வை, பாலசுப்பிரமணியம் சேர்வை ஆகியோரின் வாரிசுகளும் சேர்ந்தே இம் மண்டகப்படியை நடத்துகிறார்கள்.

ஒன்பதாம் மண்டகப்படி பகலில் தேரோட்டம் இரவில் பரியிலேறி ஐயன் பவனி வருவார். இது ஏம்பல் நாட்டார் பெருமக்களின் மண்டகப்படி.

பத்தாம் நாள் ரதம். மதிப்பிடற்கரிய ரதம். இது வெள்ளான் செட்டியாருக்கு உரிய மண்டகப்படி. இன்று காவடியெடுப்பும் தீர்த்தமிடுதலும் நடக்கிறது.

பதினோறாம் மண்டகப்படி மற்றுமொரு ரதம். ஏம்பல் அண்டக்குடி மு.இராமநாதன் செட்டியார் மண்டகப்படி.

வருடம் தோறும் நடைபெறுகின்ற இந்த மாசிமகத் தேர்த்திருவிழா ஏம்பல் நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விழா.

இதைப் போலவே புரட்டாசியில் மதுவெடுப்பும் குதிரையெடுப்பும் நடக்குமேயானால் அது ஏம்பல் நாட்டின் தொன்மையான பண்பாட்டு விழாவாக அமையும்.

காரைக்குடி அழகப்பச்செட்டியார் பல்கலைக் கழகத்தில் இருந்து ஏம்பல் முத்து ஐயனார் கோயிலுக்கு வந்து ஆய்வு செய்த தொல்பொருள் துறை ரமாமிர்தம் "இக் கோயில் 1200 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டது! "எனச் சான்றளித்திருக்கிறார்.

முத்துப் பழனியான் சேர்வை, அவர் மகன் பெரியதம்பி சேர்வை அவருடைய மகன் முத்துப் பழனியப்பன் சேர்வை அவருடைய மகன் தான் இன்றைய பெரியதம்பி சேர்வை. இவர் மும்முறை ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுத் தொண்டாற்றி மக்கள் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவருடைய பாட்டனார் முத்துப் பழனியான் சேர்வை 1917 இல் ஊருக்கு ஊருணி வெட்டிக்கொடுத்து ஊராரின் நன்றியையும் புதுக்கோட்டை மன்னரின் பாராட்டுச் சான்றையும் பெற்றிருக்கிறார். அவருடைய மகன் முதலாம் பெரியதம்பி சேர்வை 1921 இல் சென்னை அரசாங்கம் நடத்திய கணக்கெடுப்பில் பங்கெடுத்து சிறப்பாகப் பணிபாற்றியமைக்காக மாநிலத்தின் பிரதிநிதியாகிய மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவர்.

ஏம்பல் நாட்டின் அம்பலங்கள் அதிகாரத் தோரணை அற்றவர்களாக ஆன்மிக நெறியாளர்களாக வாழ்ந்து நாட்டார்களின் அன்பையும் பிற சாதியாரின் அரவணைப்பையும் பாராட்டையும் பெற்றிருப்பதை காண முடிந்தது.

முத்தையனார் கோயில் ஊருணியை வளப்படுத்தி, ஒவ்வோராண்டும் தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என்ற ஆசையும், நாட்டின் செயல்பாடுகளில் முட்டுக்கட்டை ஏற்படும் காலங்களில் தலைமைநாட்டின் அரவணைப்பு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் ஏம்பல் நாட்டம்பலம் பெரியதம்பி சேர்வையின் மனதில் தேங்கி நிற்கின்றன.

இரும்பா தாடு மூன்று வகையான கிராமங்களை உள்ளடக்கியது.

1 மேலப்பாகம்
2 முடுக்குவயல்
3. அம்புக்கோட்டை
4. மறவன் வயல்
5. வல்லத்தராக்கோட்டை
(இது அரைக் கிராமம் 6 விளாங்காட்டூர்
7 கீழப்பாகம்
8 கோரக்கண்வயல்
9. தாரணி
10 அம்பலத்தாடி
11. கொத்தலான்குடி

இந்தப் பத்தரைக் கிராமங்களும் இரும்பா தாட்டின் உட்சேர்க்கைக் கிராமங்கள்.

இரும்பா கண்மாய் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கண்மாய். ஆயிரம் ஏக்கர் நன்செய்களுக்கு பாசனம் தருகின்ற கண்மாய்

இந்த ஆயிரம் ஏக்கர் வயல்களுக்கு நடுவில் நடுவில் ஏறத்தாழ 500 மீட்டர் இடைவெளிக்குள் தான் இந்தப் பத்தரைக் கிராமங்களும் அமைந்துள்ளன.இரும்பா கண்மாயின் பாய்ச்சல் பெறுகின்ற இந்தப் பத்தரைக் கிராமங்களின் இணைப்பை நாம் இரும்பா நாட்டின் உட்சேர்க்கை எனக் கொள்ளலாம்.

1. வெள்ளாளன் வயல்
2. சித்திரப்பூர்
3. திருவாகுடி
4. காடங்குடி
5 மருதன்குடி
6. சத்திரப்பட்டி
7. அரசூர்
8 தொண்ணாகுடி
9 ஆலத்திவயல்
10. போர்குடி
11 நல்லிக்குடி
12 மேலக்கரம்பை
13. கீழக்கரம்பை
14 மாராட்டி

இவை பதினான்கும் இரும்பா நாட்டின் வெளிச்சேர்க்கைக் கிராமங்கள். இரும்பா நாட்டின் காவல் தெய்வமான அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழாவிற்கு உட்சேர்க்கைக் கிராமங்ளைப் போல இவையும் கடமையாற்றுகின்றன. இவற்றில் சில திருவிழா வரியும் கொடுக்கின்றன. அனால் இக் கிராமங்கள் தனித்தனிக் கண்மாய் பாசன வசதி கொண்டவை. ஆகவே இவற்றை இரும்பா நாட்டின் வெளிச்சேர்க்கைக் கிராமங்கள் எனக் கொள்ளலாம்.

1. பன்னியூர்
2 பழந்தாமரை
3 புண்ணியவயல்
4. எழுநூற்றி மங்கலம்
5 கருப்பூர்
6. குறிச்சிக்குளம்
7. வேளணி

இவை எட்டும் இரும்பா நாட்டுக் காவல் தெய்வமான வீரமா காளிகோயில் திருவிழாக்களுக்கு வரி வழங்க வேண்டியவையில்லை. அதற்கான கடமைப்பாடுகளும் இல்லை. ஆனால் இரும்பா நாட்டின் தலைமையை ஏற்பவை. ஆகவே இவற்றை, இரும்பா நாட்டின் வாரக்கால் கிராமங்கள் எனலாம்.

ஆக இந்த முப்பத்தியிரண்டரைக் கிராமங்களின் இணைப்பே இரும்பா நாடு.

இரும்பா நாடு - இரவுசேரி நாட்டின் வாரக்கால் நாடுகளில் ஒன்று.

இரும்பாநாடு, ஏழுகோட்டை நாடு, சிலாமேக நாட்டின் கிழக்குப் பாதி ஆகிய இரண்டரை நாடுகளும் இரவுசேரி நாட்டின் வாரக்கால் நாடுகள்.

இரும்பா நாட்டில் இரண்டு பெருங் கோயில்கள் உள்ளன. தொன்மையானவை. குலோத்துங்க சோழன் காலத்தில் கற்றளி ஆக்கப்பட்டவை. ஒன்று சுந்தரராஜப் பெருமாள் கோயில். இது இரும்பா நாட்டின் மேலப்பாகத்தில் உள்ளது. இன்னொன்று, அகத்தீஸ்வரர் ( சிவன் ) கோயில். இது இரும்பா நாட்டின் கீழப்பாகத்தில் உள்ளது.

இரண்டு கோயில்களிலும் குலோத்துங்கன் ஆட்சிக்காலக் (1092ஆம் ஆண்டு) கல்வெட்டுகள் , குலசேகர பாண்டியன் ஆட்சிக்காலக் (1162 - 1175) கல்வெட்டுகள், வீரபாண்டியன் ஆட்சிக்காலக் ( 1175 - 1180) கல்வெட்டுகள் ஜெக வீர வல்லபன் ஆட்சிக்காலக் ( 1534 - 1543) கல்வெட்டு உள்ளன. சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள முக்கியமான கல்வெட்டில் ....

" திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவரின் 33 ஆட்சியாண்டு ...இராஜேந்திர சோழவள நாட்டு, பெரும்பூர் நாட்டு, மிழலைக் கூற்றத்து நுளம்பூரான பராந்தக சோழநல்லூரில் எழுந்தருளியுள்ள அழகுகண்ட விண்ணகர எம்பெருமாளுக்கு அமுதுபடி சாத்துபடிக்காக ..." நிலதானம் அளித்திருக்கிறார் அதளையூர் நாடாள்வான் அழகுகண்ட பெருமாள்.

இதிலிருந்து நமக்குப் புரிவது ...இரும்பா நாடு என்ற பெயர் அக் காலத்தில் இல்லை. இந்த ஊரின் அன்றைய பெயர் நுளம்பூர். நுளம்பூர் எனும் பெயரை பராந்தக நல்லூர் என மாற்றியிருக்கிறது அன்றைய சோழ அரசு.

அக் காலத்தில் இக் கோயிலுக்கு 'அழகு கண்ட விண்ணகர பெருமாள் ' பெயரையே சூட்டியிருக்கிறார்கள்.

இக் கோயிலுக்கு இதே ஊரில் தனதாக இருந்த சுமார் பத்து மா நிலத்தை கொடையளித்திருக்கிறார் அதளையூர் நாட்டம்பலம் அழகுகண்ட பெருமாள்.

மற்றுமொரு கல்வெட்டில் இக் கோயிலுக்கு பல ஏக்கர் நிலங்களை ஏனங்கம் கிராமத்தினர் கொடையளித்த தகவல் பதிவாகியுள்ளது

ஏனங்கம் இன்றைய ஏம்பல் நாட்டின் தலைக்கிராமம்.900 ஆண்டுகளுக்கு முன்னர் ஏனங்கம் கிராமத்தார் பெருமளவில் இப் பெருமாள் கோயிலுக்கு நிலக்கொடை அளித்திருக்கிறார்கள்.

இரும்பா நாட்டின் காவல்தெய்வமான வீரமா காளியம்மன் கோயில் பத்து நாள் மண்டகப்படிகளிலும், இன்றளவும் ஏம்பல் நாட்டு அம்பலகாரருக்கு மரியாதையுண்டு.

இன்னொரு நீண்ட கல்வெட்டு. .இது குலசேகர பாண்டியன் காலத்தியது. கொற்றனார்குடி (கொத்தலாங்குடி) தவம்செய்தான் என்பவர் நிலக்கொடை அளித்த தகவல் இதிலுள்ளது.

அக் காலத்தில் இரும்பா நாட்டின் கண்மாய் வெண்குளம் என்றும் பெருங்குளம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

" பெருங்குளத்தில் இருந்து கொற்றனார் குடி வாய்க்கால்நீர் பாய்கின்ற ...

"வெண்குளத்தில் இருந்து வாணியங்குடி வாய்க்கால்நீர் பாய்கின்ற ....

"பெருங்குளத்தில் இருந்து புன்கண்சேரி வாய்க்கால்நீர் பாய்கின்ற..

"பெருங்குளத்தில் இருந்து வயலான்குடி வாய்க்கால் நீர் பாய்கின்ற ...

என்றெல்லாம் தானமளித்த நூற்றுக் கணக்கான ஏக்கர் நன்செய்களின் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது இக் கல்வெட்டில்.

ஆக,பெரியகண்மாயில் இருந்து நீர் கொணரும் ஒவ்வொரு பெரிய வாய்க்காலுக்கும் அந்தந்த ஊரின் பெயர் சூட்டப் பட்டிருந்தது தெளிவாகிறது

ஆயிரம் ஆண்டு தொன்மையுடைய இரும்பா நாட்டுப் பெருமாள் கோயிலின் தற்போதைய நிலை பற்றி கோயில் பட்டாச்சாரியார் பத்மநாப ஐயங்காரிடம் கேட்டோம்.

" சுவாமி சுந்தரராஜப் பெருமாள் -சுந்தரவள்ளித் தாயார், பதினெட்டாம்படிக் கருப்பர் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் அருள் பாலிக்கும் கோயில் இது. பெருமாள் பெயரில் பதினேழு ஏக்கர் விளைநிலம் உள்ளது. அவற்றிலிருந்து வருடத்திற்கு 75 மூட்டை நெல் கிடைக்கிறது. இதுவே கோயிலுக்கான வருமானம். தினமும் காலை 9 மணிக்கு வழிபாடு நடத்துகிறோம். இரும்பா நாட்டின் சேர்க்கைக் கிராமங்கள் பத்தரையும் இணைந்து வைகுண்ட ஏகாதசியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு. இரவு கருட வாகனத்தில் பெருமாளும் தாயாரும் வீதியுலா வருவர்! " வைணவர்களுக்கே உரிய பெருமிதத்தோடு சொன்னார் பட்டாச்சாரியார்.

இரும்பா நாட்டின் தொன்மையான சிவன் கோயிலின் பெயர் அகத்தீஸ்வரர் கோயில்.

இக் கோயிலும் பெருமாள் கோயிலைப் போலவே இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

" ....இந்த நினைவுச் சின்னத்தை அழிக்கின்றவர்,அகற்றுகின்றவர் சிதைக்கின்றவர், மாற்றியமைக்கின்றவர், இதன் தோற்றப் பொலிவை குறைக்கின்றவர் இதனை ஆபத்திற்கு உட்படுத்துகின்றவர் அல்லது தவறாக பயன்படுத்துகின்றவர், யாராகினும் அவர் சட்டத்தின்யடி இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அல்லது ரூபாய் ஒரு லட்சம்வரை அபராதம் விதிக்கப்பட்டு அல்லது இவ்விரு வகை தண்டனையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்படத் தக்கவர் ஆவார்! " என்று இங்கும் நீலநிற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது!

கல்லறைகளில் வைக்கவேண்டியதை திருமால் கோயிலிலும் சிவன் கோயிலிலும் திருமயம் கோட்டையிலும் வைத்திருக்கிறது இந்தியத் தொல்லியல் துறை.

இச் சிவன் கோயிலின் தெற்கிச் சுவரில் உள்ள மிகப் பெரிய கல்வெட்டின் துவக்கத்தில் " பாண்டி மண்டலத்து மிழலைக் கூற்றத்து நடுக்கூற்று ஸ்ரீபராந்தக நல்லூர் அகத்திபுரமுடைய மகாதேவர்க்குத் தேவதானமாக..." என்றுள்ளது.

இங்கே " பராந்தகநல்லூர் அகத்திபுரத்திலுள்ள மகாதேவர் ..." என்பதைப் பார்க்கிறோம்.

ஆக, பராந்தகநல்லூருக்கு உட்பட்ட ஒரு கிராமம் அல்லது வீதி அல்லது ஒரு பகுதிதான் அகத்திபுரம். அகத்தி மரங்களௌ நிறைந்ததாக இருக்கலாம். அல்லது கற்றளி ஆக்குமுன் இறை அகத்திமரத்தடியில் இருந்திருக்கலாம். அகத்தி ஈஸ்வரன் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இரும்பா நாட்டுக் காவல் தெய்வமான வீரமா காளி கோயில் குருக்கள் தான் சிவன் கோயிலிலும் தினப் பூசை நடத்துகிறார். விழாக்கள் ஏதுமில்லை. சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற ஆசை பலரிடம் உள்ளது.

இரண்டு கோயில் கல்வெட்டுகளிலும் நல்லூர் - மேலை நல்லூர், புதுக்குடி - மேலைப் புதுக்குடி, கீழ்க்கரம்பை - மேல்கரம்பை, அம்பலத்தடி (அம்பலத்தாடி) விளாங்குரட்டூர் ( விளாங்காட்டூர் )கொற்றனார்குடி (கொத்தலாங்குடி) வாணியங்குடி, செம்பந்தன்குடி என பெருங்குளம் தண்ணீர் பாய்ந்த பல ஊர் வயல்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், மேலப் பாகம் கீழப்பாகம் கிராமங்களை காண முடியவில்லை. இந்த இரண்டும் இரும்பா நாட்டின் புதிய ஊர்களாக இருக்க வாய்ப்பில்லை. கல்லெட்டில் காணப்படுகின்ற நல்லூர் - மேலநல்லூர், புதுக்குடி - மேலப்புதுக்குடி என்பனவே கால ஓட்டத்தில் மேலப்பாகம் கீழப்பாகமாக மாறியிருக்க வேண்டும்.

அகாத்தீஸ்வரர் கோயிலுக்கு இந் நாட்டின் தேவரடியாரான குடிதாங்கினாள் என்பவர் ஆறு மா நிலத்தை விலைக்கு வாங்கித் தானமளித்திருக்கிறார்.

உள்ளூரில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரத்தை தாங்கியுள்ளது இக் கோயில் பெரிய கல்வெட்டு.

இச் சாசனத்தில் உள்ளூர்காரர்களான புதுக்குடி சீராளன் புத்தாண்டானும், ஏறுதிருவுடையானும், வாணியங்குடி நாராயணத்தேவனும்,செம்பந்தன்குடி குருத்திடம் கொண்டானும் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.

இச் சாசனத்திலும் பெருமாள் கோயில் சாசனத்திலும் கூட இரும்பாழி ஊரின் பெயர் இடம் பெற்றுள்ளன.

இரும்பாழி அரையன் சோலைமலைச் சொக்கன், இரும்பாழி திருச்சிற்றம்பலமுடையான் தேவபிரான்,இரும்பாழி ஆதித்தன் பொற்கனி பாலராயன் ஆகிய மூவரும் இச் சாசனங்களில் கையெழுத்துப் போட்டுள்ளனர். இவர்கள் அரசின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள். இந்த இரும்பாழி அதிகாரிகளுக்கும் இரும்பா என்ற நாட்டின் பெயருக்கும் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

நாட்டார் கோயில்கள் நான்கு இந் நாட்டில் உள்ளன.

வீரமா காளியம்மன் கோயில்,களபமுடை ஐயனார் கோயில், எழுவக் கூத்த ஐயனார் கோயில், பச்சைப் புதுவுடை ஐயனார் கோயில் ஆகியன .

வீரமா காளியம்மன் --இரும்பா நாட்டின் காவல் தெய்வம்.கோயிலின் பார்வையும் தெய்வத்தின் பார்வையும் வடக்கு நோக்கியன.இதன் பால்பொங்கல் விழாக்களுக்கு இரும்பா நாட்டின் உட்சேர்க்கைக் கிராமங்கள் பத்தரையும், வெள்ளாளன் வயலும் தொண்ணாகுடியும் நல்லிக்குடியும் வரிக் கொடுக்கின்றன.

களபமுடை ஐயனார் -- களபம் எனில் யானை. யானை வாகன ஐயனார் எனப் பொருள் கொள்ளலாம். இக் கோயில் மேலப்பாகத்தில் உள்ளது.இது மேலப்பாகம் முடுக்குவயல் அம்புக்கோயில் ஆகிய மூன்று ஊர்களுக்கும் சொந்தமானது.

12 ஆண்டுகட்கு முன்னர் வரை கருவறை மட்டுமே இருந்தது. அதை கலைநயத்தோடு விரிவாக்கி பதினெட்டாம்படிக் கருப்பருக்கும் ராக்காச்சி அம்மனுக்கும் தனித்தனி சந்நிதிகளும் அழகிய சேமங் குதிரைகளையும் செய்வித்து சுற்றுச் சுவரெழுப்பி, 30-4-2009 அன்று குடமுழுக்கையும் மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார் மாணவர் நகலகம் ஐயா அமரர் ந.அருணாச்சலம்.

" நாற்பதைம்பது வருடங்களுக்கு முன்னர் நாற்பதைம்பது குடும்பங்கள் இங்கிருந்து புலம்பெயர்ந்து தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்றன. அக் குடும்பங்களில் ஐயா அருணாச்சலம் சேர்வை குடும்பமும் ஒன்று. எங்கே வாழ்ந்தாலும் குலசாமியை கும்பிட வந்துதானே ஆகவேண்டும்! கருப்பரும் ராக்காச்சியும் அவர் குலதெய்வம். அவருடைப மனைவியும் மகளும் வலியுறுத்தியதால் பெரும் பணச்செலவில் இக் கோயிலைக் கட்டிக் கொடுத்தார். குடமுழுக்கையும் நடத்திக் கொடுத்தார். குடமுழுக்கிற்கு குடும்பத்தோடு வந்தார் நாத்திகர் அல்லவா! சாமி கும்பிடவில்லை. நெற்றியில் திருநீறு குங்குமம் அணியவில்லை. ஆனால் ஆர்லத்தோடு கலந்துகொண்டார்! " நன்றிப் பெருக்கோடு சொன்னார் மேலப்பாகம் வா.முத்தழகு அம்பலம்.

இரும்பா நாடு மறவன்வயலில் உள்ளது எழுவக்கூத்த ஐயனார் கோயில்.

எழுபவம் எனும் சொல் எழுவம் எனக் குறுகியுள்ளது. எழுபவம் எனில் ஏழுவகை அல்லது ஏழுபிறவி எனப் பொருள் கூறுகின்றன அகராதிகள். ஏழுவகைக் கூத்தரான அல்லது ஏழுபிறவி கண்ட ஐயனார் எனப் பொருள் கொள்ளலாம்.

எழுவக்கூத்த ஐயனார் கோயில் மறவன்வயல் நல்லிக்குடி மேலக்கரம்பை போர்குடி ஆலத்திவயல் விளாங்காட்டூர் ஆகிய ஆறு ஊர்களுக்கும் சொந்தமான கோயில்.

இந்த ஆறு கிராமங்களும் எழில் கொஞ்சும் அழகோடு கோயிலை விரிவுபடுத்தி கட்டி 10-11-2002 ஆண்டில் குடமுழுக்கு நடத்தியுள்ளன.

இரும்பா நாட்டிலுள்ள மூன்றாவது ஐயனார் கோயில் பச்சப் புதுவுடை ஐயனார் கோயில்.

ஐயனார் கண்மாயை மடைகளை வயல்களை காக்கும் தெய்வம். மழை கொணரும் தெய்வம். வேளாண் தெய்வம். ஐயனார் வேட்டையில் விருப்பம் கொண்டவர் அலங்காரப் பிரியர்.

புதவு எனில் மதகு அல்லது பெரிய மடை என்றும் சொல்லலாம் பெரியமடை அருகில் பனையோலையை வெட்டிக் கொணர்ந்து பச்சைக் குடில் வேய்ந்து அதில் ஐயனை வைத்து வழிபடத் தொடங்கியதால் பச்சைப் புதவுடை ஐயனார் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் கரு. கருப்பையா.

ஏழெட்டுத் தலைமுறைக்கு முன்பு இரவுசேரி நாட்டுக் கடகம்பட்டியில் இருந்து புலம்பெயர்ந்து வந்த பல குடும்பத்தினர் இரும்பா நாட்டில் குடியேறி உள்ளார்கள். அவர்களது குலதெய்வமான கருப்பரும் காளியும் தொண்ணாக்குடி ஐயனார் கோயிலில் இடம் பிடித்திருக்கிறார்கள் .

பச்சைப் புதுவுடை ஐயனார் கோயில் அம்பலத்தாடி,தொண்ணாக்குடி கொத்தலாங்குடி, கீழப்பாகம் தாரணி கோரக்கண்வயல் திருவாக்குடி வெள்ளாள வயல் ஆகிய எட்டுக் கிராமங்களுக்கும் உரிய கோயில். தொண்ணாக்குடிக் கண்மாய்க்குள் பசிய சோலையாக காட்சியளிக்கிறது. தொண்ணாக்குடி நடுக்கண்மாய்க்குள் இருக்கிறது. கண்மாய் நிரம்பினால் ' பாற்கடல் பரந்தாமனாக காட்சிபளிப்பார் ஐயன் ' .இரும்பா நாட்டின் மூன்று ஐயனார் கோயில்களுமே நிழல் விரிக்கும் மரங்களின் நடுவில் அமைந்துள்ளன. இளங்கோவடிகள் ஏகிய குணவாயில் கோட்டமெனத் தரிசனம் தருகின்றன.

மற்ற நாடுகளைப் போலவே இரும்பா நாட்டிலும் நான்கைந்து வருடங்களுக்கு ஒருமுறை தான் புரவியெடுப்பு மதுவெடுப்பு நடக்கிறது. கடந்த ஆறேழு வருடங்களாக இரும்பா நாட்டில் புரவியெடுப்பு நடக்கவில்லை. ஐயனாருக்கு காப்புக் கட்டாததால் நாட்டின் காவல்தெய்வமான வீரமாகாளிக்கும் காப்புக் கட்டவில்லை. விரைவில் நடக்குமென்கிறார்கள்.

இரும்பா நாட்டிலுள்ள மூன்று ஐயனார் கோயில்களுக்கும் ஒரே நாளில் காப்புக் கட்டுகிறார்கள். பெரும்பாலும் அது ஆடி மாதமாக இருக்கும். வெள்ளிக்கிழமை காப்புக் கட்டி மறு வெள்ளிவரை விழா நடக்கும்.

வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் ஐந்து நாட்களும் அந்தந்தக் கோயில் பூசாரிகளான வேளார்களால் அபிடேக ஆராதனைகள் நடக்கின்றன.

புதனன்று மூன்று கோயில் சாமியாடிகளும் கீழப்பாகம் பேயாடிப் பொட்டலுக்கு, சாமியலங்காரம் பூண்டுவந்து சாமியாடுவார்கள். பேயாடிப்பொட்டலில் சாம்பான் சாமியாடிகள் ஆறேழு பேரும் ஆடுவார்கள். மூவர் நால்வராக அவர்கள் கைகோர்த்து ஆடுவதும் சைகைகளால் அவர்கள் பேசிக்கொள்வதும் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள். அன்றைய விழாவை கச்சைப்பிறையென சொல்கிறார்கள்.

மறுநாள் வியாழன் விளாங்காட்டூரில் இருந்து மூன்று கோயில்களுக்குமான இரும்பா நாட்டாரின் ஏழு புரவிகளும் நேர்த்திக் கடன் புரவிகளும் காளைகளும் மதலைப் பிள்ளைகளும் பேயாடிப் பொட்டலுக்கு ஆரவார இசை முழக்கோடு கொண்டு வரப்படுகின்றன ..அன்று, இரவு புரவிப்படையின் பார்வைக்காக பேயாடிப் பொட்லில் கூத்தும் நடக்கும்.

மறுநாள், வெள்ளியன்றைக்கு, பால் பொங்கல் எனும் மிக முக்கியமான விழா நடக்கிறது. நிறைவானதும் நாட்டாருக்குரிய ஏழு குதிரைகளில் இரண்டும் நேர்த்திகடன் அணியும் சாமியாடியுடன் களபமுடை ஐயனார் கோயிலுக்கு கொண்டு செல்லப் படுகின்றன.

மறவன்வயல் எழுவக்கூத்த ஐயனார் கோயிலுக்கு அக் கோயில் சாமியாடியுடன் இரண்டு புரவிகளும் நேர்த்திக்கடன் வகையறாக்களும் கொண்டு செல்லப் படுகின்றன.

தொண்ணாக்குடி பச்சப் புதுவுடை ஐயனார் கோயிலுக்கு அந்த இளைய சாமியாடியின் அன்பான கோரிக்கையால் கிடைத்த அதிகமான ஒரு புரவியோடு மூன்று புரவிகளும் நேர்த்திக் கடன் வகையறாக்களும் கொண்டு செல்லப் படுகின்றன.

ஐயனார் கோயில்களின் புரவியெடுப்ப விழா இவ்வாறாக நிறைவு பெறுகிறது.

அடுத்துவரும் செவ்வாய்க் கிழமை, இரும்பா நாட்டுக் காவல் தெய்வமான அருள்மிகு வீரமாகாளி கோயில் விழாவிற்காக காப்புக் கட்டுகிறார்கள்.

அன்றைய நாளில் கீழப்பாகம் பிடாரியம்பன் கோயில் முன்பாக பொங்கல் வைத்து கிடாய் வெட்டுகிறார்கள்.

வீரமாகாளி கோயில் பத்துநாள் மண்டகப்படி வியரம் வருமாறு -

முதல்நாள் : கீழப்பாகம்0)+ கோரக்கண்வயல் 2 :சித்திரப்பூர் +மருதன்குடி 3: வெள்ளாள வயல் 4. :கொத்தலாங்குடி +அம்பலத் தாடி+தாரணி +தொண் ணாக்குடி. 5. :மறவன்வயல் +விளாங்காட் டூர் +நல்லிக்குடி அரசூர் +சத்திரக்குடி 7 :காடன்குடி +திருவாகுடி 8 :மேலப்பாகம் +அம்புக்கோ டை+முடுக்குவயல் 9 :சேதுப்பிள்ளை மண்டகப்படி 10 :நல்லிக்குடி +மேலக்கரம்பை +கீழக்கரம்பை +போர்குடி + ஆலத்திவயல்.

எட்டாம் நாள் மதுவெடுப்பும் பத்தாம்நாளில் காவடியெடுப்பும் பூக்குழி இறங்குதலும் நடக்கிறது. ஒவ்வொருநாள் மண்டகப்படியிலும் மண்டகப்படிதாரர்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது

வீரமாகாளி கோயில் மதுவெடுப்பு நாளில் மட்டும் சம்பாளன் அம்பலம் வகையறாக்களுக்கும்அழகர்புரத்தார்களுக்கும் மரியாதை அளிக்கப்படுகிறது.

இரும்பா நாட்டுக் கோயில்களின் மரியாதைகள் வருமாறு -

1 அரண்மனை 2. நாட்டுக் கணக்கர் 3 சாமியாடிகள் மூவருக்கும் 4 கிடாய்வெட்டி (அழகர்புரம்) 5 படிமாற்றத்தார் (சம்பாளன் அம்பலம் வகையறா) 6 வீரபத்திரப் பிள்ளை (அகமுடையார்) 7 சேதுப்பிள்ளை (வெள்ளாளர்)8 நாயக்கர் 9 பிறநாட்டார் 10 பொதமக்கள்.

இரும்பா நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் ஊரம்பலங்கள் பொறுப்பு உள்ளது.ஆனால் இரும்பா நாட்டுக்கென்று அம்பலகாரர் இல்லை.

"நாட்டம்பலம் இல்லாததற்கு காரணம் என்ன? " இரும்பா நாட்டின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கரு. வீராசாமி அம்பலத்திடம் கேட்டேன்.

"மிழலைக் கூற்றத்தில் இருந்த தேர்போகி போன்ற ஏதோ ஒரு நாட்டை உடைத்தே இரும்பா நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு முன் இங்கே காராள வெள்ளாளர்களின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இந் நாட்டுக்கு அம்பலகாரர் இல்லை என்று சொல்லக் கேள்வி! "என்றார் கரு. வீராசாமி அம்பலம். *இரும்பாநாடு நிறைகிறது!

வடம்போகி நாடு!

தேர் போகும் இடமெல்லாம் வடம் போகும். ஆனால் வடம் போகுமிடமெல்லாம் தேர் போவதில்லை. தேர்போகும் வீதிகளை இடங்களை தேர்போகி என்றும், வடம்போகும் வீதிகளை இடங்களை வடம்போகி என்றும் சொல்வார்கள்.

பெரிய தேர்கள் ராஜவீதிகள் நான்கிலும் வரும். ஆனால் வடம்?

தேர் தென்கிழக்கு மூலைவரை செல்லவேண்டும் என்றால், வடம் தென்கிழக்கு மூலை தாண்டி அதற்கும் தெற்கே நீளும் வீதியில் நூறடிகள் வரை சென்றாக வேண்டும். அந்த நீளும் வீதியை வடம்போகி தெற்கு வீதி என்றழைப்பர். ஏழுகிளை பதினான்கு நாடுகளில் இரண்டின் பெயர்கள் தேர்போகி, வடம்போகி என்பன. இப் பெயர்கள் சூட்டப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை.

தென்போகி ( தெற்குப்போகி )வடபோகி ( வடக்குப்போகி) என்பன திரிந்து இப்படியாயின எனச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உடன்பட இயலவில்லை. தேர்போகி நாட்டின் முக்கிய ஊர்களான அண்டக்குடி மித்திராவயல் திருத்தங்கூர் பாப்பாகுடி கள்ளிக்குடி உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களுக்கு மேற்கிலும் தென்மேற்கிலும் தான் வடம்போகி நாடு உள்ளது.

போகி எனில் மன்னன் இந்திரன் பாம்பு என்று அகராதிகள் உரைக்கின்றன. போகி எனில் தெரிந்தே இழப்பது என்றும் கூறலாம். போனது என்றும் கூறலாம்.

வடம்போகி நாடு உஞ்சனை நாட்டின் வாரக்கால் நாடு.

வடம்போகி தேர்போகி நாடுகளுக்கு உஞ்சனை செம்பொன்மாரி நாடுகளுடன் உள்ள நெருக்கத்தை மரியாதையைக் காட்டிலும் சாக்கோட்டை நாட்டுடன் நெருக்கமும் மரியாதையும் அதிகம்.

சாக்கோட்டை வீரசேகரர் --உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழாவான பெரியதேர் மண்டகப் படிகளிலும் சீர்பாதம் தாங்கும் ( சாமிl தூக்கும்) பணியைச் செய்வது சாக்கை நாடும் வடம்போகி நாடும் தான். இத் திருவிழாவில் முதல் மரியாதை சாக்கை நாட்டிற்கு. இரண்டாம் மரியாதை வடம்போகி நாட்டிற்கு. தேரின் மேற்கில் முதல் வடம் சாக்கை நாட்டிற்கும் வடம்போகி நாட்டிற்கும் உரியது. சாக்கோட்டை வீரசேகரர் --உமையாம்பிகை ஆடித் திருவிழாவான சின்னத்தேர் மண்டகப்படிகள் பதினொன்றிலும் சீர்பாதம் தாங்கும் பணி சாக்கைக்கும் வடம்போகிக்கும் மட்டுமே உரியது.

இந்தப் பதினோருநாள் விழாவின் முழு உரிமையும் கடமையும் இந்த இரு நாடுகளுக்கானதே! முதல் மரியாதையும் இரண்டாம் மரியாதையும் இவர்களுக்கானதே!

இவ் விழாவின் நான்காம் மண்டகப் படியன்று வடபோகி நாட்டு அம்பலகாரருக்கு பட்டுப் பரிவட்ட மரியாதை செய்யப்படுகிறது ..

வடம்போகி நாடு இருபதரைக் கிராமங்களைக் கொண்டது என்பது செவிவழிப் பழங்கணக்கு. இக் காலத்தில் நாட்டுக்குரிய காவேரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்பதும் கடமையாற்றுவதும் பதினொன்றரைக் கிராமங்களே.

1. ஆம்பக்குடி (தலைக்கிராமம்) 2. ஆவணம் 3 புக்குடி 4 நவதாவு 5 கள்ளர் மணக்குடி 6 கோழிக்கரைப்பட்டி 7 சிறுகவயல் 8 களக்குடி 9 வேளங்குடி 10 பெத்தானேந்தல் 11 அரசுவயல் 12. முத்தூர் (இது அரைக் கிராமம்)

கடந்த நாற்பதைம்பது வருடங்களாக இந்தப் பதினொன்றரைக் கிராமங்களே வடம்போகி நாடு.

இவற்றிலும் வேளங்குடி அரசுவயல் முத்தூர் கிராமங்களிடம் வரி வாங்குவதில்லையாம்.

இன்னும் ஒன்பது ஊர்கள் என்னாயிற்று?

நீண்ட நேர யோசனைக்குப் பிறகு,பேச்சில்லாக் கிராமங்கள் என்று 1. நல்லம்பட்டி 2. இளம்பன்வயல் 3. தச்சன்குடி 4 நயினார்வயல் 5 மத்தன்குடி ஆகிய ஐந்தின் பெயர்களை நினைவுகூர்ந்தார் காளி கோயில் பூசாரி பொ.கணேசன் அம்பலம் .

இருபது வருடங்களாக நாட்டுக்கும் நாட்டுக் கணக்கருக்கும் தொடர்பு அற்றுப் போனது.

கணக்கு வழக்குகளையும் ஊர்களை ஒருங்கிணைக்கும் பணிகளையும் வடம்போகி நாட்டின் அம்பலகாரர் ஆம்பக்குடி அடி. சி.கரந்தைமலை அம்பலமே கவனித்துக் கொண்டிருக்கிறார்.

வடம்போகி நாட்டுக்குரிய கோயில் அருள்மிகு காவேரியம்மன் கோயில். கோழிக்கரைப்பட்டி கிராமத்தில் கிழக்கு நோக்கி அருளாட்சி நடத்துகிறார் அம்மன்.

தனது நாட்டுத் தேவதைக்கு சித்திரை முழுநிலா நாளில் சிறப்பாக விழாவெடுக்கிறது வடம்போகி. பத்துநாள் மண்டகப்படிகள். பங்குனி 25 காப்புக்கட்டி பால்குடம் அபிடேக ஆராதனைகள் அன்னதானம் சித்திரா பௌர்ணமியில் திருவிளக்குப்பூசை சத்தாபரணம் கூத்து எனக் கொண்டாடுகிறார்கள்.

காவேரியம்மன் கோயில் மண்டகப்படி தாரர்கள் --1 ஆம்பக்குடி 2. ஆவணம் 3 புக்குடி +நவதாவு 4 கள்ளர் மணக்குடி 5 கோழிக்கரைப்பட்டி 6 சிறுகவயல் 7 களக்குடி 8 பெத்தானேந்தல் கிராமத்தார்கள்.

2019 இல் கோயிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்தியுள்ளனர். இந்த குடமுழுக்கு விழாவிற்கு ஏழுகினை பதினான்கு நாட்டு அம்பலகாரர்களையும் மற்ற நாடுகளின் தலைவர்கள் சிலரரையும் அழைத்து மரியாதை செய்திருக்கிறது வடம்போகி நாடு.

இக் கோயிலின் பூசாரி பண்டாரம்.

ஆவணம் கிராமத்தில் அக் கிராமத்திற்குரிய கல்லுடைய ஐயனார் கோயில் இருக்கிது. அடிக்கடி கிடாய் வெட்டுகள் நடக்கின்றன.

வடம்போகி நாடுஆம்பக்குடி அருள்மிகு அடைக்கலம் காத்த ஐயனார் -- ஐந்துவீட்டு காளியம்மன் கோயில் கீர்த்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

ஐந்து அறைகள் கொண்ட ஓட்டு வீட்டில் காளியும் ஐயனாரும் கருப்பரும் பரிவாரத் தெய்வங்களும் இருந்ததால் கோயிலின் பெயரே ஐந்து வீட்டு காளிகோயில் என்று பெயர் பெற்றிருக்கிறது.

இக் கோயில் ஆம்பக்குடி கள்ளர்களில் இரு வீட்டுப் பங்காளிகளான நாற்பது குடும்பங்களுக்கு மட்டுமே உரியது. இது, காட்டுச் சிவன்கோயில் கதி. ராம .வீரப்ப செட்டியார் கண்காணிப்பில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப் படுகிறது.

நாற்பது குடும்பங்களின் வரிப்பணமும் பொதுமக்கள் நன்கொடையும் தங்கள் பங்களிப்புமாக மிகப் பெரிய பொருட் செலவில் கேரள பாணியில் இக் கோயிலை விரிவுபடுத்தி வியப்பூட்டும்வண்ணம் கட்டியெழுப்பி 21-01-2015 இல் குடமுழுக்கு நடத்தியுள்ளார்கள் கதி. ராம. வீர குடும்பத்தினரும் பங்காளிகளும். அதற்கு முன் கோயில் பங்காளிகள் முயற்சியால் 11-06-1995 இல் குடமுழுக்கு நடந்திருக்கிறது.

ஐந்து வீட்டுக்காளிக்கு சித்திரை 30 இல் காப்புக்கட்டி வைகாசியில் 11 நாள் விழா எடூக்கிறார்கள்.

விளக்குபூசை ஊஞ்சல் உற்சவம் பால்குடம் பூக்குழி தீச்சட்டி வீதியுலா கூத்துகள் என சிறப்பாக நடத்துகிறார்கள்.

வடம்போகி நாட்டில் வடத்திற்கு மட்டும் வேலையில்லை!

சிலாமேக நாடு

7. கிளைகள்! 14 நாடுகள்!
சிலாமேக நாடு!

'' சிலாமேக நாடு என்று மொட்டையாகச் சொல்லாதீர்கள் :எழுதாதீர்கள். இப்படிச் சொல்லி, எழுதி எங்கள் நாட்டின் வீரத்தை தியாகத்தை வியர்வையை வளமையை குறைக்காதீர்கள். ' ஜெகவீர வல்லப செல்வச் சீர்மிகு சிலாமேக நாடு என வாய் நிறையச் சொல்லுங்கள் :ஏடுநிறைய எழுதுங்கள்! :என்று இந் நாட்டு மறவர்கள் நமக்கு ஆணையிட்டார்கள். கேட்டுக் கொண்டார்கள். உரிமையுடன் வேண்டினார்கள்.

இந்த நீண்ட பெயருக்குப் பின்னாலும் உள்ளேயும் ஒளிந்திருக்கும் காரணங்கள் எவையென இவர்கள் அறிந்திருக்கவில்லை. நம்மைப் போன்றே இவர்களுக்கும் அறிந்து கொள்ளும் ஆவல் மட்டும் மிகுந்திருந்தது.

கண்டதேவி சொர்ணமூர்த்தி -- பெரியநாயகி கோயில் தேரும் தேர் வடங்களும் மண்டகப்படிகளும் மரியாதைகளும் உஞ்சனை செம்பொன்மாரி தென்னாலை இரவுசேரி நாட்டார்களுக்கே உரியவை.

இதேபோல, திரு ஏகம்பத்து திரு ஏக அம்பர் -- ஏக அம்பாயி கோயில் தேரும் தேர் வடங்களும் மண்டகப்படிகளும் மரியாதைகளும் ஜெகவீர வல்லப தென்னாலை சுந்தரபாண்டிய ராஜராஜவள நாட்டார்களுக்கே உரியவை.

ராஜராஜ வளநாடு --இது தஞ்சைப் பெருவுடைடையார் கோயிலை நிலைத்த புகழோடு கட்டியெழுப்பிய சோழ வேந்தன் ராஜராஜனின் பெயரைத் தாங்கி நிற்கிறது.

உருவாட்டி எனும் சுந்தர பாண்டிய வளநாடு -- இது சோழனை வென்ற கயல் வேந்தன் சுந்தரபாண்டியனின் பெயரைத் தாங்கிநிற்கிறது.

தென்னாலை நாடு - இந் நாட்டின் தொன்மையான பெயர் தென்னார்கொளி. கள்ளன்குடி சிவாலயக் கல்வெட்டுகள் வாயிலாக இப் பெயரை அறியலாம். இது தென்னர்களான பாண்டியப் பேரரசர்களின் பொதுப் பெயர்.

ஜெகவீர வல்லப சீர்மிகு செல்வச் சிலாமேக நாடு - இது சடையவர்மன் வீரபாண்டியனின் சிறப்புப் பெயரைச் சூடி நிற்கிறது. இவ் வேந்தனின் சிறப்புப் பெயர் ஜெகவீர வல்லபன். இப் பெயரை புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளில் பரவலாகக் காணமுடியும். இவன் பனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி செய்தவன்.

திருவேகம்பத்து சிவன்கோயில் சந்நிதித் தூணில், 1460 ஆம் ஆண்டு ஆடி பதினெட்டு அன்றைக்கு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் -

" திருக்கானப்பேர் (காளையார்கோயில்) கூற்றத்து, மேலைச் சிலாமேக நாடு ..."என வெட்டப்பட்டுள்ளது. அதாவது மேலைச் சிலாமேக நாடு கீழைச் சிலாமேக நாடு அக் காலத்தே இந் நாடு வகுக்கப் பட்டிருக்கிறது. 1460 வரை ஜெகவீர வல்லபன் பெயர் சூட்டப்படவில்லை என்பதும் தெரிகிறது.

இன்னுமொரு முக்கியமான புலப்பாடு --

1460 இல் தான் திரு ஏகம்பருக்கு கற்கோயில் எழுப்பியிருக்கிறார்கள். உருவாட்டி நாட்டில் சிதைந்துகிடந்த சுந்தர பாண்டிய ஈஸ்வரன் கோயிலில் இருந்தும், ராஜராஜ வளநாட்டில் சிதைந்து கிடந்த நடராஜர் ஈஸ்வரன் கோயிலில் இருந்தும் சிற்பங்களை சிலைகளை தெய்வ உருக்களை கற்தூண்களை கொண்டுவந்தூ திருவேகம்பத்தில் சிவன்கோயிலை விரிவுபடுத்திக் கட்டி இருக்கிறார்கள்.

மற்ற இரு நாட்டுக் கோயில்களுக்கு ஏற்பட்ட நிலை திருவேகம்பர் கோயிலுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஊரையும் கோயிலையும் கோயில் திருவிழாக்களையும் மரியாதைகளையும் நான்கு நாடுகளுக்கும் கடமையாக்கி உரிமையாக்கி இருக்கிறார்கள்.

சிலா எனும் வடமொழிச் சொல்லுக்கு சிலை அல்லது பெரிய கல் எனப் பொருள். சிலாலிபி எனில் கல்லில் எழுத்தெனப் பொருள். மேகம் என்றால் முகில். சிலாமேக நாடு என்றால் கல்மேகநாடு கல்முகில் நாடு கல்மழை நாடு என்றும் பொருள் கொள்ளலாம்.

ஏழுகோட்டை நாட்டில் பாதிக்குக் குறைவாகவேனும் கள்ளப்பற்றுக் கிராமங்கள் உள. சிலாமேக நாட்டிலோ கள்ளப்பற்றுக் கிராமங்களே இல்லை. இது முழுக்க முழுக்க மறப்பற்று நாடு!

தனக்குரிய தென்னாலை இரவுசேரி நாடுகளை சம்பந்தப்புற நாடுகளாகவே உறவு பாராட்டுகிறது சிலாமேக நாடு.

இரும்பா நாடு, ஏழுகோட்டை நாடு, சிலாமேக நாட்டில் பாதி (அரைநாடு)ஆகிய இந்த இரண்டரை நாடுகளும் இரவுசேரி நாட்டின் வாரக்கால் நாடுகள்.

குன்னங்கோட்டை நாடு, கப்பலூர் நாடு, சிலாமேக நாட்டில் பாதி ( அரைநாடு) ஆகிய இந்த இரண்டரை நாடுகளும் தென்னாலை நாட்டின் வாரக்கால் நாடுகள்.

ஆற்றங்கரை நாட்டின் மேலவட்டம் (பத்தரைக் கிராமங்கள்) உஞ்சனை நாட்டிற்குரிய வாரக்கால் அரைநாடு. ஆற்றங்கரை நாட்டின் கீழவட்டம் (எட்டுக் கிராமங்கள்) செம்பொன்மாரி நாட்டுக்குரிய வாரக்கால் அரைநாடு.

இதேபோல சிலாமேக நாட்டில் இரவுசேரி நாட்டுக்குரிய வாரக்கால் கிராமங்களின் எண்ணிக்கையை,தென்னாலை நாட்டுக்குரிய வாரக்கால் கிராமங்களின் எண்ணிக்கையை என்னால் கண்டறிய முடியவில்லை.

சிலாமேக நாடு தொன்னூற்றாறரைக் கிராமங்களைக் கொண்டது.அனைத்தையும் அறியமுடியவில்லை. சக்கந்தி சி.விஸ்வநாத தேவர் தனது நினைவலைகளில் தேக்கிக் கூறியவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன். எஞ்சியவற்றை பிறகு அறிந்து இத்துடன் இணைப்பேன்

1 சிலாமேக நாடு 2. வாரியன்வயல் ( வாரியன்காடு) 3. மொன்னி 4 கார்மாங்குடி 5. சக்கந்தி தெற்கு 6 சக்கந்தி வடக்கு 7. இருமதி 8 இருமதி தெற்கு 9 முட்டக்குத்தி 10 கொள்ளிடான்வயல் 11. பகையணி 12 சாணான்வயல் 13 புளியால் 14. பிராந்தணி 15 பருத்தியூர் 16 சீர்தாங்கி 17.மடத்தேந்நல் 18 திடக்கோட்டை 19 சக்கிலியன் வயல் 20 கிளியூர் 21 சின்னக் கிளியூர் 22 கற்களத்தூர் 23 வெட்டிவயல் 24 கடையனேந்தல் 25. முப்பையூர் 26 வெண்ணியூர் 27 காக்காச்சியேந்தல் 28. பனையக்குறிச்சி 29 மேலக்கரை 30 காவதுகுடி 31. சின்னக் காரக்குடி 32 கருப்பக்குடி 33. சிறுநல்லூர் 34. சிறுவாளூர் 35 கண்மாய்க்கரை 36 ஆந்தக்குடி 37 ஒரசூர் (உரசூர்) 38 வெள்ளூர் 39. விளாங்காட்டூர் 40. சேந்தணி 41 தொங்கமதி 42 கல்லடியேந்தல் 43. பறையனேந்தல் 44 திருவேகம்பத்து 45 மேலக்காரக்குடி 46 இரவியமங்கலம் 47 அரையணி 48 ஆட்டூர் 49 கோவணி 50 பழுவன்காடு 51. ஆண்டிவயல் 52 பனங்குளம் 53. அரியனேந்தல் 54. செழுவத்தி 55 நற்கனிக்கோட்டை 56 பொன்னக்கரை 57. குமாணி 58 சௌரியார்பட்டினம் 59 ஓலைக்குடியேந்தல் 60 கொடுங்காவயல் 61 சித்தூர் 62 செவ்வாய்ப்பேட்டை 63. தளக்காவூர் 64 பப்பணி 65 மருதவயல் 66 கருங்குழி 67 சுக்கிரபட்டி 68 உரத்தூர்.

அடிமை இந்தியாவில் 1942 ஆகஸ்ட் 8 ஆம் நாள் மும்பை குவாலியாடேங்க் மைதானத்தில் அண்ணல் காந்தியடிகள் முழங்கிய "வெள்ளையனே வெளியேறு! " " செய் அல்லது செத்துமடி! "தீர்மானப் பொறிகள் நாடு முழுதும் தெரித்தன.

அப் புரட்சிப் போரில் இரண்டாவது ஜாலியன்வாலாபாக் என்று ஒவ்வொரு தமிழரும் நெஞ்சில் நிறுத்தித் துதிக்கவேண்டிய வரலாற்று வேள்வி நிகழ்த்தப் பட்ட இடம் தேவகோட்டை. அப் புரட்சி தொடங்கிய நிலம் சிலாமேக நாடு! அதைத் தொடங்கிவைத்த பரட்சி மறவன், விடுதலை வேங்கை சர்தார் விளாங்காட்டூர் பொ.செல்லத்துரை தேவர் என்ற பாலபாரதி.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனில், ஒவ்வொரு வீட்டிலும் மரண ஓலம் தேம்பி நின்றது. யுத்தத்தால் பாதிக்கப்படாத குடும்பமே அந் நாட்டில் இல்லை என்று அடிக்கோடு பதித்திருக்கிறது வரலாறு.

அதே நிலைதான் ஆகஸ்ட் புரட்சியால் சிலாமேக நாட்டிற்கும் ஏற்பட்டது. செல்வச் சிலாமேக நாட்டின் ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு வீடும் ஆங்கிலக் கூலிப்படையின் வேட்டைக் காடானது.

விடுதலைவேங்கை பாலபாரதியின் தலைக்கு விலை நிர்ணயித்து விடுதலைக்கு முதல்நாள் வரை தேடிக் கொண்டிருந்தது பறங்கிப் படை.

வெண்ணியூர் முனியப்பத் தேவரும் சித்தூர் சிவஞானத் தேவரும் அவர்கள் பதுங்கியிருந்த பள்ளத்தூர் லட்சுமிபுரம் காட்டுக்குள் மரங்களில் கட்டிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தேவேந்திரகுல வேளாளரான காவதுகுடி நன்னியின் படர்ந்த மார்பை துப்பாக்கிக் குண்டால் துளைத்து அவருயிரைப் பறித்தார்கள் .வெண்ணியூர் விஸ்வநாத தேவரை கொடுரமாகக் கொன்றார்கள். நூற்றுக் கணக்கானவர்களை ஊனப்படுத்தினார்கள். இத்தனைக்குப் பிறகும் கூட அடங்கவில்லைஆங்கிலேயரின் வெறிப்புத்தி.

வீடுகளை விதைநெல் குதிர்களை நெற்கோட்டைகளை வைக்கோல் படப்புகளை கொளுத்தினார்கள் கொளுத்தினார்கள் கொளுத்தினார்கள். அந்தக் கொடும்புகை சிலாமேக நாட்டை கரிமேக நாடாக்கியது. பல்லாயிரம் ஆடுமாடுகளை பற்றிக்கொண்டு போனார்கள்.

மூதாட்டிகள் இளம்பெண்கள் சிறுமியர் என்று பாராமல் சிலாமேக நாட்டுப் பெண்கள் ஈவுஇரக்கமின்றி தாக்கப் பட்டார்கள். பிறந்த மேனியராக்கி மரங்களில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு "சொல்லடி எங்கே உன் கணவன்? எங்கே உன் மகன்? எங்கே ஒளிந்திருக்கிறான் கலெக்டரின் காரைக் கொளுத்திய உன் தகப்பன்? திருவாடானை சிறையை உடைத்து கைதிகளைக் கூட்டிப் போனது உங்க ஊர்க்காரனுங்க தானே? எங்கேயடி அவனுங்க? சிறைக்கம்பத்தில் இந்தியக் கொடியை ஏற்றியது ? " கேட்டுக்கேட்டு தோல் பிய்யப்பிய்ய சாட்டையாலும் புளிய விளாறுகளாலும் அடித்தார்கள். மானபங்கப் படுத்தப்பட்ட தாய்மார்களின் கதறலை மறக்க இயலுமா?

அந்தப் பண்பாட்டுத் தாக்குதலில் இருந்தும் பொருளாதாரச் சீரழிவிலிருந்தும் உற்பத்தி சிதைவிலிருந்தும் சிலாமேக நாடு மீள்வதற்கு ஒரு தலைமுறை தேவைப்பட்டது.

புரட்சி மறவன் பாலபாரதிக்கு திருவேகம்பத்தில் நினைவுத்தூண் எழுப்பி யிருக்கிறார்கள். ஆனால் அதுபற்றிய அறிதலும் தியாகப் புரிதலும் இன்றைய இளைய தலைமுறைக்கு உளதா? நமது சந்ததிகளுக்கு நம் முன்னோரின் தியாகத்தை புகட்ட மறந்தோமே!

1957 வரை மொன்னி களஞ்சியத் தேவர் சிலாமேக நாட்டுத் தலசியாக இருந்திருகிறார். அவருடைய இறப்புக்குப் பிறகு அவருடைய தம்பிமகன் நாச்சியப்பத் தேவர் தலசி பொறுப்புக்கு வந்தார். இவர் அதங்குடி ' முதலாளி 'யிடம் கணக்கராக வும் பணியாற்றினார். மிகுந்த துணிச்சல் காரராகவும் முரடராகவும் சிலம்பம் சுழற்றுவதில் வல்லவராகவும் பெயரெடுத்த இவரது மரணம் மிகக் கொடூரமாக நிகழந்திருக்கிறது.

25 வருடங்களுக்கு முன்னர் 43 ஆவது வயதில் எதிரிகளால் வஞ்சகமாக சிதைக்கப்பட்டு புளியமரத்தில் தொங்கவிடப் பட்டிருந்தது நாச்சியப்பத் தேவரின் உடல்.

நாச்சியப்பருக்கு வாரிசில்லை தம்பி மகன் குப்புச்சாமி தேவருக்கு தலசியாக விருப்பமில்லை.

1998 இல் புதிய தலசியை தேர்வு செய்வதற்காக மொன்னி பள்ளிக் கூடத்தில் திரண்டது

தெற்கு வட்டார அம்பலகாரர் வெண்ணியூர் மாணிக்கத் தேவர், கீழ வட்டார அம்பலகாரர் திடக்கோட்டை குப்புச்சாமித் தேவர், மொன்னி வெள்ளைச்சாமித் தேவர் இருமதி துரைக்கண்ணுத் தேவர், இவர் மகன் இருமதி துரை. கருணாநிதி, சக்கந்தி சி.விஸ்வநாதத் தேவர் ஆட்டூர் ராமநாதன் சேர்வை, வாரியங்காடு செல்லத்தேவர், புளியால் காசித் தேவர், விளாங்காட்டூர் வேதம் உடையார், கல்லடியேந்தல் பொன்னையாத் தேவர் உள்ளிட்ட பெருந் தலைகளும் ஊர் அம்பலங்களும் நாட்டு மக்களுமாக பல நூறுபேர் கலந்துகொண்ட கூட்டம் அது.

கீழ வட்டத்தை, தெற்கு வட்டத்தைச் சேர்ந்த சிலர் தலசி பதவி தங்கள் பகுதிக்கு மாற்றப்பட வேண்டுமென்று உரத்த குரல் எழுப்பினர். ஆனாலும் முந்தைய தலசி நாச்சியப்பத் தேவரின் சித்தப்பா சிவஞானத் தேவர் மகன் கிருஷ்ணத்தேவரை தலசியாக தேர்ந்தெடுத்தது நாடு!

புதிய தலசியை (அம்பலகாரரை)உரசூர் வகராறுடை ஐயனார் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். பொறுப்பேற்கச் செய்தனர். அங்கிருந்து திருவேகம்பத்து திரு ஏகம்பநாதர் கோயிலுக்கு பரிவட்டத்தோடு தலசியை வெள்ளைக் குதிரையில் அமர்த்தி நெடுக விரித்த வெள்ளை மாற்றின் மீது அழைத்துச் சென்று ஈசனை வழிபட்டனர்.

திருவேகம்பத்து ஏக அம்பர் - ஏக அம்பாயி திருக்கோயிலின் முதல் மரியாதைக்குரிய நாடு ஜெகவீர வல்லப சீர்மிகு செல்வச் சிலாமேக நாடு.

திருக் கல்யாண மண்டகப்படியும் சிலாமேக நாட்டிற்குரியதே.

திருக்கல்யாண மண்டகப்படி நாளில், உரசூர் ஐயனார் கோயிலில் இருந்து, சிலாமேக நாட்டுத் தலசியை வெள்ளைக் குதிரையில் பட்டுப் பரிவட்டத்தோடு அமர்த்தி திருக்கல்யாணத்திற்கு வேண்டிய திருமாங்கல்யம் பட்டுச்சேலை மாலைகள் மற்றும் முகூர்த்தப் பொருட்கள் அடங்கிய பேழைப் பெட்டியோடு, நெடுகிலும் மாற்றுத்துணி விரித்து அழைத்துச் செல்வது மரபு. ஒரு மணமகனைப் போல மேளதாளத்தோடு வெள்ளைக் குதிரையில் கோயில் வாசலுக்கு வருகின்ற சிலாமேக நாட்டு தலசியை, தென்னாலை நாட்டாரும், சுந்தரபாண்டிய வள நாட்டாரும் ராஜ வள நாட்டாரும் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் செல்வர்.

எழுபது எண்பது ஆண்டுகட்கு முன்னர்வரை திருவேகம்பத்தில் தேர்த்திருவிழா நடந்திருக்கிறது. தேர் பழுதடைந்ததும் சப்பரத்தை தேராக்கி பத்துநாள் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். திருவிழா நடக்கும் வரை சிலாமேக நாட்டுத் தலசியை மூன்று நாட்டார்களும் வரவேற்கும் நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது. இடையில் ஏதோ பிரச்சனை சப்பரத்தேர் விழாவும் நின்றுவிட்டது. மூன்று நாட்டார்கள் வரவேற்கும் நிகழ்ச்சியும் நின்றுவிட்டது.

இரண்டுநாள் முன்னர் உரசூர் ஐயனார் கோயில் சென்றிருந்தேன். கோயில் வாசலின் இருபுறமும் வண்ணம் மாறா புரவிகள் வரிசையைப் பார்த்தேன். சமீப. ஆண்டில்தான் இங்கே புரவியெடுப்பு நடந்திருக்கிறது.

இருமதியில் உள்ள பாலாறுடைய ஐயனார் -காளி கோயில் மஞ்சுவிரட்டால் பெரும் புகழ் பெற்ற கோயில். அழகான தொழு. அழகான கோயில். இக் கோயில் 1.இருமதி 2 சக்கந்தி 3 மொன்னி 4 கார்மாங்குடி 5. பனங்குளம் 6. முட்டக்குத்தி 7 திடக்கோட்டை 8. சிலாமேக நாடு ஆகிய எட்டு ஊர்களுக்கு உரியது.

மாசி மாதத்தில் சிவராத்திரி அன்றைக்கு பச்சை பரப்புதல், இரண்டாம் நாள் காவடியெடுப்பு கூத்து, மூன்றாம் நாள் கிடாய்வெட்டு மஞ்சுவிரட்டு என மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.இவ் விழாவை இருமதி கிராமம் நடத்துகிறது. மற்ற ஏழு கிராமங்களிடமும் நன்கொடை பெறுகிறார்கள். வீட்டுக்குவீடு வரி வாங்குவதில்லை.

சிலாமேக நாட்டுக்குள் நடக்கின்ற,குறிப்பிடக் கூடிய விழா, இப்போதைக்கு இது ஓன்றே. இதை இருமதி துரை.கருணாநிதி மிகுந்த அக்கறையோடு நடத்திக் கொண்டிருக்கிறார்.

மஞ்சுவிரட்டுத் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் உயர்நீதி மன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியவர் துரை.கருணாநிதி. இவர் விடுதலை வேங்கை பால பாரதியின் பேரன் ஆவார்.

இருமதி பாலாறுடை ஐயனார் கோயில் விழாவில் முதல் மரியாதை நாட்டுத் தலசிக்கும் இரண்டாவது மரியாதை இருமதி அம்பலகாரருக்கும் மூன்றாவது மரியாதை திடக்கோட்டை அம்பலகாரருக்கும் வழங்கப்படுகிறது.

நாட்டுத் தலசியின் ஊரான மொன்னிக்கும் கார்மாங்குடி கிராமத்தார்க்கும் உரிய வேம்புடை ஐயனார் கோயில், வாரியன் வயல் கீழக் கண்மாய்க்குள் புதர்களுக்கு மத்தியில் பீடங்களாக காட்சியளிக்கிறது. எப்போதாவது கிடாய்பூசை, கோழிப்பூசை நடக்கின்றனவாம்.

முட்டக்குத்தி கிராமத்தில் பத்து அல்லது பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்று சுவடற்று மண்மேடாக கிடந்தது. இரண்டுபேர் கட்டிப் பிடிக்கமுடியாத சிவலிங்கமும் ஐந்துமுக காளி விக்கிரகழும் புதைந்து கிடந்தனவாம் கிராம மக்கள் காளிக்கு மட்டும் சிறிய கோயில் கட்டி கும்பிட்டுக் கொண்டிருந்தனர்.

2009 இல் தான் தேவகோட்டை அரு. லெட்சுமணன் செட்டியார் சிவனுக்குக் கோயில் கட்ட முன் வந்தார். தொடங்கிய பணி நிதிப் பற்றாக்குறையால் பாதியில் நின்றுவிட்டது.

செட்டியாரின் வழிகாட்டுதலோடு முட்டக்குத்தி மக்கள் 2013 இல் சிவாலயப் பணியை மீண்டும் தொடங்கினர். பணிகள் நிறைவு நிலையில் உள்ளன.23 தெய்வத் திருமேனிகள் அவினாசியில் ஒரு கலைக்கூடத்தில் செதுக்கப் பட்டுள்ளன. விரைவில் குடமுழுக்கை தரிசிக்கலாம். சிலாமேக நாட்டில் சிவனுக்கு ஒரு சீர்மிகு கோயில்.

ஜெகவீர வல்லப சீர்மிகு செல்வச் சிலாமேக வள நாட்டாரை ஒருங்கிணைப்பதற்காக ஒரு கோயிலோ விழாவோ இல்லை. இல்லாததால் தான் இருமதி ஐயனார் கோயிலுக்குரிய எட்டுக் கிராமங்களை மட்டுமே சிலாமேக நாடென்று இளைய தலைமுறையினர் எண்ணிக் கொண்டுள்ளனர்.

ஏழு கிளைகள்

===================

1. தொண்டைமான் கிளை
2. அரசியான் கிளை
3. அரசனன் கிளை
4. பிச்சையான் கிளை
5. குருவிழி கிளை
6. சோழயான் கிளை
7. அரியாதன் கிளை

இங்கே கிளை என்பது தாய்வழி வருகிறது. அம்பல்ம் அல்லது சேர்வை எனும் பட்டங்களும் வீரமும், போர்க்குணமும் தகப்பன் வழியில் வந்தாலும் திருமணம் செய்யும்பொழுது ஒரே கிளையில் திருமணம் செய்வது கிடையாது. ஒரே கிளையுடையவர்கள் அண்ணன் அல்லது தாய்மாமன் என்ற உறவில் பார்க்கிறார்கள். இவர்கள் தாய்மாமனை போற்றுகின்ற ஒரு உறவாகப் பார்ப்பதால் சகோதரியின் மகளை திருமணம் செய்வதில்லை.

இதில் அந்தக் காலத்தில் கிளைகள் என்பது ஒரு குழுக்களை அடையாளப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம். அதாவது போருக்குச் செல்லும்போது எந்தெந்த கிளையினர் எந்தெந்த பணிகளைச் செய்யவேண்டும் என்பதையும், எந்த கிளையினர் எந்த வரிசையில் நின்று போர்புரிய வேண்டும் எனவும்., அரசியான் கிளை எனில் அவர்கள் மன்னரின் குடும்பத்தினைப் பாதுகாக்கும் பணியிலும், அரசனன் கிளை இப்போது இல்லை என்றாலும் அவர்கள் அரசனின் ஆணைக்கு ஏற்று செயல்பட வேண்டும் எனவும், பிச்சையான் என்பது தானம் எனப் பொருள்படுவதால் அவர்கள் போர் முடிந்து பசியோடு வருபவர்களுக்கு போர் நடக்கும் பகுதிக்கு தானியங்களுடன் சென்று உணவு வழங்கும் பணியிலும் ஈடுபட ஏதுவாக இந்த கிளைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். மேலும் கள்ளர்கள் என்பவர்கள் தொண்டை மண்டலத்திலிறுந்து வந்தவர்கள் எனினும் பிற்காலத்தில் புதுக்கோட்டை பகுதியில் இருந்து குடியேறியவர்களை தொண்டைமான் கிளையினர், சோழ நாட்டில் இருந்து இப்பகுதியில் குடியமர்ந்தவர்களை சோழயான் கிளையினர் என்றும் அடையாளப்படுத்தி இருக்கலாம்.

# அரசனன் கிளை

ஏழு கிளைகளில் இப்போது இந்தக் கிளையினர் இல்லாததால், தகப்பன் கிளைவழிக் கள்ளராக இருந்து தாய் வேற்று சாதியில் இருந்தோ கிளையில்லா கள்ளர் குடும்பத்தில் இருந்தோ வந்திருந்தால் அந்த தாயின் பிள்ளைகளுக்கு அரசனன் கிளை என்று வைத்துக்கொள்ளலாம்.