கள்ளர்களின் அரசியல் வரலாறு
இரண்டாயிரத்தி இருநூற்றி ஐம்பது ஆண்டு கால ஏடுகளிலும் செப்புப்பட்டயங்களிலும் கற்களிலும் எழுதப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் கள்ளர்கள்!
2250 ஆண்டுகளுக்கு முன்பு வடவேங்கட மலையின் அடிவாரத்தில் (இன்றைய திருப்பதி மலை) யாடைப்படையின் வலுவோடு தொண்டையர் ஆட்சியைத் தொடங்கினான் புல்லி என்னும் கள்வர் கோமான்!
வடக்கே வேங்கடம் தெற்கே குமரியாறு கிழக்கே வங்கக்கடல் மேற்கே அரபிக்கடல், இவற்றுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பே செந்தமிழ் பேசிய நம்தமிழ் நாடு.
தெற்கே மறவர்களான பாண்டியரின் ஆட்சி!மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் கள்ளர்களான சேர சோழ தொண்டையர் ஆட்சி!
பாண்டியரை சேரரை சோழரைப் போற்றிப் புகழ்ந்து இலக்கியம் படைத்த சங்கச் சான்றோர் பெருமக்கள் தொண்டைமான்களின் அறத்தை கொடையை ஆட்சித் திறத்தையும் முகில் முட்டப் பாடியிருக்கிறார்கள்!
பாண்டியநாடு முத்துகள் நிறைந்தது.
சேரநாடு யானைகள் நிறைந்தது.
சோழநாடு சோறு நிறைந்தது.
தொண்டையர் நாடு சான்றோர் நிறைந்தது.
இது புலவர் வாக்கு!
வேங்கட மலையின் மன்னன் கள்வர் கோமான் புல்லி எனும் தொண்டைமான் என்று போற்றிப் பாராட்டுகிறது சங்க இலக்கியம்.
சேரனையும் சோழனையும் ஐம்பெரும் வேளிரையும் ஒரே பகலில் வெற்றி கொண்டவன் பாண்டிய வேந்தன் நெடுஞ்செழியன். இவனது இளமை எழுச்சியை போற்றியவர்களில் ஒருவர் கல்லாடனார் என்ற சங்கச் சான்றோர்.
அதே கல்லாடனார் " தொண்டைமான் புல்லிக்குரிய வேங்கட மலையில் பெய்கிற மழைத் துளிகளினும் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க! " என்று அம்பர் எனும் ஊரில் வாழ்ந்த அருமந்தை எனும் வள்ளல் பெருமகனாரை வாழ்த்துகிறார் (புறம் 385)
கள்ளர் கோமான் புல்லியைப் பற்றி நற்றிணையில் 14 ஆவது பாடல் " தோழி! காந்தல் மலர்கள் பெரும் இதழ்களை தலைகவிழ்த்து விரித்திருக்கும் வேங்கட மலைச்சாரலில், ஒரு ஆண்யானையின் காலை பாம்பொன்று பற்றிக்கொண்டது.ஆண்யானையின் துயர் கண்ட பெண்யானை பிளிறிய பேரொலி மலையின் பிளவுகளில் பேரவலமாக எதிரொலித்தது. அது கேட்ட மன்னன் புல்லி யானையை காப்பாற்ற தனது குதிரையில் வேகமாக பாய்ந்து சென்றான் ....!"கல்லாடனார் கவிதையில் ஒரு பகுதியிது.
கள்ளர் கோமான் புல்லியை, முதல் தொண்டையர் மன்னன் எனக் கொள்வதில் தவறில்லை எனக் கருதுகிறேன்.
தொண்டைமான்களில் வேந்தனாக பெரும் கீர்த்தியோடு விளங்கியவன் தொண்டைமான் இளந்திரையனே!
வேந்தர்களான சேர சோழ பாண்டியரினும் சிறந்தவன் தொண்டைமான் இளந்திரையன் எனப் பதிவு செய்திருக்கிறார் அருந்தமிழ்ப் புலவர் கடியலூர் உருத்திரன் கண்ணனார்.
சான்றோர் பெருமகனான உருத்திரன் கண்ணனார் கபிலரைப் போல அப்பழுக்கற்ற அந்தணர்.
சங்கத் தொகுப்பான பத்துப்பாட்டில் இரண்டு பாடல்கள் (குறுங் காப்பியங்கள்) இவரால் படைக்கப் பட்டவை. ஒன்று, கல்லணை கட்டிய சோழவேந்தன் கரிகாற் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பட்டினப் பாலை.
இன்னொன்று தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பெரும்பாணாற்றுப்படை எனும் குறுங் காப்பியம்.
இக் காப்பியத்தில் இளந்திரையனை " காஞ்சித்தலைவன் என்றும் அறம்புரி செங்கோலின் தொண்டையர் மருகன் என்றும் திருவேங்கடத்தின் சொந்தக்காரன் என்றும் வாழ்த்துகிறார்.
இளந்திரையனைப் போற்றுகின்ற மன்னர்களின் நாடுகளில் பொன் பூத்தன என்றும், இளந்திரையனைப் பகைக்கின்ற மன்னர்களின் நாடுகள் பாழ்பட்டன என்றும் வர்ணிக்கிறார்.
இளந்திரையன் வலியைமிகு வேந்தனாகவும் வறுமை போக்கும் வள்ளலாகவும் எளிமைதிகழ் தோழனாகவும் விளங்கியிருக்கிறான். அத்தோடு, பெரும் புலவனாகவும் திகழ்ந்திருருக்கிறான்.
புறநானூற்றில் 185 ஆவது கவிதை இளந்திரையனால் ஆக்கப்பட்டது. " கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும் ..." எனத் தொடங்கும் இக் கவிதையின் பொருள் " அரசு எனும் வண்டியை ஓட்டுவோன் வலிமையற்றவன் ஆயின், வண்டி சேற்றிலும் மணலிலும் சிக்கி பயணத்தை மோசமாக்கிவிடும். ஓட்டுநன் ஆற்றல் மிக்கோன் ஆயின் பயணம் இலக்கை நோக்கி அமையும். இனிமையும் பயனும் உண்டாகும்! " எஎன்பதாகும்.
இக் கவிதை தொண்டைமான் இளந்திரையனின் அரசியல் மாண்பை காட்சிப் படுத்துகிறது.
நற்றிணையில் இவ் வேந்தன் படைத்த மூன்று கவிதைகள் (94, 99, 166) இடம் பெற்றுள்ளன.
தனிக் கவிதைகள் மட்டுமின்றி இனந்திரையம் என்னும் பெயரில் இக் கள்ளன் படைத்த இலக்கண நூல் கால வெள்ளத்தில் மறைந்திருக்கிறது. இந்த இளந்திரையம் பற்றி இறையனார் அகப்பொருள் உரையும் நன்னூல் மயிலைநாதர் உரையும் பேசுகின்றன.
தொண்டைமான் இளந்திரையனின் ஆயுதக் கிடங்கு பற்றி, ஔவைப் பிராட்டியார் புறநானூறு 90 ஆவது கவிதையில் குறிப்பிடுகிறார்.
இளந்திரையனின் ஆட்சிக் காலத்தில் தான் தொண்டையரின் தலைநகரம் காஞ்சிக்கு மாறியிருக்கிறது. தொண்டைமான் இளந்திரையனுக்குப் பிறகு தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.
கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் கருநாடகப் பகுதியில் இருந்து வந்த களப்பிரர்கள், சேர சோழ பாண்டிய தொண்டை நாடுகளை கைப்பற்றினார்கள். தமிழுக்கும் தமிழகத்திற்கும் பண்பாட்டிற்கும் கேடுவிளைத்த ஆட்சி அது.
கி.பி.575 இல் பாண்டியரும் சோழரும் தொண்டையரும் களப்பிரரை வென்று தங்கள் நாடுகளை மீட்டனர் என்று கல்வெட்டுகள் பேசுகின்றன :பட்டயங்கள் பாராட்டுகின்றன.
ஆனால் தொண்டை நாட்டில் தொண்டையர் ஆட்சி தொடரவில்லை. தொண்டை நாட்டடில் சிம்மவிஷ்ணு என்பவர் 575 இல் பல்லவர் ஆட்சியைத் தொடங்கினார். சுமார் 225. ஆண்டுகள் அங்கே பல்லவர் ஆட்சி சிறப்பாக, கலைகள் மிளிர நடந்தது. பிறகு, சோழர்கள் பாண்டியர்கள் ஆட்சி தொண்டை மண்டலத்தில் தொடர்ந்தது. அங்கே மீண்டும் தொண்டைமான்கள் ஆட்சி தொடரவேயில்லை! .
ஆயினும், முதவாம் குலோத்துங்கனுக்கு( 1070-1118 )கலிங்கப் போரில் மகத்தான வெற்றியை பெற்றுத்தந்த தளபதி கருணாகரத் தொண்டைமானைப் போல தொண்டையர் வழிவந்த கள்ளர்கள்,பல்லவ சோழ பாண்டிய அரசுகளின் படைகளிலும், அமைச்சரவைகளிலும், அரசாணைகளில் கையெமுத்திடும் உயர் பொறுப்புகளிலும் விளங்கினார்கள். இதற்கான சான்றுகள் தமிழகம் முழுதும் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் நிறையவே கிடைத்திருக்கின்றன:பீடோடும் பெருமையோடும் பதிவாகியுள்ளன.
தொண்டை நாட்டில் தொண்டைமான்கள் ஆட்சி மறைந்து 900 வருடங்களுக்கு பிறகு, 1201 இல் அறந்நாங்கியில் இடைக்காலத் தொண்டையர் ஆட்சியை நிறுவினார் ' வளர்ந்து வாழ்வித்த பெருமாள் தொண்டைமானார்!'
இடைக்காலத் தொண்டையர் ஆட்சி அறந்தாங்கியைத் தலைநகராகக் கொண்டு 600 ஆண்டுகள் நீடித்தது.
இன்றைய ஆவுடையார் கோயில் வட்டம், அறந்தாங்கி வட்டம், ஆலங்குடி வட்டத் தென்பகுதி, திருமயம் வட்டக் கீழ்ப்பகுதி ஆகியன தான் மிதிலைக் கூற்றமெனும் அறந்தாங்கி அரசின் எல்லை.
இராமேஸ்வரம் தொடங்கி காசி வரை கோயில்களுக்கும் மடங்களுக்கும் கொடையளித்தவர்கள் தொண்டைமான்கள். சேரருக்கும் சோழருக்கும் பாண்டியர்க்கும் படைநடத்திப் பாதுகாத்து நிழல் கொடுத்தோர் தொண்டையர். வாழ்வாங்கு வாழ்ந்த அறந்தாங்கி தொண்டைமான்கள் அரசு 18 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நொடித்தது.
ஆண்டவராய வணங்காமுடித் தொண்டைமான் மகன் அருணாசலத் தொண்டைமான் 27-10-1759 அன்று தனக்குரிய ஊர்களான பண்ணைவயலையும் பூவானத்தையும் மதுரை ராக்கப்பத் தேவர்மகன் அந்தோணிமுத்துத் தேவரென்ற கத்தோலிக்க கிறிஸ்தவருக்கு இரண்டாயிரம் பொன்னுக்கு கிரையம் செய்திருக்கிறார்.
இந்த வீழ்ச்சியை காலத்தின் கோலமென மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருக்கிறார் தொல்லியல்த் துறை மேதை புலவர் ஈரோடு செ.இராசு.
அறந்தாங்கித் தொண்டைமான்களின் ஆட்சி நொடிக்கத் தொடங்கிய 17 ஆம் நூற்றாண்டில் -1686 இல் புதுக்கோட்டையில் தொண்டையர் ஆட்சியைத் தொடங்கினார் கறம்பைக்குடி ஆவுடைத் தொண்டைமானின் மகன் ரகுநாத ராயத் தொண்டைமான்.
ரகுநாதராயத் தொண்டைமான் 1686. இல் இருந்து 1730. வரை ஆட்சி செய்தார். அவரைத் தொடர்ந்து ஒன்பது தொண்டைமான்கள் 272 ஆண்டுகள் தொண்டைமான் புதுக்கோட்டை நாட்டை ஆண்டனர்.
தமிழகத்தில் தொண்டையர் ஆட்சியை சங்க காலத்தில் திருவேங்கடத்தில் புல்லி என்னும் கள்ளர் கோமான் தொடங்கினார். கடைசி மன்னனான புதுக்கோட்டை ராஜகோபாலத் தொண்டைமான் எனும் கள்ளர் கோமான் தனது நாட்டை 1948 இல் சுதந்திர பாரத அரசோடு இணைத்தார்.
கள்ளராகிய யான் தொண்டைமான் : தொண்டைமான் யான் என்ற உரிமையோடும் பெருமிதத்தோடும் ஏழு கிளைகளில் ஒன்றுக்கு தொண்டைமான் கிளை எனப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள் கள்ளர்களில் ஒரு பிரிவினர்!
சோழர்கள்! சேரர்கள்!
தொண்டைமான் மன்னர்களைப் போலவே சோழ. மன்னர்களும் கள்ளர்களே என்பதற்கு,சான்றாக அவர்களின் குடிப் பெயர்களோடும் பட்டப் பெயர்களோடும் மெய்க்கீர்த்திகளோடும் இன்றளவும் தமிழகம் முழுக்க லட்சோப லட்சம் கள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவை மட்டுமின்றி, கல்வெட்டுகள் செப்புப் பட்டயங்கள் தொல் இலக்கியங்கள் வாயிலாகவும் சோழர்கள் கள்ளர்களே என்பதை ஆய்வியல் அறிஞர்களும் உறுதிப் படுத்தியுள்ளனர்.
இரண்டாம் இராசராச சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு மெய்க்கீர்த்திக் கல்வெட்டு (எண் 465. )அவரை " கள்வர் ராஜா என்றே முத்திரை பதித்திருக்கிறது.
கி.பி. 600 வரையிலான தமிழக வரலாற்றை எழுதிய பி.டி.சீனிவாச ஐயங்கார் " சங்க இலக்கியத்தில் கள்வர் எனக் குறிப்பிடப் படுவோர் இன்றைய கள்ளர்களே! " எனக் குறிப்பிடுகிறார். (பக்கம் 230, 234, 235. )
இரண்டாம் ராஜராஜனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு ( 240) ளகரத்திற்கு மெய்ப்புள்ளி வைக்காமல் களவர் எனப் பொறிக்கப் பட்டுள்ளது. களவர் களமர் களாவர் என்ற சொற்கள் கள்ளர்களின் பட்டப் பெயர்களென பட்டியல் 361 குறிப்பிடுகிறது.
பிற்காலச் சோழர்களான விஜயாலயன் (846-887 )தொடங்கி மூன்றாம்இராஜேந்திரன் (1246-1273) வரை 24 சோழ வேந்தர்கள் 443 ஆண்டுகள் சோழப் பேரரசை ஆட்சி செய்தனர்.
இவர்கள் வெளியிட்டுள்ள வெள்ளிக் காசுகளிலும் கல்வெட்டுகளிலும் தங்களை தேவர் என்றே பொறித்துள்ளனர்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜன் அதில் உள்ள கல்வெட்டுகள் அனைத்திலும், தன்னை "ராஜராஜ தேவன் " என்றே பொறித்துள்ளார். மாமன்னன் இராஜராஜ தேவனின் இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்பதே!
அருண்மொழித்தேவர் என நான்கு ஊர்கள் உள்ளன. மேற்பாடியில் உள்ள கோயில் அருண்மொழித்தேவன் கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது.
சோழவேந்தர்களின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டுகளில் "ஸ்ரீ இராஜராஜ தேவர், ஸ்ரீஇராஜேந்திர சோழ தேவர், ஸ்ரீ இராசாதி ராச தேவர், ஸ்ரீராஜ மகேந்திர தேவர், ஸ்ரீ வீர ராஜேந்திர சோழ தேவர் , ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர், ஸ்ரீ விக்கிரம சோழ தேவர் என்று தேவரை தவறாமல் பொறித்துள்ளனர்.
அக் காலத்தில் மட்டுமின்றி இக் காலத்திலும் கள்ளர்களுக்கு அருண்மொழித் தேவன், சோழதேவன், தேவதேவன் என்றும் பட்டப்பெயர்கள் வழங்கி வருகின்றன! " என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவரும், தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையராகப் பணியாற்றியவருமான முனைவர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர் ஐஏஎஸ் அவர்கள் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
நமது பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்க மாத இதழ் " முக்குலத்தோராகிய கள்ளர் மறவர் அகமுடையார் சாதியினர் மட்டுமே தேவர் இனம். வேறு எந்த இனமும் தேவர் இனம் இல்லை! "என அறுதியிட்டுள்ளது (இதழ் ஜூன் 2017)
சோழர்களின் பட்டம் தேவர் என்ற தலைப்புடைய மேலேயுள்ள கட்டுரையை எழுதிய தஞ்சை இராம. சம்பந்தமூர்த்தி மழவராயருக்கும், இக் கட்டுரையை எனக்கு அனுப்பித்தந்த தம்பி ஆற்றங்கரை நாடு வீரா அம்பலத்திற்கும் நன்றி பாராட்டுகிறேன்.
ஆக, கள்ளராகிய யான் சோழன் :கள்ளராகிய சோழன் யான் என்கிற வாரிசு உரிமையோடும் பெருமிதத்தோடும் தங்களது ஏழுகிளைகளில் ஒன்றுக்கு " சோழயான் கிளை " எனப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள் கள்ளர்களில் ஒரு பிரிவினர்.
சேரர்கள்!
கடைச்சங்க காலத்தோடு (கி.பி.250) சேர வேந்தகளின் ஆட்சி முடிந்துவிட்டது. சேரர்களின் கல்வெட்டுகளோ செப்புப் பட்டயங்களோ கிட்டாமல் போனதற்கு இதுவும் காரணம்.
சேர வேந்தர்களைப் பற்றிய வரலாற்றுக் குழிப்புகளை சங்கத் தொகுப்புகளில் மட்டுமே கண்டடைய முடிகிறது.
தொண்டைமான்களைப் போல, சோழர்களைப் போல சேர வேந்தர்களை கள்ளர்கள் என்று உறுதியாகக் காட்ட இயலுமா? தெரியவில்லை! ஆனால், சேர வேந்தர்கள் கள்ளர்களாகிய சோழ வேந்தர்களின் குடும்பங்களிலும் கள்ளர்களாகிய வேளிர்களின் குடும்பங்களிலுமே பெண்ணெடுத்து பட்டத்தரசி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆவான். இவன், கள்ளனாகிய சோழமன்னன் மணக்கின்னியின் மகளை மணந்து பட்டத்தரசி ஆக்கிக் கொண்டவன்.
இந்தக் கள்ளிச்சியின் வயிற்றில் பிறந்தவர்கள் தான், கற்புக்கரசி கண்ணகிக்கு கோயில் எழுப்பிய மாமன்னன் சேரன் செங்குட்டுவனும், கற்புக்கரசி கண்ணகிக்கு காப்பியம் எழுப்பிய மகாகவி இளங்கோவடிகளும்!
சேரன் செங்குட்டுவனின் மனைவியும் கள்ளிச்சியே! பெயர் இளங்கோ வேண்மாள்! வேளிர் ஒருவரின் மகளாவார் இவர்.
"ஆதன் " என்பது சேரவேந்தர்களின் குடிப் பெயர்களுள் ஒன்று.
சேரன் செங்குட்டுவனின் தந்தை பெயர் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் (சேரல் +ஆதன்) என்பதாகும்
அவன் தந்நை உதியன் சேரலாதன். ஆடுகோட்பாட்டு சேரலாதன் என்றொரு சேரவேந்தன். இவன் ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன்.
செல்வக் கடுங்கோன் வாழியாதன் என்றொரு சேரவேந்தன். இவன் ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். புறநானூற்றில் 8 ஆவது 14 ஆவது பாக்கள் இவனைப் பாடுகின்றன.
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்றொரு வேந்தன். புறநானூற்றில் 62, 63, 368 ஆகிய பாக்களும் இவனைப் போற்றுகின்றன.
சேரமான் பெருஞ் சேரலாதனை புறநானூற்று 65 ஆம் பா போற்றுகிறது
ஐங்குறு நூற்றின் தொடக்கமே"வாழி ஆதன்! வாழி அவினி!" என சேர வேந்தர்களின் குடிப் பெயரைப் போற்றியே தொடங்குகிறது!
ஆதன் எனும் சேரர் குடிப்பெயரை நான் வலியுறுத்திக் காட்டக் காரணம் என்னவெனில், ஏழுகிளைக் கள்ளர்களின் ஏழு கிளைகளில் ஒன்றின் பெயர் "அரி ஆதன் கிளை "என்பதால் தான்.
சேரர்களும் கள்ளர்களே! அவர் தம் வழிவந்தோர் யாம் என்கிற உரிமையோடும் பெருமிதத்தோடும் சூட்டிக் கொண்ட கிளைப் பெயரே 'அரி ஆதன் ' ஆகும்!
பாண்டிய வேந்தர்கள் மறவர்கள் என்பது மிகமிகத் தெளிவான முடிவாகும். இவர்களும் சோழர்களோடு மணவுறவு கொண்டிருப்பதை காண முடிகிறது.
பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் மகளை சோழ மன்னன் ஒருவன் மணந்நிருக்கிறான். கி.பி.640 இல் அரியணை ஏறிய மாறவர்மன் அரிகேசரி (கூன் பாண்டியன்) மணிமுடிச் சோழனின் மகள் மங்கையர்க்கரசியயை மணந்து பட்டத்தரசி ஆக்கிக் கொண்டிருக்கிறான்.
தமிழ்நாட்டின் பன்னெடுங்கால அரசியல், பண்பாடு மற்றும் இலக்கிய வரலாறு என்பது கள்ளர்கள் மற்றும் மறவர்களின் வரலாறே!