களப்படையினர் பேரியக்கம்

கள்ளர் வீட்டு கல்யாணம் கள்ளர் ஜாதியினருக்கான பிரத்யேக திருமண தகவல் மையம். தொடர்புக்கு +91 9259595927, +91 8428595970
பிறப்பு

7 கிளைகள்! 14. நாடுகள்! பிறப்பும் கடமைகளும்!

தலைப்பிரசவம் என்பது தலைவிக்கும் தலைவனுக்கும் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பரவசமூட்டுவது. மகிழ்ச்சியூட்டுவது. பயமூட்டுவதும் கூட!

இரண்டு தலைமுறைக்கு முன்னர்வரை ஏழுகிளைக் கள்ளர் வீடுகளில் முதலிரவு முதற்பகல் என எதுவும் திட்டமிட்டு நடந்ததில்லை. அது இலைமறை காயென இருவர் மனதிற்கும் இயைந்த இயல்பாக. நடந்தது.

தலைவி கருவுற்ற ஐந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் பிறந்த வீட்டார் வருவார்கள். தீர்த்தம் கொடுப்பதற்கு அல்லது மருந்து கொடுப்பதற்கென அழைத்துச் செல்வர். புண்ணிய நதிகளின் தீர்த்தம் கொடுப்பர். கொட்டான்கரண்டிச் சாறு கொடுப்பர். ஐந்தாம் நாள் ஏழாம்நாள் திரும்ப அழைத்துவந்து விட்டுச் செல்வர்.

தற்காலத்தில் மருத்துவத்துறையின் மகத்தான முன்னேற்றத்தால், ஐந்தாவது மாதத்தில் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வதென்பது மரபுசார்ந்த ஒரு சடங்கென மாறிவிட்டது.

கருவுற்ற ஒன்பதாவது மாதத்தில் பிறந்த வீட்டார் புகுந்த வீட்டுக்கு வந்து காய்ச்சி ஊற்றுவர். வீட்டுப் பெரியவர்களிடம் வாழ்த்துப் பெற வைத்து நல்ல நாளில் நல்ல நேரத்தில் சகுனம் பார்த்து நலைப் பிரசவத்திற்காக தலைவியைத் தாய்வீட்டிற்கு கூட்டிச் செல்வார்கள்.

தலைப் பிரசவம் தாய்வீட்டின் பொறுப்பு கடமை.

குழந்தை பிறந்த முப்பதாம் நாளிலோ அதற்குப் பிறகோ குழந்தையின் மாமன்கள் வசதிக்கேற்ப விருப்பத்திற்கேற்ப. குழந்தைக்கு முதல்முடி இறக்குவர். முதல்முடி இறக்குதல் ஆடி புரட்டாசி மார்கழி மாதங்களில் நடக்காது. இரட்டைப்படை மாதங்களிலும் பெருப்பாலும் நடக்காது.

முதல்முடி இறக்குதல் எனில் முடியிறக்கி காதுகுத்தி பெயர்சூட்டுதல் எனப் பொருள் கொள்க. இந் நிகழ்வுகள் தலைவி பிறந்த வீட்டுக்குரிய குலசாமி கோயிலில் தான் நடக்கும். அடுத்த குழந்தைகளின் முடியிறக்குதல்கள் தலைவன் வீட்டுக்குரிய குலதெய்வக் கோயில்களில் நடக்கும்.

முதல்முடி நிகழ்வில் குழந்தைக்கு தாய்மாமன்கள் எத்தனைபேர் உண்டுமோ, தலைவியின் உடன்பிறந்தோர், பெரியப்பா சித்தப்பா பெரியம்மா சின்னம்மா மகன்கள் என எல்லாரையும் அழைப்பர்.இவர்கள் எல்லாரும் உருத்தோடு கலந்து கொள்வர் ..

குலதெய்வம் கோயிலில் குழந்தைக்கு முடியிறக்கி, அக் கோயில் ஊருணியில் அல்லது கண்மாயில் குளிப்பாட்டி தலையில் சந்தனம் கரைத்தப்பி, புத்தாடைபூமாலை அணிவித்து தாய்மாமன் மடியில் இருத்தி, தேர்ந்த ஆசாரியைக் கொண்டு காதுகுத்துவர்.காதில் கழுத்தில் இடுப்பில் காலில்,பொன்னால் வெள்ளியால் ஆன நகைகளை அணிவிப்பர் தாய்மாமன்கள்.

குழந்தையை அதன் தாய்மாமன் மடியில் இருத்தும் அந்த நொடியில் இருந்துதான் தாய்மாமன் என்ற அற்புதமான உறவு வேர்விடுகிறது. மாமனுக்கான உரிமைகளும் கடமைகளும் கிரீடம் சூடிக் கொள்கின்றன.தாய்மாமன் எனும் நங்கூர உறவுக்கு அஸ்திவாரம் 'மாமன்மடி இருத்தல் 'தான்.

குழந்தையின் பொருட்டு குலசாமிக்கு அயிசேகம் நடக்கிறது.சந்நிதியில், குலசாமி பெயரையும் பிறந்த புகுந்த வீட்டு பெரியவர்கள் பெயர்களையும் பூக்களாகக் கட்டிபோட்டோ,காகிங்களில் எழுதிப் போட்டோ தேர்வு செய்து குழந்தைக்கு பெயர் சூட்டும் மரபு இன்றளவும் பின்பற்றப் படுகிறது.

பதினாறு பேறும் பெற்று பெருவாழ்க வாழ்க என வாழ்த்துகிறோமே, வாழ்த்துப் பெறுகிறோமே அப் பேறுகளில் மிகச் சிறந்தது குழந்தைப் பேறு தான். இது தாயின் கர்ப்பக் கிரகத்தில் இருந்து வந்த மூலவர். மூலவர் இதோ தொட்டில் உலாவில் தாலாட்டுச் செவிக்கிறார்.

தாலாட்டு!

உலகத்திற்கு தாய் வழங்கும் முதல் இலக்கியப் பரிசு தாலாட்டு என்பர் தமிழறிஞர் தால் என்றால் தொட்டில் என்று பொருளுண்டு. தாலை ஆட்டி (தொட்டிலை ஆட்டி) பாடும் பாடலை தாலாட்டு என்கிறோம்.

தாலாட்டு எனும் சொல்
ராராட்டு தாராட்டு ஒராட்டு தாலேலோ ரோராட்டு தொட்டில்பாட்டு என்றெல்லாம் இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

ரேரேரேய்ய்ய்...என்றோ ராராரோ ராரீரரோ ....என்றோ தாலாட்டத் தொடங்குவர் தாயர். ஆட்டும் போது தொட்டில் சென்றுவரும் தொலைவைப் பொருத்து தாலாட்டும் ஓசை நீளும்.

எழுத்தறியாத இலக்கியமறியாத யாப்பறியாத தாயர்கள் நிரம்பியிருந்த நேற்றைய காலங்களில் தாலாட்டுப் பாக்கள் தமிழகமெங்கும் விரிந்து வியாபித்திருந்தன. மழலையர் செவிகளில் அன்பாக அறமாக உதிரத்தோடு ஒட்டிய உறவாக தேன் பாய்ச்சின.

இன்றோ, தாலாட்டு என்பது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் பழம்பொருளாகி விட்டிருக்கிறது. ஆயினும் நமது முதிய தாய்மார்கள் சிலரிடமிருந்து கேட்டறிந்து சில தாலாட்டுப் பாக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

தாலாட்டுப் பாக்கள் -

கண்ணுமணி பொன்னுமணி -- கண்ணேநீ
கந்தரோட வேலுமணி
வேலுமணி வேணுமினு- கண்ணேநான்
வெகுநாள் தவசிருந்தேன்!

கண்ணே உனைத்தேடி -எந்தன்
காலிரண்டும் பூத்தோடி
பொன்னே உனைத்தேடி - நான்
போகாத கோயிலில்லை

அழகர் மலைமேலே- என் கண்ணே
அச்சில்லாத் தேர்மேலே
உருளையிலாத் தேர்மேலே - என் கண்ணே
உருண்டுவந்த தீர்த்தம்நீ!

தீர்த்தமாகத் தந்தாக்க - என் கண்ணே
செலவழிஞ்சு போகுமினு
நெஞ்சப் பதக்கமாக - பட்டையா
நிச்சயமாத் தந்தவரம்!
கழுத்துப் பதக்கமாக - காளியம்மா
கைநிறையத் தந்தவரம்!

******

ஏனழுதாய் இந்நேரம் - என் கண்ணே
ஏனழுதாய் இந்நேரம்
ஆரடித்தார் சொல்லியழு - என் கண்ணே
அடித்தாரை சொல்லியழு

ஆரும் அடிக்கவில்லை - என் கண்ணே
அதட்டியாரும் சொல்லவில்லை
தானாய் அழுகிறியோ - என் கண்ணே
தாயார் மடிதேடி!

தாலாட்டு!!

என்னரியான் கண்ணுக்கும் -கண்ணேஉன்
இசைந்தநல்ல முகத்துக்கும்
தன்னைப்போல் கண்ணாடி - என் கண்ணே
தருவாரு ஆசாரி!

ஆசாரி செய்துவந்த -என் கண்ணே
அன்புமணிக் கட்டிலிலே
கூசாமல் கண்ணுறங்கு - என் கண்ணே
கோதைபெற்ற ஓவியமே!

**** 4

செம்பொன் மழைபொழிஞ்ச - என் கண்ணே
சொர்ணலிங்கம் கோயிலிலே
கல்லாலே கோபுரமாம் - என் கண்ணே
கருங்கல்லால் மண்டபமாம்
நாலுபக்கம் பிரகாரம் - என் கண்ணே
நடுவே கொடிமரமாம்
கொடிமரத்து உச்சியிலே - என் கண்ணே
குயிலிருந்து கூவுதய்யா!

சுத்தித் திருமதிலாம் - என் கண்ணே
சோழர் திருக்குளமாம்
திருக்குளத்தில் பன்னிரண்டு - என் கண்ணே
தீர்த்தத் துறைகளுமாம்

சொர்ணமூர்த்தி வாசலிலே - என் கண்ணே
சோடனையாம் தேரடியாம்
தேரடிக்குத் தென்புறத்தில் - என் கண்ணே
தேவர்குல கச்சேரி
கச்சேரி அமர்ந்திருந்து - என் கண்ணே
கணக்கெடுப்பர் நாட்டாரு!

தங்கத்தால் தாமரைப்பூ - என் கண்ணே
தான்பூக்கும் திருக்குளத்தில்
பொன்னால தாமரைப்பூ - என் கண்ணே
பூக்குமந்தப் பொய்கையிலே

கையாலே பூவெடுத்தால் - என் கண்ணே
காம்பழுகிப் போகுமினு
தங்கத் தொரட்டிகொண்டு - என் கண்ணே
தனித்தெடுத்தார் தாமரைப்பூ

விரலாலே பூவெடுத்தால் - என் கண்ணே
வேரழுகிப் போகுமினு
வெள்ளித் தொரட்டிகொண்டு - என் கண்ணே
விரைந்தெடுத்தார் தாமரைப்பூ

சிவனுக்கும் சாத்தி - என் கண்ணே
தெரிசிப்பார் உன்தகப்பன்
அம்மனுக்கும் சாத்தி - என் கண்ணே
அலங்கரிப்பார் உன்தகப்பன்!

******

5

ஏனமுதாய் ஏனழுதாய் - என் கண்ணே
என்னென்ன கேட்டமுதாய்
கட்டி விளையாட - என் கண்ணே
கவரிமான் கேட்டழுதாய்
புடித்து விளையாட - என் கண்ணே
புள்ளிமான் கேட்டழுதாய்
வச்சு விளையாட - என் கண்ணே
வைரமணி கேட்டழுதாய்
ஓட்டி விளையாட - என் கண்ணே
ஒயிலான ரயிலு வண்டி

அத்தனையும் கொண்டு - என் கண்ணே
அருகி வந்தான் உங்களம்மான் கேட்டதெல்லாம் வாங்கி - என்
கண்ணே
கிளம்பிவந்தான் உங்களம்மான்!

*****

6

மலைமேலே தினைப்புனத்தில் - என் கண்ணே
மான்வயிற்றில் தானுதித்து
கொடிமேலே கிடந்து - என் கண்ணே
குழந்தைவள்ளி அழுகையிலே
அரச மக்கள் ஐபேரும்- என் கண்ணே
அக்குன்றக் குறவர்களும்
மான்பிடிக்கும் வேடர்களும் - என் கண்ணே
மதலைக்குரல் கேட்குதுனு
மலைவேடர் ஓடிவந்தார்- என் கண்ணே
மான்மகளைப் பார்த்தார்கள்
வாரி எடுத்தார்கள் - என் கண்ணே
வள்ளியினு பேருவைத்தார்!

******

( மேலேயுள்ள ஆறு தாலாட்டுப் பாக்களையும் பாடிக்காட்டிப் பகிர்ந்து கொண்டவர் செம்பொன்மாரி நாடு நடுவட்டம் ஆறாவயல் கிராமம் திருமதி கனகம் இராம. பெரியய்யா அம்பலம், வயது 77.தொண்டைமான் கிளை பிறந்த ஊர் :வெங்களூர். )

1

சங்கு கழுவி - என் கண்ணே
சடுதியிலே பாலாத்தி
சங்குப்பால் குடித்திடுவாய் - என் கண்ணே
உங்ககுலம் பேருசொல்ல

சங்கெடுக்கப் போனமாமன் - என் கண்ணே
சந்திரரோ சூரியரோ
சந்திரர்க்கும் சூரியர்க்கும் - என் கண்ணே
சலிப்பகற்ற வந்தவனே!

*****

2

காசியிலே பட்டெடுத்து- என் கண்ணே
கப்பலைப்போல் தொட்டிகட்டி
தொட்டில் வரிந்துகட்டி -என் கண்ணே
துரைமகனைப் போட்டாட்டி

ஆட்டினார் சொக்கநாதர் - உனக்கு
அசதி வரும்வரைக்கும்
ஊட்டினாள் மீனாட்சி - உனக்கு
உறக்கம் வரும்வரைக்கும்

தொட்டிலுக்கு கீழே - உனக்கு துணையிருப்பார் சொக்கநாதர்
கட்டிலுக்குக் கீழே -உன்னை காத்திருப்பாள் மீனாட்சி

ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆரிரரோ கண்ணுறங்கு!

***-

3

தெற்கே மழைபொழிய - என் கண்ணே
தென்புறமாய் காற்றடிக்க
தென்மதுரை மீனாளின் - என்கண்ணே
சேங்கைக்கு தண்ணிவர
சேங்கை மணலொதுக்கி - என் கண்ணே
தென்னந்தோப்பு உண்டாக்கி
தென்னைவந்து வீசாதா - என்கண்ணே
தென்காற்று அடிக்காதா
தென்காற்று அடிக்காதா - என் கண்ணே
செல்லமகள் கண்மலர!

வடக்கே மழைபொழிய - என் கண்ணே
வடபுறமாய் காற்றடிக்க
வாள்விழியாள் மீனாளின் - என் கண்ணே
வையையிலே தண்ணிவர
வையை மணலொதுக்கி - என் கண்ணே
வாழைத்தோப்பு உண்டாக்கி
வாழைவந்து வீசாதா - என் கண்ணே
வடகாற்று அடிக்காதா
வடகாற்று அடிக்காதா - என் கண்ணே
வாழும்மகன் கண்மலர!

**** 4

உன்னரிய அம்மான்மார் -என் கண்ணே
என்னகொண்டு வந்தாக
கொத்துவிடா நெத்தும் - என் கண்ணே
கோதுபடா மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும் - என் கண்ணே
பக்குவத்து வாழைப்பழம்
அக்கரைச் சக்கரையும் - என் கண்ணே
அதிமதுரத் தென்னைவட்டும்
காய்ச்சின பசும்பாலும் - என் கண்ணே
கற்கண்டும் செந்தேனும்
ஏலம் கிராம்பும் - என் கண்ணே
இளங்கொடிக்கால் லெத்திலையும்
சாதிக் கலிப்பாக்கும் - என் கண்ணே
சங்குவெள்ளைக் சுண்ணாம்பும்
அத்தனையும் கொண்டுவுன்னை- என் கண்ணே
அறியவந்தார் அம்மான்மார்!

*****

( மேலேயுள்ள நான்கு தாலாட்டுப் பாக்களையும் பாடிப் பகிர்ந்தவர் இரவுசேரி நாடு மாவிடுதிக்கோட்டைகிராமம் திருமதி காளியம்மாள் சீனிவாசன் அம்பலம் .வயது 75. அரசுயான் கிளை.பிறந்த ஊர் :இரவுசேரி )

1

மலைக்குமலை கல்லெடுத்து- என் கண்ணே
மாமதுரை லயம்பார்த்து
கண்ணான மீனாளுக்கு -என் கண்ணே
கல்லாலே கோட்டைகளாம்

கருங்கல்லால் கால்நிறுத்தி - என் கண்ணே
கட்டிடமும் சித்திரம்தான்
கண்ணான மீனாளுக்கு - என் கண்ணே
கருவிழியும் ஓவியம்தான்

பாண்டியனார் மீனாளுக்கு - என் கண்ணே
பாலாலே அபிஷேகம்
படியளக்கும் மீனாளுக்கு - என் கண்ணே
பன்னீரால் அபிஷேகம்

****

2

ஏழுகடல் தாண்டி -மீனாளுக்கு
எடுத்துவந்த செவ்வரளி
சிந்தாமல் சாத்திடுங்க -பச்சைக்கிளி
தென்மதுரை மீனாளுக்கு
வாடாமல் சாத்திடுங்க - அவபுருஷன்
வடமதுரை சொக்கருக்கு!

3

வாங்கும்மணி வாங்கி - என் கண்ணே
வைரமணிக் கல்லிழைத்து
தூங்குமணிக் கட்டிலிலே - என் கண்ணே
துரைமகனைப் போட்டாட்டி

உலக்கு சிறுசலங்கை - என் கண்ணே
உயர்ந்தவிலை மணிச்சலங்கை
நாழிச் சிறுசலங்கை - என கண்ணே
நடந்தால் அழுத்துதுனு
பொன்னாலே மணிச்சலங்கை - என் கண்ணே
பூட்டுனாக உங்களம்மான்

*****

4

மலைமேல் முருகருக்கும்
மாயவடி வேலவர்க்கும்
மாதமொரு கார்த்திகையாம்
மாதமொரு கார்த்திகையை
வருந்திப் பிடிப்போர்க்கு - முருகர்
வந்தபிணி தீர்ப்பாரு.

செட்டிமகன் முருகருக்கும்
செந்திவடி வேலவர்க்கும் திங்களொரு கார்த்திகையாம்
திங்களொரு கார்த்திகையை திருந்தப் பிடிப்போர்க்கு - முருகர்
செய்தவினை தீர்ப்பாரு!

****

5

உச்சிமேல் வகுப்பெடுத்து -
என் கண்ணே
உச்சிதமாய் பொட்டுவச்சு
கத்திபோல் வகுப்பெடுத்து - என் கண்ணே
கச்சிதமாய் பொட்டுவச்சு
செப்புச் சிலைவடிச்சு - என் கண்ணே
செல்லமகள் பேரெழுதி
ஐம்பொன் சிலைவடிச்சு - என் கண்ணே
அழகுமகள் பேரெழுதி
வாராக உங்களம்மான் - என் கண்ணே
வகைவகையா சீரெடுத்து!

***

(மேலேயுள்ள ஐந்து தாலாட்டுப் பாக்களையும் பாடிப் பகிர்ந்து கொண்டவர் தென்னாலை நாடு ஈகரைச் சேர்க்கை கள்ளிக்குடி கிராமம் திருமதி சுலோச்சனா இல.பெரியசாமி அம்பலம். வயது 67.பிச்சையான் கிளை)