களப்படையினர் பேரியக்கம்

கள்ளர் வீட்டு கல்யாணம் கள்ளர் ஜாதியினருக்கான பிரத்யேக திருமண தகவல் மையம். தொடர்புக்கு +91 9259595927, +91 8428595970
இறப்புச் சடங்குகள்

7 கிளைகள்! 14. நாடுகள்! இறப்பு! சடங்குகள்!

கட்டுரை 1

ஏழுகிளைக் கள்ளர் வீடுகளில் இயற்கையான இறப்பு ஏற்பட்டால் முதலில் பங்காளி வீடடுகளுக்கே தகவல் போகவேண்டும். அல்லது, ஓலம் கேட்டு பங்காளி வீடுகளில் இருந்து பெண்களும் ஆண்களும் சாவு வீட்டுக்கு விரைவர். திருவுடல் ஆணுடையதாக இருப்பின் பங்காளி ஆண்களும், பெண்ணுடையதாக இருப்பின் பங்காளிப் பெண்களும் திருவுடலைக் குளிப்பாட்டுவர். பங்காளிகள் இல்லாமல் சாவு வீட்டுக்காரர்கள் உடலைக் குளிப்பாட்டக்கூடாது.இறப்பு இயற்கையாக ஏற்பட்டதா அல்லது உடலில் காயங்கள் உள்ளனவா என்பதை அறிந்து கொள்வதற்காகவே அக் காலத்தில் இத்தகைய மரபுகளை முன்னோர் உருவாக்கியுள்ளனர்.

குளிப்பாட்டியதும் புதிய ஆடை உடுத்துவர். நெற்றியில் திருநீறு பூசுவர். மூடிய கண்களில் சந்தனம் திருநீறு அல்லது மஞ்சளைக் குழைத்தப்புவர். கரையற்ற, கறையுமற்ற வெள்ளைத் துணியை இரண்டங்குல அகலத்தில், தேவைக்கேற்ற நீளத்தில் கிழித்து, ஆணின் திருவுடலாக இருப்பின் ஏழு இடங்களிலும், பெண்ணின் திருவுடலாக இருப்பின் எட்டு இடங்களிலும் கட்டுக் கட்டுவர்.

1 இரண்டு கால்பெருவிரல்களையும் இணைத்துக் கட்டுவர்.
2. முழங்கால் முட்டிகளை இணைத்து இரண்டாம் கட்டு.
3. பெருந்தொடைகளை இணைத்து மூன்றாம் கட்டு.
4 பிறப்புறுப்பை ஒட்டியொரு கட்டு.
5 இருகைக் கட்டைவிரல்களை இணைத்து ஒரு கட்டு.
6 இரண்டு கைகளையும் வயிற்றில் ஒட்டிவைத்து ஆறாவது கட்டு.
7) கைகளை இணைத்து மார்பில் ஒரு கட்டு
8 வெற்றிலையை நைத்து வாயில் திணித்து உதடுகள் தெரியாமல் ஒரு கட்டு, ஆக, எட்டுக் கட்டுகள் கட்டுவர்.

.

நடுவீட்டிற்குள் பாய்விரித்து அல்லது கட்டிலை போட்டு, குளிப்பாட்டிய இடத்தில் இருந்து உடலைத் தூக்கிவந்து தென்திசையில் தலைவைத்து கிடத்துவர். இறந்தோரை தென்புலத்தார் என்பார் திருவள்ளுவர்.

திருவுடலின் தலைமாட்டில் 1 மரக்காலில் அல்லது படியில் கோபுரமாக நெல் நிறைத்துவைப்பர். 2. குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கில் எண்ணை ஊற்றமல் திரியை மட்டும் போட்டு வைப்பர். 3. தேங்காயை உடைத்து இரண்டு முடிகளோடு வாழைப் பழங்களையும் வைப்பர். 4 லண்டியனை அல்லது முட்டைக்கிளாஸ் விளக்கேற்றி வைப்பர். 5 ஊதுபத்தி கொளுத்தி வைப்பர்.

இதன்பிறகு, கேத வீட்டு ஆண்களும் பங்காளி ஆண்களும் கட்டி அழுவர். பிறகு, கேதவீட்டுப் பெண்களும் பங்காளிப் பெண்களும் கட்டியழுவர்.

முதலில் குடி வண்ணாருக்கும் குடிநாவிதருக்கும் சாவுச்செய்தி போகும். அவர்கள் சட்டி முட்டி மாற்றுத்துணிகளுடனும் தொழிற் கருவிகளுடனும் வருவர்.

இதன்பிறகே, சம்பந்தபுறங்கள் உறவினர்கள் நட்பு வட்டாரத்திற்கு கேதம் போகும்.

இறந்த அன்றைக்கே இறுதியாத்திரை நடத்தும் நிலை ஏற்படாது. ழுந்தைய காலத்தில் இரண்டு இரவுகள் கூட திருவுடலை வீட்டில் கிடத்த வேண்டிய. கட்டாயம் இருந்திருக்கிறது. இரவுகளில் கேதவீடுகள் மௌனத்தில் உறைந்துவிடக் கூடாது எனபதற்காகவே அக் காலத்தில் கூலிக்கு மாரடிப் பாக்கள் பாடி ஒப்புக்கழும் பெண்களை அழைத்து வந்ததிருக்கிறார்கள்.

போர்க்களம் போன்றதே கேத களமும். திருவுடல் கிடத்தப் பட்டிருக்கும் கேத வீட்டிற்கு உறவினர்களும் சம்பந்தப் புறங்களும் சூரிய உதயத்திற்கு முன்னும் அஸ்தமனத்திற்கு பின்னும் வருவதில்லை.

திருவுடல் வீட்டில் கிடத்தப் பட்டிருந்தால், கேதம் கேட்டு வருவோர், கேதம் ஏற்கக் காத்துநிற்கும் கேதவீட்டு ஆண்களுக்கும் பங்காளிகளுக்கும் முதலில் வணக்கம் செலுத்தவேண்டும் (சலாம் செய்வர் )பிறகு, எல்லாரும் பக்கத்தவர் தோள்களில் இடைவெளி இன்றி தங்கள் கைகளை பிணைத்துக்கொண்டு கட்டியழுவர். பிறகு காத்துநின்றோர் ஒவ்வொருவரிடமும் கைநிரவிக் கொள்ளல் வேண்டும்.

கை நிரவுதல் எனில், காத்து நிற்போர் தானம் ஏற்பார் போல இரு கைகளையும் ஒட்டி பத்துவிரல்களையும் நீட்டியபடி உள்ளங்கைகளை மேல்நோக்கிக் காட்டி நிற்பர் .

கேதம் கேட்க வந்தோர் தானம் வழங்குவார் போல இருகைப் பத்து விரல்களையும் நீட்டி உள்ளங்கைகளை குப்புற வைத்து காத்து நிற்போர் கைகளை ஒற்றி எடுக்க வேண்டும். மிகமிக உருத்தானவர்கள் இழப்பிற்குரியோரை கட்டியணைத்து ஆறுதல் கூறுவர். கேத வீட்டுக்கு பிறந்த மக்களும் சம்பந்திகளும் கோடி கொண்டு வருவர். வரவேண்டும்.

கோடி எனில் கோடி வேட்டி அல்லது சேலை பாய் நெல் தலையணை மெத்தை இளநீர் எண்ணை சீயக்காய்த்தூள் வெற்றிலைபாக்கு கற்பூரம் ஊதுபத்தி (இறந்தவர் கைம்பெண் எனில் துளசிமாலையும் வெள்ளைச்சேலை) கொண்டு வருவர். எத்தனை கோடிகள் வரினும் பிறந்த மகளிரில் மூத்தவர் கொணரும் வைகுண்ட மெத்தையைத்தான் பாடைக்கு பயன்படுத்த வேண்டும்.

சம்பந்தப் புறங்களோ பிறந்த மக்களோ வரும்போது ஊரைத் திரட்டிக் கொண்டே வருவர்.அப்போது பெண்கள் முன்னாலும் பெண்களின் பின்னே ஆண்கள் வருவர். திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகளுக்கு வரும்போது ஆண்கள் முன்னாலும் ஆண்களின் பின்னே பெண்களும் வருதல் மரபு.

1934-35 க்கு முன்னர் கேதம் சொல்வது குழிவெட்டுவது பாடைகட்டுவது பறைகொம்பு இசைப்பது தாழ்த்தப் பட்டிருந்தோருக்கான பணிகளாக கட்டாயப் படுத்தப் பட்டிருந்தன.அதற்கான ஊதியம் நெல்லாகவும் கட்டத்தளைப் பணமாகவும் வழங்கப்பட்டது.அத்தகைய கட்டாயங்கள் ஒவ்வொள்றும் சுதந்திர வேட்கைகளால் உடைக்கப்பட்டள. செல்லிடப் பேசிகள் இன்றைய அவசியங்களை எளிமைப்படுத்தியுள்ளன.

கேத வீட்டிற்கு கட்டாயம் வந்தாக வேண்டியவரகளும் வர இயன்றவர்களும் வந்து திருவுடலின் முகம் பார்த்து துயரச் சுமையை இறக்கிவைத்ததும், நீர்மாலை எடுக்கும் நிகழ்வு தொடங்கும்.

திருவுடலுக்கு எண்ணைக் குளியல் நடத்துவதற்காக, அருகிலுள்ள வழக்கமான நீர்நிலைத் துறைக்குச் சென்று நீர் கொண்டுவருவதையே நீர்மாலை எடுத்தல் என்பர்.

தலைகளுக்கு மேலே பறக்கும் சமுக்காளம் போல வண்ணார் மாற்றுத் துணி விரித்துப் பிடித்துச் செல்வர். விரிப்புநிழலில் இறந்தவரின் மகன்கள் மருமகள்கள் மகள்கள் பேரன்பேத்தியர் உருத்தானவர்கள் நீர்நிலைக்கு குடங்களோடு செல்வர். குளிப்பர்.

குடமுடைத்து கொள்ளிவைக்கும் மூத்தமகன் குளித்ததும் அவருக்கு பூணூல் அணிவிப்பர்.மாலை அணிவிப்பர். நெற்றிநிறைய நீறு அணிவிப்பர். நிறை குடத்துடன் திரும்ப அழைத்துவருவர். மற்றவர்கள் அவர் பின்னே நீர் கொண்டுவருவர்.இது தொல்மரபு. இற்றைக் காலத்தில் எத்தனை மகன்கள் உளரோ அத்தனை பேரும் பூணூல் அணிந்து மாலை அணிந்து குடம் கொணர்கின்றனர்.

7 கிளைகள்! 14 நாடுகள்!
பண்பாடு! இறப்பு!

கட்டுரை (2 )

குன்னங்கோட்டை, இரவுசேரி உள்ளிட்ட சில நாடுகளில் இறப்புச் சடங்குகளில் சிலபல மாறுதல்கள் உள்ளன.

இரவுசேரி நாட்டில் நீர்மாலை எடுப்பதற்கு ஆண்கள் போக மாட்டார்கள். கணவர் இறந்தால் மனைவியே குடமுடைப்பார்.

குன்னங்கோட்டையில் தலைமகள் குடமுடைக்கும் மரபுண்டு. வீதியில் முச்சந்தியில் பாடையை இறக்கிவைத்து மூத்தமகள் குடமுடைப்பார். பிறகு அவருடைய பார்வையை மறைத்து வீட்டிற்குள் கூட்டிச் செல்கிறார்கள்.

குன்னங்கோட்டை நாட்டில் கேதத்திற்கு வருகின்ற பெண்டிர் கொட்டானில் சின்னப்படிக்கு ஒருபடி நெல் கொண்டுவரும் மரபு இருக்கிறது. அங்கே, கட்டைத்தளையில் காடாத்து பச்சைக்கு மொய் எழுதிக் கொள்வார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு எல்லா நாடுகளிலுமே காடாத்துப் பச்சைக்கு கால் ரூபாய் மொய் எழுதினார்கள். பின்னர் அது ஒண்ணேகால் ரூபாயாக உயர்ந்தது. இப்போது காடாற்றுபச்சைக்கு நூறு ரூபாயும் எண்ணை நாளில் இருநூறும் படையல் நாளில் இருநூறும் எழுதுகிறோம்

நீர்மாலை வீட்டுக்கு வந்ததும், நடுவீட்டில் கிடத்தப் பட்டிருக்கும் திருவுடலை குளிப்பாட்டுவதற்காக தூக்கிவந்து வாசல் பகுதியில் கட்டிலில் கிடத்துவார்கள்.

" தலையில் எண்ணை சீயக்காய் தொட்டுவைக்க ....முதல்ல பிறநாட்டார் வாங்க! "நாவிதர் அழைக்கிறார்.

நமது குலதெய்வக் கோயில்களான அய்யனார் கருப்பர் காளி முனியய்யா கோயில்களைப் போல, கேத வீடுகளிலும் பிற நாட்டாருக்கு முதல் மரியாதை கொடுப்பது நமது பண்பாடாக திகழ்கிறது.

" கொள்ளி வைத்துக் குடமுடைத்து பட்டம் சுமக்கப் போகும் மூத்தமகனும், குடமுடைத்து சீதேவி வாங்கப்போகும் மூத்த மருமகளும் கடைசியாக எண்ணை வைப்பார்கள். மத்த ஐயாமார்கள் ஆத்தாமார்கள் உடலுக்ஸு எண்ணை தொட்டு வைக்க வாங்க! " நாவிதர் அழைக்கிறார்.

"எல்லாரும் எண்ணை வச்சாச்சு. மூத்தமகனும் மூத்த மருமகளும் வாங்க! "

திருவுடலைக் குளிப்பாட்டுகிறார்கள். கோடிகள் உடுத்தி மாலைகள் அணிவித்து வாசலில் பாயில் கிடத்துகிறார்கள்.

" ஐயாமார்களே ஆத்தாமார்களே!வாங்க வாய்க்கரிசி போடுங்க! மயானத்தில ஆம்பிளைங்க போடலாம். அங்கே போகயியலாதவுக இங்கே போடலாம்! முதல்ல பிறநாட்டார் வாங்க! "அழைக்கிறார் நாவிதர்.

வாய்க்கரிசிக்குய் பிறகு மூத்தமருமகள் குடமுடைக்கும் சடங்கு நடக்கிறது.

தலையில் நீர்க்குடத்தை (முட்டி) சுமந்து திருவுடலை மும்முறை வலம் வருகிறார் மூத்த மருமகள். அவர் பின்னால் கதிர் அறுவாளுடன் வருகின்ற நாவிதர், ஒவ்வொரு சுற்றிலும், கதிர் அறுவாளின் முனையால் குடத்தில் ஒரு ஓட்டை போடுகிறார். தலைக்குட நீர் திருவுடலைச் சுற்றி வழிகிறது. மூன்றுவலம் வந்து குடமுடைக்கிறார் மருமகள்.

அடுத்ததாக தலைமகன் பட்டம் சுமக்கும், தலைமருமகள் சீதேவி வாங்கும் (இறக்குகின்ற) சடங்கு நிகழ்கிறது.

ஒரு மன்னர் இறந்ததும், அவரது மூத்தமகன் பொறுப்புகளைச் சுமக்கும் உறுதியேற்கிறார். அரியணையில் அமர்கிறார். திருமுடி சூடிக்கொள்கிறார்.இந் நிகழ்வை பட்டம் ஏற்றார். பட்டத்திற்கு வந்தார் என்கிறோம். இது அரச குடும்பத்தில் நிகழும் பட்டம் சுமப்பது .

குடியானவர் குடும்பங்களில் குடும்பத் தலைவர் இறந்ததும் மூத்த மகள் குடும்பப் பொறுப்புகளை ஏற்கிறார். குடும்பத் தலைவர் ஆகிறார். இதையே பட்டம் சுமப்பது என்கிறோம்.

சீதேவி வாங்குதல் எனில்?

இதுவரையில், அக் குடும்பத்தின் தலைவியராக இருந்தவர்கள் தங்கள் பண்பால் ஒழுக்கத்தால் அறத்தால் விருந்தோம்பலால் தானங்களால் தவங்களால் பெற்றிருந்த அத்தனை பெருமைகளையும் சிறப்புகளையும் நற் பேறுகளையும் வரங்களையும் அவர்களிடம் இருந்து, புதிய தலைவியாக பொறுப்பேற்கும் மூத்த மருமகள், இறந்தவரிடம் இருந்து வாங்கிக் (இறக்கிக்) கொள்வதையே சீதேவி வாங்குதல் என்கிறோம்.

மாட்டுப் பொங்கல் அன்று " பட்டி பல்கப் பல்க,பால்ப்பானை பொங்க பொங்க, மூதேவி முறிந்தோட, சீதேவி நின்றாளப் பொங்கலோ பொங்கல்! " எனத் திட்டிப் (வேண்டுகோள் )பாட்டுப் பாடுகிறோம். இந்த வேண்டுதலின் பொருள் என்ன?

கால்நடைகள் பல்கிப் பெருக வேண்டும் பஞ்சம் பட்டினியின்றி எப்போதும் பானை பொங்கிக் கொண்டிருக்க வேண்டும். தீயன (மூதேவி) அனைத்தும், நாமே கட்டிப் போட்டிருந்தாலும் முறித்துக் கொண்டு நம்மை விட்டு ஓடவேண்டும். நல்லன (சீதேவி) அனைத்தும் நம் குடும்பத்தில் நின்று நிலைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதே திட்டிப் பாட்டின் பொருள்.

மூதேவி எனில் தீயவை அனைத்தையும் குறிக்கும். சீதேவி எனில் நல்லவை அனைத்தையும் குறிக்கும்.

மூத்தமகன், பட்டம் சுமப்பதற்கு அடையாளமாக, அளவான சட்டியில் அல்லது பெட்டியில் நெல் நிறைத்து அதற்கு மேல் பரிவட்டத்திற்கான துண்டும் புது வேட்டியும் சேலையும் வைத்து திருவுடலை மும்முறை வலம்வந்து, கால்மாட்டில் நின்று வணங்கி, வீட்டிற்குள் கொண்டுசென்று, முப்பது நாளும் அணையா விளக்கெரியும் இடத்தில் இறக்கிவைத்து வணங்குவார்.

சீதேவி வாங்கும் மூத்த மருமகள், திருவுடலின் தலைமாட்டில் கோபுரமாக வைக்கப் பட்டிருக்கும் நெற்படியை இரு கைகளாலும் கவனமாக எடுத்து திருவுடலின் நெற்றியில் மார்பில் பாதத்தில் நெல் சிதறுமாறு மும்முறை வைத்தெடுத்து வணங்கி வீட்டிற்குள் கொண்டுசென்று அணையா விளக்கு வைக்குமிடத்தில் வைத்து வணங்குவார்.முப்பதாம் நாளுக்குப் பிறகு இந் நெல்லை விதைநெல்லுடன் கலக்க வேண்டும்.

சில பகுதிகளில் நெல் அல்லது நவ தானியங்களில் புரட்டிய சாணியுருண்டையை பெட்டிக்குள் வைத்து திருவுடலின் நெற்றி மார்பு பாதத்தில் வைத்து வணங்கி வீட்டிற்குள் விளக்கிருக்கும் சுவரில் சாணி உருண்டையை வறட்டியென அப்பிவைத்து. முப்பது நாட்களுக்கு பிறகு உதிர்த்து விதை நெல்லுடன் கலப்பர்.

பட்டம் சுமந்து சீதேவி வாங்கியதும் , திருவுடலைச் சுற்றிவந்து முதுபெண்டிர் மார்பிலடித்துக் கொண்டு பாடுவர்.

-- கத்தரிக்காய் ? " - எங்களுக்கு!" - கைலாயம்? " - உங்களுக்கு! " - வெள்ளரிக்காய்? " - எங்களுக்கு! " - வைகுண்டம்? " - உங்களுக்கு! "

பாயில் கிடத்தப்பட்டிருந்த திருவுடலைப் பாடையில் ஏற்றுவர். மூங்கில்களால், பூவரசங் கம்புகளாலும் பாடை கட்டுவர் தற்போது சீமை விஷக்கருவைக் கம்புகளாலும் கூடப் பாடை கட்டுகிறார்கள்.

மலர்மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட பாடையில் தலைமகளின் அல்லது பிறந்த வீட்டார் கோடி கொணர்ந்த பாய் மெத்தை தலையணையை போட்டு திருவுடலை கிடத்தி,கோடிகள் சார்த்தி எந்த நிலையிலும் பாடையிலிந்து நழுவிவிடாமல் இறுகக் கட்டுவர்

பெண்களின் பேரழுகை ஓலத்தோடு பாடையைக் கிளப்புவர். வீட்டிற்குள்ளிருந்து கிளம்பும் பாடையில் ,திருவுடலின் கால்கள் வீடுநோக்கியும் தலை மயானப்பாதை நோக்கியும் இருக்கும்.

7. கிளைகள்! 14 நாடுகள்!

கட்டுரை (3)

வீட்டை விட்டு கிளம்பும்போது, பாடையில் உள்ள திருவுடலின் சிரம் மயானம் நோக்கியும், பாதங்கள் வாழ்ந்த தன் இல்லம் நோக்கியும் இருக்கின்றன.

வீதியில் முச்சந்தியில் பாடையை மும்முறை வலம்சுற்றுவர். அங்கிருந்து கிளம்பும் பாடையில் திருவுடலின் சிரம் இல்லம் நோக்கியும் பாதங்கள் மயான வழி நோக்கியும் இருக்கும்படி பாடையைத் திருப்பிச் செல்வர். ஆமாம், அவர் பாதங்கள் இனிமேல் வீட்டிற்கு வரப்போவதில்லை. இது இறுதி யாத்திரை. திரும்பாப் பயணம்.

கொள்ளிவைக்கும் தலைமகன் தீச்சட்டி எடுக்க, சிகண்டியும் வெண்சங்கும் ஒலிக்க, பறையும் கொம்பும் இசைக்க, பூத்தெளிப்புகளோடு பொறுத்தாரின் தோள்களில் மிதந்து செல்கிறது பூஞ்சிவிகை.

எத்தனையெத்தனையோ பாடைகளை சுமந்த தோள்களை இதோ உயிர்த் தோள்கள் சுமந்து செல்கின்றன. எத்தனையெத்தனையோ தாயருக்கு மாரடித்து ஒப்புப்பாடி கண்ணீரொடு கதறிய ஜீவனுக்காக இதோ உயிர்க் குரல்கள் மாரடித்து ஒப்புப்பாடி கண்ணீர் வழியக் கதறிக் கொண்டிருக்கின்றன.

முச்சந்தியில் இருந்து, பொரி தூவிச் செல்கிறார்கள் பிறப்பால் மருகனும் அண்ணன் மகனும். இடுகாட்டில், தெற்குவடக்காக ஆறடி நீளம், மூன்றடி அகலம், நான்கடி ஆழத்தில் வெட்டப்பட்ட குழி அல்லது அதற்கு இணயாக விறகுகளால் உயர்த்தப்பட்ட சிதை.

குழியை (அ)சிதையை மூவலம் வந்து பூஞ்சிவிகையை இறக்குகிறார்கள்.

தலைமகன் அல்லது அத்தனை மகன்களும் முடியிறக்குதல்,பிறப்பால் மருமகனும் பெரும்பங்காளியும் முகவேலை செய்தல்,குடமுடைத்தல் வாய்க்கரிசி போடுதல் ஆகிய சடங்குகள் நிறைவேறுகின்றன.

தலைமாட்டுப் பக்கம் ஒருவர், கால்மாட்டுப் பக்கம் ஒருவரென ஒரே நேரத்தில் குழிக்குள் இறங்குகின்றனர்.

குழிக்குள் நிற்கும் இருவரில் ஒருவர் கால்களைத் தாங்கி வாங்க, மற்றவர் தலையைத் தாங்கி வாங்க, மேலே எதிரும்புதிருமாக நிற்கும் இருவர் முறுக்கிய சேலையால் அல்லது வேட்டியால் முதுகுப் பகுதியைத் தாங்கி திருவுடலைக் குழிக்குள் இறக்குகின்றனர்.கட்டுகளை வெட்டி விடுவிக்கிறார்கள். குழிக்குள் நின்ற இருவரும் ஒரே நேரத்தில் மேலே ஏறுகின்றனர் ..

" ஐயாமார்களே! நகைநட்டு ஏதுமில்லை. பார்த்துக் கொள்ளுங்கள்! "

திருவுடலில் நகைகள் இருப்பின் களவாணிகள் குழியைத் தோண்டலாமல்லவா?

மூத்தமகன் கைப்பிடி மண்ணை முதலில்அள்ளிப்போட .... குழியை நிரப்புகிறார்கள்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னாள்வரை அடக்கம் செய்யும் நாளில் எரிக்கும் நாளில் காடாற்றுவதில்லை. மறுநாளில் தான், வீட்டிலிருந்து சங்கு சேகண்டி இசையோடு சென்று காடாற்றித் திரும்புவர். இப்போது அப்படியில்லை சிதைக்கு கொள்ளி வைக்கும் முன்பே, அல்லது குழி நிரப்பப்பட்டதும் காடாற்றத் தொடங்குகின்றனர். வெக்கை கூடிய காட்டை ஆற்றுவதே, தணிப்பதே காடாற்று.

புதைமேட்டின் தலைமாட்டில் (தெற்கில் )பிரண்டைக் கொடியை ஊன்றி, அதற்கு எண்ணை சீயக்காய் பால் இளநீர் பன்னீர் அபிடேகம் செய்து, தேங்காய்பழம் உடைத்துவைத்து பத்தி கொளுத்தி கற்பூரம் ஏற்றி வணங்கித் தலைமகன் நீறணிகிறார். காடாற்று நிறைகிறது.

கட்டைத்தளை எனில் கட்டையை (திருவுடல் )எரிக்கும், புதைக்கும், கிடத்தும் நிலம் எனப் பொருள்

கட்டைத்தளையில் சகல சடங்குகளுக்கும் காடாற்றுக்கும் பின்னர், நிழலில் வண்ணார் விரித்த மாற்றில் பங்காளிகள் கிழக்கு நோக்கி அமர்ந்து கட்டைத்தளை கடமையாற்றுகின்றனர்.

சடங்குகள் செய்த வண்ணாருக்கும் நாவிதருக்கும் இடுகுழி வெட்டிய, அல்லது சிதை அமைத்த,பாடை கட்டிய, பாதை சீர்செய்த, இசை எழுப்பிய, வாணம் போட்ட புதைத்த எரித்த அத்தனை தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்குவர். இதற்குப் பெயர்தான் கட்டைத்தளைக் கடமை.

கட்டைத்தளை விட்டுத் திரும்புவோர் நீர்நிலையில் குளித்து வருவர்.

கேதத்திற்கு வந்த வெளியூர் உறவுகளுக்காக முன்பெல்லாம் பங்காளி வீடுகளில் சமையல் நடக்கும். கேதச் சாப்பாடு எனில் சோறு குறிஞ்சாக்கீரை கூட்டு ரசம் பருப்பத் துவையலாக இருக்கும்.

இப்போது கேத வீட்டாரே சுவையான சைவ உணவை கடையிலிருந்து வரவழைத்து வேறிடத்தில் பந்தி வைக்கின்றனர். துக்கவீட்டில் சாப்பிட்ட பிறகு இலையை மேல்நோக்கி மடக்குதல் மரபு.

கட்டைத் தலையிலிருந்து வீடு திரும்பும் குடமுடைத்த தலைமகனை,முகவேலை செய்துகொண்ட மருமகனை,பங்காளியை இன்னும் இருவரை அல்லது நால்வரை வாசல் கோலத்தில் நிற்கவைத்து மஞ்சள்நீர் ஆரத்தி எடுத்து, உலக்கையை தாண்டி வீட்டிற்குள் அழைத்துச் செல்வர். திருவுடல் கிடத்தப் பட்டிருந்த நடுவீட்டில் பாய்விரித்து ஐவரையும் அல்லது எழுவரையும் அமரவைப்பர்.

ஊறவைத்த பச்சரிசியை வேகவைத்த தட்டப்பயறை கொடுத்து மடியில் வைத்துக் கொள்ளச் செய்வர். வெற்றிலை பாக்குக் கொடுத்து முடிந்துவைக்கச் செய்வர்.புனிதநீரைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளச் செய்வர். திருநீறு கொடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளச் செய்வர். உருமா (துண்டு) கொடுத்து தலையில் கட்டிக்கொள்ளச் செய்வர். ஐவரை அல்லது எழுவரையும் எழுந்து சபைபார்த்து விழுந்து வணங்கச் செய்வர். பச்சை மசங்குதல் அல்லது லேஞ்சு கட்டுதல் எனும் சடங்கு இவ்வாறு நிறைவேற்றப் படுகிறது.

முன்னர், குடமுடைத்து கொள்ளிவைக்கும் மூத்த மகனுக்கு, பாகப்பிரிவினையில் கொள்ளிமுறிச் செய் என அரை ஏக்கர் நிலம் அதிகமாகக் கொடுப்பர். தாய்தந்தை வாழ்ந்த வீட்டையும் வீடிருக்கும் நிலத்தையும் இளைய மகனுக்கு கொடுப்பர். பிறந்த மக்களுக்கு அசையாச் சொத்துகளில் பங்கு கிடையாது.அசையும் சொத்துக்களையே கல்யாணச்சீராக ஏற்றுவர்.அரசியல் சட்டப்படி நீதிமன்றத்தை நாடி சொத்துரிமை பெறும் மகளிர் பங்காளியாவார். பிறந்த மகளுக்கான உரிமைகளை தாய்மாமன் உரிமைகளை பறிகொடுப்பார்.

இறந்த மூன்றாம் நாள் எண்ணை தொட்டுவைத்தல் என்கிற சடங்கு நடக்கும்.தீட்டுக் கழிக்கும் ஒரு நிகழ்ச்சி இது.

கேதத்திற்கு வந்து கேதவீட்டில் தங்கியுள்ள உறவினர்களும், கட்டைத் தளையில் முகவேலை செய்து கொண்டோர் தீட்டு நீங்கி தங்கள் ஊர்களுக்குச் செல்லவும் கடமைகளைச் செய்யவும் வழிவகை செய்கிறது இச் சடங்கு. எண்ணைக் குளியலுக்குப் பிறகு மாமிச விருந்து.

இறந்த 16 அல்லது 30 ஆம் நாளில் புண்ணிய நீர்நிலையில் புரோகிதர்களை வைத்து நடத்துவது கருமாதி எனும் சடங்கு. திருவுடல் சாம்பலை தெய்வீக நீர்நிலையில் கரைப்பது தான் கருமாதி. முன்னரெல்லாம் அருகிலுள்ள கோயில் ஊருணியில் கருமாதி செய்தனர். இப்போது ஸ்ரீரங்கம் இராமேஸ்வரம் கயா காசி எனச் செல்கிறார்கள்.

கருமாதிக்கு முதல்நாளில், வீட்டில் படையல் நடக்கிறது. இதற்கு உறவினர்களை பங்காளிகளை அழைப்பதுண்டு. முன்னிரவில் நடந்த கொண்டிருந்த படையல் இப்போது நண்பகலிலும் நடக்கிறது. இறந்தவரைத் தெய்வமாக்கி அடுத்தடுத்து இரண்டு படையல்கள்.முதல் படைப்பு வண்ணார் படைப்பு. அடுத்தது பால்படைப்பு.

வண்ணார் படைப்பு என கூறப்பட்டாலும் இது வண்ணார் நாவிதர் இருவருக்கும் உரியது.

முந்தைய காலத்தில் ஆணுக்கான படையலை வண்ணாரும் பெண்ணுக்கான படையலை நாவிதரும் எடுத்துக் கொண்டனர். தற்காலத்தில் படையலில் பாதியென பிரித்துக் கொள்கிறார்கள்.

வண்ணார் படைப்பு.இறந்தவரின் குறியீடாக ஆறடி உயரப் படிமம் உருவாக்கப் படுகிறது.மணல் நிரப்பிய பனைநார்க் கடகத்தில் ஆறடி உயரக் கம்பை ஊன்றுவர். அதன் உச்சியில் தலைக்காக ஒரு சொம்பைக் கவிழ்ப்பர். ஓரடி இறக்கத்தில் கைகளுக்காக மூன்றடி நீளக் குச்சியை குறுக்கே கட்டுவர். படிமம் உண்டாக்குவர். சற்று தொலைவில் இருந்து பார்க்கும் போது ஒரு தெய்வம் நமக்கு அருட்காட்சி அளிப்பதைத் தரிசிக்க முடியும். படிமம் ஜோடிப்பது மட்டுமே வண்ணாரின் பணி. படையலை உருவாக்குவது அக் குடும்பத்தின் மகளிர் கடமை.

படிமத்தின் முன்னே, பெரிய தலைவாழை இலைகள் ஐந்தை குறுக்கு வெட்டாகப் பரப்புவர். அதன் நடுவில் சுமார் அரைக் கடகம் சோற்றை அம்பாரமாகக் கொட்டுவர். சுவையாக ஆக்கிய ஆட்டுக்கறி கோழிக்கறி முட்டைகள் மீன்வகைகள் காய்கறி வெஞ்சனங்கள் பழங்கள் பலகாரங்கள் பத்திருபது தேங்காய் முடிகள் வாழைப் பழங்கள் என மிகத் தாராளமாகப் படைக்கப்பட்ட படையல். சாம்பிராணி போட்டு சூடம் கொளுத்துவர்.

" ஐயாமார்களே!வாங்க படைப்புப் பார்க்க வாங்க! " வண்ணாரும் நாவிதரும் அழைப்பர். கேதவீட்டு ஆண்களும் பங்காளிகளும் மற்றையோரும் சென்று படிமம் தரிசித்து படையல் பார்த்து ஜோதிக்கு நீர் விளாவி கட்டியழுது மீள்வர். பிறகு பெண்டிர் கட்டியழுவர்.

படைக்கப்பட்டதை வண்ணாரும் நாவிதரும் சரிபாதியாக பிரித்துக் கொள்ளுமுன்னர் மூத்த மருமகளையும் மூத்த. மகளையும் அழைத்து காளாஞ்சி கொடுப்பர். பிறகு படிமத்தையும் அகற்றுவர்.

அடுத்தது பால்படைப்பு. படிமம் இருக்காது. புகைப்படமோ அல்லது முகம்பார்க்கும் கண்ணாடியோ குறியீடாக ஒரு நாற்காலியில் வைத்திருப்பர். மாலை அணிவித்திருப்பர்.

அதற்கு முன்னால் தரையில் வாழையிலைகள் மூன்றை வழக்கம்போல் ஒட்டிப் போட்டு, பால்சோறு தேங்காய் பழம் பலகாரங்கள் படைப்பர். இலையின் நான்கு மூலைகளிலும் வாழைப்பழத்தை உரித்து வைப்பர்.

" ஐயாமார்களே!வாங்க! பால்ப்படைப்பு பார்த்து சாமி கும்பிட வாங்க! "

பத்தி கொளுத்தி சூடம் ஏற்றி தண்ணீர் விளாவி ஆண்களும் பிறகு பெண்களும் விழுந்து கும்பிட்டு திருநீறு குங்குமம் அணிந்து கொள்வர். பால்படையல் குடும்பத்தாருக்கு உரியது ..அடுத்து அனைவருக்கும் மாமிச விருந்து! இறப்பால் சூழ்ந்த தீட்டும் அகன்றது.

(இறப்பிற்கான சடங்குகளை, நெறிமரபுகளை நம்மிடம் பகிர்ந்து, ஐயங்களைத் தெளிவுபடுத்தியவர் செம்பொன்மாரி நாடு நடுவட்டம் ஆறாவயல் கிராமம் பெரி.மு.பெரியசாமி அமபலம். (67)இவருக்கு நமது நன்றியும் பாராட்டும் உரியது)

இவண்

ஆறாவயல் பெரியய்யா